Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » முன்பே இறந்துவிட்டான் ராவணன்
 
பக்தி கதைகள்
முன்பே இறந்துவிட்டான் ராவணன்


ராவண வதம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்படி அமைந்தது. எல்லோரும் ராமனுக்கு புகழ் மாலை சூட்டினர்.  
ஒரு மலை போலப் படுத்திருந்தான் ராவணன். அவனிடமிருந்து உயிர் பிரிந்து போனாலும், தன் அசுர பலத்தால் அம்புகளை எல்லாம் உதறி விட்டு எழுந்து நின்றுவிடுவானோ என அச்சத்தை அளித்தது.
அப்போது அங்கே ஓடோடி வந்தாள் ராவணனின் மனைவி மண்டோதரி. கணவர் மீது விழுந்து அரற்றினாள். ‘‘என் ஐயனே உமக்கும் மரணம் சம்பவிக்குமோ? எமனுக்கும் மரணம் விளைவிக்கும் ஆற்றல் கொண்டவரே, நீர் ஏன் இப்படி கண்மூடிக் கிடக்கிறீர்? உம் மனச்சிறையில் அடைபட்டிருக்கும் சீதையை இப்போதும் மறக்கவில்லையோ? அதனால்தான் நீங்களே கதி என்றிருக்கும் என்னைப் பார்க்க கண் திறக்கவில்லையோ? அதனால்தான் என்னிடம் பேசவும் முடியவில்லையோ? ஏன் இந்த மவுனம்! ஏதாவது பேசுங்கள். என்ன கொடுமை இது என் ஐயனே! மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டிய தாங்கள் இப்படி மல்லாந்து கிடப்பது தான் விதியோ….?’’
ராமன் குனிந்தபடி, மண்டோதரி, தன் கணவருக்குச் செலுத்தும் இறுதி அஞ்சலியை விசனத்துடன் பார்த்தான். அவனுக்கு வாலிவதம் நினைவுக்கு வந்தது. வாலி கிடந்தபோது அவனது மனைவி தாரை எப்படியெல்லாம் புலம்பினாள்!
‘‘போருக்குப் போக வேண்டாம் எனத் தடுத்தேனே, என் பேச்சுக்கு இணங்கினால் ஆண்மைக்கு இழுக்கு எனக் கருதி, என்னைப் புறந்தள்ளி, போர்க்களம் புகுந்தீர்களே, இப்போது இப்படி உயிர் விட்டீர்களே, இதுதான் விதியோ?’’ எனக் கேட்டவள் அப்படியே திரும்பி ராமனைப் பார்த்தாள்.
குற்ற உணர்வுடன் ராமன், தன்னை ஏசப்போகிறாளோ எனக் காத்திருந்தான். ஏற்கனவே வாலி தன்னை நிந்தித்த வேதனையில் இருந்தான் ராமன். இப்போது தாரையின் முறை!
‘‘என் ஐயனே! உங்களுக்கு எதிராக உங்கள் தம்பி சுக்ரீவனோடு ராமனும் நிற்கிறான் என எவ்வளவோ சொல்லியும் கூட,  தம்பியுடன் சண்டையிட்டீர்களே… என்னவாயிற்று…?’’
தாரையின் கோபம் ராமன் மீது திரும்பியது. ‘‘ மறைந்து நின்று கொன்ற நீ மாவீரனா? உனக்கு எதற்கு வில்லும், அம்பும்? போர் இலக்கணம் அறியாதவனா நீ? உன் மனைவியை ராவணனிடம் இருந்து மீடபதற்காக சுக்ரீவனுடன் நட்பு கொண்டாய். அதற்காக என் கணவரை பலியிட வேண்டிய அவசியம் என்ன?  நண்பரைத் தேர்வு செய்வதில்  முட்டாள்தனத்தை காட்டிவிட்டாய்! ஆமாம், என் கணவரின் வீரத்தை அறிந்திருந்தால் சுக்ரீவனை நண்பனாக ஏற்க மாட்டாய். ராவணனைத் தன் வாலில் கட்டியிழுத்து, கடல்களில் மூழ்கடித்து அடிமையாக நடத்தியவர் என் கணவர். அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும், ராவணன் ஓடி வந்து சீதையை ஒப்படைப்பான். நீ அந்த வாய்ப்பைத் தவறவிட்டாய்’’
சரி, இப்போது மண்டோதரி என்ன சொல்லப் போகிறாள்?
ராவணனின் முகத்தை தடவிக் கொடுத்த அவள், ‘‘நீங்கள் இப்போது இறக்கவில்லை என் ஐயனே, எப்போதோ இறந்துவிட்டீர்கள்’’  என்றாள்.
ராமன் சற்றே அதிர்ச்சியுற்றான். ‘இந்த மண்டோதரி, எனக்கே ஆறுதல் சொல்வாள் போலிருக்கிறதே!
மண்டோதரி தொடர்ந்தாள்: ‘‘ஆமாம், அவரை முதலில் பலி கொண்டவை அவரது ஐம்புலன்கள்தான். சீதையைப் பற்றிக் கேள்விப்பட்ட அவரது காதுகள் அவருக்கு தீயவற்றை போதித்தன. அவர் அவளை அடையக்கூடுமானால், தன் புகழை அவள் பாடப்பாட தான் கேட்டு மகிழலாம் என அவரைத் துாண்டின.
அவளது அழகில் மயங்கியதால் ‘சீதை, சீதை’ என்று உதடு முணுமுணுக்க சிந்தை கலங்கினார்.  இந்த வகையில் நாக்கும் துர்போதனை செய்தது. மண் மணம் மாறாத மங்கலப் பெண் சீதை. தெய்வத் தன்மையும், அரண்மனை வாழ்க்கையும் சுகந்த மணத்தைத் தந்திருந்தன. வாசமிகு மலர்களே வெட்கப்படும் அளவுக்கு அவள் மென்மையாக விளங்கினாள். அவளை நுகராத நான் இருந்தென்ன என்று மூக்கும் அவரை கேலி செய்தது!
இவற்றையும் விட, சீதையைக் கண்ட கண்களை இரவிலும் அவரால் மூட இயலவில்லை. உறக்கத்தால் இமைகளை மூடினாலும், அவள் உருவம் உள்ளத்தில் மறையாமல் தவறாக வழி நடத்தின. இப்படி நான்கும் சீதையின் மயக்கத்தில் ஆழ்ந்திருக்குமானால் அவர் மெய் மட்டும் விதி விலக்கா என்ன? எப்போது சீதையை அடையலாம் என எதிர்பார்த்துக் காத்திருந்தது.’’
சற்று நிறுத்தினாள் மண்டோதரி. ‘‘நல்ல வேளையாக கயிலைநாதனான சிவன் முன்கூட்டியே ஒரு சாபத்தை கொடுத்து விட்டார். ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி என் கணவர் தொட்டால் பத்துத் தலைகளும் வெடித்துச் சிதறும் என்பதே அந்த சாபம்.  அதனால் சீதையும் காப்பாற்றப்பட்டாள். ஆனால்  மோகத்தை இவரால் கொல்ல முடியவில்லை. அவள் மனம் கனியும் எனக் காத்திருந்தார். ஆனால் அது கனியாது என அறிந்த இவர், தன்னுயிர் உட்பட எத்தனையோ இழப்புகளை சந்திக்க நேர்ந்தது!’’
ராமனும் மற்றவர்களும் மண்டோதரியின் ஆற்றாமையை எண்ணி அமைதி காத்தனர்..
‘‘எட்டு திசைகளையும் வென்ற பலசாலியான என் கணவர் நவகிரகங்களை அடிமைப்படுத்தினார். சிம்மாசன படிகளில்  குப்புறப் படுக்க வைத்து அவர்களைப் படிக்கட்டாகி ஏறுவார். தன் வெற்றியை அறிவிக்க, அவர் மேற்கொண்ட அகங்காரமான வழி அது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்த போது அலட்சியப்படுத்தினார். அந்த அகம்பாவத்துக்கும் சேர்த்து நிரந்தர தண்டனையை பெற்று விட்டார்.
‘‘நவக்கிரகங்களை அடிமைப்படுத்தியதற்கு இப்போது தண்டனையா?’’
‘‘ஆமாம்,’’ மண்டோதரி தொடர்ந்தாள். ‘‘அதற்கு வித்திட்டவர் நாரதர்தான். ஒருசமயம் அவர் இலங்கை அரண்மனைக்கு வந்திருந்தார். அங்கே சிம்மாசனப்படிகளில் நவகிரகங்கள்  ஒன்பதும் மிதிபடுவதைக் கண்டார். அவரது கண்களில் ஏதோ குறும்பு மின்னியதை அப்போது அங்கிருந்த என்னால் கவனிக்க முடிந்தது. இதன் முடிவு விபரீதமாகும் என அப்போது ஊகித்தேன்.  நாரதர், ‘‘ ராவணா! கயிலை முதல் பூவுலகின் கடைக்கோடிவரை உன் வீரம் புகழப்படுகிறது. ஆனால் நீ கோழையாக இருக்கிறாயே?’’ எனக் கேட்டார். அதைக் கேட்டு வெகுண்ட என் கணவரிடம், ‘‘ராவணா! அடிமை கொண்டவர்களின் நெஞ்சில் மிதிக்காமல், அவர்களின் முதுகில் ஏறிச் செல்வது  வீரமா?’’ என்றார் நாரதர்.
‘‘அட, கோழைத்தனத்தில் இப்படியும் ஒரு வகை இருக்கிறதா’’ என யோசித்த என் கணவர், அப்போதே  நவக்கிரகங்களை மல்லாந்து படுக்கச் செய்தார்.  அதுவே அவரது அழிவுக்கான ஆரம்பமானது. ஆமாம்! சனீஸ்வரரின் நேரடிப் பார்வை அவர் மீது விழுந்தது. அதாவது சனி பிடித்தது. அந்த பார்வை ஐம்புலன்களையும் தாறுமாறாக இயக்கியது. தன்னை அடிமைப்படுத்திய ராவணனை சீதைக்கு அடிமையாக்கினார் சனீஸ்வரர். ஆமாம்....அவரது அழிவுக்கு முதல்படி அமைத்துக் கொடுத்தார்’’
குமுறி அழுத மண்டோதரி அப்படியே ராவணன் உடல் மீது சரிந்தாள். அவளது உயிர் பிரிந்தது.    
அனைவரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar