Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பரமாத்மா.. ஜீவாத்மா
 
பக்தி கதைகள்
பரமாத்மா.. ஜீவாத்மா


திருவஹீந்திரபும் நோக்கி வேதாந்த தேசிகரும், அவரது பத்தினி திருமங்கையும் புறப்பட்டு செல்கையில், சாரட்டில் அமர்ந்திருந்த திருமங்கை வேதாந்த தேசிகரை எப்போதும் பார்த்திராத ஒருவர் போல பார்க்கலானாள்.
‘‘என்ன திருமங்கை... புதிதாய் ஒருவரை பார்ப்பது போல பார்க்கிறாயே... என்ன சேதி?’’
‘‘ஆம்...அப்படித்தான்! தாங்கள் எனக்கு ஒவ்வொரு நாளும் புதிதாகத்தான் தெரிகின்றீர்! அதிலும் இன்று அந்த தலையாரியின் கேள்விக்கு அளித்த பதில்களால் தங்களை அந்த வரதராஜப் பெருமானாகப் பார்த்தேன்...’’ என்றாள்.
‘‘பார்த்தாவையே பரமபிதாவாக பார்ப்பது தவறில்லை. அதுவே குலமாதரின் செயல். அதற்காக என்னை எம்பெருமானாகவே என்றுரைத்தது மிகை! அவன் கருணை எவருக்கும், எவரிடத்தும் இருக்க வாய்ப்பேயில்லை மங்கை. நாம் அற்பமான நிலையில்லாத தன்மை படைத்த உயிர்கள்! நொடிதோறும் மாறும் உடல் நம் உடல்...! இதன் இலக்கு மரணம்!
ஆனால் அவன் துளியும் குறைவுபடாத ஒளிப்புனல் போன்ற ஆதித்தன்...நாம் எங்கே? அவன் எங்கே?’’
‘‘அப்படி என்றால் நாம் அவனுள் கலந்து அவனாதல் சாத்தியம் இல்லையா?’’
‘‘கடலைப் பிரிந்த ஒரு துளி நீர் திரும்பக் கடலைச் சேர்ந்து விட்ட நிலையில், அதுவும் கடலென்றே ஆகிவிடுகிறது. அப்போது அதை எவரும் துளிநீர் என சொல்வதில்லை. ஆனால் துளி நீராய் இருக்கும் வரை, அது கடலைச் சேராத வரை அதை எவரும் கடல் என்று உரைப்பதில்லை. இதுவே பரமாத்மா – ஜீவாத்மா தத்துவம்.
நாம் அவனைச் சேர்ந்து விட்டால் அவன் வேறு நாம் வேறு இல்லை தான். ஆயினும் சேராதவரை நாம் அவன் படைப்பே... ஆயினும் அவனது எல்லையில்லாத சக்திகள் எதுவும் நமக்கு இல்லை. அவனை அடையவே இப்பிறப்பு அருளப்பட்டுள்ளது. எனவே அவனை முயன்றால் அடைய முடியும்.  ஆனால் ஒருக்காலும் நாம் அவனாதல் சாத்தியமில்லை! அவன் என்றும் குறைவு படாத பூரணன் – நாம் அதன் திவலைகள். திவலைகள் பூரணத்துடன் கலந்தபின் உன் கேள்விக்கே இடமில்லை – கேள்விக்கு இடமிருந்தாலோ நாம் பூரணன் இல்லை என்பதே அடிப்படை.’’
‘‘இத்தனை புரிதலும், வியாக்யானமும் செய்யும் தாங்கள் கூடவா பூரணர் இல்லை...?’’
‘‘அவனுள் இருந்து அவனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பூமியே பூரணமில்லை. இது குறைவுடைய ஒன்றே! அதனால் தான் பூகம்பங்களும், பிரளயங்களும் நிகழ்கின்றன. இந்த பூமியே பூரணமில்லாத போது இதன்மேல் வாழ்ந்திடும் நாம் எப்படி பூரணர் ஆவோம்?’’
‘‘அப்படியானால் நம் வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சார்யன் முதலாகவும், அப்பரிபூரணனே பின்னவனாக திகழ்வதும் மட்டும் எப்படி சரியாகும்?’’
‘‘இதுவும் அவன் கருணையே! முதலான அவன் நம் மீதுள்ள கருணையால், நமக்கு எளிதாக வசப்பட வேண்டும் என்ற வேட்கையால் ஆச்சார்யனை  அணுகிவிட்டாலே போதும்;  அது என்னையே அணுகிவிட்டது போல் என்று கூறுகிறான்.
நன்றாக கேட்டுக்கொள்... மாயை மிகுந்த உலகில் ஒருவர் பக்தியால் மட்டுமே எம்பெருமானை அடைதல் என்பது பாலை நிலத்தை ஒருவர் வெறும் கால்களுடன் நடந்து கடப்பது போன்றது அல்லது கடலை ஒருவர் நீந்திக் கடக்க முற்படுவது போன்றது! இவரே ஆச்சார்யன் என்கிற ஒட்டகத்தின் மேல் ஏறிக் கொண்டு விட, அப்பயணம் இலகுவாகவும் துரிதமாகவும் முடியும். அதே போல கடலில் படகில் பயணிக்க அதை கடத்தல் சுலபம்.
ஆச்சார்யனே இங்கே ஒட்டகம் – ஆச்சார்யனே இங்கே படகு!’’
– அந்த சாரட்டில் இருவரும் பயணிக்கும் போது ஒரு ஞானோபதேசமே நிகழ்ந்தது.
‘‘அப்படியானால் ஆச்சார்யனை பற்றிக் கொண்டால் போதுமா...அவனைக் கூட எண்ணத் தேவையில்லையா?’’
‘‘அவன் நினைப்பாகவே நம்மை ஆக்க வல்லவரே ஆச்சார்யன். தானே பரமாத்மா என எந்த ஆச்சார்யனும் சொன்னதில்லை. சொன்னால் அவர் ஆச்சார்யனுமில்லை..
‘‘அப்படியானால் என் பதி (கணவர்) மட்டுமல்ல தாங்கள். என் ஆச்சார்யனும் கூட! இம்மட்டில் என் போன்றோருக்கு தாங்கள் எதைக் கூற விரும்புகின்றீர்கள்?’’
‘‘சரணாகதி புரியுங்கள்...முதலில் ஆச்சார்ய சரணாகதி. பின் ஆச்சார்யன் மூலம் அவனிடத்து சரணாகதி. இக்கருத்துக்களை உள்ளடக்கியே ‘அடைக்கலப்பத்து’ என்ற பாசுரத்தை யாம் அருளிச் செய்ய உள்ளோம்.’’
‘‘தலைப்பே சிந்திக்கத் துாண்டுகிறதே...?’’
‘‘தலையானதல்லவா... ஒவ்வொரு சொல்லும் அதில் சிந்திக்கத் துாண்டும். ஒரு வைணவன் இதை அறிந்து செயல்பட, அவன் வைணவனாய் ஒழுகிய பயனை அடைந்திடுவான்...’’
– அழுத்தமாய் வேதாந்த தேசிகன் கூறியது சாரட்டை செலுத்தியபடி இருந்த கிருஷ்ண பாண்டவனின் காதுகளிலும் விழுந்து அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! ஒரு ஆச்சார்ய புருஷருக்கு தான் தேர்ப்பாகனாய் இருப்பதை எண்ணி கிருஷ்ண பாண்டவனுக்குள் பெருமிதம் உண்டாயிற்று.
‘‘ஸ்வாமி... நாம் திருவஹீந்திரபுரம் சென்று தரிசித்த நிலையில் காஞ்சியம்பதிக்கு உடன் திரும்பி விடுவோமல்லவா?’’ என்று திருமங்கை கேட்டதும் அவ்வேளை அவன் காதில் விழுந்தது.
‘‘அதிலென்ன சந்தேகம்...ஆம் எதற்காக இப்படி கேட்டாய்?’’
‘‘என்னவோ தெரியவில்லை... எம்பெருமானை நாம் தரிசித்தாலே போதும் –  நமக்கு வரம் உறுதி என்று சொன்னதும் எல்லாம் எம்பெருமானை எப்போது தரிசிப்போமே என எண்ண வைத்து விட்டது..’’
– அதைக் கேட்டவுடன் ஒரு மந்தகாசப் புன்னகை தோன்றியது வேதாந்த தேசிகரிடம்...
‘‘இப்புன்னகைக்கு பல பொருள் இருப்பது போல எனக்குப் படுகிறது..’’ என்றாள் மங்கை.
‘‘உண்மைதான்! உன் பேச்சில் நான் குழைவு படும் ஒரு ஜீவாத்மாவை கண்டேன். எத்னையோ முறை அவனை தரிசித்து விட்டாய்.. நீ மட்டுமா? நானும் தான்! ஆயினும் ஒரு முழுமையாக தரிசித்த நிறைவு தோன்றவில்லை... திரும்பத் திரும்ப தரிசிக்கவே மனம் விழைகிறது. நம் குறைவையே இது உணர்த்துகிறது.’’
‘‘இப்படி நீங்கள் சொல்லும்போது தான் எனக்கும் புரிகிறது. நாம் குறைவுடையவர்களே! அவன் தன்னையே நமக்கு தந்து விட்டாலும் அவனை எப்படி பாதுகாக்க போகிறோமோ தெரியவில்லையே என்று அசூயை வயப்படுவோம். அசூயை ஒரு குறைபாடு தானே?’’
‘‘சரியாகச் சொன்னாய்... சகலத்திலும் ஸ்திரம் நமக்குத் தோன்றுவதற்கும் அவன் கருணை நமக்கு தேவை...’’
‘‘இவ்வேளை எனக்கொரு கேள்வி எழுகிறது.. கேட்கட்டுமா?’’
‘‘உன் கேள்வி யக்ஞம்தான் எப்போதோ தொடங்கி விட்டதே...இது என்ன புதிதாக...?’’
‘‘இப்படிக் கேட்டாலே அது சற்று கேட்கக்கூடாத கேள்வியும் கூட என்று நான் கூறினால்தான் தங்களுக்கு தெரியுமா?’’
‘‘சரி அது என்ன கேள்வி?’’
‘‘எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள்... நமக்கு அந்த பேரருளாளன் இருக்கிறான். இந்த அளவில் நம் காஞ்சி வாழ் மக்களுக்கும் யாதொரு குறைவுமில்லை. ஆனால் இந்த பரந்த உலகம் காஞ்சியோடு முடிந்து விடவில்லையே...?’’
‘‘அதனால்?’’
‘‘அவனை அதாவது காஞ்சில் பேரருளாளனை அறியாத ஒருவரும் இந்த உலகில் எங்காவது வனப்பகுதிகளில் இருக்கக்கூடும் தானே?’’
‘‘வனப்பகுதி என்று எதற்கு அவ்வளவு துாரம் செல்கிறாய்? காஞ்சியிலேயே கூட அவனை முற்றாய் உணராத மாற்று மார்க்கத்தவர்கள் உள்ளனரே...?’’
‘‘அப்படியானால் அவர்களுக்கெல்லாம் பேரருளாளன் கருணை கிடைப்பது எப்படி?’’
‘‘நல்ல கேள்வி...அவனை உணர்ந்து துதிப்பதே எப்படி அவன் கருணையோ, அதேபோல் அவனை அறியாத சிலர் இருப்பதும் கூட ஒரு வகையில் அவன் கருணையே...! அவர்களையும் அவனல்லவா படைத்திருக்கிறான்?’’
‘‘இது என்ன விசித்திரமான பதில்...?’’
‘‘அப்படித் தோன்றினால் அது என் பிழையில்லை. நிழலின் அருமை வெய்யிலில் தெரிவதுபோல் இனிப்பின் தன்மை கசப்பிடம் தெரிவது போல், அவனை அறிந்து பக்திபுரிவோரின் தன்மை, அவனை அறியாதவர்களாலேயே உணரப்படும்.
சுருக்கமாக கூறுவதானால் அறிந்தவர் அருகில் இருப்பவர் என்றாகிறார். அறியாதவர் தொலைவில் இருப்பவர் என்றாகிறார்... இதுவும் அவன் செயலே!’’
‘‘தொலைவில் இருப்பவருக்கு எப்படி அவன் கருணை கிட்டும்? அவர்கள் அவனை அடையாது இப்பிரபஞ்ச சாகரத்தில் உழன்றபடியே அல்லவா இருப்பர்?’’
‘‘எல்லோருக்கும் அவன் கருணை கிட்ட வேண்டும். அதற்கு என்னவழி என்று தானே கேட்க வருகிறாய்?’’
‘‘ஆம்..சரியாகச் சொல்லி விட்டீர்?’’
‘‘உன் கேள்விகளிலேயே சிறந்த கேள்வியாக இதனை நான் கருதிகிறேன். அதிலும் நாளாக நாளாக மனிதக்கூட்டம் பெருகுமேயன்றி குறுகாது...அவ்வாறு அது பெருகிடும் போது மனிதனின் புத்தி ஆற்றலால் பல புதியன உருவாகும். அது பொருளால் மட்டுமல்ல.. மன இருளாலும்.. இது ஒருவகை இயற்கை நியதி!
மணக்க மணக்க உண்ணும் உணவு தான் சகிக்க இயலா மலம் என்றாகிறது. அதுபோல ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்வினை அல்லது பதில்வினை நிச்சயம் உண்டு. இந்த வினைகளை எல்லாம் சமன் செய்ய அவனாலேயே இயலும். அவன் அதன் நிமித்தம் ஏதும் செய்வான்?’’
‘‘ஏதும் செய்வான் என்று பொதுவாகவும் புதிர் போலவும் சொன்னால் எப்படி?’’
‘‘நான் என்ன அவனா? பளிச்சென்று இதுதான் நடக்கும், அது இப்படித்தான் நடக்கும் என்று கூறிட...? என்னால் அனுமானிக்கவே இயலும்? அதன் அடிப்படையில் கூறுகிறேன். அந்த ஹஸ்தகிரி வரதன் எல்லோராலும் அத்திவரதன் என்று எளிதாய் அழைக்கப்படுவதற்கு ஏற்ப, அத்தி வரதனாய், காஞ்சியில் அன்றாடம் காட்சி தருவது ஒரு புறமிருக்க, அதே காஞ்சியில் அபூர்வக் காட்சி தருபவனாகவும் அப்படி தரும் சமயம் ஒரு பெரும் பக்தி இயக்கம் தோன்றும் என்றும், அதனால் ஒரு சமநிலை தோன்றி அவனை அறியாதவர் மற்றும் அறிய இயலா நிலையில் இருப்பவர்கூட அவன் நாமம் காதில் விழுந்திட அதை மனதால் எண்ணுவர்!
இது போதாதா? பார்த்து விட்டாலே, நாம் கேட்கத் தேவையேயின்றி வரம் தருபவன் இதன் பொருட்டு எல்லோருக்கும் தன் கருணையை அளித்திடுவானே?’’
வேதாந்ததேசிகர் விண்ணைப் பார்த்தபடியே சொன்ன அந்த அபூர்வக் காட்சி ஏதுவாக இருக்கும்? அது எப்போது நடக்கும்? என அப்போதே நினைக்கலானாள் திருமங்கை!
– தொடரும்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar