Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சுதர்சன ஹோமம்
 
பக்தி கதைகள்
சுதர்சன ஹோமம்

பல்லவ மண்டல ஊர்க்காவல் படை தளபதி மாதவராயனின் ஓலை தேசிகனைக் கண்களை மூடி தியானத்தில் ஆழ்த்தியது. அதைக் கவனித்த கோவிந்த சர்மனுக்கும்  ஏதோ பிரச்னை என்பது புரிந்தது.
ஓலையைத் தந்த வீரன் தேசிகனை பார்த்தபடி இருந்தான். தேசிகனும் கண் திறந்து அவனைப் பார்த்தவராக, ‘‘அவர்கள் காஞ்சி நகருக்குள் நுழைய மாட்டார்கள். கவலை வேண்டாம் என்று தளபதியிடம் கூறி விட்டு... வரதன் கைவிட மாட்டான்’’ என்றார். அந்த வீரனும் திரும்பிச் சென்றான்.
கோவிந்த சர்மன் முகத்தில் ஆச்சரிய ரேகைகள்.
‘‘என்ன பார்க்கிறீர்?’’
‘‘மிலேச்சர் பார்வை காஞ்சி மாநகர் பக்கமும் திரும்பி விட்டது போல் தெரிகிறதே?’’
‘‘திரும்பாமல் போகுமா என்ன.... நாவல தேசத்தின் அரும்பெரும் ஏழு நகரங்களில் ஒன்றாயிற்றே... இந்த காஞ்சி?’’
‘‘ஆயினும் அவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிறீர்களே?’’
‘‘ஆம்... நுழைய மாட்டார்கள். விஷ ஜுரம் அவர்களை நுழைய விடாது’’
‘‘விஷ ஜுரமா?’’
‘‘திருபுட்குழியையே ஆட்டிப் படைக்கும் அது அவர்களைத் தானா விட்டு வைக்கப் போகிறது?’’
‘‘அப்படியாயின் விஷ ஜுரம் காரணத்தோடு தான் வந்துள்ளதோ?’’
‘‘பொதுவாக காய்ச்சலும் குளிரும் தேகத்துக்கு நல்லது. அது உடம்பின் பாைஷ! அதை அனுபவித்தாலே ஆரோக்கியத்தின் அருமை புரியும். அழியாச் செல்வம் என்பது பொன் பொருளல்ல. உடலின் ஆரோக்கியமே என்பதும் அர்த்தமாகும்’’
‘‘நோயைப் போற்றுவது போல் உள்ளதே உங்கள் பேச்சு?’’
‘‘இப்போது வந்துள்ள விஷ ஜுரத்தை நான் போற்ற விரும்புகிறேன். போர்க்களத்தில் நிற்பவர்களுக்கு வாளையும், கேடயத்தையும் விட உறுதியானது அவர்கள் தேகமே! அதற்கு வரும் கேடு என்பது ஒரு போர்வீரனைப் பொறுத்தவரை எதிரியை விட மோசம் என்றாகும். அதிலும் பத்தாயிரம் பேர் கொண்ட படை வருகிறது. விஷ ஜுரம் அவர்களில் ஒருவரைத் தொற்றிக் கொண்டால் கூட போதும்.
குடம் பாலில் துளி விஷம் கலந்தால் எப்படியோ அப்படி ஆகி விடும். படை கலகலத்துப் போகும்!
‘‘இப்படி ஒரு கோணத்தை நான் யூகிக்கவில்லை. தங்களின் சிந்தனை வேகமும், தாங்கள் யோசிக்கும் விதமும் எனக்கு  பிரமிப்பை தருகிறது’’
‘‘எதற்கு இந்த புகழ்ச்சி? இரும்பை துருவானது வீழத்துவது போல மனிதர்களை புகழ்ச்சி வீழ்த்திவிடும். நீங்கள் எனக்கொரு உதவி செய்ய முடியுமா?’’
‘‘இது என்ன கேள்வி... தாராளமாக கூறுங்கள்’’
‘‘உங்களோடு விஜயநகர காவல்வீரர்கள் வந்துள்ளனரா?’’
‘‘ஆம்... ஒரு சமையல்காரர், ஒரு பரிசாரகர், ஒரு ரதசாரதி அதுபோக முன்பின்னாக ஆறுகுதிரை படை வீரர்கள் வந்துள்ளனர்’’
‘‘அவர்களில் சிலரை மிலேச்ச படைக்குள் நுழைத்து இந்த விஷக்கிருமி தொற்று காஞ்சியிலும் பரவி வருகிறது. திருப்புட்குழி அதற்கு சான்று என்று கூற வைக்க முடியுமா?’’
‘‘தங்களுக்கு சிறு சலனமும் தேவையில்லை. மிலேச்சர்களை மிலேச்ச வேடத்திலேயே சென்று சந்தித்து தாங்கள் கூறியது போல கூறுவதோடு, மீறி உள் நுழைந்தால் ரத்த வாந்தி எடுக்க நேரிடும் என்று மிரட்டி விடுகிறேன். இது இந்த நாட்டைக் காக்க நான் செய்யும் ஒரு தொண்டு, என் பாக்கியம் என்றும் கூறுவேன்’’
கோவிந்த சர்மன் உற்சாகமாக கூறி விட்டு புறப்படலானார். வேதாந்த தேசிகன் முகத்தில் மகிழ்ச்சி கலந்த பெருமிதம். அதை கவனித்தபடியே வந்து பேசலானாள் அவரின் தர்மபத்தினியான திருமங்கை.
‘‘பெரும் சோதனையான இவ்வேளையில் தங்கள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிகிறதே?’’
‘‘ஆம் திருமங்கை... இந்த கோவிந்த சர்மனை எனக்காக மட்டுமல்ல. இந்த காஞ்சிக்காகவும் வரதனே அனுப்பியுள்ளதாக கருதுகிறேன். அவன் கருணையை எண்ணினேன். சோர்வு நீங்கி மகிழ்வு பிறந்தது’’
‘‘தாங்கள் எண்ணுவது போல்  நோய்கிருமிக்கு  படை பயப்படுமா?’’
‘‘ பாம்புக்கே படை நடுங்கும் என்பது பழமொழி. நோய்க்கிருமி என்பது பல்லாயிரம் பாம்புகளின் தொகுப்பு! பயப்படாமல் போவார்களா?’’
‘‘தாங்களோ அந்த நோயை விரட்ட சுதர்சன ேஹாமம் செய்யப் போகிறீர்களே?’’
‘‘ஆம்... திருப்புட்குழி மக்கள் நம் மக்களல்லவா? அவர்களை காப்பதுது மந்திர சாஸ்திரம் அறிந்தவனின் தலையான கடமையாயிற்றே?’’
‘‘நோய் நீங்கி விட்டால் திரும்ப அவர்கள் வரலாம் தானே?’’
‘‘அதை அப்போது பார்க்கலாம். இப்போது ஒரு வழியை காட்டிய வரதன் அப்போதும்  நல்வழி காட்டுவான்’’
‘‘இந்த வரதன் திருவரங்கத்தைக் காக்க ஏன் ஒரு வழியும் காட்டவில்லை?’’ திருமங்கையின் கேள்வி தேசிகனின் முகத்தில் வியப்போடு விதிர்ப்பையும் ஏற்படுத்தியது.  பின் முகத்தில் ஒரு அளவான புன்னகை!
‘‘நான் அதிக பிரசங்கியாக ஏதாவது கேட்டு விட்டேனா?’’
‘‘உன் கேள்வி உனக்கே அவ்வாறு படுகிறதோ?’’
பாதகமில்லை. சில விஷயங்களை அடை காக்காமல் பேசுவது தான் நல்லது. உன் கேள்வியிலும் பிழையில்லை. அரங்கன் வேறு வரதன் வேறு இல்லை தேவி. இதை முதலில் புரிந்து கொள்.
குழந்தைகள் தங்களுக்குள் வேடம் போட்டுக் கொண்டு நான் தலையாரி, நீ கள்வன், ஓடி ஒளிந்து கொள் – நான் கண்டு பிடிக்கிறேன் என்று விளையாடுவது போன்ற ஒரு விளையாட்டு தான் மிலேச்ச அபாயமும் அவன் திருவரங்கள் விட்டு மதுரை சென்றதும்.
மிலேச்சனுக்கும் அவனே கடவுள் என்பதை ஒரு பாமரன் அறியத் தவறலாம். என் போன்ற வேதம் கற்றோர் அறிந்திடத் தவறிடக் கூடாது.
பாலுக்குள் உள்ள நெய்யை எப்படி கடைந்து அறிகிறோமோ, அது போல நாலாவித செயல்பாடுகளிலும் அவனே இருப்பதை உணர்வதே ஞானம்.’’
‘‘எல்லாம் அவன் செயல் என்பதையே தாங்கள் இப்படி கூறுகிறீர்கள் என்பது புரிகிறது. அவன் செயல் என்பது அருளுவதாக இருந்தால் தேவலை. ஆயிரக்கணக்கானோர் தலை உருளுவதாக இருப்பது தான் வேதனை தருகிறது’’
‘‘அனைத்திற்கும் காரண காரியம் உண்டு தேவி. வாழ்வென்பது உண்பதும், உறங்குவது மட்டுமல்ல. விலங்குகளின் வாழ்வில் கூட இரை தேடுவதும், பின் தானே இரையாவதும் போராட்டமானதாகவே இருப்பதை எண்ணிப்பார். இதில் மனித வாழ்வு அறிவு கடந்த ஞானமும் சார்ந்த ஒன்று. வெறும் அறிவோடு சிந்தித்தால் நுட்பம் புரியாது. அதைக் கடந்து ஞானத்தோடு சிந்தித்தாலே பல உண்மைகள் புரியும்.
எம்பெருமானே கூட அக்கடாவென்று இருக்க விரும்பவில்லை. அவன் படைத்த அசுரர்களிடம் அகப்பட்டு அவர்களை திருத்த முயன்று, இயலாத போது அழித்து ரட்சித்தான். அவனால் அழிக்கப்படுவதும் ஒரு பாக்கியமே! அதே போல அவனுக்காக நம் வாழ்வு அழிகிறது என்றால் அதுவும் பாக்கியமே!
மேடும் பள்ளமும் இருந்தால் தானே இருப்பு தெரியும். சமநிலையில் இருப்பவர் வாழ்வில் இன்ப, துன்பங்களுக்கே இடமில்லாமல் போய் எதற்கு வாழ்கிறோம் என்பதே தெரியாது போய் விடும்’’
‘‘என்  கேள்விக்கு தான் எத்தனை பெரிய வியாக்யானம்... அடேயப்பா!
 திருமங்கை வியப்பில் ஆழ்ந்தாள்.
 தேசிகனோ சுதர்சன ஹோமம் குறித்த சிந்தனையோடு அதற்கான துதியையும் சிந்திக்க தொடங்கி விட்டார்.
உணவு உண்டு முடித்ததும் திருச்சன்னதியில்  மாம்பலகை மீது அமர்ந்தார்.  ஓலை, எழுத்தாணியை எடுத்துக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
அவருக்குள்  எம்பெருமான் விஸ்வரூபக் காட்சியளித்தான்! அந்நேரம் சுதர்சனமாய் அவன் சாதித்தவைகள் மனதில் சாட்சியாக விரிந்தன. நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்ய வதத்தின் போது வயிற்றைக் கிழித்த நகங்களாய் திகழ்ந்தது சுதர்சனமே! வாமன அவதாரத்திலோ சுக்ராச்சாரியாரையே திசை திருப்பிற்று இந்த சுதர்சனம்!
கஜேந்திர மோட்சத்தில் முதலையை அழித்து யானையை காப்பாற்றியது சுதர்சனம் தானே?
இந்த சுதர்சனர் சொரூபம் கொண்டு நிற்கும்போது 16 ஆயுதங்கள் உதவிக்கு வருகின்றன!
‘சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை வலக்கையிலும், சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவை இடக்கையிலும் வந்து விட்ட நிலையில் எதிர்படுவதை அழிக்கப் புறப்பட்டால் அது நிர்மூலமாகிய தீரும் என்பதே சுதர்சனம் எனப்படும் சக்கராயுதத்தின் பெரும் மகிமை!
சுதர்சனத்தை அணுஅணுவாய் தியானித்து உள்ளம் பூரித்தது. நெகிழ்ந்த நிலையில் சுதர்சனாஷ்டகம்  தேசிகனுக்குள் கருக்கொண்டு வெளிப்படத் தொடங்கிற்று!
‘‘ப்ரதி படஸ்ரேணி பீஷண...
வரகுண ஸ்தோம பூஷண...
ஜெனிபயஸ்தான காரண...
ஜெக தவஸ்தான காரண...
நிகில துஷ்கர்ம தர்சன...
நிகம சத்தர்ம தர்சன...
ஜெய ஜெய ஸ்ரீசுதர்சன...
ஜெய ஜெய ஸ்ரீசுதர்சன...’
வார்த்தைக்கு வார்த்தை வைரம். வார்த்தைக்கு வார்த்தை வஸ்யம், வார்த்தைக்கு வார்த்தை வீர்யம், வார்த்தைக்கு வார்த்தை சம்பூர்ணம்....
அவரின் கைகள் ஏட்டில் மானுட குலத்திற்கு மகாமருந்தான சுதர்சனாஷ்டகம் என்ற ஸ்லோகத்தை எழுதிச் சென்றபடியே இருந்தன!
அதே வேளை திருப்புட்குழியிலோ விஷ ஜுரத்தின் தாக்கம் தாளாமல் பலர் மாண்ட நிலையில் அந்த ஊரின் பெயரைச் சொல்லக் கூட அஞ்சும் நிலை காஞ்சிக்குள் உருவாகியது!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar