Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அரைக் காசும்... நிறைக் காசும்
 
பக்தி கதைகள்
அரைக் காசும்... நிறைக் காசும்

அன்னை பராசக்தி
இன்னருளால் நாமிருப்போம்
இன்னும் குறையென்ன
இன்பமுறு நன்னெஞ்சே
இப்படி நெஞ்சுக்கு அறிவுரை சொல்லும் பாரதியாரின் வார்த்தைகளைப் பூக்களாகச் சுமந்து கொண்டு வாருங்கள்.
‘‘தையலைக் காத்தல் செய்’’
இந்த வாஞ்சையை அர்ச்சனைக்கூடையாகச் சுமந்து கொண்டு வாருங்கள்.
இந்த இரண்டு சித்தாந்தமும் சங்கமிக்கும் தலம் அரைக்காசு அம்மன் கோயில். சென்னை தாம்பரம் அருகில் உள்ள ரத்னமங்கலம் என்னும் பகுதியில் ஆச்சர்யங்களின் அவதாரமாக அருள்பாலிக்கிறாள்.
அம்மையின் பெயர்தான் அரைக்காசு அம்மன். பிரபஞ்சத்தின் எல்லாச் செழுமையும் அரைக்காசு அம்மனால்தான். இயற்கையின் எல்லாப் புன்னகையும் அரைக்காசு அம்மனால்தான். அந்தத் திருக்கோயில் முழுக்கத் தையல் அருள். பெண்மை அருள். அம்மை அருள். சக்தி அருள்.
ஒரு காலத்தில் கிராமத்து தெய்வமாக கொண்டாடப்பட்ட அம்மை ஒரு காலத்தில் உள்ளங்கை அளவு தலத்தில் அருளாசி புரிந்த அம்மை இப்போது கோலார் தங்க வயலின் தங்கமெல்லாம் சேர்த்துக் கட்டியது போன்ற ஜொலிக்கிறாள்.
பிரமிப்பின் உச்சிக்கு நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறாள் அம்மை. காரணம் என்ன தெரியுமா? அவள் மட்டும் தனியாக இல்லை. அம்மையோடு சரஸ்வதி ஹயக்ரீவர் திருமேனி; லட்சுமியும் நாராயணனும்; சுயம்வர லிங்கம் என்று லிங்கத்தை உயிரோடு பிணைத்துக் கொண்டிருக்கும் சக்தி; இப்படியான அம்மைகளும் உடனிருக்கும் காட்சி –  உயிரைப் புல்லரிக்க வைக்கிறது.
பூலோகத்தில் எங்கெல்லாம் அம்மன் திருத்தலங்கள் உண்டோ – அத்தனை அம்மன் அவதாரங்களையும் 108 அம்மன்களாக இங்கே எழுந்தருளச் செய்திருப்பது காணக் கண்கோடி வேண்டும்.
மதுரை மீனாட்சி, கொல்கத்தா காளி, தேவகோட்டை கோட்டையம்மன், காளஹஸ்தி பிரசன்னாம்பிகா, விஜயவாடா கனகதுர்கா, காசி அன்னபூரணி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருநெல்வேலி பேச்சியம்மன், மைசூரு சாமுண்டீஸ்வரி, சூலுார்ப்பேட்டை செங்காளம்மன், திருச்சானுார் பத்மாவதி, காசி விசாலாட்சி, தஞ்சை காளி, திருவேற்காடு கருமாரி அம்மன், கண்டனுார் செல்லாயி, கொல்கத்தா ஆயிரம் கரம் காளி, சேலம் அன்னதான மாரி, விருதுநகர் முத்துமாரி, பெங்களூரு ராஜராஜேஸ்வரி, குடமுருட்டி ஷீதலாதேவி, ஸ்ரீசக்ரதேவி, ஸ்ரீ சந்திர பரமேஸ்வரி, மலேசியா மகாகாளி, சோட்டானிக்கரை பகவதி, துல்ஜாபூர் தீடவகா அம்மை, ஸ்ரீ வசியமுகி, கல்யாண மாரி, கொடியுடை அம்மன், வேலுார் சந்தோஷி மாதா, பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன், துர்கை, புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன், நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள், திருக்கடையூர் அபிராமி, கன்னிகா பரமேஸ்வரி, காரைக்குடி கொப்புடை அம்மன், திருவாச்சூர் மதுரகாளி, மேல்மலையனுார் அங்காளம்மன், விஷ்ணு துர்கை, கொல்லுார் மூகாம்பிகை, ஈரோடு பண்ணாரி அம்மன், தியாகமங்கலம் முத்துமாரி, பெரியபாளையம் பவானி, ஆற்றுக்கால் பகவதி அம்மன், பட்டீஸ்வரம் துர்கை, கன்னியாகுமரி அம்மன், திருச்சானுார் லலிதா பரமேஸ்வரி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, செங்கல்பட்டு நாகாத்தம்மன், திருவொற்றியூர் வடிவுடை அம்மன், பெரும்பாக்கம் செல்லத்தம்மன், திருவையாறு வெயிலுகாத்த மாரியம்மன், அறந்தாங்கி வீரமாகாளி, புன்னை நல்லுார் மாரியம்மன், வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன், ராஜ துர்கை, புதுக்கோட்டை புவனேஸ்வரி, நெல்லை காந்திமதி அம்மன், ஈரோடு பெரிய மாரியம்மன், மாங்காடு காமாட்சி, ராஜமாதங்கி, சமயபுரம் மாரியம்மன், சிதம்பரம் எல்லைக்காளி, சங்கரன்கோவில் கோமதியம்மன், திருப்பதி வகுளாதேவி, திருவண்ணாமலை அபிதகுசலாம்பாள், முத்தாரம்மன், படவேடு ரேணுகாதேவி அம்மன், குரங்கணி முத்துமாலை அம்மன், காயத்ரி, நாகப்பட்டினம் நெல்லுக்கடைமாரி, வேலுார் திருவுடை அம்மன், வனதுர்கை, திருவல்லா சக்குளத்துக்காவு தேவி, பாலாதிரிபுரசுந்தரி, வேட்டவலம் மண்மணியம்மன், வைஷ்ணவி தேவி, கோலவிழி அம்மன், பூங்காவனத்தம்மன், குருகுலதேவி, மும்பை தேவி, நெல்லை பேராச்சி அம்மன், பட்டுக்கோட்டை நாடியம்மன், பள்ளத்துார் பெரிய நாயகி அம்மன், கமலாம்பிகை, தண்டுமாரி அம்மன், சியாமளா தேவி, ஐந்து வீட்டுக்காளி, இசக்கி, கார்த்தியாயினி, நம்பநாயகி, ஏழைமாரி, ஜெய காளியாம்பாள், நிமிஷாம்பாள், ஜக்கம்மா, உலகநாயகி, பெரிய காந்திமதி, உலகாண்டேஸ்வரி, நித்ய சுமங்கலிமாரி, பாகம்பிரியாள், செண்பக வல்லி, செளடேஸ்வரி, ராஜகாளி, கங்காதேவி, சாரதா அம்மை, மங்களாம்பிகை, அரைக்காசு அம்மன் இத்தனை அம்மைகளும் ஒரே திருத்தலத்தில் என்பது உலக அதிசயம் என்றே கூறலாம்.
புதுக்கோட்டை பிரகதாம்பாளின் பக்தர்களுக்கு அரைக்காசு பிரசாதம் தரப்பட்டது. மன்னர்கள் ஆட்சிக்காலத்தில். அம்மன் திருமுகம் பொறிக்கப்பட்ட காசு காரணமாக ‘அரைக்காசு அம்மன்’ எனப்பட்டாள். அந்த அம்மனே தாம்பரம் ரத்னமங்கலத்தில் அரைக்காசு அம்மனாகக் கருணைபுரிகிறாள்.  ஐநுாறு ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட திருத்தலம்.
அரைக்காசு அம்மை பேரழகி. புன்னகையும், பொன்நகையும் மின்னலாக ஜொலிக்க, பக்தர்களின் பேரன்பே மந்திரமாக ஒலிக்க அடடா..... இதுதான் முக்தியா? இதுதான் சொர்க்கமா? இதுதான் போதுமென்ற மனதின் தத்துவமா? 108 அம்மைகளின் அருட்சக்தி ஒரே தலத்தில் நமக்கு வாய்க்கிறதென்றால் அவ்வளவு அருள்வெள்ளத்துக்கு நாம் தகுதியானவர்களாக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?
தொலைந்த பொருளை நம் கையகப்படுத்தும் கருணை அரைக்காசு அம்மன் திருவிளையாடல். ‘‘தொலைந்து போன என் தங்க செயின் கிடைத்தது. தொலைந்து போன என் பாஸ்போர்ட் கிடைத்தது’’ ‘‘கை மறதியாய் வைத்த பள்ளிக் கூட சர்ட்டிபிகேட் எல்லாம் கிடைத்தது’’  ‘‘எல்லாமே அரைக்காசு அம்மன் அருள்’’ இப்படி உணர்ந்து உருகி, மெழுகாகக் கரைபவர்களின் கண்ணீர்த்துளி ஒவ்வொன்றிலும் அரைக்காசு அம்மன் தரிசனம் தெரிகிறது.
வாழ்க்கை என்பது வரம். மனிதப் பிறவி என்பது பெருவரம். ‘’அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’’ என்கிறார் உரைக்கிறார் அவ்வையார். இந்த அற்புத வாழ்வை நமக்கு வரமாக அருளிய அம்மை – எப்பேறுபட்ட பேராற்றலின் பொங்குமாங்கடலாக இருப்பாள்? அவளை காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்கும் காவலாளியாக மட்டுமே மாற்றுவது அறிவீனம் அல்லவா?
இதோ – இதோ – இதோ கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் காலத்தை எங்கே போய்த் தேடுவது? காணாமல் போய்க் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையை, வாழ்நாளை, இளமையை, அறிவை, அன்பை, கருணையை, காதலை, பாசத்தை, நேசத்தைக் கண்டுபிடிக்கத்தான் அரைக்காசு அம்மன் பேராற்றல். அதை விடுத்து, பேனா, பென்சில், ரப்பர், வளையல், சங்கிலி என அம்மையை வெகுஜன வாழ்க்கைக்குள் இழுத்து வந்து விடுகிறோம். நம்மைப் போல சராசரிக்கும் கீழாக ஆக்கி விடுகிறோம். இது சரியா என்ற எண்ணம் மேலோங்கியபடி இருக்க அம்மை சிரித்தாள்.
‘‘என்ன சிரிப்பு?’’
‘‘உன் நினைப்பை நினைத்துத்தான்’’
‘‘என் நினைப்பு உனக்கெப்படி
 தெரியும்? ஓ...ஓ... நீதானே என் நினைப்பின் காரணி. என் எண்ணங்களின் ஊருணி... உனக்குத் தெரியாதவரை நான் யோசிக்கவோ போகிறேன்?’’
‘‘அவரவர்க்கான நிறைவு தருவதே எனக்கு மகிழ்ச்சி மகளே... எல்லோரும் முற்றும் துறந்த ஞானிகளாக வேண்டும் என்பதல்ல. எல்லோரும் பற்றற்று இருக்க வேண்டும் என்பதுமல்ல...’’
‘‘ஆனால் துவக்கப் புள்ளியே முற்றுப்புள்ளி ஆவது சரியா அம்மையே? வளரவும், முதிரவும், தெளியவும் வேண்டுமே? சிறுபிள்ளைத் தனம் என்பதை எப்படி  பொறுத்துக் கொள்கிறாய் அம்மையே?’’
‘‘குழந்தைகளின் விளையாட்டு தாய்க்கு அலுக்காது... ஆனாலும் சிறுகச் சிறுகச் கரையேற்றி விடுவேன் என் மக்களை.’’ என
காத்திருக்கிறாள் அரைக்காசு அம்மை. அவளின் அன்பும், பாசமும் தாய்மை உணர்வை மெருகூட்டுகிறது. அதற்கு 108 அம்மன்களே சத்திய சாட்சி. தொலைந்துபோன பொருளோடு, தொலைந்து கொண்டிருக்கும் நம்மையும் கண்டெடுத்துக் கைசேர்க்கிறாள். கரைசேர்க்கிறாள் அரைக்காசு அம்மன். அவள் அரைக்காசாக இருந்து கொண்டு நம்மை நிறைக்காசாக ஆக்குகிறாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar