Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாள் கணக்கு தப்பியதோ?
 
பக்தி கதைகள்
நாள் கணக்கு தப்பியதோ?

நந்தி கிராமம். பரதன் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான்.
பாதுகையைப் பெற்றுத் திரும்பிய நேரத்தில் அண்ணன் ராமரிடம் அன்பு எச்சரிக்கை ஒன்றை அவன் விடுத்திருந்தான். “தந்தை சொன்னார் என்பதற்காக  பதினான்கு ஆண்டுகள்  காட்டில் அலைந்து திரியும் ராஜகுமாரனே! சரியாக 14 ஆண்டுகள் முடிந்ததும் அயோத்திக்கு திரும்ப வேண்டும். காலம் கடந்தால் என் காலம் முடிந்துவிடும். இது உறுதி.”
“14 ஆண்டுகள்தான் வனவாசம் என்று தந்தையார் சொல்லியிருக்கிறார். அதையும் தாண்டி காட்டில் தங்கினால் அது தந்தையின் சொல்லை மீறியதாகி விடும். நிச்சயம் சொன்னபடியே வந்து விடுவேன். கவலைப்படாதே!” என பதில் அளித்திருந்தான் ராமன்.
இப்போதோ பரதன் நம்பிக்கை இழந்து விட்டான். கொடுத்த வாக்கை அண்ணன் காப்பாற்றாவிட்டாலும், தான் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்தில் தீயில் இறங்க ஏற்பாடு செய்தான்.
 தீக்குண்டம் சோகமாகக் காட்சியளித்தது. பெரிய வேள்விகள், பரிகார ஹோமங்கள் என அர்ப்பணித்துக் கொண்டிருந்த தனக்கு, இப்போது பரதனை ஆஹுதியாக ஏற்க வேண்டிய கொடுமை ஏற்பட்டிருப்பதை நினைத்து வருந்தியது. அதைச் சுற்றி நின்ற மக்களும் சோக பிம்பங்களாகக் காட்சியளித்தனர். சந்தனக் கட்டைகளையும், இதர திரவியங்களையும் குண்டத்தில் இட வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ‘இந்தக் கொடுமைக்கு துணை போவதைவிட, பரதனுக்கு முன்பு நாம் குண்டத்திற்குள் குதிக்கலாமா’ என்றும் அவர்கள் யோசிக்க ஆரம்பித்தனர்.
அங்கிருந்த சிலர், ‘நாம் ஏற்கனவே ராமனை பிரிந்து விட்டோம். சீதையை ராவணன் அபகரித்துக்கொண்டு சென்று விட்டான். அவளைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ராமன்  நாளைக் கடத்துவானானால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பரதன் தீக்குளித்து விடுவான். இப்படி நிகழுமானால் நாம் பரதனையும் இழந்தவர்களாகி விடுவோமே’’ என்று சொல்லி அழுதனர்.  
வசிஷ்டர் முதலான முனிவர்கள், அரசாங்கப் பிரமுகர்கள், அயோத்தி மக்கள் அனைவரும் இந்த அசம்பாவிதத்தை தவிர்க்க முடியாதா எனக் காத்திருந்தனர்.  அதற்கு ராம ஜபமே சரியான கருவி என்று கருதிய அவர்கள்  ‘ராம, ராம..’ என்று உச்சரித்தனர்.
சத்ருக்னன்  குழந்தை போலத் தேம்பியபடி, ‘‘வேண்டாம் அண்ணா... அக்னியில் இறங்காதீர்கள். ராமண்ணா வந்து விடுவார்’’
பரதன் அவனைப் பார்த்தான். பளிச்சென்று பரதனின் கண்களில் சோகம் மறைந்தது. உடலில் புதுத் தெம்பு பரவியது. ‘‘சத்ருக்னா’’ என்று அழைத்தான்.  குரலில் தொனித்த மாற்றத்தை உணர்ந்த சத்ருக்னன் குழப்பத்துடன் பார்த்தான்.
‘‘என் முடிவிலிருந்து நான் மாறமாட்டேன், தம்பி. ஆனாலும் அயோத்தி மக்களின் நலனை உத்தேசித்து,  இன்னொரு முடிவை எடுத்திருக்கிறேன்.  அதற்கு நீ  சம்மதிக்க வேண்டும். ராமன் காட்டுக்குச் சென்று இன்றுடன் 14 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் அண்ணனால் இப்போது அயோத்திக்கு திரும்ப முடியவில்லை. ஆனால் அதற்காக எடுத்த முடிவிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. அதேசமயம் அயோத்தி அரசாட்சியில் ஒரு மாற்று ஏற்பாட்டையும் செய்துவிட்டுப் போவதுதான் முறையானது. அதனால்....’’ என்று இழுத்தான் பரதன்
‘‘அதனால்....?’’ சத்ருக்னன் திரும்பக் கேட்டான்.  
‘‘இன்றோடு என் வாழ்க்கை முடிந்தது. நாளை முதல் அயோத்தி ஆட்சிப் பொறுப்பை நீ தான் ஏற்க வேண்டும்’’
அதிர்ச்சிக்கு ஆளான சத்ருக்னன் கடகடவென்று சிரித்தபடி, ‘‘எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டீர்கள் அண்ணா! ஆக, நீங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டுப் போய்விடுவீர்கள், நான் அரியணை ஏற வேண்டுமா? ராமன், லட்சுமணன் அயோத்தி திரும்புவார்களா மாட்டார்களா என்று தெரியவில்லை, 14 ஆண்டுகள் ஆகி விட்டதால், ராமனுக்கு கொடுத்த வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றி விடுவீர்கள். ஆனால் உங்களையெல்லாம் பிரிந்து, தனியனாக நான் சிம்மாசனத்தில் அமர வேண்டும், அப்படித்தானே? மூத்த மூவரும் எப்போது தொலைவார்கள், அரசாட்சியைப் பிடிக்கலாம் என்று நான் காத்திருந்தது போன்ற பழியை என்மீது சுமத்த உங்களுக்கு எப்படி மனசு வந்தது? அயோத்தி மக்கள் என்னை இப்படித்தானே  விமர்சிப்பார்கள்? ராமனுக்கு நானும் தம்பிதான். உங்களுடைய எண்ணம் எனக்கும் இருக்காதா? உங்களுடைய இந்த யோசனையை நான் ஏற்றுக் கொள்வேன் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? உங்களை ஏற்றுக்கொள்ளும் இந்த தீக்குண்டம் என்னையும் ஏற்காதா, என்ன...?’’
பரதன் திகைத்தான். மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதால் தானே சத்ருக்னனிடம் பொறுப்பேற்க வேண்டினேன். இவன் மறுக்கிறானே!
‘‘நீங்கள் இன்னொரு வகையிலும் ராமனை அவமதிக்கிறீர்கள்’’ என்று குற்றம் சாட்டினான் சத்ருக்னன்.
பரதன் சாட்டையடி பட்டவனாக துள்ளினான். ‘‘என்ன சொல்கிறாய், சத்ருக்னா...?’’
‘‘ஆமாம், 14 ஆண்டுகள் ராமரின் பாதுகைகளை அரியாசனத்தில் அமர்த்தி ஆட்சி நடத்திய நீங்கள், இந்தக் கட்டத்தில், ‘நான் போய்விட்டாலும், தொடர்ந்து ராம பாதுகையின் தலைமையில் ஆட்சி செய்து வா’ என்று கூறியிருந்தால் நான் சமாதானம் அடைந்திருப்பேன். என்னை ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு ராம பாதுகையை அவமதிப்பது போலதானே?‘‘
நிலைகுலைந்தான் பரதன்.
பரதனின் தோளைத் தொட்டபடி,  ‘‘அண்ணா, எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ராமன் வந்துவிடுவார். ஒருவேளை ராமன் மீது கொண்டுள்ள அன்பால் நீங்கள் நாள் கணக்கில் குழப்பம் கொண்டிருக்கிறீர்களோ என்றே தோன்றுகிறது’’
‘‘என்ன சொல்கிறாய்?’’ பரதன் புரியாமல் கேட்டான்.
‘‘ஆமாம் அண்ணா. தந்தையார் ராமனைக் காட்டுக்குப் போகச் சொன்ன நாளில் இருந்து 14 ஆண்டுகள் என  கணக்கு வைத்திருக்கிறீர்கள். ஆனால் ராமன் அயோத்தியை விட்டு நீங்கிய நாளில் இருந்து அதாவது அடுத்த நாளில் இருந்து கணக்கு வைத்திருக்கிறார். ஆகவே நீங்கள் ராமனின் கணக்கை மனதில் கொள்ளுங்கள். இதன்படி நாளைக்குள் ராமன் திரும்பி விடுவார், இது நிச்சயம்.....’’ என உறுதியாகச் சொன்னான் சத்ருக்னன்.
திகைத்தான் பரதன். அவன் நெஞ்சில் நம்பிக்கை துளிர் விட்டது. சூழ இருந்தவர்கள் அனைவரும் சத்ருக்னனைப் பாராட்டினர். அவன் வாதம் சரியானது என்றும் அதை பரதன் ஏற்கவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.  
சற்று நேரத்தில் ராமனின் ஆணைப்படி, அனுமன் அங்கே பறந்து வந்தான். தன்னை யார் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவன், ராவணனை வதம் செய்து சீதையை மீட்டதையும், அயோத்தி நோக்கி ராமன் வந்து கொண்டிருக்கிறார் என்றும், வழியில் பரத்வாஜர் வேண்டுகோளுக்காக அவரது ஆஸ்ரமத்தில் ராமர் தங்கியிருப்பதையும் தெரிவித்தான்.  
அங்கிருந்த அனைவரும் நிம்மதியடைந்தனர்.
 ‘‘நன்றி சத்ருக்னா! எங்கே ராமனை தரிசிக்காமல் மாய்வேனோ என வருந்திய என்னை நீயும், இதோ அனுமனும் காப்பாற்றினீர்கள். இந்தத் தீக்குண்டம் ஹோம குண்டமாக மாறட்டும். ராம பட்டாபிஷேகத்தை சிறப்பாக நிறைவேற்றுவோம்....’’ என்று உற்சாகமாகக் கூறினான் பரதன். சத்ருக்னன் அந்த வாழ்த்தை ஏற்று மகிழ்ந்தான்.   
அனைவரும் ராமனின் வரவை எண்ணி உற்சாகம் அடைந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar