Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கபால மாலை காளி
 
பக்தி கதைகள்
கபால மாலை காளி

ஆண்டாள் பிரியதர்ஷினி

அவள் மாயாஜாலக்காரி எல்லாம் செய்ய வல்ல மந்திரக்காரி. அழகியும் அவளே. அழகின்மையும் அவளே. கோரியும் அவளே. அகோரியும் அவளே. ஞானமில்லாத நாம் வெறுத்து நகர்த்தும் கறுப்பியும் அவளே. உயிர்ப்பலி ஏற்பவளும் அவளே. உயிர்க்களி சேர்ப்பவளும் அவளே.
இதெல்லாம் புரிந்தே மகாகவி பாரதி காளி உபாசகராக இருந்தார். உன்னதங்களை காளியிடம் வேண்டியதோடு அவளிடம் ஞானப்போர் புரிந்தார்.
‘தேடிச்சோறு நிதம் தின்று தினம் சின்னஞ்சிறு கதைகள் பேசி, வேடிக்கை மனிதர் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?’  – இப்படி வார்த்தை சுழற்றிய வீரம் பாரதியாருக்கே உரியது. காளியிடம் வரம் கேட்கும் பாங்கு வியப்பானது. ஆன்மிகத்தில் உலகியலைக் கலந்து காட்டுகிறார். காளி, சாமுண்டி, ஓங்காரத்தலைவி, என் ராணி என முக்தி நிலையின் உச்சத்தில் குழந்தையாகக் கொஞ்சுகிறார்.
கல்லை வயிரமணி ஆக்கல்
செம்பினைக் கட்டித் தங்கமெனச் செய்தல்,
புல்லை நெல்லெனப் புரிதல்,
பன்றியைச் சிங்கமாக்கல்,
மண்ணை இனிப்பாக்கல்
போன்ற மாயாஜாலங்களையும் செய்யும் வல்லமை பெற சக்தியிடம் தஞ்சமடைகிறார்.
 குழந்தை செல்லமாகவும் இருக்கும் அவளே வல்லமையின் வெள்ளமாகவும் இருக்கிறாளே எப்படி என்ற எண்ணம் முன்பு  இருந்தது. ஆனால் வாழ்வில் அனுபவமும், துரோகங்களும், சூழ்ச்சிகளும், கிரீடங்களும், கத்திக்குத்துகளும் ஏற்பட்ட பின் சாத்தியம் என்பதை நிரூபணம் ஆக்கின.  
கொல்கத்தா காளி தரிசனம் பெற்ற பின்பு –  சக்தியின் விஸ்வரூபம் பிரமிப்பு தருகிறது. அன்பில் கொஞ்சும் சக்தி அவள். ரவுத்திரத்தில் விஞ்சும் சக்தி அவள். சம்சாரமும் சக்தி. சம்ஹாரமும் சக்தி. பாசவலை வீச்சு அவள். நாசவாள் வீச்சும் அவள். ஞாலமும் அவள். ஓலமும் அவள். முக்தியும் அவள். துக்கம் அறுக்கும் சக்தியும் அவள்.
ரபீந்திர சங்கீத் என்றும்,  குருதேவ் என்றும்,  ரபீந்திர நாத் தாகூரைக் கொண்டாடும் பூமி மேற்குவங்கம்.
 ராமகிருஷ்ண பரம ஹம்ஸர், அன்னை சாரதா தேவி, சகோதரி நிவேதிதா, சுவாமி விவேகானந்தர் என மனசுக்கு வெளிச்சம் தரும் ஞானபூமி. ரஸகுல்லாவும், மென் கைத்தறியும், கைவினைப் பொருட்களுமாக ரசனையின் முகவரி தரும் செல்வபூமி  கொல்கத்தா. இந்த புண்ணிய பூமியில் கிடைத்த பேரமுதமாக காளி இருக்கிறாள்.
திரிசூலி, நீலி, பயங்கரி, வாக்தேவி, சைலபுத்ரி, காளாராத்திரி, சண்டிகந்தா, கொற்றவை, மாகாளி, பைரவி, பைங்குன்ற தேவி என ஆயிரம் ஆயிரம் பெயருடன் விளங்கும் அம்மை மாகாளி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறாள்.  கொல்கத்தாவின் எல்லாச் சாலைகளும் ‘காளி கட்டா’  நோக்கியே நகர்கின்றன. ஆறுகள், நதிகள், நீர்நிலைகள் எல்லாமே மாகாளியின் பாதம் பணிவதற்காகவே பாய்கின்றன.  தாயின் திருமேனி தீண்டி புனிதம் பெறும் ஆசையில் காற்றும் தோய்கிறது.
கன்னங் கரேலென்று அடர்த்தியான கருமையில் காட்சியளிக்கும் அவளைத் தரிசிக்கும் போது சப்த நாடியும் ஒடுங்குகிறது.  செக்கச் செவேல் என மேலாடையின் தரிசனம், நம் ரத்த நாளங்களைச் சுத்திகரிக்கும் கரிசனம். அவளது நீண்ட நாக்கு நம் வார்த்தைகளின் பொங்கு மாங்கடல். அவளது  நர்த்தனம் – தீமை, அசூயை, பொறாமை எல்லா அரக்கர்களையும் பெருவிரலால் நசுக்கிய விஸ்வரூபம்.
மொழிகள் வேறு, சம்பிரதாயங்கள் வேறு. சடங்குகள் வேறு. என்றாலும் அம்மா என்பது உலகம் முழுக்க ஒரே உணர்வு.  உயிர்க்கெல்லாம் ஒரே உணர்வு. காளி கோயிலில் இந்த பேருண்மையை உணர்ந்தேன். காளிமா என்றதும்... உடல், உள்ளம் எல்லாமே கரைந்து அம்மையிடம் உறைந்து நின்றேன்.
கண் சிமிட்டினாலும் அவள் காட்சி தவறி விடுமே என்னும் பதைபதைப்பு ஏற்பட்டது. தீப ஒளியில் செக்கச் செவேலென்று கண்களும், செந்தழல் போல சிவந்த நாக்கும், கறுப்பு மின்னலாக காளியும் தரிசிக்க தரிசிக்க தன்நிலை மறந்தேன். எத்தனை ஜென்மங்களாக நான் உருப்பெற்றேனோ அத்தனை ஜென்மமும் காலடியின் கீழாகக் கரைந்தோடுவதை உணர்ந்தேன். பாவங்கள் கரைந்தன. சோகங்கள் கரைந்தன. கோபம் கரைந்து மனம் பஞ்சு போலானது.
போதும் தாயே... இன்னும் நுாறு ஜென்மத்துக்கும் இந்தப் பரவசம் போதும் தாயே...
 காளீ எனக் கதறினேன். தலையோடு காலாய் உதறினேன். அவளின் தீட்சண்யம் என்னைத் துளைத்தது. அவளின் தீக்கனல் என்னை எரித்தது. சாம்பலானதாக உணர்ந்தேன். நெருப்புப் பூவாக மலர்ந்தேன்.
சட்டென அம்மையின் தணல் முகம் மறைந்தது. தாய்மை பொங்கும் பூமுகமாகத் தெரிந்தாள்.
‘‘என் கழுத்தில் கபால மாலை ஏன் என்று புரிகிறதா?’’ கேட்டாள். ஆமாம் என்று தலையசைத்தேன்.
‘‘என் குழந்தைகளிடம் குடியிருக்கும் அரக்கர்களை அழித்து வெற்றி மாலையாக்கிக் கொள்வேன். உங்களின் காமம், குரோதம், வெறுப்பு, பொறாமை, ஆங்காரம், துரோகம், சதி, விதி எல்லாம் என் கழுத்தில் கபால மாலை மகளே.. அம்மை சிரித்த சிரிப்பால் பரவசத்தில் ஆழ்ந்தேன்.
‘உன் அடுத்த கேள்வியும் எனக்குத் தெரியும் மகளே... கருவறை சுமக்கும் பராசக்திக்கு ஏன் இத்தனை எரிமலை ஆங்காரம்? இத்தனைக் கருமை ஓங்காரம்? நானே உயிர்ப்பின் கருவறை. நானே இருப்பின் உயிர் அறை... நானே ஜென்ம இறப்பின் கல்லறை.. இதற்காகத்தான் குண்டலினி, நெருப்பு, கபாலம் மூன்றுமாக  இருக்கிறேன்’’
அந்தக் கருவறையின் உத்திரம் பிளந்து விஸ்வரூபம் காட்டினாள். ‘‘காடெல்லாம் விறகான சேதி’’ என்ற பாரதியின் வரியாக என்னை உணர்ந்தேன்.’’ தவத்தினை எளிதாகப் புரிந்தாள். அவத்தினை அழித்தாள். அறிவினை விதைத்தாள் ஆனந்த நடனமிட்டாள்..’’  பாரதியாரின் கவிதை முழுக்கக் காளியின் தரிசனம் தெரிந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar