Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கர்மக்கணக்கில் சொதப்பல்
 
பக்தி கதைகள்
கர்மக்கணக்கில் சொதப்பல்

“பச்சைப்புடவைக்காரி கர்மக்கணக்குல குளறுபடியே இருக்காதுன்னு  சொல்றது சுத்தப் பொய். கெட்டவங்க அமோகமா வாழறதும், நல்லவங்க நாய் மாதிரி கஷ்டப்படறதும்தான் கர்மக்கணக்குன்னு நல்லாப் புரிஞ்சி போச்சு. உங்க மீனாட்சி மனசுல ஈரம்தான் இல்லன்னு நெனச்சேன், நியாயம் கூட இல்லையேப்பா’’ என புலம்பினார் ராமமூர்த்தி. என் நீண்டநாள் வாடிக்கையாளர். குடும்ப நண்பர்.
கோபத்தை முந்திக்கொண்டு கண்ணீர் வந்தது. தாயைப் பழிப்பதைக் கண்டு சும்மா இருக்கிறேனே. எதிர்த்துப் பேசினால் இன்னும் வார்த்தைகள் கடுமையாகும். அதைத் தாங்கும் சக்தி எனக்கு சத்தியமாக கிடையாது.
 “என்னாச்சு சார்?  ஏன் புலம்பறீங்க?” –  கரகரத்த குரலில் கேட்டேன்.
ராமமூர்த்தி சொல்லத் தொடங்கினார்.
சில வருடங்களுக்கு முன் ராமமூர்த்திக்கு தொழிலில் நெருக்கடி. வங்கியில் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிக்காரர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.  
ராமமூர்த்தி அவர்களிடம்,  ‘ஒரு வருடம் அவகாசம் கொடுங்கள்.  கணக்கை நேர் செய்துவிடுகிறேன்’ என மன்றாடினார். அவர்கள் ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டனர். உடனடியாக இருபது லட்ச ரூபாய் கட்டினால் நிலுவையில் உள்ள பாக்கித் தொகையைப் பல தவணைகளில் கட்ட அனுமதித்தனர்.  
இருபது லட்ச ரூபாய்க்கு எங்கே போவார் ராமமூர்த்தி?
தன் சகோதரரின் உதவியை நாடினார்.
“இருபது லட்ச ரூபாயை உடனே தர்றேன். நீ கஷ்டத்துல இருப்பது தெரியும்.  இருபது வருஷத்துக்கு முன்பு நீயும், நானும் சேர்ந்து சென்னையில  நிலம் வாங்கினோமே...ஞாபகம் இருக்கா?”
“ஆமாண்ணே. அம்பதாயிரத்துக்கு வாங்கியதா ஞாபகம்.”
“ஆமா தம்பி. அதோட மதிப்பு இப்போ நாலு கோடி. சில பத்திரத்தில கையெழுத்துப் போடு. அத வித்து உன் பங்கு ரெண்டு கோடி ரூபாய கொடுத்துடறேன். பேங்கில வாங்கின மொத்தக் கடனையும் கொடுத்துட்டு ராஜா மாதிரி இருக்கலாம்.”
சம்மதித்தார் ராமமூர்த்தி. அண்ணன் இருபது லட்ச ரூபாய் கொடுத்தார். ராமமூர்த்தியின் பிரச்னை சுமுகமாக முடிந்தது.
அண்ணன் நிலத்தை நாலரை கோடிக்கு விற்றும் ராமமூர்த்திக்கு பணம் தரவில்லை. ராமமூர்த்தி கொதித்தார். அண்ணன் மீது மோசடி வழக்குப் போடத் தீர்மானித்தார். வழக்கறிஞரை நாடினார்.
“உங்க கேசு நிக்காது. இருபது லட்சம் வாங்கிக்கிட்டு விடுதலைப் பத்திரத்தில எழுதிக் கொடுத்திருக்கீங்க. அதுல உங்களுக்கு அண்ணன் ஏற்கனவே சொத்து கொடுத்ததா எழுதியிருக்காரு. கேஸ் போட்டீங்கன்னா வருஷக்கணக்குல இழுத்தடிக்கும்.   நெறைய பணம் செலவாகும். ஜெயிக்கும்னு சொல்ல முடியாது.”
அதிர்ந்தார் ராமமூர்த்தி. இருபது லட்சம் கொடுத்துவிட்டு அண்ணன் இரண்டு கோடியை அபகரித்திருப்பது புரிந்தது.  
“மனுஷங்க கோர்ட்ல என் கேஸ் நிக்காமப் போகலாம், வக்கீல் சார். ஆனா அந்த மகமாயி கோர்ட்டுல அண்ணன் இதுக்குப் பதில் சொல்லியாகணும். அவ சும்மா விடமாட்டா. இது சத்தியம்.”
“அண்ணன் செய்த துரோகத்துக்கு உடனே தண்டனை கிடைக்கும்னு நெனச்சேன் சார். ஆனா பச்சைப்புடவைக்காரி கர்மக்கணக்குல சொதப்பிட்டா.  நிலத்த வித்து வந்த நாலு கோடியில பெரிய கல்யாணம் மண்டபம் கட்டியிருக்காரு அண்ணன். அதுலருந்து லட்ச லட்சமா வருமானம் வருது. பொண்ணப் பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டாரு. பையன் ஐ. ஏ. எஸ்., முடிச்சிட்டான். ஆனா நான் பணத்துக்கு அல்லாடிக்கிட்டு இருக்கேன். திரும்பவும் பேங்க்ல பிரச்னை பண்றாங்க. என் பையன் கல்யாணம் தள்ளிக்கிட்டே போகுது. பொண்ணுக்குக் கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சு. இன்னும் குழந்தையில்ல. எனக்குத் திரும்பின பக்கம் எல்லாம் பிரச்னை.
உங்க பச்சைப்புடவைக்காரி கணக்குல இப்படிச் சொதப்பினா... எவனும் அவளக் கும்பிடமாட்டான் சார்.”
அன்று மாலை மீனாட்சி கோயிலுக்கு நடந்தே போனேன். அற்புதமான தரிசனம். பொற்றாமரைக் குளத்தின் படியில் அமர்ந்தேன். என்னருகே கோயில் ஊழியை பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.  
“தரையில் உள்ள குப்பையை அப்புறப்படுத்துவது சுலபம். மனதில் உள்ள குப்பையை அகற்றத்தான் படாதபாடு படவேண்டியிருக்கு’’
அன்னையை விழுந்து வணங்கினேன். அருகில் போய் அமர்ந்தேன்.
“ராமமூர்த்தியின் புலம்பல் உன்னை பாதித்துவிட்டதோ?”
“ஆம் தாயே! நல்லவர்கள் துன்பப்பட்டாலும், துரோகிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போகும் தாயே.”
“நான் சொல்லப்போவது தேவ ரகசியம். ஆன்மிக வளர்ச்சியின் அடுத்த கட்டம். அதில் ஜீவன்கள் எப்படி இருக்கும் என கோடி காட்டுகிறேன். கண்களை மூடிக்கொள்.”
அப்படியே செய்தேன்.
புதிய உலகில் இருந்தேன். பொன்னால் வேய்ந்த தெருக்கள். வைரக்கற்கள் மின்னும் நடைபாதைகள். அழகு அழகாக மனிதர்கள். அங்கே கேட்டது கிடைத்தது. நினைத்தது நடந்தது.
அன்னையின் குரல் காதருகில் ஒலித்தது.
“இந்த உலகில் கர்மக் கணக்கே கிடையாது. நீ கொலை செய்யலாம். கற்பழிக்கலாம். கொள்ளையடிக்கலாம். துரோகம் செய்யலாம். உன் கர்மக்கணக்கு அப்படியே இருக்கும். இங்கும் துன்பம் இருக்கிறது. இங்கும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு நீ உதவலாம். உன் உயிரைக்கூட மற்றவருக்காகக் கொடுக்கலாம். ஆனால் அதனால் உன் கர்மக்கணக்கில் எந்த மாற்றமும் இருக்காது.”
“இது என்ன தாயே அநியாயமாக இருக்கிறது?”
“அவசரப்படாதே. மண்ணுலகில் பல பிறவிகள் நல்லவனாக வாழ்ந்த ஒருவன் இந்த உலகிற்கு வருகிறான் என வைத்துக்கொள்வோம். இங்கே கொலையே செய்தாலும் பாவம் இல்லை என்று அவனுக்குத் தெரியும். அவன் உடனே கொலை செய்யத் தொடங்குவானா? இல்லை பெண்ணைப் பலாத்காரம் செய்வானா?”
யோசிக்கத் தொடங்கினேன்.
“வலியால் துடிப்பவர்களைப் பார்க்கிறான். அவர்களுக்கு உதவுவதால் புண்ணியக் கணக்கு இம்மியும் மாறாது எனத் தெரிந்தாலும் உதவாமல் இருப்பானா?”
“இல்லை, தாயே! நிச்சயம் உதவுவான். கொன்றால் பாவம் அதனால் கொல்லக்கூடாது என்ற குறுகிய எண்ணம் கொண்டவன்தான் இந்த உலகிற்கு வந்தாலும் கொல்லத் தொடங்குவான். பாவமோ, புண்ணியமோ நம்மால் அடுத்த உயிருக்குத் துன்பம் நேரக்கூடாது என நினைப்பவன் கொல்லமாட்டான். புண்ணியம் கிடைக்காவிட்டாலும் போகிறது. என்னால் இன்னொரு உயிரின் வலி குறைகிறதே,  அதுவே போதும் என நினைப்பவன் இந்த உலகிலும் அடுத்தவருக்கு உதவுவான்.”
கண் விழித்தபோது ஆயிரம் கண்ணுடையாளின் அழகு முகம் தெரிந்தது.  
“சபாஷ்! நீ நல்லவனாக இருக்கக் கர்மக்கணக்கு தேவையில்லை. ஆன்மிக வளர்ச்சி என்னும் வீட்டைக் கட்டும்போது அதற்கு முட்டுக் கொடுக்கப் பயன்படும் சாரம்தான் கர்மக்கணக்கு. வீடு கட்டிமுடித்தபின் சாரம் எதற்கு?”
“ராமமூர்த்தியின் நிலை என்னாகும் தாயே’’
“ராமமூர்த்தியை வஞ்சித்த அவனது அண்ணனைக் கடுமையாகத் தண்டிக்கப் போகிறேன். ஆனால் அது தெரிந்தால் ராமமூர்த்தி  அகங்காரத்தில் ஆடுவான். என்னை ஏமாற்றியதற்குக் கைமேல் பலன் கிடைத்துவிட்டது பார்த்தாயா என கொக்கரிப்பான். அது அவனது ஆன்மிக வளர்ச்சிக்கு நல்லதல்ல’’
“ஆக, ராமமூர்த்தியைக் கர்மக் கணக்கே இல்லாத அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார் செய்கிறீர்கள். அவருக்கு நடந்துகொண்டிருப்பது ஆன்மிகப் பயிற்சி.”
“சரியாகச் சொன்னாய். அது சரி, உனக்குப் பயிற்சி, வளர்ச்சி எதுவும் வேண்டாமா?”
“கொத்தடிமைகளுக்கு எதற்குத் தாயே... பயிற்சியும் வளர்ச்சியும்?  எந்த உலகில் என்னைப் படைத்து எப்படி வாழச் சொல்கிறீர்களோ அப்படியே வாழப் போகிறேன். எனக்குத் துரோகம் செய்தவர்களின் வீட்டில் குப்பை அள்ளும் வேலை கொடுத்தாலும் அதை தவமாக மேற்கொள்வதுதானே கொத்தடிமையின் கடமை?”
அன்னை சிரித்தபடி மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar