Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாவமும் பரிகாரமும்!
 
பக்தி கதைகள்
பாவமும் பரிகாரமும்!


“ஆன்மிகத்தில்  தேடல் அவசியம். அதன் முடிவில் அன்பே உருவான பச்சைப்புடவைக்காரி இருப்பாள். அவளைச் சரணடைவதே ஆனந்தம். அப்போதுதான் மகிழ்ச்சியாக வாழ முடியும்.”
இந்த ரீதியில் நான் அரை மணி நேரம் அந்தக் கூட்டத்தில் பேசி முடித்ததும் ஒருவர் கையைத் துாக்கினார்.
 “எதுக்குத் தேடணும்? எதைத் தேடணும்? எதுக்கு பச்சைப்புடவைக்காரிகிட்ட சரணடையணும்? நான் எதையும் தொலைக்கலையே! எனக்கு 55 வயசாச்சு. சொந்தமாத் தொழில் பண்ணிக்கிட்டிருந்தேன். அத வித்துட்டேன். புள்ள குட்டிங்களுக்குக் கல்யாணமாகி செட்டில் ஆயிட்டாங்க. கையில நிறைய காசு இருக்கு.  அத அனுபவிக்க உடம்புல தெம்பு இருக்கு. நான் எதுக்கு சாமி கும்பிடணும்.?அந்தச் சாமியே நெனைச்சாலும் எனக்கு இதுக்குமேல ஒண்ணும் கொடுக்கமுடியாது.”
 “எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.. உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.” என்று மழுப்பிவிட்டு வந்தேன்.
இரண்டு நாள் கழித்து ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றேன். சீருடை அணிந்த ஒரு பெண் அருகில் சாமான்களை அடுக்கி கொண்டிருந்தாள்.
“ஏம்மா, பெருங்காயம் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?”
சட்டென திரும்பி பார்த்தாள். பார்க்க அழகாக இருந்தாள்.
“பெரிய கேள்வி  ஒன்று மனதைக் குடையும்போது பெருங்காயத்தைத் தேடுகிறாயே?”
அவள் கால்களில் விழுந்து வணங்கினேன்.
“உன்னிடம் கேள்வி கேட்டவன் சரியான ஆள் இல்லை. மோசடிக்காரன். வஞ்சகன். துரோகி.”
அதிர்ந்தேன். வஞ்சகனுக்குப் போய் அனைத்து நலன்களையும் வாரி வழங்கியிருக்கிறாளே? நீதியும் தர்மமும் செத்துவிட்டதா என்ன?
“எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், கர்மக் கணக்கு உன் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று!”
“மன்னியுங்கள், தாயே! அந்த மனிதரைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர் கேள்விக்குப் பதில் சொல்ல அவகாசமும் வாங்கிவிட்டேன். என்ன செய்வது? என்னால் பதில் சொல்லமுடியாது என்று அவரை அழைத்துச் சொல்லிவிடட்டுமா?”
“தேவையில்லை. அவனே உன்னை அழைப்பான். அப்போது நீ பதில் சொல்லலாம்.”
“என்ன பதில்.. .”
“சரியான நேரத்தில் தன்னால் தெரியும்.”
ஒரு வாரம் எந்த நிகழ்வும் இல்லாமல் கடந்தது. அந்த வெள்ளிக்கிழமை மாலை என் அலைபேசி ஒலித்தது. புதிய எண். பெண் குரல் ஒலித்தது.
“ஐயா! நான் மரகதம். ராமலிங்கத்தோட மனைவி.”
“எந்த ராமலிங்கம்?”
“அதான்யா அன்னிக்குக் கூட்டத்துல எதுக்குச் சாமி கும்பிடணும்? வில்லங்கமாக் கேள்வி கேட்டாரே’’
“சொல்லுங்க.”
“ஆத்தா அவரைத் தண்டிச்சிட்டாய்யா. ஹார்ட் அட்டாக். சிறுநீரகங்கள் பாதிப்பு. உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டாங்கய்யா.”
‘ஆத்தா தண்டித்தாளாம்! செய்வதையெல்லாம் செய்துவிட்டு அவளைப் பழி சொல்வது என்ன நியாயம்? செய்த பாவமே காரணம்! இதில் ஆத்தா எங்கே வந்தாள்?’
நான் நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை.
“ஐயா! அவருக்கு நெனவு திரும்பினதிலருந்து ஒரே புலம்பல். சொந்தக்காரங்க யாரையும் பாக்க மாட்டேங்கறாரு. முதல்ல உங்களத்தான் பார்க்கணுமாம்.”
அந்தப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் நுழைந்தபோது இரவு எட்டு மணி.  பார்வையாளர் நேரம் முடிந்ததால்  சோர்வாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். ஒரு நர்ஸ் என்னை நோக்கி ஓடி வந்தாள்.
“வா, உன்னை நான் அழைத்துப் போகிறேன்.”
அவளை அடையாளம் கண்டு விழுந்து வணங்கினேன்.
“அன்று கேட்ட கேள்விக்கு இன்று  பதில் சொல்லப் போகிறாய்.”
“எனக்கு பதில் தெரியாதே, தாயே!”
“அவன் உன்னிடம் அழுவான். செய்த பாவங்களைப் பட்டியலிடுவான். அவனை வெறுக்காதே. அவன் கையைப் பிடித்துக்கொண்டு பேசு. உன் மனதில் போதுமான அன்பு இருந்தால் எண்ணங்களாக, அதை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக நான் மலர்வேன்”
“அன்பே வடிவான என் தாயே! என் மனதில் அன்பாகவும் நீங்களே மலர வேண்டும்.”
அந்த மனிதரின் மனைவி கைகூப்பினாள். மனைவியை அவர் வெளியே அனுப்பிவிட்டார்.
நான் அருகில் அமர்ந்தேன். என் கையை பற்றியபடி கண்ணீர் சிந்தினார். பின் பேசத் தொடங்கினார்.
“நான் வஞ்சகன். துரோகி.”
“யாருக்குத் துரோகம் செஞ்சீங்க?”
“யாருக்குச் செய்யல, சொல்லுங்க? என் மனைவிக்கும் துரோகம் பண்ணியிருக்கேன். எனக்கு சின்ன வீடு இருக்கு. என் தொழில் கூட்டாளிக்குத் துரோகம் செஞ்சிருக்கேன். கடைக்கணக்க மாத்தி எழுதி லட்சக் கணக்குல சுருட்டியிருக்கேன். தரம் இல்லாத பொருட்களை வித்து வாடிக்கையாளர்களுக்குத் துரோகம் பண்ணியிருக்கேன். எங்கிட்ட வேல பாத்தவங்களுக்குச் சரியா சம்பளம் கொடுக்காம கசக்கிப் பிழிஞ்சி வேலை வாங்கியிருக்கேன். எல்லாரையும் ஏமாத்தியிருக்கேன். பச்சைப்புடவைக்காரி தெய்வம்யா. என் துரோகங்களக் கண்டுக்காம எனக்கு வாரிக் கொடுத்தா. இப்போ ஹார்ட் வீக்கா இருக்கு. கிட்னி போயிருச்சின்னு சொல்றாரு. நான் செஞ்ச பாவத்துக்கு இந்தத் தண்டனை ரொம்பக் குறைச்சல்யா.
“கேடுகெட்ட மனுஷனான எனக்கு அள்ளி  அள்ளிக் கொடுத்த பச்சைப்புடவைக்காரிக்கு ஏதாவது செய்யணும்னு மனசு  துடிக்குதுய்யா.  அவளுக்கு ஒரு கோயில் கட்டட்டுமா? இல்ல, மீனாட்சி கோயிலுக்கு கோடி ரூபாய் நன்கொடை கொடுக்கட்டுமா? இல்ல, வேற ஏதாவது  தர்மம் செய்யட்டுமா? அதிக நாள் இருப்பேன்னு எனக்குத் தோணல. அதுக்குள்ள. .. .”
நான் என்ன சொல்வது? பச்சைப்புடவைக்காரிதான் சொல்ல வேண்டும்.
சொல்லிவிட்டாள். அவள் கொடுத்த எண்ணங்களை அவள் கொடுத்த வார்த்தைகளால் வெளிப்படுத்தினேன்.
“இருட்டுல தொலைச்ச பொருள வெளிச்சத்துல தேடறதுனால அர்த்தமில்லை?”
அவர் அழுகை சட்டென நின்றது.
“உங்க மனைவி, தொழில் கூட்டாளி, உங்ககிட்ட வேலை பாத்தவங்கள ஏமாத்திட்டு ப கோயில் கட்டறதுனால என்ன பயன்?”
“பிறகு’’
“ கூட்டாளிகிட்ட நீங்க செஞ்ச மோசடிய ஒத்துக்கங்க. நஷ்ட ஈடா பெரிய சொத்த அவருக்குக் கொடுங்க. உங்ககிட்ட வேலை பாத்தவங்க விபரம் இருக்குல்ல? அவங்களுக்கு நிறைய பணம் கொடுங்க. உங்க வாடிக்கையாளர்கள் விவரம் இருந்தா அவங்களுக்கு ஏதாவது கொடுக்க முயற்சி பண்ணுங்க. உங்க மனைவிகிட்ட நீங்க செஞ்ச துரோகத்தச் சொல்லி  மனசார மன்னிப்பு கேளுங்க. இதுவே பச்சைப்புடவைக்காரிக்குப் பிடிச்ச பரிகாரம்.”
அவர் கண்களில் நீர் வழிந்தது.
“இதெல்லாம் செஞ்சிட்டா  உடனே உடம்பு குணமாயிரும்னு நெனைக்காதீங்க. இதச் செஞ்சா நெஜமாவே சந்தோஷமா இருப்பீங்க. அடுத்த பிறப்பு நல்லா இருக்கும்.”
அதன்பின் நான் அதிக நேரம் இருக்கவில்லை.
தாழ்வாரத்தில் பச்சைப்புடவைக்காரி நர்ஸ் வடிவத்தில் காத்திருந்தாள்.
“நன்றாகப் பேசினாயே”
“ஏன் தாயே, உங்களை நீங்களே புகழ்கிறீர்கள்? நீங்கள்தானே பேசவைத்தீர்கள்?  அது போகட்டும், இதையெல்லாம் செய்தால் அவன் மகிழ்ச்சியாக இருப்பானா?”
“அவனது மகிழ்ச்சிக்கு நான் பொறுப்பு றாயா?”
“நான் கொத்தடிமை, தாயே! எஜமானியின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. என் எஜமானியோ எப்போதும் அன்பென்னும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் பூரணேஸ்வரி.  அதனால் நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன், தாயே!”
கலகலவென்று சிரித்தபடி  அன்னை மறைந்துவிட்டாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar