Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பணியுமாம் பெருமை
 
பக்தி கதைகள்
பணியுமாம் பெருமை


“எனக்கு ரொம்பவே பயமா இருக்கு, சார்.”
முன்னால் அமர்ந்திருந்த  முப்பத்தியைந்து வயது அழகியை நிமிர்ந்து பார்த்தேன்.
இந்தியாவில் மருத்துவத்தில் முதுகலை முடித்துவிட்டுப் பின் இங்கிலாந்தில் குழந்தைகள் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்று அங்கேயே சில ஆண்டுகள் பணிபுரிந்து விட்டுத்  தாயகம் திரும்பியிருக்கிறாள்.
 “மதுரையில இருக்கிற பெரிய கார்ப்பரேட் ஹாஸ்பிட்டல்ல  வேலை கெடைச்சிருக்கு சார்.  அந்த ஹாஸ்பிட்ல்ல குழந்தை மருத்துவத் துறைத் தலைவர் வேலை. எனக்குக் கீழ வேலை பாக்கப்போற டாக்டர்ஸ் அஞ்சு பேரும் வயசுலயும் சரி, அனுபவத்துலயும் சரி என்னவிட ரொம்பவே மூத்தவங்க. ஆனா அவங்க இன்னும் பழைய முறைகளையே பின்பற்றிக்கிட்டு இருக்காங்க. எங்க துறையில உள்ள நவீன மருத்துவ முறைகளைப் பத்தி அவங்களுக்கு தெரியாது. அதுக்காகத்தான் ஹாஸ்ப்பிடல் நிர்வாகம் என்னை இங்க கொண்டு வந்திருக்கு.  எனக்கு அதிகாரமும் ஜாஸ்தி சம்பளமும் ஜாஸ்தி. “
“இதுல பயப்படறதுக்கு எதுவும் இருக்கற மாதிரி எனக்குத் தெரியலையே டாக்டர் வசந்தி.”
 “என்னுடைய டிபார்ட்மெண்ட்ல இருக்கற டாக்டர்களுக்கு நான் தலைவியா உள்ள நுழையறது பிடிக்கல. அவங்ககிட்டருந்து  எனக்கு ஒத்துழைப்பு இருக்காது. அது  கூடப் பரவாயில்ல, சார்.   ஆனா அவங்க எனக்கு எதிராச் சதித்திட்டம் தீட்டறதாத்  தகவல் வந்திருக்கு. ஏதாவது கேஸ்ல மாட்டிவிடப் போறாங்களாம்.”
“இதுல நான் என்ன செய்ய முடியும்?”
“எனக்காகப் பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டுங்க அது போதும்.”
கை கூப்பி வணங்கிவிட்டு அவள் விடைபெற்றாள்  
ஒருவேளை டாக்டர் வசந்தியின் மனதில் லேசாக அகங்காரம் இருக்கிறதோ? மற்ற மருத்துவர்கள் அனைவரும் தன்னைவிட ஒருபடி கீழே என்ற எண்ணம் வந்துவிட்டதோ? அது வந்தால் ஆபத்தாச்சே! அன்று அன்னையின் கோயிலுக்கு நடந்தே சென்றபோது என் மனம் டாக்டர் வசந்தியின் பிரச்னையை அசைபோட்டுக்கொண்டிருந்தது.
“அதெல்லாம் இல்லை. அவள் நல்லவள்.  உண்மையிலேயே பயப்படுகிறாள்.”
பக்கத்தில் குரல் கேட்டு அதிர்ந்தேன். அருகே ஒரு நடுத்தர வயதுப் பெண்ணாக பச்சைப்புடவைக்காரி நின்றிருந்தாள். விழுந்து வணங்கினேன்.
“வா, நடந்து கொண்டு பேசுவோம்.”
“டாக்டர் வசந்தி மாட்டிக்கொண்டு விடுவாளோ?”
“மற்ற மருத்துவர்களும் நல்லவர்கள்தான். அவர்களும் பயந்து போயிருக்கிறார்கள். அந்தப் பயத்தில்தான் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.  இந்தப் பெண்ணால் அவர்களின் பதவிக்கோ, வருமானத்திற்கோ ஆபத்து வராது என உணரவைத்தால் போதும்.  அங்கே நடக்கும் காட்சியைப் பார்.”
 காட்சி விரிந்தபோது கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் நடந்தது.
சில நாட்களுக்கு முன்பு மனைவி சென்னை சென்றிருந்தபோது ஒரு ஆன்மிகப் பேருரையைக் கேட்டிருக்கிறாள். உரை நிகழ்த்தியவர் இளம் துறவி.  
தெளிவான சிந்தனை. அதை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள். துறவியின் முகத்தில் இருந்த கனிவு.  அன்புதான் ஆன்மிகத்தின் அடிப்படை என்ற அவருடைய உறுதியான கொள்கை இதெல்லாம் அந்தப் பெண்மணியை ஈர்த்துவிட்டது.
அந்தத் துறவி ஒரு பெரிய ஆஸ்ரமத்தின் தலைவராக இருந்தார்.  பெரிய, பெரிய தலைவர்கள் எல்லாம் அவரைத் தேடி வந்து  வணங்கி ஆசி பெற்றபடி இருந்தனர்.  கூட்டம் முடிந்தபின் ஏதோ ஒரு உந்துததில் அந்தத் துறவியைச் சந்திக்க நினைத்தாள் அந்தப் பெண். அதிர்ஷ்டவசமாக அதுவும் நடந்தது.
 “மதுரைக்கு வந்தால் வீட்டிற்கு வாருங்கள். நானும், என் கணவரும் பாத பூஜை செய்ய விரும்புகிறோம்.”
 “அடுத்த மாசம்  மதுரைக்கு வரேன்மா. அவசியம் வீட்டுக்கு வர்றேன்.”
இந்த ஏற்பாடு அவளின் கணவருக்குப் பிடிக்கவில்லை. அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான். வாரம் தவறாமல் மீனாட்சி கோயிலுக்குச் செல்பவர்தான். ஆனால் சந்நியாசி, சாமியார் என்றால் பிடிக்காது.  பாதிக்கு மேல் போலிச் சாமியார்தான் என்பது அவரது நம்பிக்கை.  என்னைக் கேட்காமல் எப்படி துறவியை அழைக்கலாம் என கத்தினார். மனைவி அழுதாள்.
கடைசியில் அரைமனதுடன் ஏற்றார் கணவர். ஆனால் பல நிபந்தனைகள். துறவியை வணங்கமாட்டேன். காலில் விழமாட்டேன். ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட்டும்தான் அணிவேன்.
 “அதெல்லாம் சரி, சாமியாரிடம் மரியாதைக் குறைவாப் பேசாதீங்க.”
“எனக்கு இந்த சாமியாருங்க வாழ்க்கை முறையில அடிப்படையாப் பல சந்தேகங்கள் இருக்கு. அத அந்தாளுகிட்ட கேக்கத்தான் போறேன்.”
“அவர் கோபப்படற மாதிரி எதுவும் செஞ்சிராதீங்க.”
“கோபத்தை துறக்காதவன் எப்படி துறவியாக முடியும்?”
“நான் அவருக்குப் பாத பூஜை செய்யப் போறேன். நீங்களும் சேர்ந்து செஞ்சா நல்லா இருக்கும்.”
“அந்தாளுக்கு என்னைவிட இருபது வயசு குறைவு. அந்தாளு காலை ஏன் நான் தொடணும்? உனக்கு என்ன இஷ்டமோ செய்.”
மனைவி அதற்கு மேல் பேசவில்லை. பூஜையறையில் இருந்த மீனாட்சி படத்தின் முன் கண் மூடியபடி நின்றாள்.
சொன்ன நேரத்தில் சரியாக வந்தார் துறவி.  மூன்று கார்களில் அவரது உதவியாளர்கள் வந்தனர்.  
மனைவி துறவியைக் கண்டு கைகூப்பினாள். கணவர் முறைத்தார். துறவிக்குப் பிரச்னை என்னவென்று தெரிந்துவிட்டது.
வீட்டிற்குள்ளே சென்றார்கள். பாதபூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
“ஒரு நிமிஷம். நீங்க எனக்குப் பாத பூஜை செய்யறதுக்கு முன்னால நான் செய்ய வேண்டிய வேலை ஒண்ணு இருக்கு.”
கணவனும் மனைவியும் வியப்புடன் துறவியைப் பார்த்தனர்.
“இங்க வாங்க. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கிழக்கு பார்த்து நில்லுங்க.”
கணவரும், மனைவியும் கீழ்ப்படிந்தார்கள். கணவரின் கண்களைக் குறுகுறுவென்று பார்த்தார் துறவி. கணவரால் அவரது பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க முடியவில்லை. அவர் தலை குனிந்தார்.
“உங்க ரெண்டு பேரப் பார்க்கும்போது சாட்சாத் அந்த பார்வதி பரமேஸ்வரை பார்க்கிற பாக்கற மாதிரி இருக்கு. உங்கள நமஸ்காரம் பண்றேன். என்னுடைய ஞானமும் வைராக்கியமும் இன்னும் அதிகமாகணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க.”
அடுத்த கணம் அந்தப் புகழ் பெற்ற துறவி, யாரைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காகப் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்களோ, யாருடைய ஆசியை வாங்க வேண்டும் என்று இந்த உலகமே காத்திருக்கிறதோ, அந்தத் துறவி அந்தத் தம்பதியை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
துறவறம் பூண்டவர்களை அவர்களுடைய பெற்றோர் கூட விழுந்து வணங்கவேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட துறவி ஒரு சாதாரணத் தம்பதியரின் காலில் விழுந்து வணங்கினார்.
அவர் எழுந்த போது கணவருக்கு கண்ணீர் பெருகியது. துறவி அவரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார்.
விடைபெறும் போது கணவர் துறவியின் கையைப் பற்றியபடி கதறினார்.
“சாமி... நான் ஒரு முட்டாள். எதையோ நெனச்சிக்கிட்டு உங்களுக்கு உரிய மரியாதையத் தராம விட்டுட்டேன். என்ன மன்னிச்சதுக்கு அடையாளமா அடுத்த தரம் மதுரை வரும்போது வீட்டுக்கு வரணும்.”
“உங்கள் மனைவி என்னை வீட்டுக்கு அழைத்ததும் பச்சைப்புடவைக்காரி என்னை உடனே அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னாள். உங்கள் மனதில் அன்பை விதைக்க வேண்டும் என்பது என் அன்னையின் கட்டளை. அதைச் செய்துவிட்டேன்.  உங்களுக்கு என்னைப் பார்க்கவேண்டும் என்று தோன்றினால் என் ஆஸ்ரமக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். வருகிறேன்.”
“அந்தத் துறவியின் மனநிலையில்தான் அந்தப் பெண் மருத்துவர் பணியில் சேர வேண்டும்.  மற்ற மருத்துவர்களை அன்பாலும் பணிவாலும் வெல்ல வேண்டும்.”
“இதை எப்படியம்மா அவளுக்குப் புரிய வைப்பேன்?”
“வரும் வெள்ளிக்கிழமை அவளை என் கோயிலுக்கு வரச் சொல். பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்தபடி பேசத் தொடங்கு. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.  அது சரி, நீ ஏனப்பா அழுகிறாய்?”
“நீங்கள் என் மேல் காட்டும் அன்பிற்குப் பல கோடி முறை உங்கள் காலில் விழுந்து கதற வேண்டும் எனத் தோன்றுகிறது. உங்கள் பாத கமலங்களில் என் உயிரை விட்டுவிட வேண்டும் என்ற உத்வேகம் தோன்றுகிறது, தாயே!”
“முதலில் அவள் பிரச்னையை முடி. உன் பிரச்னையைப் பின்னால் பார்ப்போம்.”
தனியாக என்னை அழவிட்டுவிட்டு அன்னை மறைந்துவிட்டாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar