Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மாறனும் கதிரேசனும்
 
பக்தி கதைகள்
மாறனும் கதிரேசனும்


மீனாட்சி கோயிலின் சிறப்பு தரிசன வரிசையில் நின்றிருந்தேன். பெருங்கூட்டம் என்பதால் வரிசை நகரவேயில்லை. தரிசனம் கிடைக்குமா  என தயங்கி நின்றேன்.
ஒரு வளர்த்தியான பெண் என்னிடம் ஓடிவந்தாள்.
“அப்பா... உங்கள எங்கெல்லாம் தேடறது?  உங்களுக்காக எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க.”
நான் சுதாரிப்பதற்குள் என் கையைப் பிடித்து வரிசையிலிருந்து வெளியே இழுத்துக் கொண்டு போனாள்.
“நீங்கள் ஏதோ தவறாக..’’
“நான் உன் மகள் இல்லை. உன் தாய். உணர்ச்சிவசப்படாமல் என்னுடன் வா. உனக்குச் சில உண்மைகளைப் புரிய வைக்கிறேன்.”
என்னைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போனாள் பச்சைப்புடவைக்காரி. எங்களை யாரும் தடுக்கவில்லை. கர்ப்பக்கிரகத்தில் மீனாட்சியின் முன் நின்றோம்.
முன்னால் சிலையுருவில் இருக்கும் சிங்காரவல்லியைப் பார்ப்பதா, இல்லை அருகே மானுட உருவில் ஒளிரும் மரகதவல்லியைப் பார்ப்பதா எனக் குழம்பிப்போய் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டேன்.
“என் சிலையைப் பார்த்தது போதும். நான் சொல்வதைக் கேள்.”
கூப்பிய கைகளுடன் திரும்பினேன்.
“சன்னிதிக்கு முன்னால் சிறப்புத் தரிசன வரிசையில் முதல் ஆளாக நிற்பவன் மாறன். தர்ம தரிசன வரிசையில் முதல் ஆளாக இருப்பவன் கதிரேசன். இவர்கள் என்னிடம் என்ன கேட்கிறார்கள் என்பதை சக்தியை தருகிறேன்.”
மாறனுக்கு ஐம்பது வயதிருக்கும். பத்தாண்டுக்கு முன் தன்  நண்பனுடன் சேர்ந்து பருப்பு மொத்த வியாபாரம் செய்யத் தொடங்கினான். விரைவான வளர்ச்சியால் பல கோடி லாபமாக கிடைத்தது.  பணத்தைப் பார்த்ததும் மாறனின் புத்தி மாறியது. நண்பரை ஏமாற்றி மோசடிகள் பல செய்தான்.
தனியாக  பருப்பு மண்டி ஆரம்பித்து அதில் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதித்தான்.  
இந்நிலையில் மாறனின் நண்பன் மோசடிகளைக் கண்டுபிடித்து காவல் துறையில் புகார் செய்தான்.  நஷ்ட ஈடு கேட்டு மாறன் மீது வழக்கு தொடர்ந்தான்.  விசாரணை முடிந்து நாளை தீர்ப்பு வரப்போகிறது.
“தாயே வழக்கின் தீர்ப்பு  சாதகமாக இருக்க வேண்டும். அதன்பின் தொழிலில்  இன்னும் பல உச்சங்களைத் தொடவேண்டும்.  தீர்ப்பு சாதகமாக வந்தால் தங்கத்தேர் இழுக்கிறேன்!”
“இப்போது தர்ம தரிசன வரிசையில் நிற்கும் கதிரேசனின் மனதில் இருக்கும் பிரார்த்தனையைக் கவனி.”
“தாயே அவர்கள் இன்னும் நகராமல் அங்கேயே இருக்கிறார்களே? பின்னால் பெரிய வரிசை...’’
“அவர்கள் எப்போதோ நகர்ந்து போய் விட்டனர். உனக்காகக் காலத்தைச் சில நிமிடங்கள் உறைய வைத்திருக்கிறேன்.”
கதிரேசனுக்கு அறுபது வயதிருக்கும். அரசுத் துறையில் சாதாரண வேலை. அதில் லஞ்சம் வாங்க வாய்ப்பு இருந்தாலும் நேர்மையாக நடந்தவர். ஒழுக்கமான வாழ்க்கை. ஒரே மகள். திருமணமாகி விட்டது. சென்ற மாதம் பணி ஓய்வு பெற்றார்.  அவர் மனதில் எப்போதும் அபிராமி அந்தாதி மணக்கும். இரண்டு நாளுக்கு முன்பு தொண்டையில் வலி என மருத்துவரைப் பார்த்தார்.  தொண்டையில் இருந்து திசு எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தார் மருத்துவர். அது புற்று நோயாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார். கதிரேசனின் மனதில் ஒரே ஒரு பிரார்த்தனைதான்.
“தாயே என் மகள் கர்ப்பமாக இருக்கிறாள். என் பேரக்குழந்தையைப் பார்த்துவிட்டுக் கண் மூட வேண்டும்.  அதுவரை வாழ விடுங்கள்!”
எனக்கு தலை சுற்றியது. பக்கத்தில் இருந்த பச்சைப்புடவைக்காரி தன் முழங்கையால் என்னை இடித்தாள்.
“இப்போது சொல். நான் யாருக்கு என்ன கொடுக்கப் போகிறேன் என்று!”
“இது பெரிய கம்ப சூத்திரமா, தாயே? உங்களையே நினைத்து உருகும் கதிரேசனுக்குப் புற்று நோய் இல்லை என முடிவு வரும்.  அவர் தன் பேரக் குழந்தையைப் பார்த்து பல்லாண்டு வாழ்வார்’’
“நம்பிக்கைத் துரோகியான மாறன் வழக்கில் தோற்று அவமானப்பட்டு அவதிப்பட்டு...”
“போதும். நிறுத்து.  கதிரேசனுக்கு வந்திருப்பது புற்று நோய் என முடிவுகளில் உறுதியாகும்.  பேரக்குழந்தையைப் பார்க்காமலேயே  இறப்பான்.
மாறன் வழக்கில் வெற்றி பெறுவான். தனியாகத் தொழில் தொடங்கி கோடிகளைக் குவிப்பான்.”
“தாயே!”  என நான் கத்தினேன்.
 “இன்னும் நீ என்னைப் புரிந்துகொள்ளவில்லையே? கதிரேசன் என்னை நினைத்தபடி நிம்மதியாக இறப்பான். பின் என்னுடன் கலப்பான். அவன் துன்பம் இன்னும் ஓரிரு நாட்களுக்குத்தான். அதன்பின் முடிவில்லாத இன்ப வெள்ளத்தில் திளைப்பான்.
“மாறன் செல்வம் சேர்ப்பான். அவன் இன்பமெல்லாம் சில காலம் மட்டுமே. அதன்பின் அவனுக்கு நம்பிக்கையான ஊழியனே  துரோகம் செய்வான். பல கோடிகளைத் திருடுவான். அவனது மகன் விபத்தில் இறப்பான். மகளின் கணவன் அகால மரணமடைவான்.  அவனுக்கு ஒழுக்கக் கேட்டால் ஆட்கொல்லி நோய் வரும்.  துடிதுடித்து இறப்பான். மீண்டும் பிறப்பான். மீண்டும் இறப்பான். இப்படியே அவனது கதை தொடரும்.”
“இது என்ன கொடுமை தாயே?”
“கொடுமை இல்லையப்பா. ஆன்மிக வளர்ச்சியின் பாதை இப்படித்தான் இருக்கும். பல பிறவிகள் நல்லவனாக வாழ்ந்த கதிரேசனுக்கும், பல தீமைகளைச் செய்த மாறனுக்கும் இருப்பது ஒரே நோய்தான். சம்சார வாழ்க்கை என்னும் கட்டி. கதிரேசனின் கட்டி பழுத்துவிட்டது. கடைசி நிமிடத்தில் அதைப் புற்று நோய் என்ற கத்தியால் அறுத்து அவனை சம்சார நோயிலிருந்து மீட்பேன். மாறனின் கட்டி இன்னும் பெரிதாக வளர வேண்டும். அதன்பிறகுதான் அறுக்க முடியும். அது வளர்வதற்காகவே செல்வத்தை அள்ளித் தருகிறேன். பல பிறவிகள் இப்படியே உழன்று ஒரு கட்டத்தில் அவனும் கதிரேசன் நிலைக்கு வருவான்.
ஆன்மிகம் என்னும் பள்ளியில் கதிரேசன் இறுதி வகுப்பில் படிக்கிறான் என்றால் மாறன் இப்போதுதான் முதல் வகுப்பில் இருக்கிறான். இருவருக்கும் வேறு வேறு பாடங்கள். வேறு வேறு தேர்வுகள்.”
“மாறன் போன்றவர்களை அடையாளம் தெரியாமல் அழித்தால் என்ன தாயே? இவர்கள் ஆன்மிகப் பள்ளியில் தேர்ச்சி பெறவில்லை என யார் அழுதார்கள்?”
“ மனித சமுதாயத்தில் ஒருவன் கொலை, கற்பழிப்பு என ஈடுபட்டால்  என்ன செய்வீர்கள்?”
“அவனை விசாரித்து துாக்குத் தண்டனை கொடுப்போம். சமுதாயத்திலிருந்து அவனை வெளியே  துாக்கி எறிவோம்’’
“ நான் மாறனை எப்படி எறிய முடியும்? எனக்கு வெளியே என்று ஒன்றும் இல்லையே. எல்லோரும் என் பிள்ளைகள்தானே! எல்லோரும் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் தங்கள் தாயிடம் ஒன்ற வேண்டியவர்கள்தானே!”
நான் விழித்தேன்.
“அதனால்தான் பலமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன் -  தீமையையும் ஒரு நோயாகப் பார்க்கவேண்டுமென்று. தீயவர்களிடமிருந்து உன்னைப் பாதுகாக்க  முயற்சி செய். ஆனால் அவர்களை வெறுக்காதே. அவர்கள் தீமை என்னும் நோயிலிருந்து மீள்வதற்காக பிரார்த்தனை செய்’’
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சூழ்நிலை கனமானதை  உணர்ந்த அன்னை அதை லேசாக்க சிரித்தாள்.
“மாறனையும் கதிரேசனையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.  உனக்கு என்ன வேண்டுமெனக் கேள். இன்று கொடுக்கும் மனநிலையில் இருக்கிறேன்?”
“நீங்கள் என்று அப்படி  இல்லை...சொல்லுங்கள்”
அன்னையின் புன்முறுவலுக்கு அகிலத்தையே விலையாகத் தரலாம்.
“நீங்கள் எனக்கு புற்று நோயைக் கொடுத்தாலும், பல கோடிகளைக் கொடுத்தாலும், தாங்கமுடியாத துன்பத்தைக் கொடுத்தாலும் தங்கத்தால் என்னை அபிஷேகம் செய்தாலும் என்றென்றும் தங்களின் கொத்தடிமை என்ற நிலை மாறக்கூடாது தாயே!”
 “தீபாராதனை பாருங்கோ” என அர்ச்சகர் சொன்ன போது கண்ணீரால் காட்சி மறைந்தது. பக்கத்தில் இருந்தவளும் மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar