 |
| நேற்று போய் இன்று வந்த ராவணனைப் பார்த்த ராமனுக்கு சிரிப்புதான் வந்தது. என்ன கேவலமான பிறவி இவன்! எந்த கட்டத்திலும் தீய குணத்தைக் கைவிட இயலாதவனாக இருக்கிறானே! இவனுக்கும்தான் எத்தனை வாய்ப்பு கொடுத்தோம்! முதலில் அனுமன் துாது போனான். ஆனால் அவனை இளக்காரத்துடன், ‘கேவலம் ஒரு குரங்கு’ என இழிவாக நடத்தினான் ராவணன். துாதுவனுக்குரிய குறைந்தபட்ச மரியாதை கூட அளிக்கத் தவறிய ராவணனுக்கு தான் எத்தகையவன் என்பதை இலங்கையை எரித்து நிரூபித்தான் அனுமன். இவ்வாறு இலங்கையை எரிப்பது ராமனுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ராமனின் பலம் எப்படிப்பட்டது என்பதை உணர வைக்க அனுமன் விரும்பினான். சிறை வைக்கப்பட்ட சீதையை விடுவிக்காவிட்டால் எத்தகைய பின்விளைவை சந்திக்க நேரும் என்பதை முன்னோட்டமாக காட்ட முயன்றான். ஆனால் ராவணன் திருந்தவில்லை. ராவணனுடைய சகோதரன் விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்த போதாவது, அவன் திருந்துவான் என ராமன் எதிர்பார்த்தான். ஆனால் தன்னுடைய படை பலம், பலவீனம் பற்றி துல்லியமாக விபீஷணன் ராமனுக்கு எடுத்துச் சொல்வான் என்ற பயம் சிறிதும் இல்லாமல் தலைக்கனத்துடன் ராவணன் கொக்கரித்தான்! விபீஷணன் தன்னுடன் விலகியது தனக்கு பலவீனம் என்பதை உணராமல், சீதையை விடுவிக்கச் சொல்லும் நச்சரிப்பு இருக்காது என அவன் சந்தோஷப்பட்டான்! இவை மட்டுமா...அங்கதனைத் துாதனுப்பி ராவணனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தான்! ராவணனின் முன்னாள் நண்பரான வாலியின் மகன் தான் அங்கதன். ‘‘உன் தந்தையை ராமன் மறைந்து நின்று கொன்றான். அவனுக்கு வக்காலத்து வாங்குகிறாயே, அவனது துாதுவன் என்கிறாயே, வெட்கமாக இல்லை?’ என ராவணன் கேட்பான் என்பது ராமனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் தன் வாழ்வை மீட்கச் சொல்லி கெஞ்சிய சுக்ரீவனுக்கு உதவுவதாக வாக்களித்த பின்னர், ராமனுக்கு இருக்கும் ஒரே வழி, வாலியை அழிப்பது தானே? நேருக்கு நேர் போரிட்டால், தன் பாதிபலம் வாலிக்கு போய்விடும் என்ற உண்மை தெரிந்தும் ராமன் கவலைப்படவில்லை. சுக்ரீவனுக்கு அவனது மனைவி, நாட்டையும் மீட்டு கொடுக்க வேண்டும், அதே நேரம் வாலிக்கும் பலன் அருள வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்? சமாதானமாகப் போக விரும்பாத சண்டைக்காரர் இருவருக்கு சம நீதியை தர முடியுமா? ஒருவருக்கு இழப்பு, அடுத்தவருக்கு சேர்ப்பு என்பது தானே தராசு முனை நீதியாக இருக்க முடியும்? அந்த வகையில் வாலி உயிர் இழந்தான், சுக்ரீவன் பலன் அடைந்தான். அதுதான் ராமனின் நிலையாக இருந்தது. இதை வாலியும், அவனது மகன் அங்கதனும் புரிந்து கொண்டனர். வாலியின் மகனான அங்கதன் துாது சென்ற போது, ‘‘ என் நண்பன் வாலி இல்லாவிட்டால் என்ன, அவனுடைய மகனான நீ என்னுடன் சேர்ந்துவிடு. உன்னை என் தளபதியாக்கிக் கொள்கிறேன். என்னுடைய படைவீரர்களுக்கு நீதான் தலைவன். என்னுடன் சேர்ந்தால், ‘தந்தையின் நண்பனுடன் இணைந்து, தந்தையைக் கொன்றவனுக்கு எதிராகப் போராடி அவனை வீழ்த்திய வீரன்’ என உலகம் உன்னைப் போற்றும். அதேபோல சீதையை அடைய வேண்டும் என்ற என் லட்சியமும் நிறைவேறும். இருவருமாக இணைந்து ராமனை வீழ்த்துவோம், வா…’’ என கை நீட்டி அழைத்தான் ராவணன். ‘இவனுக்கு அனுமன் குரங்காகத் தெரிந்தான், ஆனால் நான் நண்பனாகத் தெரிகிறேன். என்ன முரண்பாடு! தனக்கு சாதகமாக எது இருந்தாலும் அதை அப்படியே பற்றிக் கொள்ளவும், அதனால் ஏற்படும் அவமானத்தை ஏற்கவும் தயங்காதவன் ராவணன்’ என்பது அங்கதனுக்குப் புரிந்தது. தான் வந்த நோக்கத்தில் உறுதியாக இருந்தான். ‘‘சீதையை விடுதலை செய்யாவிட்டால் உன் தலைகள் பத்தும் தரையில் உருளும்’’ என்றான். கோபத்துக்கு ஆளான ராவணன், ‘‘மடையா, யாரிடம் என்ன பேசுகிறாய்? உன் ராமனை எதிர்க்க நான் தயார், அவனையும் தயாராக இருக்கச் சொல்’’ என அண்டம் அதிர கத்தினான். ‘‘உன் பாட்டி தாடகையை அழித்த போதும் சரி, விஸ்வாமித்திரரின் யாகத்தைக் குலைக்க வந்த உன் மாமன் சுபாகுவை ஒழித்த போதும் சரி, உன் தங்கையான சூர்ப்பணகையின் மூக்கையும், காதுகளையும் அரிந்து அவமானப்படுத்தியபோதும் சரி, அப்போதெல்லாம் வராத போர்க்குணம் இப்போது உனக்கு வருகிறதே! சுயநலனுக்காக சொந்தங்களைக்கூட தியாகம் செய்யத் தயங்காதவன் எனத் தெரிகிறதே! நிச்சயம் ராமனால் உயிர் நீங்கப் பெறுவாய்.’’ என அங்கதன் தெரிவித்தான். வெகுண்ட ராவணன், ‘‘இந்தக் குரங்கை அடித்துக் கொல்லுங்கள்,’’ என ஆணையிட்டான். தன்னை நோக்கி வந்த நான்கு வீரர்களைக் கொத்தாகப் பற்றி வானம் நோக்கிச் சென்ற அங்கதன், அப்படியே இறங்கி அவர்களை ஒரு கோபுரத்தில் அடித்துக் கொன்றான். பிறகு ராவணனிடம், ‘‘உன் நாட்களை இப்போது முதல் என்ணிக்கொள்,’’ எனக் கூறிவிட்டு ராமனை வந்தடைந்தான். ‘‘ராவணனின் உடலில் ஒவ்வொரு அணுவிலும் சீதை மீதான மோகம் நிறைந்துள்ளது. இறந்தால் அன்றி, மோகத்தில் இருந்து அவனால் மீள முடியாது,’’ என தன் கருத்தை தெரிவித்தான். இனி வாய்ப்பளிக்க ராமன் தயாராக இல்லை. அங்கதன் சொன்னது போல தன்னை இழந்துதான் மோகத்திலிருந்து ராவணன் விடுபட வேண்டும் என்பது விதியானால் வேறு என்ன செய்ய முடியும்? இதோ... மீண்டும் போர்க் கவசம், கருவிகள், தேர், கண்களில் வெறி என ராவணன் எதிரில் வந்தான். ராமன் தன் வில்லை வணங்கியபடி சீதையை நினைத்தான். அவ்வளவுதான் உடல் முழுவதும் ஆற்றல் நிறைந்தது. சரமாரியாக பத்து, நுாறு, ஆயிரம் என்ற கணக்கில் அஸ்திரங்கள் வில்லிலிருந்து புறப்பட்டன. கண் இமைக்கும் நேரத்தில் ராவணனின் உடலெங்கும் அம்புகள் தைத்தன. அவனது ஒவ்வொரு அங்கத்தையும்.... ஏன்... ஒவ்வொரு மயிர்க்காலையும் அம்புகள் துளைக்க குருதி பெருகின. நிலைகுலைந்த ராவணன் சரிந்து விழுந்தான். ராமனின் இந்த கோபம் லட்சுமணனுக்குப் புதிதாக இருந்தது. ஒருசில அம்புகளாலேயே ராவணனின் கதையை முடிக்கக் கூடிய பலம் பெற்ற ராமன்.... இத்தனை அம்புகளை ஏன் வீணாக்க வேண்டும்? அதை உணர்ந்த ராமன் புன்னகை பூத்தான். ‘‘ லட்சுமணா! துாது சென்ற அங்கதன் சொன்னதை நீயும் கேட்டகிறாய்? ராவணனின் ஒவ்வொரு அணுவிலும் சீதை மீதிருந்த மோகம் உயிர்த்திருந்தது. அதனால் அம்புகளால் துளைத்தால் அவனது மோகம் எல்லாம் நீங்கும்’’ என கோபம் தணிந்தவனாக ராமன் தெரிவித்தான். ராவணன் மீதுள்ள கோபம் ராமனுக்குள் கனலாக, பிழம்பாக, எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது என்றாலும் அதை அவன் வெளிப்படுத்தவில்லை. எதிரியைத் திருந்துவதற்கு எத்தனை வாய்ப்புகளை கொடுத்தான்! ராவண வதம் முடிந்ததும் ராமனைப் பாராட்டும் விதத்தில் லட்சுமணன் கை கூப்பி வணங்கினான்.
|
|
|
|
|