Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குறைக்கு குறை உள்ள நகரம்
 
பக்தி கதைகள்
குறைக்கு குறை உள்ள நகரம்

ஆச்சரியத்துடன் கோவிந்த சர்மனும் காத்திருக்க அவரை உள்ளே அழைத்தார் வேதாந்த தேசிகன்.
எளிய இல்லம். கிழக்குச் சுவரில் மூலிகைச் சாற்றில் வரையப்பட்ட ஹயக்ரீவரின் திருவுருவம். அதன் முன் குங்கிலியம் புகைந்தபடி இருந்தது. செவ்வகமான கூடம் அதில் பாய் விரிக்கப்பட்டு இரு திண்டுகள் சுவர் ஓரமாக காணப்பட்டன. உள்நுழைந்த நொடிகளில் திருச்சன்னதிக்குள் நுழைந்தது போலிருந்தது.
‘‘அமருங்கள்’’ என்றார் தேசிகன்.
தேசிகனும் எதிரில் அமர்ந்தார். தேசிகனின் மனைவி திருமங்கை ஒரு குவளையில் நீர் கொண்டு வந்தாள். தாகம் தீர சர்மரும் வாங்கி குடித்தார்.
அவரிடம் தேசிகன், ‘‘சொல்லுங்கள் வந்த விஷயத்தை...’’
‘‘அதைத் தான் தங்களைப் பார்த்ததும் கூறினேனே...? தங்களை எங்கள் அரசவையில் கவுரவிக்க வேண்டும் என்பது ராஜகுருவான வித்யாரண்யரின் விருப்பம்’’
‘‘காரணம்?’’
‘‘தாங்கள் வளமோடும் புகழோடும் வாழ வேண்டும் என்பது எங்கள் ராஜகுருவின் விருப்பம். அப்படி வாழும் பட்சத்தில் பல அரிய நுால்கள் சமுதாயத்திற்கு கிடைக்கும்’’
‘‘நான் இப்போதும் அப்படித்தானே வாழ்கிறேன்’’
‘‘ அப்படியென்றால் பிட்சைக்கு செல்வது எதற்கு?’’
‘‘அது என் சுதர்மம்...யோக வாழ்வின் ஒரு பகுதி அது’’
‘‘ பிறரிடம் யாசித்து வாழ்வதா யோக வாழ்வு?’’
‘‘பிறருக்காக வாழும் ஒருவன் வரையில் அதுவே யோக வாழ்வு! தனக்காக வாழும் ஒருவன் பெறுவதே யாசகம். அதுவே பிச்சை. இது பிட்சை! சமூகத்தில் தர்மத்தை துாண்டி விடும் முயற்சியும் கூட!’’
‘‘இப்படி ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கவில்லை’’
‘‘ஏன் விஜய நகரத்தில் என் போல பிட்சை எடுப்பார் இல்லையா?’’
‘‘ஆம்... அதுவே உண்மை. பிட்சை மட்டுமல்ல. பிச்சைக்கும் இடமில்லை. எங்கள் அரசர் எம் நாட்டை வளமிக்க நாடாக பசியில்லாத நாடாக வைத்திருக்கிறார்’’
‘‘சந்தோஷம்... எம் காஞ்சி நகரிலும் பசிக்கு இடமில்லை’’
‘‘அறிவேன்... குறைக்கு குறை உள்ள நகரம் என கூறியது என் காதில் விழுந்தது’’
‘‘அது தான் உண்மை. எம்பெருமான் இங்கே அதனால் தான் அறிதுயில் கோலத்தை தவிர்த்து நின்று வரம் தரும் ராஜனாக அதாவது வரத ராஜனாக காட்சி தருகிறான்’’
‘‘நல்ல விளக்கம். முடிவாக தங்களின் பதில்’’
‘‘பொறுங்கள்.  பதிலை உங்கள் ராஜகுருவுக்கு  எழுத்தாலேயே தருகிறேன்’’ என்ற வேதாந்த தேசிகன் பூஜையறைக்குச் சென்று பலகையில் அமர்ந்தார். எதிரில் கோவிலாழ்வாரும் அதனுள் எம்பெருமானின் அர்ச்சாரூப திருவிக்ரஹம் ஒன்றுடன், கொலுவில் அமரும் வண்ண உருவங்களும் மலரிட்டு வணங்கிய நிலையில் காட்சியளித்தன. விளக்கு சுடர் விட்டுக் கொண்டிருந்தது. எட்டும் துாரத்தில் பனை ஏடுகள், எழுத்தாணிகள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்து கூர்தீட்டி பாடல் ஒன்றை எழுதினார்.
அப்பாடலின் பொருள் இது தான்.
‘‘எந்த அரசனும் இந்த ஒட்டு மொத்த உலகை ஒரு குடையின்கீழ் ஆண்டதில்லை. இனி ஆளவும் போவதில்லை. சிறிதாய் ஒரு நிலப்பரப்பு. அதில் ஒரு அரசாட்சி! அதனால் அரசனுக்கும் இறுமாப்பு. இது தான் புலவர்களை, ஞானியர்களை வரவழைக்கச் செய்து என்னை புகழ்ந்து பாடு என்கிறது.
வறுமையில் சிக்கியிருக்கும் புலவர்களும் வழியின்றி பாடுகின்றனர். நான் அவர்களில் ஒருவனல்ல! கண்ணனை நாடிச் சென்ற குசேலனைப் போன்றவன்! வறுமையிலும் குசேலன் கண்ணனிடம் எதையும் கேட்கவில்லை. கேட்கத்தான் சென்றான். ஆனால் கண்ணனைக் கண்டதும் கேட்க மனம் வரவில்லை. அதுதான் உயர்ந்த உள்ளம். கேளாமலே பெரும் பொருளை அடையும்படிச் செய்தான் கண்ணன். எனக்கும் அவன் துணையிருப்பான்’’
என எழுதி கோவிந்த சர்மாவிடம் கொடுத்தார். கண்களில் ஒற்றிய அவர் பேழைக்குள் வைத்துக் கொண்டார்.
‘‘சர்மரே... நெடுந்தொலைவு பயணித்து வந்துள்ளீர்! ஓய்வெடுத்து உணவருந்திச் செல்லலாம்’’ என்றார் தேசிகன். அப்படியே ‘‘மிலேச்ச உபாதை ஏதுமில்லையே?’’ என்றும் கேட்டார்.
‘‘மிலேச்சர்கள் விஜயநகரை பொருத்தவரை எச்சரிக்கையாகவே உள்ளனர். விஜய நகரம் நீங்கலாக இந்த நாவல பூமியை வலம் வந்து நாடுகளை வசப்படுத்திக் கொண்டு இறுதியாக விஜய நகரை பணியச் செய்வது தான் அவர்களின் எண்ணம்’’
‘‘அறிவேன்... அவர்களின் அடாத செயலால் அரங்கனும் இப்போது யாத்திரை கிளம்பி விட்டதை தாங்கள் அறிவீரா?’’
‘‘கேள்விப்பட்டேன். தங்கள் பங்கும் அதில் இருந்ததையும் அறிவேன்’’
‘‘என்னை இயக்கி தன்னை இயக்கிக் கொண்டதும் எம்பெருமான் அல்லவா?’’
தேசிகன் அவ்வாறு சொன்ன போது,  வேதியர்கள் சிலர் கூட்டமாக வாட்டமுடன் வந்து நின்றனர்.
‘‘வாருங்கள். இந்த வெயிலிலா வர வேண்டும். காலையில் வந்திருக்கலாமே?’’ என்றார் தேசிகன்.
‘‘சுவாமி... எங்கள் துன்பம் எங்களை நேரம் பார்க்க விடவில்லை. நாங்கள் என்ன செய்ய?’’ என்றார் ஒருவர்.
‘‘அப்படி என்ன துன்பம்?’’
‘‘எங்கள் ஊரே கிருமியால் நோய்க்கு ஆளாகி உள்ளது’’
‘‘விளக்கமாக கூறுங்கள்’’
‘‘கடந்த சில நாட்களாக மக்கள் காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். வைத்தியர்களால் ஏதும் செய்ய இயலவில்லை’’
‘‘அப்படியா?’’
‘‘ஆம்... யார் இட்ட சாபமோ....இல்லை எங்கள் திருப்புட்குழி செய்த பாபமோ, ஒட்டு மொத்த ஊரே படுத்த படுக்கையாகி விட்டது’’
‘‘எம்பெருமானே இது என்ன சோதனை?’’
‘‘ஆம் சோதனை தான்... வீட்டிற்கு ஒருவர் இறந்து படும் நிலை தெரிகிறது. இப்படியே போனால் இன்னும் சில நாட்களில் திருப்புட்குழியே குழிக்குள் அடங்கி விடும்’’
‘‘கவலை வேண்டாம். நீங்கள் ஊர் திரும்புங்கள். நாளை காலை வருகிறேன். அதற்குள் சுதர்சன மகாயக்ஞம் செய்யத் தயாராக இருங்கள். இது போன்ற தருணங்களில் சுதர்சனமே அருமருந்தாக நம்மைக் காத்திடும்’’ என்று முடித்தார்.
வேதியர்களும் வணங்கிப் புறப்பட்டனர். கோவிந்த சர்மன் ‘‘சுவாமி! நாளை வேள்வியில் நானும் பங்கேற்கலாமா?’’ எனக் கேட்டார்.
‘‘தாராளமாய்...சுதர்சன யக்ஞம் என்பது உடல், உள்ளத்திற்கு சக்தி தர வல்லது.  துஷ்ட சக்திகள், கிருமிகளை சுதர்சன சக்கரம் ஓட ஓட விரட்டிடுமே...?’’ என்றார்  உற்சாகமாய்...
அதைக் கேட்க கோவிந்த சர்மா முகம் பிரகாசம் அடைந்தது.
‘‘இந்த காஞ்சி மாநகரின் நடமாடும் சக்தி களஞ்சியமாக தங்களைக் காண்கிறேன்’’ என்றார் முத்தாய்ப்பாக. அப்போது காவல் வீரன் ஒருவன் குதிரையில் வந்து இறங்கி வணங்கினான். ஓலை ஒன்றை தேசிகனிடம் கொடுத்தான்.
அதில் மிலேச்சர்கள் காஞ்சியையும் குறி வைத்து விட்டனர் என்பதோடு, பத்தாயிரம் பேர் கொண்ட காலாட்படை செஞ்சி வழியாக காஞ்சிபுரம் நோக்கி வரவிருக்கிறது என்ற செய்தி இருந்தது.  
செய்தியை அனுப்பியவர் பல்லவ மண்டல ஊர்க்காவல் படைத் தளபதி மாதவராயன்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar