Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வாழ்க்கையின் சாரம்
 
பக்தி கதைகள்
வாழ்க்கையின் சாரம்

அதிகாலை கனவில் தோன்றிய பச்சைப்புடவைக்காரி,‘‘வரும் வெள்ளிக்கிழமை மாலை உனக்கு வாழ்க்கையின் சாரமான தத்துவத்தைப் உபதேசிக்கிறேன்’’ என்றாள்.
சிலிர்ப்புடன் விழித்தேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று ஏங்கினேன்.
வியாழக்கிழமை காலை நடைப்பயிற்சி செல்லும் வழியில் அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்தேன். அவனைத் தினமும் அதே இடத்தில் பார்க்கிறேன். காவிநிற வேட்டியும், சட்டையும் அணிந்திருந்தான். அறுபது வயதிருக்கும். கை கால்கள் நன்றாகவே இருந்தன. முகமும் தெளிவாக இருந்தது. வேலை செய்து பிழைத்தால்தான் என்ன? மூட்டை துாக்க வேண்டாம்... செக்யூரிட்டி வேலையாவது பார்க்கலாமே! ஏன் இப்படி சோம்பேறியாக அடுத்தவர் உழைப்பில் வாழ வேண்டும்? வெறுப்புடன் கடந்து சென்றேன்.
அன்று மதியம் வங்கிக்குச் சென்றிருந்தேன். அங்கு வாசலில் இளம்பெண் ஒருத்தி காரைத் திருப்பிக்கொண்டிருந்தாள். அது  பரபரப்பான ஒருவழிச் சாலை. அவள் கவனமாகத்தான் திருப்பினாள். திடீரென ஒருவன் வரக்கூடாத வழியில் வேகமாக பைக்கில் வந்தான். அப்படி அவன் வருவான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நல்ல வேளையாக கடைசி நிமிடத்தில் காரை நிறுத்தியதால் அசம்பாவிதம் நடக்கவில்லை.
அந்த பைக்காரனைக்  கத்தினேன்.  அவனும் பதிலுக்குக் கத்தினான்.  சண்டையைப் பார்த்த ஒரு போலீஸ்காரர்,
“ஏன்யா அங்கிருந்து கத்திக்கிட்டேயிருக்கேன்... நீ பாட்டுக்கு ராங் சைடுலயே போயிட்டு இருக்க?  வாய்யா ஸ்டேஷனுக்கு.”
நான் அந்த இடத்தை விட்டு விலகினேன். என்றாலும் மனதில் எழுந்த சீற்றம் தணியவில்லை.
வெள்ளிக்கிழமை குளித்துத் தெளித்து மாலையில் மீனாட்சி கோவிலுக்கு நடைப்பயணமாகக் கிளம்பினேன்.  இரண்டு தெருகூட தாண்டியிருக்கமாட்டேன். ஒரு பெண் தடுத்து நிறுத்தினாள்.
“வாழ்க்கையின் சாரமும் கிடையாது வாழைக்காய்ச் சாறும் கிடையாது. நீ கடைசிவரை இப்படியேதான் இருக்கப்போகிறாய்.”
“தவறு செய்யாத எனக்கு ஏன் தாயே, இவ்வளவு பெரிய தண்டனை?”  கதறியபடி காலில் விழுந்தேன்.
“பிச்சை எடுப்பது, போக்குவரத்து விதியை மீறுவது தவறுதான். ஆனால் நீ யார் அவர்களை நாட்டாமை செய்ய? தண்டிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உன் மனதில் அவர்கள் மீது ஏன் இத்தனை வெறுப்பு? சக மனிதர்களை வெறுப்பவனுக்கு சக்தியே உபதேசித்தாலும் வாழ்வின் சாரம் புரியாது.”
தலைகுனிந்தேன்.
“சாலை விதிகளை மீறாமல் இருப்பதும் பிச்சையெடுக்காமல் இருப்பதும் உன் சொந்த முயற்சியால் என நினைக்கிறாயா? நான் கொடுத்த அறிவு, செல்வத்தால்  நீ ஒழுங்காக இருக்கிறாய். நான் கண்ணசைத்தால் போதும்! அந்த இளைஞனை விட மோசமாகப் போக்குவரத்து விதிகளை மீறுவாய். அந்தப் பிச்சைக்காரனை விடக் கேவலமாக வாழ்வாய். செய்யட்டுமா?”
அன்னையின் காலில் விழுந்தேன்
“என்னதான் செய்யட்டும், தாயே?”
“ஒரு நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் திருத்திக்கொள்.”
எப்படி திருந்துவது என்று சொல்லாமலேயே மறைந்தாள். வழிகாட்டல் வேண்டும் என்று அம்பிகையையே வேண்டினேன்.  இரவு எதுவும் சாப்பிடவில்லை. துாங்கவும் இல்லை.
மறுநாள் காலை நடைப்பயிற்சி செய்யும்போது பிச்சைக்காரனைப் பார்த்தேன்.
இருபது ரூபாய் கொடுத்தேன் அவனைப் பார்த்துக் கைகூப்பியபடி மனதிற்குள். “பிச்சை எடுப்பது குற்றம்தான். ஆனால் அதற்காக உங்களை வெறுத்திருக்கக்கூடாது.  மன்னித்துவிடுங்கள்.” என்றேன்.
நுாறடிகூட நடந்திருக்க மாட்டேன். தெருவை சுத்தப்படுத்தும் பெண் ஒருத்தி என்னை நிறுத்தினாள்.
“சபாஷ், இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இந்தக் காட்சியையும் பார்.”
ஒரு அனாதை இல்லத்தின் பொறுப்பாளராக இருந்தாள் பார்வதி.  அங்கு பத்து முதல் இருபது வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மட்டும் இருந்தனர். ஒருநாள் இல்லத்தின் வாசலில் அழகான பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் பார்வதிக்கு அன்பு பொங்கியது. எடுத்துக்கொண்ட அவள், அனாதை இல்லத்தை நடத்தும் அறக்கட்டளை அதிகாரிகளுடன் போராடி குழந்தையை இல்லத்தில் சேர்த்தாள். குழந்தைக்கு லட்சுமி என்று பெயரிட்டாள். குழந்தை நன்றாக வளர்ந்தது.  அம்மா என்று பார்வதியை அழைத்தது. படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தது. சக்திக்கு மீறிக் கடன் வாங்கி லட்சுமியைப் படிக்க வைத்தாள் பார்வதி.
ப்ள்ஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாள் லட்சுமி. மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது. நல்ல மனம் படைத்தவர்கள் சிலர் உதவி செய்தனர்.  லட்சுமி மருத்துவப் படிப்பை முடித்தாள். பின் முதுகலைப் பட்டமும் பெற்றாள். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவராகப் பணியாற்ற  தகுதி பெற்றாள் லட்சுமி
“பெரிய ஆஸ்பத்திரில கூப்பிட்டுக்கிருக்காங்கம்மா. எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் கெடைக்கும்மா.  வேலையில சேந்தவுடனே வீடு பாத்து உங்களக் கூட்டிக்கிட்டுப் போயிருவேன். வயசான காலத்துல ராணி மாதிரி வச்சிக் காப்பாத்துவேம்மா.”
பார்வதி மனம் குளிர்ந்தாள்.
ஒரு வாரம் கழித்து அவளது தலையில்  இடி விழுந்தது. லட்சுமிக்கு புத்தி பிசகிவிட்டது என தகவல் வந்தது.  கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடிக்க ஆரம்பித்தாள். கண்டபடி பேசினாள்.  
பார்வதி அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனாள்.  மனச்சிதைவு நோய் இருப்பதாக தெரிவித்தார் மருத்துவர்.  கடனை வாங்கி லட்சுமியை  மனநல மருத்துவமனையில் சேர்த்தாள் பார்வதி. லட்சுமிக்குத் துணையாக தானும் தங்கினாள். வெறிபிடித்தவள் போல இருந்த லட்சுமி, சில சமயம் பார்வதியை நன்கு அடித்துவிடுவாள். ஒரு முறை பார்வதின் முகத்தில் நகத்தால் கீறிவிட்டாள். காயம் ஆறப் பல நாட்கள் ஆனது.  பொறுமையாக பார்வதி தாங்கிக்கொண்டாள். தான் பெறாத  மகளான லட்சுமியின் மீது இன்னும் அதிக அன்பு காட்டினாள்.
“பார்த்தாயல்லவா? அந்தப் பெண் அவ்வளவு செய்தும் வெறுக்காமல் அன்பு காட்டுகிறாளே... நீயும் இருக்கிறாயே?”
“தாயே லட்சுமிக்கு வந்திருப்பது மனச்சிதைவு என்னும் மனநோய்’’
“போக்குவரத்து விதிகளை மீறியவனுக்கு அறிவின்மை, கவனக்குறைவு என்ற நோய். பிச்சைக்காரனுக்கு சோம்பல், முயற்சியின்மை என்ற நோய். தீமைகூட ஒரு வகையில் நோய்தானே! நோயை வெறுக்கலாம். நோயாளியை வெறுக்கக் கூடாது. புரிந்ததா?”
தலை குனிந்தேன்.
“இப்போது உன் மனதில் அன்பு இருக்கிறது. வாழ்க்கையின் சாரமான தத்துவத்தைக் கேட்கும் தகுதி வந்துவிட்டது.  சொல்கிறேன், கேள்.”
“வேண்டாம் தாயே! கொத்தடிமைக்கு எதற்குத் தாயே தத்துவமும் தக்காளியும்? அதற்குப் பதிலாக வேறு வரம் கேட்கலாமா?”
“தாராளமாக”
“மனச்சிதைவு நோயால் தவித்துக்கொண்டிருக்கும் லட்சுமி குணமடைந்து நல்ல மருத்துவராக மிளிர வேண்டும். இதை அவளுக்காகச் செய்யாவிட்டாலும் எனக்காகச் செய்யாவிட்டாலும் அவள் மீது அன்பைக் கொட்டி வளர்த்த பார்வதிக்காகச் செய்யுங்கள்.”
அன்னை முறுவலித்தாள்.
“பலே ஆளப்பா... தத்துவத்திற்குப் பதிலாக வரத்தை வாங்கிக்கொண்டு கடைசியில் தத்துவத்தையும் பெற்று விட்டாயே.”
“புரியவில்லை தாயே!”
“அடுத்தவர் மீது அன்பு காட்டுவதுதான் வாழ்க்கையின் சாரம். அடுத்தவர் துன்பத்தைத் துடைக்க முயல்வதுதான் ஞானத்தின் எல்லை. அந்தப் பெண் குணமாக வேண்டும் என நீ கேட்ட ஒரே வரத்தில் எல்லாம் அடங்கியிருக்கிறதப்பா.“
கண்ணீர்த் திரையினுாடே துப்புரவுத் தொழிலாளி வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரியைப் பார்க்க முயன்றேன். அவள் அங்கே இருந்தால்தானே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar