Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிரஞ்சீவி என்றதால் வருத்தமா?
 
பக்தி கதைகள்
சிரஞ்சீவி என்றதால் வருத்தமா?


அயோத்தி முழுவதும் ஆனந்தம் பூத்துக் குலுங்கியது. ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேகம்! பதினான்கு ஆண்டுகளாக மனதில் தேங்கிக் கிடந்த ஏக்கம் இப்போது தீரப் போகிறது! ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்னும் கோரிக்கை நிறைவேறி விட்டதாலும், பரதன் அயோத்தி ஆள வேண்டும் என்ற இரண்டாவது கோரிக்கையை பரதனே  புறக்கணித்து விட்டதாலும், இனி கைகேயியால் பிரச்னை வர வாய்ப்பில்லை. ஆகவே பட்டாபிஷேக வைபவம் களைகட்ட வேண்டியதுதான்.
பரத கண்டத்தின் புனித நதிகளில் இருந்தும் தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.  நறுமணம் மிக்க வண்ண மலர்கள் அம்பாரம் போல குவிக்கப்பட்டன. பல்வேறு திசைகளில் இருந்தும் வேத விற்பன்னர்கள் வந்து சேர்ந்தனர். ரிஷிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும் அயோத்தி நகரம் தாங்குமோ என்று திகைப்பைத் தரும் எண்ணிக்கையில் வருகை புரிந்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கியது. ராஜ அலங்காரத்துடன் ராமன் பட்டாபிஷேக மண்டபத்துக்கு வந்தான். சீதை பெருமை பூரிக்க அருகில் நாணத்துடன் நின்றிருந்தாள். லட்சுமணன், பரதன், சத்ருக்னன், அனுமன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.  
வேத கோஷங்கள் முழங்கின, ஹோமத்தீ வானுயர வளர்ந்தது. அரச கிரீடம் வரவழைக்கப்பட்டது. அதற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. ராமன் அரியணை ஏறி அமர்ந்தான். உடனே அனுமன் சிறிதும் அசையாமல் சிம்மாசனத்தை தாங்கிக் கொண்டான். தேரில் வந்த ராவணன் அவனைத் தன் தோளில் சுமந்துகொண்டு எளிதாகப் போர் புரிய வசதி செய்து கொடுத்தவனல்லவா அவன்! இப்போது ராமனோடு அவனுடைய அரியாசனத்தையும் தாங்கினான். அங்கதன் உடைவாளைத் தன் கையில் பற்றிக்கொண்டு பாதுகாவலனாக நின்றிருந்தான். சிம்மானத்துக்கு மேலாக வெண் கொற்றக் குடையைப் பிடித்திருந்தான். லட்சுமணனும், சத்ருக்னனும் இருபுறமும் நின்றபடி வெண் சாமரம் வீசினர். மங்கல வாத்தியம் முழங்க, மந்திர கோஷம் ஒலிக்க வசிஷ்ட மாமுனி, கிரீடத்தை எடுத்து ராமன் தலையில் சூட்டினார்.
மகிழ்ச்சி ஆரவாரமாக எழுந்தது. சபை கொள்ளாததால், வெளியே நின்றிருந்த ஆயிரக்கணக்கான குடிமக்கள் வாழ்த்து எழுப்பிப் பேரானந்தம் அடைந்தனர்.
அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற ராமன் அயோத்திக்கு அரசனானான். இப்போது ராமன், விருந்தினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரிசுப்பொருட்கள் வழங்க வேண்டும். அவரவர் தகுதிக்கு விஞ்சியும் பொன்னும், பொருளும்  வாரி வழங்கினான் ராமன்.
விபீஷணனின் முறை வந்தது. ‘‘உனக்கென்று  தருவதற்கு என்ன இருக்கிறது விபீஷணா? என் சீதை என்னிடம் வந்து சேருவதற்குப் பெரும் பொறுப்பை மேற்கொண்டவன் அல்லவா நீ?  இலங்கைக்கு மன்னனாக உனக்கு முடிசூட்டியபோது, ‘சிரஞ்சீவி’ என்று பட்டமளித்துப் பாராட்டினேன். அப்போது  சொற்ப எண்ணிக்கையில் குழுமியிருந்தவர்கள் மத்தியில் அவ்வாறு நான் அளித் கவுரவத்தை, இதோ, இங்கே, இப்போது, இத்தனை ஆயிரம் பேர் கூடியிருக்கும் தருணத்தில் உனக்கு அளிக்கிறேன். நீ என்றென்றும் சிரஞ்சீவியாக, நித்தியசந்தனாக வாழ்வாயாக…’’
விபீஷணன் மிகுந்த அடக்கத்துடன், தலை குனிந்து அந்தப் பெருமையை ஏற்றுக்கொண்டான். ஆனால் அதை கவனித்த சீதை திடுக்கிட்டாள். சட்டென அவளுடைய முகம் வாடிவிட்டதைப் பார்த்து சந்தேகமாய் வியந்தான் ராமன். ‘‘என்ன சீதா…?’’ என்று அன்பு பொங்க கேட்டான்.
‘‘வந்து… அசோகவனத்தில் உயிர் பிரித்துக் கொள்ளும் செயலில் இறங்கிவிட்ட என்னை ‘ராம், ராம்’ என்று தங்கள் நாமம் சொல்லி உயிர்ப்பித்தவன் நம் அனுமன். தங்களை மீண்டும் சந்தித்துவிட முடியும் என்று அவன் கொடுத்த நம்பிக்கை  ஆனந்தத்தில் அவனை நான் ‘சிரஞ்சீவியாக வாழ்க’ என்று வாழ்த்தினேன்…’’ தயங்கியபடி சொன்னாள் சீதை.
‘‘சரி, சந்தோஷமான விஷயம்தானே… இதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?’’
‘‘இப்போது நீங்கள் விபீஷணனை ‘சிரஞ்சீவி’ என்று வாழ்த்தினீர்கள்.... அதோ அனுமனைப் பாருங்கள், அவன் முகம் வாடினாற்போல இல்லை? தனக்கு அளிக்கப்பட்ட அதே பட்டத்தை இப்போது விபீஷணனும் பெற்றால், அது தன் முக்கியத்துவத்தைக் குறைத்தது போலாகும் என வருந்துகிறானோ?’’
ராமனுக்கு ஒரு உண்மை புரிந்தது. அனுமனைப் பற்றித் தான் அறிந்த அளவுக்கு சீதை அறியவில்லை என்பதை உணர்ந்தான். அவனது பெருந்தன்மையை அனைவரும் உணரவேண்டும் என விரும்பினான்.  பரவசத்தில் கண்மூடியிருந்த அனுமன் அருகே சென்று மெல்லத் தொட்டான். ‘‘ஆஞ்சநேயா…’’ என பாசத்துடன் அழைத்தான்.
கண் மலர்ந்த அனுமன். ‘‘ஆணையிடுங்கள் பிரபு’’ என பவ்யமாகக் கேட்டான்.
‘‘ இப்போது நான் விபீஷணனை ‘சிரஞ்சீவி’யாக வாழ வாழ்த்தினேனே’’
‘‘ சந்தோஷத்துடன் அதை கவனித்தேன் ஐயனே..’’
‘‘சந்தோஷமா! அசோகவனத்தில் சீதை உன்னை ‘சிரஞ்சீவி’ என்று ஆசிர்வதித்தாள். இப்போது நான் விபீஷணனை அவ்வாறே ஆசிர்வதித்தேன். இதனால் என்மீது உனக்கு வருத்தமோ விபீஷணன் மீது பொறாமையோ வரவில்லையா?’’
‘‘இல்லை ஐயனே…’’ கண்ணீருடன் சொன்னான் அனுமன்.
 ‘‘அன்னையோ, நீங்களோ யார் ஆசிர்வதித்தாலும் அதற்குச் சமமான பலன் உண்டு என்பதை நான் அறிவேன். ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவன் என்ன பலன் பெறுகிறான்? அவன் நிரந்தரமானவன். எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை. இந்த வகையில் விபீஷணனும் சிரஞ்சீவி, நானும் சிரஞ்சீவி. அதாவது என்னைப் போலவே விபீஷணனும் நிரந்தரமானவன், இல்லையா…?’’
‘‘ஆம், ஆஞ்சநேயா… அதில்தான்…’’ ராமன் அவனை சமாதானப்படுத்த முயன்றான்,
‘‘இதில் யோசிக்க என்ன இருக்கிறது, பிரபு? நான் என்றென்றும் ராமநாம ஜபத்திலேயே ஆழ்ந்து போக விரும்புகிறேன். இதற்கும் மேலாக, வேறு யாரேனும் ராம நாமம் சொன்னால்  அதைக் காது குளிரக் கேட்டு இன்புற விரும்புகிறேன். விபீஷணனும், நானும் சிரஞ்சீவி என்றால் இந்த உலகம் முற்றிலுமாக அழியும் நிலையில் உயிர்கள் வாழ முடியாத நிலை உருவாகும். ஆனால் அப்போதும் விபீஷணனும், நானும் சிரஞ்சீவியாக வாழ்வோம் இல்லையா…?’’
ராமன் அதிசயித்து அனுமனைப் பார்த்தான். சீதையோ பிரமித்து நின்றாள்.
‘‘ஐயனே, நீங்கள் வைகுந்தம் ஏகிவிடுவீர்கள். ஆனால் அதன் பிறகு இந்த பிரபஞ்சமே ராம நாம பலத்தால்தான் வாழ்ந்தாக வேண்டும். உலகமே அழிந்துவிட்ட நிலையில், நான் மட்டுமே தனித்து விடப்பட்டால் என் காது குளிர ராமநாமத்தை ஜபிக்க யாரும் இல்லாமல் போவார்களே! ஆனால் சிரஞ்சீவி விபீஷணன் அப்போது சொல்லச் சொல்ல நான் மெய் மறந்து  கேட்டுக் கொண்டிருப்பேனே! இதைவிட சிறந்த பேறு என்ன வேண்டும்? இன்னும் சொல்வதானால் ஐயனே... என் எதிர்காலத் தவிப்பிலிருந்து என்னை இப்போதே காத்துவிட்டீர்கள். விபீஷணனையும் சிரஞ்சீவியாக்கி, என் உள்ளம் குளிரச் செய்தீர்கள்.  இந்த அன்புக்கு  என்ன கைம்மாறு செய்வேன்!’’ கண்ணீர் பெருகச் சொன்னான் அனுமன்.
அனுமனை ஆரத் தழுவிய ராமனுக்கு நெஞ்சு விம்மியது. சீதை ஆனந்தக் கண்ணீர் பெருக்கினாள்.
அவள் மட்டுமா, அங்கிருந்த அனைவரும் தான்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar