Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கொடியவனே ஆனாலும்...
 
பக்தி கதைகள்
கொடியவனே ஆனாலும்...

ராவணன் மாய்ந்தான் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. பூவுலகம், வானுலகம் எல்லாம் மகிழ்ச்சியால் திளைத்தன. அதுவரை சூழ்ந்த இருள் விலகி சூரியனின் பிரகாசம் படர்வது போல அனைவரின் உள்ளத்திலும் பயம் விலகி நிம்மதி ஒளிர்ந்தது.
வானரப் படைகளும், ஜாம்பவான், அங்கதன், சுக்ரீவன் முதலானவர்களும், ராமனின் வீரம் கண்டு வியந்தனர். அதற்கு சாட்சியாக வீழ்ந்து கிடக்கும் மலை போன்ற ராவணனை அச்சமுடன் பார்த்தனர். ஒருவேளை மீண்டும் எழுந்துவிடுவானோ!

லட்சுமணனும், அனுமனும் ராமனின் பாதம் தொட்டு வணங்கினர். இது, ராமனுக்கு அவர்கள் பாராட்டுத் தெரிவிக்கும் முறை!

ராமன் இருவரையும் அணைத்துக் கொண்டான். ‘‘நல்ல ஒரு வீரன், அநியாயமான எண்ணத்தால் நிலம் கிடந்து வீணானான்...’’ என்று பெருமூச்சுடன் சொன்னான்.
 இருவரும் திடுக்கிட்டனர்.  யாரைச் சொல்கிறான் ராமன்? ராவணனையா? என்ன ஒரு மென்மையான மனப்பாங்கு! சீதையை அபகரித்தவனைக் கொன்று, அந்த வெற்றியில் ஆர்ப்பரிப்பதை விட்டு விட்டு, இப்படி  பரிதாபப்படுகிறானே!  புரியாத புதிராகக் கருதி ஏறிட்ட இருவரையும்  தட்டிக் கொடுத்த ராமன். ‘‘ஆமாம், ராவணன்தான் எத்தகைய அறிவாளி! எத்தகைய பேராற்றல் இருந்தால் இலங்கை சாம்ராஜ்யத்தை இத்தனை காலம் கோலோச்சி வந்திருப்பான்! யாருக்கும் அடிமை செய்ய விரும்பாத ஆண்மை மிக்கவன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண் மோகத்திற்கு பலியானானே! அதை கைவிட்டிருந்தானானால், முப்பெரு தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அவனுக்கு  உபசாரம் செய்திருப்பார்கள்! இப்படி அநியாயமாகத் தன் ஆற்றலை தவறான பாதைக்குத் திருப்பி வீணாகி விட்டானே!’’
‘‘அண்ணா! தங்களின் பெருந்தன்மை காரணமாக ராவணனை அவனது தகுதிக்கு மீறி புகழ்கிறீர்கள் என நினைக்கிறேன். அவன் பாவி எனத் தெரிந்தும் இரக்கம் காட்டுகிறீர்கள? நல்லது எது, தீயது எது என அவனுக்குத் தெரியாதா என்ன? அத்தனை அலட்சியம், ஆணவம் அவனுக்கு...’’  கொந்தளித்தான் லட்சுமணன்.
‘‘இருக்கலாம், ஆனாலும் மன்னிப்புக்கு உரியவன். மரணத்துக்கு உரியவன் அல்ல. தவறுகள் திருத்தப்பட வேண்டும்; குற்றங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பது என் கோட்பாடு..’’
‘‘ஆனால், ராவணன் போன்றவர்கள்  மரணம்வரை திருந்தாதவர்களாக இருக்கிறார்களே, என்ன செய்வது? இவர்களுக்கு மரணம் ஒன்றே தண்டனையாக இருக்க முடியும். இறந்தபின் தீயவற்றை சிந்திக்கவும், செயல்படுத்தவும் முடியாது அல்லவா? இத்தகைய மரணம்தான், இவனைப் போன்றவருக்கு பாடமாக அமையும். தாமாகத் திருந்தாவிட்டால், இதுபோல அடுத்தவருக்குக் கிடைக்கும் தண்டனை, அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும். ஒருவேளை ராவணன், அண்ணியாரைத்  ஒப்படைத்துவிட்டு சமாதானமாகப் போயிருப்பானேயானால் அப்போது தங்களுடைய மன்னிப்புக்கு மரியாதை இருக்கும். ஒரு திருடன், தான் திருடிய பொருளை, மனம் மாறி திரும்பக் கொடுத்துவிட்டான் என்பதற்காக அவனைத் தண்டிக்காமல் விடலாமா? திருடும் எண்ணம் கொண்டு, அதைச் செயல்படுத்திய குற்றத்துக்காக தண்டனை கொடுப்பதில்லையா? அதேபோல ராவணன் அண்ணியாரைத் திருப்பி அனுப்பியிருந்தாலும் தண்டனைக்குரியவனே! ஆகவே நீங்கள் இதற்காக வருத்தப்பட்டு, உங்கள் மன அமைதியை இழக்காதீர்கள்.’’
ராமன் அவனது தோளை மென்மையாகத் தட்டிக் கொடுத்தான். ‘‘உன் வாதத்திலுள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. ஆனால் நான் இதை அறிவுபூர்வமாக அணுகுவதைவிட இதய பூர்வமாக அணுகவே விரும்புகிறேன். எங்கும், எதிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். கெட்டதன் பரிமாணம் பெரிதாக இருக்கும்போது கூடவே இருக்கும் நல்லது நம் கண்ணுக்குத் தெரியாமல் போகிறது. இருள் எப்படி வருகிறது? நம்மால் இருட்டை உருவாக்க முடியுமா? நிச்சயம் முடியாது. தீபம் ஏற்றி, ஒளியை உருவாக்க முடிந்த நம்மால் இருட்டை ஏன் உருவாக்க முடியவில்லை? உண்மையில், ஒளியில்லை என்பதையே இருட்டு என்கிறோம். தனியே இருட்டை  உருவாக்க முடியாது.’’
‘‘அண்ணா.’’
‘‘ஆமாம், லட்சுமணா. தீய எண்ணங்களை தன்னிச்சையாக ஏற்படுத்திக் கொள்ள முடியாது. ஆனால் நல்லதை ஏற்காத போது, அதாவது ஒளியை வேண்டாம் என மறைக்கும்போது இருள் என்ற தீய எண்ணம் நமக்குள் கவிகிறது. பாறையில் சிறு விரிசல் இருந்தாலும் அதனுள் நீர் சுலபமாகப் புகுவதைப் போல....’’
‘‘அதாவது ராவணன் நல்லதை அறிய முடியாததால், தீயதை வளர்த்துக் கொண்டவன் என்கிறீர்கள், அப்படித்தானே?’’
‘‘ஆமாம். அவன் சகல கலைகளையும் பயின்றவன். அரக்க குலத்தில் பிறந்தாலும், ஆன்மிக நெறியுடன் வாழ்ந்தவன். கொடியவனாக இருந்தாலும், சீதையை அபகரித்துச் சென்ற அற்பனாகவே இருந்தாலும்,  சிறந்த சிவ பக்தன். தன் வீணை இசையால்  கயிலை மலையையே உருக்கியவன். அறிவாற்றல் மிக்கவன். இத்தனை நல்ல குணங்களையும் அவன் மூடி மறைத்ததால், மோகம் என்னும் இருட்டு அவனுள் வளர்ந்தது. அது ஒளியைப் புகவிடாமல் தடுத்தது. அவன் பலியாகவும் நேர்ந்தது...’’
‘‘உங்கள் பெருந்தன்மை காரணமாக  சொல்லும் விளக்கம் இது. ஆனாலும், ராவணனை மதிப்புக்குரியவனாக ஏற்க முடியவில்லை.’’
‘‘சரி, அதை நேரடியாக உணர்ந்தால்தான் உண்மை புரியும். ஆயிரக்கணக்கான அம்புகளால் குத்தப்பட்டு, யமனின் வரவுக்காகக் காத்திருக்கும் ராவணனிடம் போ. அவன் சொல்லும் உபதேசம் உனக்கு உதவியாக இருக்கும். நீயும் புரிந்து கொள்வாய்.’’
லட்சுமணன் மிகுந்த தயக்கத்துடன் அண்ண(லை)னைப் பார்த்தான்.  பாவனையால் அவனைச் செல்லுமாறு பணித்தான் ராமன்.
 தயக்கத்துடன் அருகே வந்த லட்சுமணனைப் பார்த்தான் ராவணன். அவனது நோக்கத்தைப் புரிந்துகொண்டு நட்பாகச் சிரித்தான்.
‘‘வா, லட்சுமணா. பதவியும், அதிகாரமும் அகங்காரத்தையே வளர்க்கும் என்பதற்கு நான் உதாரணம். ஆனால் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், பற்றற்று விளங்குவதும், எதிலும் மோகம் கொள்ளாமல் வாழ முடியும் என்பதற்கு உனது மாமனார் ஜனகர் ஓர் உதாரணம். கை அருகில் பதவிக்கனி இருந்தும், தந்தையார் சொல்லுக்கு மதிப்பளித்து, பதவி மீதான பற்றை, உரிமையிருந்தும், வளர்த்துக்கொள்ளாத நேர்மையாளன், உன் அண்ணன் ராமன்.....
லட்சுமணன் பிரமிப்புடன் பார்த்தான்.
‘‘நான் சர்வ வல்லமையும் உள்ளவனாகவே விளங்கினேன்.  நவக்கிரகங்கள்... ஏன் இந்திரன் கூட எனக்கு அடிமைகளாக இருந்தனர். சமீபத்தில் அனுமனால் தீக்கிரையான இலங்கையை என் உத்தரவின் பேரில் பிரம்மன் புனரமைத்துக் கொடுத்தானே! ஆனால் அப்படிப்பட்ட நான், இலங்கை மக்கள் அனைவரும் சொர்க்கத்திற்குதான் போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அந்தளவுக்கு  மக்கள் மீதும்  அக்கறை கொண்டிருந்தேன். அதற்காக  தவம் மேற்கொள்ளத் தீர்மானித்தேன். ஆனால் அதை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நல்ல ஒளி இதயத்திலிருந்து விலகியதால், அஞ்ஞான இருள் சூழ்ந்தது.  
அதேசமயம், என் தங்கை சூர்ப்பணகை மூலம் சீதை பற்றி அறிந்ததும் அவளை அடைவதற்கு நான் முற்பட்டேன். ஏற்கனவே சீதையை அடைய சிவதனுசை வளைக்க முயன்று தோற்றதால் உருவான ஏக்கம் பேரிருட்டாக என்னுள் வளர்ந்திருந்தது. ஆகவே உடனடியாக மோகத்துக்கு அடிமையானேன். இப்போது அதன் விளைவை அனுபவிக்கிறேன். அந்தகாரம் என்னும் இருளில் பயணிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.
‘‘என் முடிவால் தெரிந்து கொண்டது இதுதான்: நல்ல நோக்கத்தை உடனே செயல்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் அது நிறைவேற முடியாமல் போகும். அதேபோல தீய செயலை முடிந்தவரை தள்ளி வைக்க வேண்டும்; அதனால் அச்செயல் நிகழாமல் தடுக்கப்படும்’’ என்றான் ராவணன்.
லட்சுமணனின் கண்கள் துளிர்த்தது. இருள் விலகிய ராவணனின் இதயத்தை உணர்ந்தான். சேற்றிலும் செந்தாமரை மலரும் என்பதை உணர்த்த ராவணனிடம் அனுப்பி வைத்த அண்ணன் ஸ்ரீராமனின் உயர்குணத்தை எண்ணி நெஞ்சு விம்மினான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar