Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தீர்ந்தது பிரச்னை
 
பக்தி கதைகள்
தீர்ந்தது பிரச்னை

மதுரையில் நடந்த தன்னார்வ நிறுவனக் கூட்டத்தில் நண்பர் ராமசாமியை சந்தித்தேன். உணவு இடைவேளையின்போது  அழாத குறையாக மன்றாடினார்.
‘‘எனக்கு இருக்கறது ஒரே பையன். அஞ்சு வருஷமா சி.ஏ., பைனல் பரீட்சை எழுதிக்கிட்டு இருக்கான். பாஸ் பண்ற வழியக் காணோம். கொஞ்சம் நீங்க பாடம் சொல்லித் தரலாமா?  எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன். இன்னொரு தரமும் பெயில் ஆயிட்டான்னா  விபரீத முடிவு எடுப்பானோன்னு பயமா இருக்கு. வயசு முப்பது ஆச்சு. இவன் எப்போ பாஸ் பண்ணி, கல்யாணம் செஞ்சி .. ம்ஹும்.. நான் தாத்தா ஆகாமலேயே செத்திருவேன் போல.”
“நான் சி.ஏ., பாஸ் பண்ணி ஒரு யுகம் ஆச்சு... ராமசாமி. பாடத்திட்டம், தேர்வு முறை எல்லாம் பலமுறை  மாத்திட்டாங்க. நானே பரீட்சை எழுதினா கூட பாஸ் பண்றது சந்தேகம் தான். அதனால உங்க மகன வேற யாரிடமாவது...’’
“உங்களால ஒண்ணும் பண்ண முடியாதா?”
“பச்சைப்புடவைக்காரிகிட்ட மனசார வேண்டிக்கிறேன்.”
“எங்க குலதெய்வம் அவதான்.  அவகிட்ட இதப் பத்திப் பேசாத நாளில்லை.  உங்களப் பாத்தவுடன் என் பிரச்னையச் சொல்லத் தோணுச்சு. அதுக்கும் அவதான் காரணம்னு நினைக்கறேன்.. கொஞ்சம் தயவு பண்ணுங்களேன்.”
என்னால் உதவ முடியாது என மூர்க்கத்தனமாக மறுத்துவிட்டு அவரைவிட்டு விலகிச் சென்றேன்.
மாலை கூட்டம் முடிந்து காரை எடுக்க வந்தபோது எனக்குப் பெரிய அதிர்ச்சி. பூட்டிய காருக்குள் அழகான பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். என் கையில் கார் சாவி இருந்தது. கதவை இழுத்துப் பார்த்தேன். பூட்டியிருந்தது.
சட்டென்று கண்ணாடியை இறக்கி என்னிடம் பேசினாள் அந்தப் பெண்.
“அணுவிற்குள்ளும் அண்டத்திற்குள்ளும் இருக்கும் நான் கேவலம் பூட்டிய காருக்குள் நுழைய முடியாதா என்ன?”
வெளியில் இருந்தபடி விழுந்து வணங்கினேன்.
“வா. வண்டியை எடு. போய்க்கொண்டே பேசலாம்.”
“ஒரு மனிதன் உன் உதவி கேட்டு மன்றாடும் போது இப்படியா முரட்டுத்தனமாக மறுப்பாய்?”
“என்னால் செய்ய முடியாத உதவி தாயே! அவருக்கு உதவும் அளவிற்கு எனக்கு அறிவோ,  திறமையோ இல்லை.”
“ஓஹோ! இதுவரை உன் சொந்த அறிவாலும் திறமையாலும்தான் மற்றவருக்கு உதவினாயோ? எனக்குத் தெரியாமல் போச்சே!”
எனக்கு அழுகை வந்தது. அவளை விட்டால் எனக்கேது அறிவும் திறமையும்!  அகங்கார அரக்கன் என்னுள் ஆடிக் கொண்டிருக்கிறானோ?
“அவன் என் அடியவன். அவனுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. அவனுக்கு நல்லது செய்துகொடுத்து  உனக்குப் பெயர் வாங்கித்  தரலாம் என பார்த்தால் பிகு பண்ணுகிறாயே!.”
“என்ன செய்யவேண்டும் என ஆணையிடுங்கள், தாயே!”
“நண்பரிடம் பேசி அவரது மகனை உன்னிடம் அனுப்பச் சொல்.”
“பிறகு?”
“அந்தச் சமயத்தில் உன் மனதில் தோன்றும் எண்ணங்களாக உன் வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளாக நானே வருகிறேன்”
ஒரு ஞாயிறன்று பிற்பகல் ராமசாமியின் மகன்  என்னைப் பார்க்க வந்தான்.  தந்தையின் வற்புறுத்தலால்தான்  வந்திருந்தான் போலும்.  அவனுக்கு என் மீது நம்பிக்கை இல்லை. அவனது முகத்தில் வெறுப்பும் வேதனையும் தெரிந்தது. பேச்சு கொடுத்துப் பார்த்தேன். கேட்ட கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.  
 ‘என்னை இப்படி மாட்டிவிடலாமா தாயே?’ என பச்சைப்புடவைக்காரியை நினைத்து மனதிற்குள் புலம்பினேன்.  திடீரென என் உடல் சிலிர்த்தது. அவள் உள்ளே இறங்கிவிட்டாள்.  மனதில் ஒரே நேரத்தில் பல எண்ணங்கள். இவனுக்குத் தேவை அன்பான வார்த்தைகள் அல்ல; அதிர்ச்சி வைத்தியம். ஆழமாகத் துாங்குபவர்களை அதிர் வேட்டு வைத்துத்தான் எழுப்ப வேண்டும். முதலிலேயே ஒரு பெரிய குண்டைத்  துாக்கிப் போட்டேன்.
"சரியப்பா, நீ இந்த முறையும் சி.ஏ.,தேர்வில் தோல்வியடையப் போகிறாய். அதன்பின் உன் வாழ்க்கை.... உன் சாப்பாடு மற்ற தேவைகள் எல்லாம்... பிச்சைதான் எடுக்க வேண்டும். பிச்சைக் கொப்பரையை இப்போதே வாங்கி வைத்துக்கொள். எனக்குத் தெரிஞ்ச கடை....’’
"நிறுத்துங்க, சார். விட்டாப் பேசிக்கிட்டே போவீங்களோ? சி ஏ, பெயிலானா என்ன சார்? எங்கப்பாவுக்கு சிக்மகளூர்ல நுாத்துக்கணக்கான ஏக்கர் காபி எஸ்டேட் இருக்கு. அதை நிர்வாகம் பண்ற திறமை என்கிட்ட இருக்குன்னு எங்கப்பாவே ஒத்துக்கிட்டாரு. நான் சம்பாதிக்கறது மட்டுமில்ல சார், எங்க எஸ்டேட்டுல வேல பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு என்னால சோறு போட முடியும் சார்’’
"அப்படி என்றால் சி.ஏ., தேர்வுதான் வாழ்க்கையில் எல்லாம் என்ற எண்ணம் உனக்கு இல்லை, அப்படித்தானே? நல்ல வாழ்க்கைக்கு சி.ஏ., தேர்வில் வெற்றி பெறுவது என்பது ஒரு பாதை. ஆனால் அதைப்போல் நல்ல பாதைகள் ஆயிரம் இருக்கின்றன. வாழ்க்கையில் கடைத்தேற சி.ஏ.,  ஒன்றுதான் வழி என நினைத்தால், அதுவே மனதில் பயத்தைக் கொடுத்துவிடும். அந்த பயத்தில் வெற்றிக்கு வாய்ப்பேயில்லை. புரிகிறதா?"
தலையசைத்தான் இளைஞன். இப்போது அவன் கண்களில் இருந்த கோபம் போய் ஒரு ஒளி வந்தது.
"எப்படியாவது தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற மூர்க்கத்தனத்துடன் தயார்படுத்திக்கொள்வதை விட்டுவிடு. உனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறதா?"
"நிறைய."
"ஆஸ்திரேலியா  போன்ற வலுவான அணியுடன்  இந்திய அணி கிரிக்கெட் ஆடப் போகிறது. நீதான் கேப்டன். கிரிக்கெட் ஒரு விளையாட்டுத்தான். இதில் எப்படி வெற்றி பெறுவது என அணித்தலைவனான நீ திட்டமிட வேண்டும்.  அப்போது தோற்றால் என்ன, நம்மைத் துாக்கிலிடவா போகிறார்கள்? என்ற மனப்பக்குவமும் வந்து விட வேண்டும். அதே போல்தான் இந்த சி.ஏ., பரீட்சையும்.  சரியா?"
"யெஸ் சார்." உற்சாகமாகச் சொன்னான்  அவன்.
"எப்படி ஜெயிக்க வேண்டும் என திட்டமிடுவதை உனக்குச் சொல்லித் தரப் போவதில்லை.  ஏனெனில் அணித்தலைவனான உனக்குத்தான் அணியின் பலம், பலவீனம் பற்றித் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஆட்டத்தில் தொடர்ந்து  தோற்றிருக்கிறாய். எனவே அதே திட்டத்தைக் கையாண்டால் இந்த முறையும் தோல்விதான்.
"உன் திட்டங்களை அடியோடு மாற்று. உதாரணமாக இதுவரை நீ மதுரையில் படித்தாய் என்றால் இந்த முறை சென்னைக்குப் போ. இதுவரை நீயாகப் படித்தாய் என்றால் இந்த முறை சென்னையில் நல்ல அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை அணுகு. அவர்களின் முகவரிகளைத் தருகிறேன். எல்லாவற்றையும் மாற்று- படிக்கும் முறையை, படிக்கும் நேரத்தை, இடத்தை, உன் அணுகுமுறையை...
தேர்வு எழுதும்போது சஞ்சலப்படாதே. நீ ஈடுபடப் போவது வாழ்வா, சாவா போராட்டம் இல்லை. கிரிக்கெட் ஆட்டம் போன்ற ஒரு விளையாட்டில். அதில் வெற்றி, தோல்வி சகஜம்தானே!”
பத்து நிமிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவன் எழுந்து போனான். என்ன ஆயிற்று எனக்கு? ஏன் இப்படிப் பேசினேன்? இதுவரை யாரிடமும் இப்படிப் பேசியதில்லையே! ஒருவேளை அவன் காயப்பட்டிருப்பானோ?
“சார் போஸ்ட்” குரல் கேட்டு வெளியே வந்தேன். தபால்பையுடன் நின்றாள் ஒரு பெண்.
“அருமையாகப் பேசினாய். அவனை உசுப்பேற்றிவிட்டால்தான் அவனது திறமை எல்லாம் வெளியே வரும். அதை நீ அழகான வார்த்தைகளில் செய்தாய்!”
“தாயே! இதில் என் செயலாவது ஒன்றும் இல்லை. ஒரு கட்டத்தில் ஆவேசம் வந்தது போல் பேச ஆரம்பித்தேன். அந்த ஆவேசமாக உள்ளே இறங்கியவர் நீங்கள் என்று எனக்குத் தெரியும்.”
“இன்னும் நான்கு மாதம் கழித்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாயா?”
“தெரியும் தாயே! தேர்வில் வெற்றி பெறுவான். தந்தையும் மகனுமாகச் சேர்ந்துவந்து இனிப்பு தருவார்கள்.  என்னை வானளாவப் புகழ்வார்கள். இதைச் செய்தது பச்சைப்புடவைக்காரிதான் என கரடியாகக் கத்தினாலும் நம்ப மாட்டார்கள்.”
“உன் வாழ்வில் ஏதாவது பிரச்னை இருந்தால் சொல். தீர்த்து வைக்கிறேன்.”
“ஆம் தாயே! எனக்கிருப்பது இவனுடையதைவிடப் பெரிய பிரச்னை. நீங்கள்தான் உதவ வேண்டும். நீங்கள்தான் இந்தப் பிரபஞ்சத்தையே நடத்திச் செல்கிறீர்கள் என்பதை அறிவேன். என்றாலும் சில நேரங்களில் நான்தான் செய்கிறேன் என்ற அகங்காரம் வருகிறது. அந்த அகங்கார அரக்கனை சம்ஹாரம் செய்ய வேண்டும், தாயே! அப்போதுதான் என் அடிமைத்தனம் பரிபூரணமாக இருக்கும். செய்வீர்களா?”
அன்னை சிரித்தபடியே மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar