Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » படகிலேயே கண்ட பட்டாபிஷேகம்!
 
பக்தி கதைகள்
படகிலேயே கண்ட பட்டாபிஷேகம்!


கங்கைக் கரை எங்கும் மனிதத் தலைகளாக காட்சியளித்தது. படகுகள் மக்களை அக்கரையிலிருந்து இக்கரைக்கு அழைத்து வந்த வண்ணமாக இருந்தன. அயோத்தி, ராம பட்டாபிஷேகத்தால் களைகட்டியிருந்தது. பல நாடுகளில் இருந்தும் அரசர்கள் அயோத்தி நோக்கி வந்தபடி இருந்தனர். குதிரைகள், , பல்லக்குகள், ரதங்களாலும் அயோத்தியே திமிலோகப்பட்டது. அவை கிளப்பிய புழுதி வானளாவ உயர்ந்து கயிலாயம், வைகுண்டத்தை சிலிர்க்க வைத்தது. தரைவழியாக ஆயிரக்கணக்கானோர் வந்து சேர, கங்கை நதியின் அக்கரையிலிருந்த நூற்றுக்கணக்கானோர் படகு  மூலமாக வைபவத்தில் பங்கேற்க வந்தனர்.
அப்படி கங்கையை மக்கள் கடக்க உதவிய படகோட்டிகளில் ஒருவன்தான் குகன். இதே படகில் ராமன், தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன் பயணித்து கங்கையை கடந்த நன்னாளை நினைத்து சிலிர்த்தான். பதினான்கு ஆண்டு காட்டில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தால் வந்த ராம தம்பதிக்கு தான் உதவியதை பெருமை கொண்டான். அவர்கள் கங்கையை கடந்த பிறகுதான் என்னவெல்லாம் நடந்தன!  படகில் வரும் பயணிகள் நடந்த சம்பவங்களை விவரித்துச் சொல்லச் சொல்ல அப்படியே செயல் மறந்து கேட்ட நாட்கள், சமீப காலத்தை சேர்ந்தவைதான். சீதை கவர்ந்த ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு, அயோத்திக்கு வெற்றி வீரனாகத் திரும்பிய ராமன் இப்போது முடிசூடிக் கொள்ளப் போகிறான்.
துடுப்புகள் கங்கை நீரைத் தள்ளித் தள்ளி, படகு முன்னேற உதவிக் கொண்டிருந்தன. அப்படி துடுப்புகள் நீரில் புகுந்து  மேலெழுந்தபோது சிதறிய நீர்த்திவலைகள், படகுக்குள் விழுந்து கங்கையின் சார்பாக தாமும்  பயணிக்கும் மக்களோடு சேர்ந்து கொண்டு ராம பட்டாபிஷேகம் காணத் துடித்தன. பயணிக்கும் மக்களுக்கு குகனைப் பற்றித் தெரியும்; ராமனை படகில் அழைத்துச் சென்றவன் என்பதும் தெரியும். அப்படிப்பட்ட பாக்கியவானுடைய படகில் தாமும் பயணம் செய்வது தங்களின் முற்பிறவியில் செய்த புண்ணியம் என்றே கருதினர்.
‘ராமன் இங்கே தான் உட்கார்ந்தாரா?’ என்று ஆண்களும், ‘சீதை அமர்ந்த இடம் இதுதானோ?’ என்று பெண்களும் குகனைக் கேட்டார்கள்.  அவனும் பெருமிதத்துடன் அவர்கள் அமர்ந்த இருக்கைகளைக் காட்டினான். அவர்களும் அந்த இடத்தை தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டு அமர்ந்தார்கள். “ராமனும், சீதையும் உன்னிடம் என்ன பேசினார்கள்?”  என ஒருவர் கேட்க, மற்றவர்கள் ஆவலுடன் குகனையே பார்த்தனர்.  உற்சாகத்துடன் பதில் சொன்னான். ராமனைச் சந்தித்த சம்பவத்தை கண்கள் பனிக்க விவரித்தான்.
அவனுடைய படகில் பயணித்த சிலர்  குதர்க்க புத்திக்காரராகவும் இருந்தார்கள். குகனின் படகில் ராமன் பயணித்ததை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ‘இவனுக்கு இத்தனை பெரிய பாக்கியமா’ என பெருமூச்சு விட்டனர்.  
ராமனுடன் இவன் எப்படி நெருங்கிப் பழக முடிந்தது? ராமன் இவனைக் கட்டித் தழுவினானாமே, ஒரு படகோட்டியைப் போய்த் தழுவிக்கொள்ளும் அளவுக்கா ராமன் எளிமையானவனாக இருப்பான்? நம்ப முடியவில்லையே...’’
‘‘அதுதானே!  ‘நாமிருவரும் ஒரே தொழில் செய்பவர்கள்’ என்றெல்லாம் அவரிடம் இவன் பேசினானாமே, முடியுமா அது? சும்மா, பொய் சொல்கிறான்...’’
‘‘சரி, அப்படியே உண்மையாகவே இருக்கட்டும். அவ்வளவு நெருக்கமான ராமன், இவனை ஐந்தாவது தம்பியாக ஏற்ற ராமன் பட்டாபிஷேகத்துக்கு ஏன் இவனை அழைக்கவில்லை? மறந்து போனது எப்படி?’’
இதை குகனிடமே அவர்கள் கேட்டனர். ஆனால் குகன் சிறிதும் வருந்தவில்லை. கோபப்படவில்லை. “ராமன் என்னை அன்புடன் அணைத்ததும், நான் அவரிடம் பேசியதும் என் சொந்த அனுபவம். நீங்கள் கேட்டதால் உங்களிடம் சொன்னேன். அதையெல்லாம் நீங்கள் நம்பவேண்டும் என்ற அவசியம் இல்லை; நம்பினாலும் நீங்கள் பாராட்ட வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.”
“சரி, இந்த கேள்விக்கு பதில் சொல். பட்டாபிஷேகத்துக்கு உன்னை ராமன் ஏன் அழைக்கவில்லை? உன் உதவியால் கங்கையை கடந்தவர், ராவணனை வதம் செய்து  சீதையை மீட்ட பிறகு அப்படியே புஷ்பக விமானத்தில் அயோத்தி போய் சேர்ந்து விட்டாரே, அந்த வெற்றிக்குப் பின் உன்னை நினைத்துப் பார்த்திருப்பாரா அவர்? ‘ஐந்தாவது தம்பி’யான உன்னை எப்படி மறந்தார்? பட்டாபிஷேக விழாவில் உன்னை அழைத்து வெகுமதி கொடுத்திருக்க வேண்டாமா?”
அத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முன்வந்தான் குகன்.
 “என் அண்ணன் ராமனின் பட்டாபிஷேகம் நடக்கும் விபரம் எனக்கும் தெரியும். பொதுவாக ஒரு வீட்டில் விசேஷம் நடந்தால் முக்கியமானவர்கள் பொறுப்புகளை நிறைவேற்ற கேட்டுக்கொள்ளப்படுவார்கள். சிலர் விருந்தினரை வரவேற்பர். சிலர் விருந்தினரை உபசரித்து உணவளிப்பர். சிலர் சமையல் பணியை மேற்பார்வையிடுவர். சிலர் விழாவுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைவீதிக்குச் செல்வர். இப்படி பொறுப்புகளில் ஈடுபடும் இவர்களால் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் கூட பங்கேற்க முடியாமல் போகலாம். ஆனால் விசேஷம் முழுமையடைய முக்கியமானவர்களின்  உழைப்பும், கடமை உணர்வும் தான் துணை நிற்கும். தங்களால் விழாவின் மைய நிகழ்ச்சியைக் காண முடியவில்லையே, பிறர் போல தாமும் அங்கே இருக்க முடியவில்லையே என அவர்கள் ஏங்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் முக்கிய நிகழ்வுகளில் மானசீகமாகக் பங்கேற்க செய்கிறார்கள். அதைவிட தங்களுக்குக் கொடுக்கப்பட்ட  பொறுப்புகளை  குறையுமின்றி நிறைவேற்றுவதையே கண்ணாக இருப்பார்கள்’’
“வீட்டு விசேஷம் இருக்கட்டும். ராமர் பட்டாபிஷேகத்தில் உன் பொறுப்பு என்ன?”
“நானாகவே ஒரு பொறுப்பை மேற்கொண்டிருக்கிறேன். பட்டாபிஷேகத்துக்குப் போகும் உங்களை அக்கரையிலிருந்து இக்கரைக்கு அழைத்து வருவதுதான். அப்படி வரும் நீங்கள் ராமரைப் பற்றிப் பேசுவதையும் அவர் புகழ் பாடுவதையும் கேட்டு மகிழ்கிறேன்.
விழாவில் பங்கேற்று திரும்பும் நீங்கள் ராமபிரானின் அழகையும், அவரது ராஜ கோலத்தைப் பற்றியும் விவரிக்கும் போது, நானும் விழாவில் பங்கேற்ற நிறைவைப் பெறுகிறேன்.
அங்கே நடந்த விருந்தை பற்றி விமர்சிக்கும் போது அதன் மணத்தை நாசியும், அந்த சுவையை நாக்கும் உணர்கிறது. விருந்துண்ட திருப்தியை வயிறு பெறுகிறது. என் ‘அண்ணன்’ ராமன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கண்கொள்ளா காட்சியை  உங்களுடைய கண்கள் மூலமாக நான் காண்கிறேன். சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்னன், அனுமனோடு இதோ நானும் விழாவில் பங்கேற்று மகிழ்கிறேன். எனக்கு இதுவே பெரிய பாக்கியம். ராமனை ஏற்றிச் சென்று ஊழியம் செய்த அதே உணர்வே,  பட்டாபிஷேகத்தைக் காணும் உங்களை அழைத்துச் செல்வதிலும் எனக்கு ஏற்படுகிறது.
ஆகவே ராமனை தவறாக நினைக்காதீர்கள். அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் இருக்கும். என்னிடம் நேரடியாகச் சொல்லாமலேயே என்னை இந்தப் பணியில் அமர்த்தியிருக்கிறார். இதனால் எனக்கு மகிழ்ச்சியே’’
குகனுடைய குரலிலோ, அவனது முகத்திலோ வருத்தத்தின் சாயல் சிறிதும் இல்லை. மகிழ்ச்சிதான் நிறைந்திருந்தது. அதை அறிந்ததும் அவனை வேதனைப்படுத்த முயன்ற தங்களின் செயலை எண்ணி வருந்தினர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar