Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வேள்வியின் பலன்
 
பக்தி கதைகள்
வேள்வியின் பலன்


வேதாந்த தேசிகர் வணங்கிய நிலையில் சுதர்சன யாகம் தொடங்கியது. வேள்விக் குண்டத்தின் நான்கு பக்கத்திலும் அமர்ந்திருந்த வேதியர் பக்தியுடன் மந்திரங்களைச் சொல்லி வெண்கடுகினை நெருப்பில் போடலாயினர். பசுஞ்சாணம், பச்சைக் கற்பூரம், தளிர் வெற்றிலை, அரச, புரச சமித்துகள், பசு நெய் இதோடு ஏராளமான மூலிகைகளும் போடப்பட அக்னியானது இவைகளோடு வினை புரிந்து வெண்புகை எழும்ப சுற்றிலும் பரவியது.
வெட்ட வெளியில் செய்திருந்த ஏற்பாடு என்பதால் புகை பரவத் தடையில்லை. அப்போது சற்றும் எதிர்பாராதது போல வானில் மேகங்கள் கூடி காற்று பலமாக வீசியது. வேள்வி தடைபடும் என்றே எல்லோரும் கருதினர். அதை ஒரு சகுனத்தடையாகவும் கருதினர். ஆனால் வேதாந்த தேசிகனோ அண்ணாந்து மேகங்களைப் பார்த்தார். அப்படியே மனக்கண்களில் பிரார்த்தனை புரிந்து கொண்டார்.
‘‘எம்பெருமானே உன் கருணையின் வடிவமே இம்மேகக் கூட்டம். இது இப்போதா வர வேண்டும்? வேள்வி முடியவும் வந்தால் அது வேள்விப்பயன் என்றாகும். இடையில் வந்தால் வேள்வி வீண் என்றாகாதா?
தாயும் தந்தையுமானவனே! மாலே...மணிவண்ணா... எங்களை ரட்சிப்பாய்’’ என்ற அவரின் பிரார்த்தனை வரதனுக்கு கேட்டு விட்டது போலும். மெல்ல காற்று வீசுவது குறைந்து, மேகங்களும் விலகி வேறிடம் நோக்கிச் சென்றிட, வானில் மீண்டும் கதிரவன் காயத் தொடங்கினான்.
வேள்வியும் முழுமையாக முடிந்திட, ேஹாம குண்டத்து சாம்பலை ஒரு குடத்து நீரில் கரைத்து அதனை ஊரெங்கும் தெளிக்கச் செய்து, பின் எல்லோரையும் ஆசீர்வதித்தவராக புறப்பட்டார் வேதாந்த தேசிகன்.  
அப்போது அங்குள்ளோர் சிலர் கண்ணீருடன் நன்றி கூறினர்.
‘‘சுவாமி.. காஞ்சியில் இருந்து வந்து வேள்வி நிகழ்த்தி எங்களுக்கு நம்பிக்கை அளித்தமைக்கு நன்றி’’ என்றார் ஒரு வைணவர்.
‘‘சுவாமி... இனி இந்த ஊர் நலம் பெறும் தானே?’’ என சந்தேகமுடன் கேட்டார் ஒரு வைணவர்.
நோய்க்கிருமியை விட கொடியது சந்தேகம். அது ஒருவருக்குள் புகுந்தால் நம்பிக்கை உணர்ச்சிக்கு அதுவே கரையானாக மாறி விடும். எனவே சந்தேகம் வேண்டாம்!
இந்த வேள்வி என்பது எம்பெருமானுக்கான வழிபாடு மட்டுமன்று. இது வழிப்பாடும் கூட! தனி மனிதனுக்கு உபாதை எனில் அதை வைத்தியரால் குணப்படுத்த முடியும். ஊருக்கே உபாதை எனில் இது போன்ற வேள்விகளாலேயே அதை சாதிக்க இயலும்.
இதன் பின்புலத்தில் எம்பெருமானின் கருணை மட்டுமல்ல. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் கருணையும் உள்ளது. இவற்றாலேயே கிருமி பரவியது. இவற்றைக் கொண்டே அதை அழிக்கவும் இயலும். இந்த ஐம்பூதங்களை ஏதோ ஒரு வகையில் அசுத்தப்படுத்தி விட்டோம். அதுவும் கிருமி உபாதைக்கு காரணம்! மனிதவாழ்வில் அறிந்தும், அறியாமலும் பிழைகள் ஏற்படுவது சகஜம். அதை நேர் செய்தால் நல்ல நிலை தானே தோன்றும். எனவே தான் பிழைகளை நேர் செய்யும் விதமாக வேள்வி நிகழ்த்தப்பட்டது. இதனால் தேவர்கள் திருப்தியுற்று பதில் நன்மையை ஆரோக்கிய வடிவில் அளிப்பர். அளித்தே தீருவர்! அதன் காரணமாகவே இந்த வேள்வி நமக்கு அருளப்பட்டது. அரசர், ரிஷிகள், முனிவர்களும் இதைச் செய்திடக் காரணமே ஊர் நன்மைக்காகத் தான்!
இப்போது நம் நாவலபூமி இருக்கும் நிலையில் இது போன்ற செயல்பாடுகளை நாம் மறந்தோம். கலிபுருஷன் ஆட்சியில் இது நடப்பதும் சகஜமே!
எனவே தான் இந்த வேள்வியை மருந்தாக கருதி செய்யப் பணித்தேன். இதனால் தேவதைகள்  திருப்தி அடைந்ததோடு, மூலிகைத் துாபத்தால் கிருமி எங்கிருந்தாலும் அழிந்திருக்கும்.
ஒரு வேள்வி என்பது அகம், புறம் என இரண்டிற்கும் நன்மையளிப்பதாகும். பக்தியும், ஈடுபாடும் தான் இதில் முக்கியம். அந்த பக்தியோடும், ஈடுபாட்டோடும் தான் இப்போது வேள்வி நிகழ்ந்துள்ளது.
எனவே  சந்தேகம் வேண்டாம். இனி இப்பல்லவ மண்டலம் நலம் மிகுந்த மண்டலமாக மாறும்’’ என்று வேதாந்த தேசிகன் விளக்கம் அளித்தார்.
வேள்வியின் பின்புலத்தில் இத்தனை செய்திகளா என்று எல்லோரும் வியந்தனர். விஜய நகரத்து கோவிந்த சர்மன் தேசிகன் காலில் விழுந்தான்.
‘‘சுவாமி... தாங்கள் விஜய நகரத்துக்கு எழுந்தருளி எங்களை எல்லாம் ரட்சிக்க வேண்டும்’’ என வேண்டினான். புன்னகைத்தத தேசிகன், ‘‘கோவிந்த சர்மரே! நான் அழியாப் பொருளான அனந்தனைப் போற்றுபவன். அழியும் எதையும் பெரிதாகக் கருதி போற்ற மாட்டேன். அது ஞானத்திற்கு அழகல்ல. கடவுளின் செயலுக்கு இணையாக செயல்புரிவோரை போற்றலாம். அதில் தவறில்லை! ஆயினும் அவர் ‘தான்’ என்ற செருக்குடன் சிந்திப்பதோ, பேசுவதோ கூடாது.
ஆதிசேஷனின் அம்சமான ராமானுஜர் காட்டிய அற்புத வழியை நாம் மறக்கக் கூடாது’’ என்றார்.
ராமானுஜரை மையமாக வைத்து எதைச் சொல்ல வருகிறார் வேதாந்த தேசிகன் என்பது பலருக்கு புரியவில்லை. அவர்களில் ஒருவர், ‘‘சுவாமி... ராமானுஜர் காட்டிய அற்புத வழி எதுவோ?’’ என்று கேட்டார்.  
‘‘நல்ல கேள்வி.... ஆளவந்தாராலேயே அங்கீகரிக்கப் பெற்று, பின் துறவு வாழ்வை ஏற்று விசிஷ்டாத்வைத தத்துவத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் ராமானுஜர். ரகஸ்யார்த்த உபதேசம் பெற்றிட  ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோட்டியூருக்கு சென்றவர் அல்லவா அவர்! அப்போது தான் ஞானிகளின் வழி எது என்பது நமக்கு புலப்பட்டது. ஒவ்வொரு முறை திருக்கோட்டியூரில் ஆச்சார்ய நம்பியிடம்  உபதேசம் பெற வந்திருப்பதை கூறிய போதெல்லாம் நம்பி ‘பிறகு பார்க்கலாம்’ எனக் கூறி தட்டிக்கழித்தார்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோட்டியூர் வருவது சுலபமான செயலா என்ன...குதிரை மீதேறிச் சென்றாலே இருநாட்களாகும். ஒரு அந்தண சன்யாசிக்கு எத்தனை நாளாகும் என்று சொல்லத் தேவையில்லை!
இது ஆச்சார்ய நம்பிக்கு தெரியாத ஒன்றா... இருப்பினும் தட்டிக் கழித்து திருப்பி அனுப்பியவர் இறுதியாக மந்திர உபதேசம் செய்த கையோடு ரகஸ்யார்த்தத்தையும் உபதேசித்தார்.
பலமுறை தட்டிக் கழித்தவர், இறுதியாக உபதேசித்தது எப்படி என்ற கேள்வி எழலாம். ஒவ்வொரு முறையும் ஆச்சார்ய நம்பி, ‘யார் வந்திருப்பது?’ என்று கேள்வி எழுப்புவார். ராமானுஜரும், ‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’  என்பார். இதுதான் உலக வழக்கம். எல்லோரும் இப்படிதான் செல்வோம். இதில் தவறில்லை. ஆயினும் ஆச்சார்யநம்பி தட்டிக் கழித்தே வந்தார். ஆனால் உபதேசிக்க ஒப்புக் கொண்ட தருணத்தில் ராமானுஜர், ‘நான் ராமானுஜன் வந்திருக்கேன்’  என்று சொல்லாமல், ‘அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்று கூறினார்.
‘நான்’ என்னும் பதம் ‘அடியேன்’  என்று மாறவும் ஆச்சார்ய நம்பியும் மாறி விட்டார். ஒரு தவறுமில்லாத இந்த அற்ப விஷயத்துக்காகவா ஆச்சார்ய நம்பி அலைக்கழித்தார் என்று தோன்றலாம்.
நுட்பமாக பார்த்தால் உண்மை புரியும். நான் என்பது ஆணவத்தில் தோய்ந்த ஒரு சொல் என்பதும், அடியேன் என்பது பணிவில் தோய்ந்த சொல் நமக்கு புரியும்.
மனிதனை எழ விடாமல் செய்வதில் நான் என்னும் அகந்தைச் சொல்லுக்கே பெரும்பங்கு. இதை துறக்காமல் ஒருவன் எதை துறந்தும் பயனில்லை. இதை ராமானுஜருக்கு உணர்த்தும் விதத்தில் ஆச்சார்யநம்பி உலகிற்கே உணர்த்தி விட்டார்.
 நமக்காகவே ராமானுஜரும் அத்தனை முறை நடந்து பாடமாகவும் ஆனார். இதையே நானும் அவர் காட்டிய வழி என்றேன். இப்போது புரிகிறதா?’’ என்று கேட்கவும் எல்லோரும் தலையை அசைத்து ஆமோதித்தனர்.
 தேசிகன் விளக்குவதையும், அதை அந்தணர்கள் பணிவுடன் கேட்பதையும் தொலைவில் இருந்த மரத்தின்பின் ஒளிந்தபடி பொறாமையுடன் பார்த்தபடி ஒருவன் நின்றிருந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar