Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வைத்தியனுக்கெல்லாம் வைத்தியன்
 
பக்தி கதைகள்
வைத்தியனுக்கெல்லாம் வைத்தியன்


மறுநாள் காலை!
பிரம்ம முகூர்த்த வேளையிலே கண்விழித்து விட்டார் வேதாந்த தேசிகன். கொல்லைப்புறத்தில் காலைக் கடன்களை முடித்து, கிணற்று நீரை  இறைத்து குளித்தவர், பன்னிரு காப்பு தரித்துக் கொண்டு, கச்சமும் உடுத்திக் கொண்டு உபய அங்க வஸ்திரத்தால் மார்பினை போர்த்தியபடி சந்தி புரியத் தயாரானார்.
கிழக்கு நோக்கி அமர்ந்து ஆசமனம் புரியத் தொடங்கி சந்தி வழிபாட்டில் மூழ்கிய அவ்வேளை, வீட்டு வாயில் புறத்தில் பல்லக்கில் வந்திறங்கினார் விஜய நகரத்து கோவிந்த சர்மன்!
வந்தவரை வரவேற்று அமரப் பணித்தாள் வேதாந்த தேசிகரின் தர்மபத்னி திருமங்கை. கோவிந்த சர்மன் பார்க்கும்படியாகத் தான் வேதாந்த தேசிகன் சந்தி புரிந்து கொண்டிருந்தார்.
அதிகாலை இருள் மெல்ல விலகிக் கொண்டிருந்தது. கிழக்கு வானில் சூரியனின் விட்டபாகம் தெரியும் முன்பே வானம் வெளுத்து விட்டது. அந்த வெளிச்சத்தில் வேதாந்த தேசிகன் அமர்ந்து  பூணுாலை கைவிரல்களில் பற்றி காயத்ரியை ஜபித்தபடி இருப்பது  நன்கு தெரிந்தது. அப்போது கோவிந்த சர்மனின் விழிகளுக்கு வேதாந்த தேசிகன் பிரம்ம சொரூபமாகவே தெரிந்தார். தேஜஸ் என்ற வார்த்தைக்கு ஒரு பெரும் பொருளாய் அவர் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் காயத்ரியை உபாசித்துக் கொண்டிருந்தார்.
திருமண் காப்பை அவர் தரித்திருக்கும் விதம் நேர்த்தியாக இருந்தது. அதே போல் தலைமுடியை அழுந்த வாரி பின்னால் முடிந்திருக்கும் விதத்திலும் கலைநயம்.
கழுத்தில் துளசி மாலைகள் சிலவற்றோடு பவித்ர நுால்புரி மாலையும் கிடந்து அவரின் பொலிவை கூட்டிக் கொண்டிருந்தது.
கோவிந்த சர்மனுக்கு அந்த வேளை காஞ்சியில் பிறவாமல் போனோமே என்ற எண்ணம் எழுந்தது. கூடவே சில பல கேள்விகளும் எழும்பின. வேதாந்த தேசிகரும் காயத்ரி ஜபம் முடிந்து பின்னர் சந்தியை தொடர்ந்து முடித்தவராக உதித்தெழுந்து காட்சி தந்த சூரியனையும் கைகூப்பி வணங்கி முடித்தார்.
எதிரில் கோவிந்தசர்மன்!
‘‘வாருங்கள். அதிகாலையிலேயே வந்து விட்டீர்களே?’’
‘‘தாங்களோடு திருப்புட்குழிக்கு வர வேண்டுமல்லவா?’’
‘‘நல்லது... சிறிது நேரத்தில்  தயாராகி விடுவேன்...புறப்படலாம்’’
‘‘ மகிழ்ச்சி. தாங்கள் நேற்று எனக்கு இட்ட கட்டளையையும் நிறைவேற்றி விட்டேன். விஷ ஜுரம் பற்றிய செய்தி மிலேச்சர்களை அடைந்து அவர்கள் கலங்கியிருப்பார்கள்’’
‘‘அதற்குள்ளாகவா?’’
‘‘மிலேச்சன் விஷயம் ஒரு பேராபத்து. அதிவேகம் தான் அதற்கான சிறந்த செயல்பாடாகும். எல்லாம் என் குருவான வித்யாரண்யரிடம் கற்ற பாடம்’’
‘‘நல்ல குரு, நல்ல சீடன்... நான் அளித்த பதில் முகமன் ஏடு பத்திரமாக உள்ளது தானே?’’
‘‘பொக்கிஷம் போல் பாதுகாப்பாக வைத்துள்ளேன். சுதர்சன ேஹாமம் முடிந்ததும் அங்கிருந்தே என் பயணம் தொடங்கி விடும்’’
‘‘மகிழ்ச்சி’’
‘‘இவ்வேளை நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கலாமா?’’
‘‘நாம் திருப்புட்குழி நோக்கிச் செல்லும் போது பேசலாமே?’’
தேசிகன் அவ்வாறு சொன்ன அந்த நொடிப் பொழுதில், அவர் இல்ல முகப்பில் தேசிகனை தங்களின் ஆப்த குருவாக கருதிடும் அவரது அன்புக்குரிய வைணவர்கள் பலர் கூடியிருந்தனர்!
அவர்கள் முகங்களில் ஒருவித வாட்டம்...
‘‘என்னவாயிற்று... ஏன் எல்லோரும்  வாட்டமாக உள்ளீர்கள்? தேசிகன் வினவினார்.
‘‘தாங்கள் திருப்புட்குழி செல்ல இருப்பதாக அறிந்தோம்’’
‘‘ஆம்... அதற்கென்ன?’’
‘‘அதுதான் எங்கள் கவலையே...கொடிய விஷ ஜுரத்தால் அங்கு ஒருவர் பின் ஒருவராக மடிகின்றனர். சுற்று வட்டார கிராமங்களிலும் பரவி வருகிறது. காஞ்சியையும் அது தாக்கக் கூடும், என்கின்றனர்’’
‘‘அதைத் தடுப்பது முக்கியமல்லவா?’’
‘‘பெரும் வைத்தியர்களாலேயே முடியவில்லையாம்’’
‘‘வைத்தியனுக்கெல்லாம் வைத்தியன் நம் வரதன். அவன் கையிலுள்ள சுதர்சனச் சக்கரம் எந்த தீய சக்தியையும் அழிக்க வல்லது என்பதை மறந்து விட்டீர்களா?’’  
‘‘தங்கள் சொற்கள் நம்பிக்கை தருகிறது. ஆயினும் தங்களை அந்த கிருமி தாக்கி விடுமோ என்று அச்சமாக உள்ளது’’
‘‘அச்சமே நரகம். வேறொரு நரகம் தேவையில்லை. கடவுள் மீது பக்தியும், உறுதியான பற்றும் இருந்தால் அச்சம் தோன்றாது. அச்சமில்லாத மனதில் தான் பரோபகார எண்ணங்களும் தோன்றும். அதிலும் பரோபகாரம் என்பது வைணவ தர்மங்களில் பிரதானமானது. எனவே நாம் பயம், சுயநலத்துடனும் இருத்தல் தகாது’’
வேதாந்த தேசிகனின் விளக்கம் சிந்திக்கச் செய்தது. ஒருவகை இறுக்கம் சூழ்ந்து கொண்டது.
‘‘அஞ்சாதீர்கள்... அவன் துணை வருவான். யாதொரு கேடும் நேராது. வாருங்கள் செல்வோம்’’ என அவர்களை அழைத்ததோடு மனதிற்குள் சுதர்சன காயத்ரியையும் சொல்லியவராக தேசிகன் திருப்புட்குழி நோக்கிப் புறப்பட்டார்.
வழியில் நடமாட்டமே இல்லை. கொடிய கிருமிக்கு பயந்து ஜனங்கள் வீட்டோடு கிடப்பது தெரிந்தது. அதைக் கண்ட வேதாந்த தேசிகன் புன்னகைத்தார். எதற்காகச் சிரிப்பு என்பதை அறியும் ஆவலில் பார்த்தார் கோவிந்த சர்மன்.  
‘‘என்ன கோவிந்த சர்மரே?’’
‘‘தங்களின் புன்னகையில் ஆழ்ந்த பொருள் இருப்பது போல் தோன்றுகிறது. துயரமான இந்நிலையில் சிரிப்பதும் எப்படி சாத்தியம்  என்றே தெரியவில்லை’’
‘‘என் புன்னகை ஒளிந்திருக்கும் விஷக்கிருமியை உத்தேசித்தே தோன்றியது. மிலேச்ச எதிரியை விட இது மோசமானது. அவர்கள் கண்களுக்கு தெரிகிற எதிரி என்றால் இது தெரியாத எதிரி. அதை நினைத்தேன்’’
‘‘எம்பெருமானின் சிருஷ்டியில் இக்கிருமியும் ஒன்று தானே?’’
‘‘ என்ன சந்தேகம்?’’  
‘‘கருணை மிகுந்த எம்பெருமான் எதற்காக இதை படைக்க வேண்டும்?’’
‘‘அவன் இதை நேராய் படைக்கவில்லை. நாம் நேர்த்தியற்று போகும் போது தானாக தோன்றிடும்’’
‘‘புரியவில்லையே?’’
‘‘துாய வாழ்வு நடத்த தவறிடும் போது, நெறிமுறைகளை மீறும் போது, முன்னோர் காட்டியவழியில் நடக்காமல் தன்னிச்சையாக செயல்படும் போது, போகம், கேளிக்கைகளில் மூழ்கும் போது.... இப்படி அடுக்கடுக்கான செயல்பாடுகளில் எந்த ஒன்றும் தன்னிலை திரிந்தால் கிருமி என்றாகி விடும். வாசம் மிகுந்த பழம் அழுகினால் துர்நாற்றம் வருவது போல், வண்ண மலர்கள் வாடினால் சருகாதல் போல், ஒரு விஷயமே இதுவும்...’’
‘‘அப்படியானால் இக்கிருமி மானுடப் பிழை தானா?’’
‘‘என்ன சந்தேகம். ஆயினும் எம்பெருமான் கருணை மிகுந்தவன் அவன் தன்வந்திரியும் கூட. அவனது அமிர்த கலசத்தின் ஒரு துளி போதும். அந்த கிருமி அழிந்து நாம் நலம் பெற்றிட...’’
‘‘என்றால் மருந்துகள் தேவையற்றவையா?’’
‘‘ சுதர்சன மகாயக்ஞமே  மகாமருந்து தான்! யக்ஞ நெருப்பில்  சேர்க்கும் ஆஹுதி பொருட்கள் எரிந்து சாம்பலாகிடும் முன் உருவாகும் புகைக்குள் இருக்கிறது மருந்து...அடுத்து  பக்தி உணர்வும், மன ஒருமையும் உடலின் சுரப்பிகளை சீராகச் சுரக்கச் செய்து நமக்குள் நன்மை செய்யும். எல்லாவற்றுக்கும் மேலாக உச்சரிக்கப்படும் மந்திர ஒலியும் பல அதிசயங்களை நிகழ்த்தும். அந்த சுதர்சனனின் அருளால் அஷ்டகம் ஒன்றை என் மனம் ஜனித்தது. அதை நான் இப்போது கூறுகிறேன். எல்லோரும் திரும்பக் கூறுங்கள்’’ என்ற தேசிகர் அஷ்டகத்தைச் சொல்லவும் எல்லோரும் திருப்பிச் சொன்னார்கள். அப்போது ஒரு பரவச உணர்வும், இனம் புரியாத அதிர்வும் உடம்பிலும் ஏற்பட்டது.
‘‘மந்திரங்களை பொறுத்தவரை உச்சரிப்பு முக்கியம். ஒரு குவளையில் நீரையோ, பாலையோ முகக்கும் போது எப்படி சிந்தாமல், சிதறாமல் முகந்து கொடுக்கிறோமோ அப்படியே பிழையின்றி உச்சரிக்க வேண்டும். எழுதி வைத்து வாசிப்பதில் பிழை ஏற்பட வாய்ப்பு அதிகம். குருமூலமாக நேர்முகத்தில் உபதேசிக்கப் பெற்று, அவர் சொன்னதைக் கேட்டு அப்படியே சொல்வது தான் சிறப்பு.
வேத மந்திரங்களை ‘எழுதாக்கிளவி’ என்றிட இதுவே காரணம். சப்த வடிவில் மட்டுமே அவை சரியாக திகழும். எழுத்து வடிவில் ஆளுக்கு ஆள் மாத்திரை அளவுகளில் கூடுதல் குறைச்சல் ஏற்பட்டு சிதைவு உருவாகி விடும். எனவே எப்போதும் குருமுகமாக கேட்பதை மறந்து விடக் கூடாது’’
தேசிகன் அளித்த விளக்கம் கிருமிக்கானதாக மட்டுமின்றி மந்திரங்களுக்கும் சேர்த்தே இருந்தது.
ஒரு விஷயத்தின் பின்புலத்தில் அறிந்து கொள்ளத் தான் எத்தனை நுட்பமான சங்கதிகள்?
தேசிகன் தான் அறிந்தவைகளை எல்லோரும் தெளிவாய் அறியும் வண்ணம் சொன்னபடியே திருப்புட்குழியை அடைந்த போது யாக ஏற்பாடுகள் தயாராக இருந்தன. கிருமித் தொற்றுக்கு ஆட்படாத ஜனங்கள் உடம்பை மூடிக் கொண்டு பயத்தோடு ேஹாம குண்ட மைதானத்தில் கூடியிருந்தனர்.
சிலர் கண்ணீர் விட்டனர். அவர்களின் மனதில் மரணபயம் இருப்பதை தேசிகனால் புரிந்து கொள்ள முடிந்தது.
‘‘யாரும் வருந்த வேண்டாம். காஞ்சி அருளாளன் துணை எப்போதும் உண்டு. அவன் கருணையை வேண்டுவோம். நிகழப்போகும் ேஹாமம் நிச்சயம் ஊரைக் காப்பது மட்டுமல்ல. சுதர்சனத்தால் அழியாதது ஒன்றுமில்லை என்ற நல்ல நிலை தோன்றப் போவதை நீங்கள் காணப் போகிறீர்கள்’’ என்ற வேதாந்த தேசிகன் குண்டத்தின் முன்  அமர்ந்து கைகூப்பி வணங்கினார். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar