Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்!
 
பக்தி கதைகள்
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்!

 பட்டாபிஷேகம் முடிந்த இந்த சில மாதங்களில் ராமன் கவலையோடு காணப்பட்டதைப் பார்த்து வியந்தாள் சீதை. அரியணை ஏறி தம்பியர் மூவரும் ஒத்துழைக்க, இனிமையாக ஆட்சி நடத்தும் அந்த நாயகன் முகத்தில் இன்று ஏன் கவலை ரேகை?
 ‘‘உங்கள் முகத்தில் வாட்டத்தை சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த சித்திரத்துத் தாமரைக்கும் வாட்டம் வருமா என்ன?’’ என பரிவுடன் கேட்டாள்.
பெருமூச்சு விட்ட ராமன். ‘‘ ஒற்றன் மூலமாக ஒரு தகவல் வந்தது. என் அரசாட்சியால் மக்களுக்கு குறை இல்லையென்றாலும், மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்கிறார்கள் என சொல்ல முடியவில்லை என்று தகவல் விளக்கியது. அதிகார சுமை, சட்ட நெருக்கடி, கட்டுப்பாடு மிகுந்த விதிகள், மக்களின் சுதந்திரத்துக்கு பாதிப்பு, அவர்களின் இயல்பான வாழ்வில் ஆட்சியாளர்களால் பாதிப்பு என எதுவுமே இல்லை தான். ஆனால் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்குள் கருத்து வேற்றுமை கொள்வதும், அதனால் பிரிவு வரை போவதும் அந்த குடும்பத்துக்கு மட்டுமல்ல; அந்த குடும்பம் சார்ந்துள்ள நாட்டுக்கும் அது அவமானம்தானே! அது என் ஆட்சியில் நடக்குமானால் அரசன் என்ற முறையில் நான்தானே அதற்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்?’’
‘‘அதெப்படி? ஒரு குடும்பத்து உறுப்பினர்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றால் அது எப்படி உங்கள் பொறுப்பின்மை ஆகும்?’’ சீதை புரியாமல் கேட்டாள்.
‘‘சமூக ரீதியான பிரச்னை இல்லாவிட்டாலும் உளவியல் ரீதியாக பிரச்னை இருக்குமானால் நிவர்த்தி செய்ய வேண்டியது என் பொறுப்பு தான். குற்றத்துக்கு தண்டனை தருவது அரசனின் கடமையாக இருக்கும் பட்சத்தில், எந்தக் குற்றமும் நிகழாமல் ஆட்சி நடத்த வேண்டியதும் அவனது கடமைதானே? அப்படியிருக்க உளரீதியாக மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் அதற்கும் நான்தான் காரணம்...’’
‘‘அப்படி என்னதான் உங்கள் குடிமகனுக்குக் குறை?’’
‘‘அவன் மனைவி பெற்றோர் ஊருக்குச் சென்றிருக்கிறாள். அவளை விட்டு சில காலம் பிரிந்திருந்த கணவன், அவள் திரும்பி வந்தபோது, அவள் மீது சந்தேகப்பட்டிருக்கிறான். தன்னை விட்டுப் பிரிந்த நிலையில் சோரம் போயிருப்பாளோ என்ற ஐயம் எழுந்திருக்கிறது. மனைவி உத்தமி என்று சொல்லியும் நம்பாத அவன் என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா? ‘நான் ஒன்றும் ராமனல்ல; அசோகவனத்தில் சிறைபட்டிருந்த சீதையை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாகக் கருதி ஏற்றுக் கொள்ள’ என சொல்லியிருக்கிறான்’’
பளீரென நெஞ்சில் மின்னல் தாக்கினாலும், அந்த பேரிடியை காட்டாமல் மெல்ல புன்னகைத்தாள் சீதை. ‘‘உங்கள் குடிமகன், உங்களையே உதாரணமாகக் காட்டியுள்ளான். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? அசோக வனத்திலிருந்து என்னை மீட்ட நீங்கள் என் கற்புத் திறத்தை சோதிக்க அக்னி புகச் சொன்னதுதான்....’’
‘‘சீதா, அது வந்து....’’ ராமன் விளக்கம் சொல்ல முயன்றான்.
‘‘அதை தவறு என்றே கருதவில்லை. சரிதான். உங்களுக்கு என்னை முழுமையாகத் தெரியும். அதனால் என்மீது நீங்கள் சந்தேகப்பட முகாந்திரம் இல்லை. ஆனால், உலகுக்கு உண்மை தெரியாது. அவர்களுக்கு சந்தேக நிவர்த்தி அளிக்க வேண்டும். அப்போதே நீங்கள் ஒரு பேரரசனாக நடந்து கொண்டுவிட்டீர்கள். ஆமாம், உங்களைச் சார்ந்திருப்பவர்கள் உள்ளுணர்வாக என் மீது சந்தேகப்பட்டிருக்கலாம் என உங்களுக்குத் தோன்றியிருக்கிறது. அதற்காகத்தான் அந்த அக்னி பரீட்சை வைத்தீர்கள்....’’
‘‘சீதா....’’
‘‘அப்படி சந்தேகப்பட்டவர்களில் ஒருவரை சொல்கிறேன் - சுக்ரீவன். தன்னை நாட்டை விட்டுத் துரத்தியதோடு, தன் மனைவியையும் அபகரித்த அண்ணன் வாலியை  பழி வாங்க வேண்டும் என்பது மட்டும் சுக்ரீவனின் நோக்கமில்லை; தன் நாட்டை மீட்க வேண்டும் என்பது மட்டும் அவனது குறிக்கோள் அல்ல.  மனைவியை அண்ணனிடமிருந்து மீட்க வேண்டும் என்பதும் அவனது எண்ணமாக இருந்தது. அதற்கு உங்கள் உதவியும் தேவைப்பட்டது. நீங்களும் வாலியை வதம் செய்து சுக்ரீவனின் உடைமைகளை  மீட்டுத் தந்தீர்கள். ஆனால், என்னதான் இருந்தாலும், சுக்ரீவன் குரங்கு இனத்தவன். அந்த சமுதாயத்தில், ஒருவர் மனைவியை மற்றவர் கொள்வது என்பது குற்றமாகக் கருதப்படவில்லை....’’
‘‘என்ன சொல்ல வருகிறாய், நீ?’’
‘‘அப்படிப்பட்ட சுக்ரீவன், மனித குலத்தை மேன்மையானதாகக் கருதியிருப்பவன். குறிப்பாக உங்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பு வைத்திருப்பவன். வாலியிடம் சிறைபட்டிருந்த  மனைவியை, எந்த சந்தேகமும் படாமல் தான் ஏற்பது குரங்கு இனத்து நாகரிகம்; ஆனால் ராவணனிடம் சிறைபட்ட சீதையை அதே போல ராமன் ஏற்றுக் கொண்டால் அது மனித நாகரிகத்துக்கு ஏற்புடையதா என அவன் தங்களை இழிவாக பார்த்திருப்பான். சுக்ரீவன் ஒரு உதாரணம்தான். அவனைப் போலவே மற்றவர்களும் தம் அடிமனதில் அந்தக் கருமை நிழலைப் படர விட்டிருக்கலாம். அவர்களிடம் நிரூபிக்கவே அக்னி பரீட்சை வைத்தீர்கள். ஆனால், உங்களுக்கு என் மீது எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பது தெரியும்...’’
‘‘சீதா....’’
‘‘ஆமாம், பொன்மானை விரட்டிப் பிடிக்கத் தாங்கள் சென்ற பிறகு, மாயன் மாரீசன் உங்கள் குரலில் பொய்யாக, ‘லட்சுமணா, சீதா..’ என அரற்றிய போது, அதுவரை எனக்குக் காவல் புரிந்த உங்கள் அருமைத் தம்பியை அங்கிருந்து புறப்பட்டு உங்களைக் காப்பாற்ற சொன்னேன்.  உங்கள் பராக்கிரமத்தை நன்கறிந்த லட்சுமணன், தங்களின் மனைவியாக நான் பரிதவித்ததை ஏற்கவில்லை. அப்போது விபரீதமாக சந்தேகப்பட்டேன். அண்ணன் இல்லாத நேரத்தை பயன்படுத்த நினைப்பதாக குற்றம் சாட்டினேன். அப்போது அவன் மனம் எப்படி துடித்திருக்கும் என்பதை பின்னாளில் உணர்ந்தேன். அதாவது ஒரு ஆண்மகனை சந்தேகப்பட எனக்கு உரிமை இருக்கிறது; ஆனால்  மனைவியை சந்தேகப்பட கணவனுக்கு உரிமை இல்லையா என்ற சுக்ரீவன் போன்றோரின் சந்தேகத்துக்கு விடை கொடுக்கத்தான் நீங்கள் என்னை அக்னி பரீட்சைக்கு உட்படுத்தினீர்கள். ஆனால் அக்னி தேவன் என்னை புடம் போட்ட தங்கம் என்றான். நீங்களும், மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டீர்கள். இது நடந்தது ஆரண்யத்தில்...’’
ராமன் மவுனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘‘ஆனால், அயோத்தி மக்களில் எத்தனை பேருக்கு இந்த சம்பவம் தெரியும்?  ‘அப்படி  அக்னிப் பிரவேசம் நிகழ்ந்ததா?’ என்பதே பலருக்குக் கேள்வியாக இருக்கும். உங்களை அவர்களுக்குத் தெரிந்திருப்பதுபோல ராவணனையும் தெரிந்திருக்கும். ஆனால், என்னைக் கவர்ந்து சென்ற அவனது எண்ணம்கூட என்னை நெருங்காதிருந்தது என்பது இங்கே எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? அவர்களின் பிரதிநிதியாக அந்தக் குடிமகன் தன் மனதை வெளிக்காட்டிவிட்டான் என்றே கருதுகிறேன்....’’
ராமன் தடுமாறினான். ‘‘சீதா, சந்தேகப்படுபவர்களுக்கு எல்லாம் விளக்கம் தர முடியுமா? அப்படிச் செய்தால் இதற்கு முடிவுதான் ஏது?’’
‘‘இந்த எண்ணம், சுக்ரீவன் முதலானோரை திருப்திபடுத்த அல்லது அவர்களின் சந்தேகத்தைத் தெளிவிக்க நடவடிக்கை எடுத்தபோதே உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அப்போது அங்கே இருந்த மக்கள் கூட்டத்துக்கு ஒரு நீதி; இங்கே  அரியணை ஏறியபின் குடிமக்களுக்கு ஒரு நீதியா?’’
‘‘சீதா...என்ன சொல்கிறாய்?’’
‘‘இந்தக் குடிமகனுடைய சந்தேகம் போக்குவதும் உங்கள் கடமைதான். அயோத்தி மக்களைப் பொறுத்தவரை அரசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்....’’
‘‘அப்படியென்றால்? மறுபடி அக்னி பரீட்சையா?’’ பதறினான் ராமன்.
‘‘இல்லை, அதை விடக் கொடுமையானது,’’ என்றாள் சீதை. ‘‘நான் உங்களை விட்டுப் பிரிவதுதான் அந்த சந்தேகத்துக்கான சரியான நிவர்த்தி. என்னை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள். அதுதான் சரி...’’
‘‘முடியாது,’’ கதறினான் ராமன்.
‘‘உங்களுக்கு நான் தேவை என்பதை விட, மக்களுக்கு நீங்கள் தேவை என்பது முக்கியம். என்னுடன் சேர்த்து உங்களை அவர்கள் பார்ப்பதைவிட, உங்களைத் தனியாகப் பார்க்கும்போது, சந்தேகத்திற்குரிய நான் இல்லாததால், உங்களின் மதிப்பு கூடும். அதனால் தங்களுக்கு உளரீதியாக பாதிப்பு இல்லாமல் நல்லாட்சி அமையும் என சந்தோஷப்படுவார்கள். அதற்கு நான் வழிவிட வேண்டும்....’’
ராமன் திகைத்தான்.  
‘‘இன்னொரு விண்ணப்பம். இப்படி நாடு கடத்தும் பொறுப்பை லட்சுமணனிடம்  விடுங்கள். மாரீச மாயத்தில் அவர் மீது சுமத்திய பழிக்கு இதுவே பரிகாரம்.’’  
அமைதியாக இருந்த ராமன் மெல்ல எழுந்தான். மனத்தெளிவுடன் தம்பி லட்சுமணனை அழைத்தான். சீதையைக் கானகத்தில் கொண்டுவிட்டு வர தேரைப் பூட்டச் சொன்னான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar