Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » திருமோகூர்!
 
பக்தி கதைகள்
திருமோகூர்!


மோகினியூர், மோகியூர், மோகன ேக்ஷத்திரம் என்னும் பெயர்களால் அழைக்கப்பட்ட விசேஷமான தலம்! யுகம் யுகமாக இருந்து வரும் கோயிலும் கூட. கிருத யுகத்தில் துர்வாசரை மதிக்காததால் சாபம் பெற்ற இந்திரனுக்கு இங்கு தான்  விமோசனம் கிடைத்தது.
துவாபர யுகத்திலோ புலஸ்தியர் என்ற முனிவருக்கு எம்பெருமான் மோகினி வடிவில் காட்சி தந்து அருளினான். இதன் பின்னணியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இருக்கிறது.
அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைந்த போது அமிர்தம் இறுதியாக கிடைத்தது. அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள அசுரர்கள், தேவர்கள் இடையே பெரும் போட்டி நேரிட்ட போது அதை தடுப்பதற்காக எம்பெருமான் மோகினி அவதாரம் எடுத்து வந்தான். அவ்வாறு மோகினி அவதாரம் எடுக்க விழைந்தது இங்கு தான்! இதனாலேயே இத்தலத்தில் பிரம்மனும் தவமியற்றியுள்ளான்.
நெடிய வரலாறும், கீர்த்தியும் உடைய இக்கோயிலில் எம்பெருமான் காளமேகப்பெருமாளாக காட்சி தருகிறான். வழித்துணை பெருமாள் என்றும் பெயருண்டு. வாழ்வின் முடிவில் ஜீவாத்மா பரகதியடையச் செல்லும் சமயம் இப்பெருமாளின் அருள் வழித்துணையாக வரும் என்பர். அதனாலேயே ஆழ்வார் பெருமக்களில் நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இங்கு பாசுரங்களைப் பாடினர்.
இப்படி பெருமை மிக்க இங்கு தான் பிள்ளைலோகாச்சார்யாருடன் எம்பெருமான் அழகிய மணவாளனாக எழுந்தருளினான்.
வேதாந்த தேசிகரின் அருள்வாக்கு பலித்து விட்டது. வரும்வழியில் கொள்ளையடிக்க வந்த கள்ளர்கள் எம்பெருமானால் கொள்ளை கொள்ளப்பட்டு பரம பக்தர்களாக மாறினர். மிலேச்சர்களின் பார்வையும் படவில்லை. விண்ணில் ஒரு கருடனும் உடன் வந்து வைகுண்டத்து கருணையை அனைவருக்கும் புரியச் செய்தது.
திருமோகூருக்கு அருகிலுள்ள யானைமலை சரிவில் உள்ளது கொடிக்குளம் என்னும் ஜோதிஷக்குடி. ஜோதி விருட்சம் என்னும் மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஜோதிஷக்குடி என்றானது. திருமோகூர் கோயிலில் எழுந்தருளி பூஜைகளைக் கண்ட அழகிய மணவாளர் என்னும் திருவரங்கப்பெருமான் அடுத்து அங்கிருந்து கொடிக்குளம் நோக்கித் தான் பயணமானான்.
சோழநாட்டு பெருமான் பாண்டி நாட்டவனாகி விட்டான்! எம்பெருமானின் எழுந்தருளலால் உசுப்பப்பட்டது போல் சிலிர்த்தெழுந்த வைணவர்களில் சிலர் மிலேச்சனுக்கு  நன்றி கூற வேண்டும்’’ என்றனர்.
எல்லோரிடமும் விக்கிப்பு!
பிறகே அவர்கள் சொன்னதன் பொருள் எல்லோருக்கும் புரிந்தது. ‘மிலேச்ச அபாயம் இல்லாதிருந்தால் எம்பெருமான் திருவரங்கம் விட்டு நீங்கியிருப்பானா? வைகுண்டத்தில் இருந்து சத்திய லோகத்துக்கும் பின் அங்கிருந்து பூலோகத்தில் அயோத்திக்கும் பயணப்பட்ட அம்மூர்த்தி! இப்போது மிலேச்சரால் திருவரங்கம் விட்டும் பயணப்பட்டு பாண்டிநாட்டுக்குள் வந்திருக்கிறான்!
இந்த மண்ணுக்கும் வைகுண்ட சம்பந்தம் இதனால் அழுத்தம் மிக்கதாகி விட்டது! கொடிக்குளத்தில் சில காலம் எம்பெருமான் தங்கியிருக்க பிள்ளைலோகாச்சார்யாரும் பரமபதம் அடைந்தார். மாபெரும் சாதனையைப் படைத்து, இப்படி எல்லோரும் பக்தி புரிய முடியும் என்று தன் 120வது வயதில் நிரூபிக்க அந்த வைணவச் சிம்மம், எம்பெருமான் திருவடி நிழலை அடைந்த அந்த நேரம், எம்பெருமானும் கொடிக்குளத்திலேயே தங்கி விடாமல் அழகர்மலை, எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, மேல்கோட்டை, சத்தியமங்கலம் திரும்பவும் மேல்கோட்டை, பின் அங்கிருந்து திருமலை என்று ஒரு நெடும் பயணம் மேற்கொண்டான். அவன் சென்ற இடமெல்லாம் அவன் பாதம் பட்டதால் தோஷங்கள் விலகின.  தெய்வாம்சம் மீண்டும் பொலியத் தொடங்கியது.
    இதெல்லாம் ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ நடக்கவில்லை. ஏறத்தாழ 48 முதல் 60 ஆண்டுகள் தேவைப்பட்டன. உலகைப் படைத்து அதில் உயிர்களைப் படைத்து அனைவரையும் ஆட்டுவிக்கும் அருளாளன், நமக்காக தன்னையும் ஆட்டுவித்துக் கொண்டான்.
இடர் என்பது பஞ்ச பூதங்களால் தான் ஏற்படும் என்றில்லை. தான் படைத்த மானிடர்களாலும் ஏற்படக் கூடும். அப்போது எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதற்கு சான்றாக மாறியது இக்கால கட்டங்கள்! சூரியன் உதிப்பதும், அஸ்தமிப்பதுமான அன்றாட பொழுதுகள் வரலாறாவதில்லை. சோதனையும், வேதனையுமான பொழுதுகளே வரலாறாகின்றன. காலத்தால் நினைக்கவும் படுகின்றன. இதில் இன்பமாக இருந்த நாட்களுக்குக் கூட வரலாற்றில் இடமில்லை. துன்பமே நினைக்கப்படுகிறது. இன்பமான நாட்களை நாம் உணர பெரும் காரணமாகவும் ஆகிறது.
திருவரங்கப் பெருமானின் போக்கு இப்படி இருக்க, காஞ்சி வரதனின் திருவடிகளை நாடி வேதாந்த தேசிகனும் திருவரங்கத்தில் இருந்து காஞ்சி திரும்பினார். மிலேச்ச பயம் இருந்த போதிலும், திருவரங்கத்தை சிதைக்க மிலேச்சன் முற்பட்டது போல இங்கே அவன் முற்படவில்லை என்றே கூற வேண்டும்.
வேதாந்த தேசிகன் சுதர்சன சூரியின் இரு புத்திரகளோடு காஞ்சியை அடைந்து, சன்னதிக்கும் சென்று நெஞ்சம் விம்மிட வழிபடலானார். மனதுக்குள் வரதனிடம் முறையீடு!
‘‘பெருமானே! உன் லீலா வினோதங்களை அறியும் வல்லமை எங்களுக்கு ஏது? உன் முதல் கோயில் இன்று மூடப்பட்டதாகி விட்டதே? இங்கும் அப்படி ஒரு நிலை வந்து விடாதபடி நீயே அருள்புரிய வேண்டும். உன் முதல் கோயிலான திருவரங்கம் பிரம்மன் வணங்கிய கோயில் என்றால், இது அவனே கட்டிய கோயில் அல்லவா? அங்கே கிடந்த நிலையில் இருக்கும் நீ இங்கே நின்ற நிலையில் வரம் தருபவனாக அல்லவா விளங்குகிறாய்?
 கேட்காமலே வரம் அளிக்கும் எம்பிரானே! இப்போது நான் கேட்கும் வரத்தை தர வேண்டும். உன் பூஜைகள் தடைபடக் கூடாது. உன் உற்ஸவத்துக்கும் (அதாவது பிரம்ம யாகத்தில் தீயில் தோன்றிய ஐம்பொன் மேனிச் சிலைக்கு) பங்கம் வரக் கூடாது. அதற்கு நீ வரமளிக்க வேண்டும்’’    என கண்ணீர் மல்கினார்.   
தேசிகன் நெடுநேரம் சன்னதிக்குள் பிரார்த்தனை புரிந்ததை கோயில் பட்டர்களும், ஸ்தானீகர்களும் ஆச்சர்யமுடனும், கவலையுடனும் கவனித்தனர்.
 பிரார்த்தனை முடித்து திரும்பிய போது தேசிகனின் கன்னங்களில் கண்ணீர் தடயங்கள்! அதைக் கண்டு விக்கித்துப் போய்,
‘‘சுவாமி... தாங்களா கண்ணீர் வடிப்பது?’’
‘‘ஆம்... நான் அழக் கூடாதா?’’
‘‘பொன்மேனி தங்களுக்கு. அதில் வைரம் பாய்ந்த நெஞ்சம். அந்த நெஞ்சும் கூட அழுமா?’’
‘‘என் மீது தான் உங்களுக்கு எத்தனை அன்பு. பொன்மேனி, வைர நெஞ்சம் என்ற உங்களின் புரிதல்களுக்காக மகிழ்கிறேன். அதேசமயம் உறுதியான நெஞ்சம் இருப்பதால் கண்ணீர் சிந்தக்கூடாது என்றில்லை.  
கண்ணீர் மன உருக்கத்தின் வடிவம். உருகாத மனதால் ஒரு பயனுமில்லை! அசுர மனம் கூட ஏதோ ஒரு இடத்தில் உருகுவதாகவே இருக்கும்!’’
‘‘அரிய விளக்கம்...உருக்கத்திற்கான காரணத்தை அறியலாமா?’’
‘‘திருவரங்க கோயில் மூடப்பட்டு விட்டது. எம்பெருமானின் திருமனேி தேச சஞ்சாரத்திற்கு ஆட்பட்டு விட்டது.  உபய நாச்சிமார்களும் உடன் சென்ற நிலையில் எம்பிராட்டியை அங்கு வில்வ மரத்தடியில் பிறர் அறியாதபடி புதைக்கும்படி ஆகி விட்டது. கற்பனை கூட செய்து பார்த்திராத செயல்பாடுகள் இவை. எதை எல்லாம் எண்ணினேன். அப்படியே கலியுகம் தனில் கலிமாயை எம்பெருமானையே அலைக்கழிப்பதை எண்ணினேன். அவன் படைத்த ஒன்றுக்குள் அவனே சிக்கி பாடுகளை அனுபவிக்கிறான். அவனது அந்த நடுநிலை அசாத்தியமான ஒன்றல்லவா?’’
‘‘தாங்கள் சொல்வதைக் கேட்டால் அச்சமே ஏற்படுகிறது. எதற்காக இந்த சோதனை? அங்கு நடந்த விபரீதம் இங்கும் நடக்க வாய்ப்புள்ளதா?’’  
‘‘உள்ளது. ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதமும் அல்லவா கோயில் கொண்டுள்ளது. ஆயினும் பரம பவித்ரமுடன் வைகுண்ட தீர்க்கமும், பிரம்மனின் சத்யலோக தீர்க்கமும் மிகுந்ததும் உகந்ததும் ஹஸ்திகிரியான இங்கே தான்! எனவே தான் வரதனிடமே அவனுக்காக வரம் கேட்டேன்’’
‘‘அது என்னவென்று நாங்கள் அறியலாமா?’’
‘‘தாராளமாக....பெரிய கோயில் மூடப்பட்டது போல் ஒரு நிலை இங்கு ஏற்படக் கூடாது. அவனுக்கான பூஜைகளில் தடையோ குறையோ வரக் கூடாது. இதுவே என் பிரார்த்தனை – வரம்’’
‘‘வரதனிடம் நீங்கள் கேட்ட இந்த வரம் சிலாக்கியமானது. விசித்திரமானதும் கூட...’’
‘‘நீங்கள் அதை எப்படி வேண்டுமானால் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் ஒன்று... இந்த வரதன் நான் கேட்ட வரத்தை தரப் போவது மட்டுமல்ல. பக்தி மார்க்கத்தில் பெரும் புரட்சியை செய்பவனாகவும், நாக மாணிக்கம் போல் அரிதானவனாகவும், ஒட்டு மொத்த உலகையே ஈர்ப்பவனாகவும்  கால காலத்திற்கும் திகழப் போகிறான்’’ என்றார். பேசியபடியே அவரும் மற்றவர்களும் அனந்த சரஸ் என்னும் குளக்கரை பக்கம் வந்த போது குளத்தில் ஒரு அன்னப்பட்சி மூழ்கிக் குளித்த கையோடு சிறகுகளில் நீர் படபடக்க, விண்நோக்கி பறக்கத் தொடங்கியிருந்தது. விண்ணில் ஏறிய சில நொடிகளில் பெரும் வெளிச்சமாக மாறி மறைந்து போனது!
இது என்ன மாயம்?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar