Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆயிரத்தம்மனும் ஆயிரம் சூரியனும்
 
பக்தி கதைகள்
ஆயிரத்தம்மனும் ஆயிரம் சூரியனும்

ஒரு சூரியனையே கண்ணால் பார்க்க முடியாது. ஆயிரம் சூரியனை எப்படிப் பார்க்க முடியும்? ஆனால் இங்கு பார்க்கலாம். ஆயிரம் கோடி சூரியனின் வெளிச்சமும், ஆயிரம் கோடி நிலவின் குளுமையும் கலந்த அந்தத் தெய்வீக அம்மையின் சன்னதி உள்ளங்கை அளவுதான் இருந்தது. ஆனால் உள்ளங்கை தானே எல்லாவற்றுக்கும் ஆதாரம்? அவள் தான் நெல்லை மண்ணின் ஆதார தேவதை, ஆதுர தேவதை ஆயிரத்தம்மன்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் சித்ரா பவுர்ணமி நிலவொளியால் பாட்டும், நடனமும் கூத்துமாகக் கூட்டாஞ்சோறு சாப்பிட்ட சவுந்தர்யப் பொழுதுகள் எதுவுமே இப்போது கிடையாது. காரணம் ஆறுகள் இல்லை. பண்டிகை கொண்டாட ஊரில் மக்களும் இல்லை. தொழில், கல்வி, குடும்பம் என புதிய ஊர்களில் குடியேறி விட்டனர்.  
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில்  பாரம்பரியம், பண்பாடு, பழக்க வழக்கம், ஊர்க்கட்டு, உள்ளூர்த் திருவிழா எல்லாம் காணாமல் போயின. தொழில் நுட்ப எந்திரத் தலைமுறைக்கும் மண்சார்ந்த கொண்டாட்டத்தில் நாட்டம் இல்லை.  பழைய பஞ்சாங்கமா? என்கிறார்கள். இதென்ன பட்டிக்காட்டுத்தனம் என்கிறார்கள். புழுதியும், புழுக்கமுமா நசநசன்னு இருக்கு ஊரு... என்கிறார்கள். எல்லாக் கோயிலையும் ஸ்மார்ட் போன்ல பார்த்துக்கலாமே... என்கிறார்கள்.
அடடா எங்கள் இளைய தலைமுறையே.. அலைபேசியில் பார்த்து எல்லாவற்றையும் அனுபவிக்க முடியுமா?  அம்மையின் பேரழகு, அவள் உடுத்தியிருக்கும் பட்டாடை ஜொலிப்பு, அவள் அலங்காரம், ரோஜாப்பூ மாலை, சம்பங்கிப்பூ மாலை, கதம்பம், பிரசாத வகைகளின் வாசனை, ஊரிலிருக்கும் ஒவ்வொருத்தருக்கும் அம்மை தரும் தொழில் வளர்ச்சி, குடும்ப உறவுப் பிணைப்பு, உறவுகளை ஒருசேரச் சந்தித்துக் கைசேர்த்து அளவளாவும் சந்தோஷம் எல்லாம் அலைபேசியில் கிடைக்குமா? வெறும் காட்சி வாழ்வாகுமா?
திருநெல்வேலி நகரில் நுாலளவு ஓடியது தாமிரபரணி. அதை காப்பாற்றாத குற்ற உணர்வு கொப்பளிக்க, ஆற்றுநீரை அள்ளிக் குடித்தேன். முகத்தை நனைத்துக் கொண்டேன். ஆயிரத்தம்மனின் கருணைக் குளுமையாய் உணர்ந்தேன்.
குறுகலான தெருக்களில் நுழைந்து ஆயிரத்தம்மன் கோயிலுக்குள் நுழைந்தேன். விஸ்தீரணம், பிரம்மாண்டம், ஏராளமான சன்னதிகள் எதுவுமில்லை. தாய்வீடு சிறியதாக, மனசுக்கு இதமாக, உயிருக்கு நெருக்கமாகத்தானே இருக்கும்? அப்படித்தான் இருந்தாள் அம்மை ஆயிரத்தம்மன்.
அடடா... உலக அழகி, பிரபஞ்சப் பேரழகி, உள்ளூர் அழகி யாராயிருந்தாலும் சரி. அம்மையின் ஆதி அந்தம் சொல்ல முடியாத அழகின் உச்சம். கருணையின் உச்சம். தாய்மையின் உச்சம். அன்பின் உச்சம் எல்லாமே ஒப்பீடு இல்லாதது.
நின்றது நின்றபடிக் கண்கொட்டாமல் பார்த்தாலும் போதும் என்று சொல்ல முடியாது. மனசுக்குள் ததும்பத் ததும்ப நிறைத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் செய்ய முடியாது. ஆயிரத்தம்மன் பெருங்கடல். நம் உள்ளங்கையில் எவ்வளவு அள்ள முடியும்? ஆயிரத்தம்மன் விரிந்த வானம். நம் இரு கண்களால் எவ்வளவு பார்க்க முடியும்? ஆயிரத்தம்மன் பெரும் பிரபஞ்சம். நம் இரு பாதங்களால் எப்படி உணர முடியும்? அவள் பெருமழை: நாம் சிறு இலை; அவள் பெருமின்னல்: நாம் சிறு கன்னல். அவள் நந்தவனம்: நாம் சிறு பூமணம்.
மைசூர் தசராவும், குலசேகரப்பட்டினம் தசராவும் எப்படி புகழ் வாய்ந்ததோ – அந்தளவுக்கு சிறப்பு மிக்கது ஆயிரத்தம்மன் தசரா விழா.  வெண்பட்டு உடுத்தி ஆயிரம் காசு ஆபரணம் அணிந்து அம்மை பவனி வருவது அவளுக்காகவா?
இல்லையே... அவள் தரிசனம் பெற முடியாமல் தவிக்கும் உடல் நலம் இல்லாதவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் வீட்டு வாசலில் இருந்தாவது  தரிசிக்கட்டும் என்ற தாய்மைக் கனிவுதானே இந்த விழாக்களின் நோக்கம்?
பத்துநாள் தசராவில் அக்கம் பக்கத்து ஊரார் வருகையும், ஆயிரத்தம்மனும் அம்மையின் உடன்பிறந்த ஆறு சகோதரி அம்மன்கள் சப்பரமும் கண்ணுக்கு விருந்தளிக்கும்.
அம்மன் நெல்லையின் பயிரானவள்; நெல்லையின் கருவானவள்; நெல்லையின் உருவானவள். நெல்லையின் மொழியானவள்; நெல்லையின் ஒளியானவள் ஆயிரத்தம்மன். அவளின் ஆயிரம் கண்களும் ஆயிரம் கோடிச் சூர்யப் பிரகாசமாக ஜொலிப்பது மனசால் உணர வேண்டிய உன்னதமும் உன்மத்தமும் ஆகும்.
பத்துப் பதினைந்து அடி துாரத்தில் ஆயிரத்தம்மன் தரிசனம்.
‘‘எத்தனை ஜென்மத்துத் தொப்புள் கொடி பந்தம் இது தாயே?’’
‘‘அநாதி காலம் மகளே...’’
இந்த உணர்வோடு பெண்களும் ஆண்களும் கோயிலுக்கு வருகிறார்கள். பெற்ற தாயைப் பார்க்கப் போகிற பரவசம் ஒவ்வொரு முகத்திலும் ததும்புகிறது.
‘‘விஷம் குடிச்சியா? பாயசம் குடிச்சியா?’’
யாரோ ஒருவர் இன்னொரு பெண்ணிடம் கேட்டார்.
‘‘ஆயிரத்தம்மன் கிட்ட வேண்டினப்புறம் நாங்க ஏன் விஷம் குடிக்கணும்? ஜம்முனு பாயசம் வச்சுக் குடிச்சோம். வெள்ளிக்கிழமை அம்மைக்குப் பொங்கல் வைக்கப் போறேன்...’’
நன்றியுணர்வு கொப்பளித்தது அந்த பெண்ணின் முகத்தில்.
‘‘மனுஷங்களால முடியாதது இருக்கும். அம்மனால முடியாதது எதுவும் கிடையாது... போன மாசம் வேண்டினேன். இந்த மாசம் கடனைத் தீர்த்துட்டா...’’ என விதிர்விதிர்த்து ஆடினாள் ஒரு பெண்.   
தானாகவே பேசியபடி நடந்தார் பெரியவர் ஒருவர்.  
‘‘இன்னிக்கு நேத்தா பார்க்கறேன்? என்னோட எம்பத்தஞ்சு வயசுக்கு எத்தனை ஜோலி நடத்திட்டா அம்மை...’’
அன்போடு இவர்கள் தருவது ஒரு முழம் பூதான். கூடவே மனசெல்லாம் நன்றியுணர்வு.
பயம் விலகுது, கடன் தீருது, நினைச்சது நடக்குது என்பதுதான் அம்மையின் அருள் வெள்ளம்.
எல்லோருக்கும் கடன் உண்டு. அஞ்சு ரூபாய், பத்து ரூபாய், நுாறு, ஆயிரம், லட்சம், கோடி என எல்லாம் தீர்த்து விடலாம்.
அம்பானியாலும், அதானியாலும் உலகப் பெரும்பணக்காரர்களும் கூடத் தீர்க்க முடியாத கடன்தானே கருவறைக் கடனும், தாய்ப்பால் கடனும்... அதற்கு எந்த அம்மையும் விலை கேட்க மாட்டாள். வாடகை கேட்க மாட்டாள். தவணையாகக் கட்டச் சொல்ல மாட்டாள்...
இதே கரிசனத்தின் ஆயிரம் மடங்கு, பத்தாயிரம் மடங்கு, கோடி மடங்கு கருணை ஆயிரத்தம்மனிடம்.
தசராவின் நிறைவாக நள்ளிரவில் சூரனை வதம் செய்கிறாள் அம்மை.
‘‘எல்லாமாக இருக்கிறாய் தாயே...’’
‘‘என்னவாக?’’
‘‘கடன் தீர்க்கும் கருணையும் உன்னிடம் கொட்டிக் கிடக்கிறது... அரக்கனைச் சம்ஹாரம் செய்யும் தீர்க்கமும் கொட்டிக் கிடக்கிறது...’’
‘‘இதைத் தான் சொல்கிறேன் மகளே... எல்லா ஜீவன்களும் என் சிறு அவதாரமாக இருக்க வேண்டும்... அந்த வல்லமையை எல்லோருக்கும் நிறைத்திருக்கிறேன்...சரி நீ என்ன கேட்கப் போகிறாய்?
‘‘ தாயே.... எனக்கு குறையொன்றுமில்லை’’
கூப்பிய கைகளோடு வெளியே வந்தேன்.
கடன் என்பது பணம் மட்டுமல்ல. ஜென்மாந்திரக் கடனும்தான். அதை ஏன் தீர்க்க வேண்டும்? தருபவளும் ஆயிரத்தம்மன். தொடர வைப்பவளும் ஆயிரத்தம்மன். அதுபாட்டுக்கு இருக்கட்டும்... ஜென்மக்கடன் நல்லது... அது அம்மையோடு இருக்கும் தொப்புள்கொடி பந்தம்...


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar