Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இருளும் ஒளியும்!
 
பக்தி கதைகள்
இருளும் ஒளியும்!

“உங்களை கடவுளாகப் பார்த்துச் சிலிர்த்திருக்கிறேன்.  உங்கள் தாயன்பில் என்னையே தொலைத்திருக்கிறேன். இன்று உங்களை என் ஞானகுருவாகப் பார்க்கவேண்டும் என்று ஆசை தாயே!”
பச்சைப்புடவைக்காரி ஒன்றும் சொல்லாமல்  என்னை இருள் சூழ்ந்த ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
“இந்த இருள் போக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?”
“இங்கே ஒளியைக் கொண்டு வரவேண்டும்.”
“இந்த இடத்தில் ஆயிரம் வருடங்களாக இருள் இருக்கிறது. ஒளி வந்தால் இருள் உடனே போய்விடுமா இல்லை நீண்டநாள் குடியிருப்பவனைப் போல் காலி செய்ய அவகாசம் கேட்குமா?”
“ஆயிரம் ஆண்டுகள் என்ன, ஆயிரம் கோடி ஆண்டுகளாக இங்கே இருள் இருந்தாலும் ஒளி வந்த மறு நொடியே இருள் காணாமல் போகும்.”
“இதுதான் கர்மக்கணக்கின் நுட்பம். அங்கே நடப்பதைப் பார். இந்தப் பெண் முற்பிறவிகளில் பல பாவங்கள் செய்திருக்கிறாள். துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இன்னும் பத்து பிறவிகள் இவள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் கர்மக்கணக்கு என்னும் இருளில் அன்பின் ஒளி விழுந்ததும் என்ன நடக்கிறது என்று பார்.’’
கவுரியின் பெற்றோர் பரம ஏழைகள். குடிகாரனான அவளது தந்தை எவளையோ இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான். கவுரியின் தாய் வீட்டுவேலை செய்து மகளைப் படிக்க வைத்தாள். பள்ளிப்படிப்பு முடிந்ததும் கவுரியும் வீட்டு வேலைகளுக்குப் போக ஆரம்பித்தாள். வறுமையின் காரணமாக செல்வந்தர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள்.
அவளது கணவர் அவளைவிட இருபத்தி ஐந்து வயது மூத்தவர். ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரு குழந்தைகள் பிறந்தனர். பணத்துக்குக் கஷ்டம் இல்லையே தவிர கவுரியின் வாழ்வில் எந்த இன்பமும் இல்லை. மூத்த தாரத்துப் பிள்ளைகள் பெரியவர்களானவுடன் கவுரியை அவமதித்தனர். வீட்டு வேலைகள் எல்லாம் அவள் தலையில்தான் விழுந்தன.
கவுரியின் கணவருக்கு அறுபது வயதாகும்போது நோய்வாய்ப்பட்டார். நடமாட முடியவில்லை. மூத்த தாரத்துப் பிள்ளைகள் தங்களின் தந்தையையும், கவுரியையும் வீட்டைவிட்டுத் துரத்தினர்.
அந்த நிலையிலும் மனம் கோணாமல் கணவருக்குப் பணிவிடை செய்தாள் கவுரி.  ஒருநாள் திடீரென்று கவுரியின் கணவர் இறந்துவிட்டார். கேள்விப்பட்ட மூத்த தாரத்து பிள்ளைகள் இரவோடு இரவாக தந்தையின் பிணத்தை எடுத்துக்கொண்டு போனார்கள்.  ஈமச்சடங்குகளை விமரிசையாக நடத்தினர். கவுரியையும், அவளது குழந்தைகளையும் இறந்தவரின் உடலைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை.
ஒரு மாதம் சென்றபின் சொத்தெல்லாம் தங்களுக்குத்தான் சேரவேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.  
மூத்த தாரத்துப் பிள்ளைகள் வழக்கறிஞர்கள், தணிக்கையாளர்களைச் சேர்த்துக்கொண்டு வலுவான கூட்டணி அமைத்துக்கொண்டனர். தந்தையின் சொத்தில் ஒரு பைசாகூட தருவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். தங்கள் தந்தைக்கும், கவுரிக்கும் நடந்த திருமணம் செல்லாது என்று வழக்கு தொடுத்தனர். நடுத்தெருவிற்கு வந்துவிட்டாள் கவுரி.
இந்த நிலையில் வெளிநாடு போயிருந்த அவர்களின் குடும்ப வழக்கறிஞர் திரும்பி வந்தார். நடந்ததை அறிந்து மூத்த தாரத்து குடும்பத்தையும், கவுரியையும் அலுவலகத்திற்கு வரவழைத்தார். கவுரியின் கணவர் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு எழுதி பதிவு செய்த உயிலை படித்துக்காட்டினார்.
உயிலின் சாராம்சம் இதுதான்.
‘என் மூத்த தாரத்து பிள்ளைகள் என்னைக் கடைசிக் காலத்தில் சரிவர கவனிக்கவில்லை. அவர்களுக்கு நான் சம்பாதித்த சொத்து வேண்டும். ஆனால் நான் தேவையில்லை. அந்தச் சமயத்தில் என்னை அன்புடன் பராமரித்த என் இரண்டாவது மனைவி கவுரிக்கும் அவளுக்குப் பிறந்த என் குழந்தைகளுக்கும் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைக்கிறேன்’
சென்னையில் வீடுகள், சேலத்தில் வர்த்தக நிறுவனங்கள், பெங்களூரில் வணிக வளாகங்கள், வங்கியில் ரொக்கப்பணம், லாக்கரில் நகை – எப்படியும் இருநூறு கோடி ரூபாய்க்குக் குறையாமல் இருக்கும் சொத்துப்பட்டியலையும் படித்தார் வழக்கறிஞர்.
எல்லோரும் திகைப்புடன் அமர்ந்திருந்தனர்.  நானும்தான். பச்சைப்புடவைக்காரி பேசினாள்.
“இன்னும் பத்து பிறவிகளுக்கு இதேபோல் துன்பப்படப்போகிறாளா இல்லை இந்தப் பிறவியின் முடிவில் இவள் என்னுடன் ஒன்றிவிடப் போகிறாளா என்பது இப்போது இவள் பேசும் வார்த்தைகளில்தான் இருக்கிறது. இவள் கையில் அன்பென்னும் ஒளிவிளக்கு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு தன் கர்ம இருளை இவளால் விரட்டமுடிகிறதா என்று பார்ப்போம்.”
காட்சி தொடர்ந்தது. கவுரி பேச ஆரம்பித்தாள்.
“வக்கீல் ஐயா, எங்க வீட்டுக்காரரு இப்படி உயில் எழுதி வைக்கப்போறாருன்னு எனக்கு சத்தியமா தெரியாதுங்க. தெரிஞ்சிருந்தா அவர் கால்ல விழுந்தாவது தடுத்திருப்பேன். கடைசி காலத்துல ஏதோ ஒரு கோபத்துல அவர் இப்படி செஞ்சிட்டாருங்க. மொத்த சொத்தையும் மதிப்பிட்டு அதைச் சரிபாதியா பிரிச்சி ஒரு பாதிய அவங்ககிட்ட கொடுத்திருங்க. இன்னொரு பாதி மட்டும் எனக்குப் போதும்ங்க.”
“நான் அப்படிச் செய்ய முடியாதும்மா. இந்த உயில்படி மொத்தச் சொத்தையும் உன் பேருக்கு மாத்திடறேன். நீ பாதி சொத்தை இவங்களுக்குத் தான செட்டில்மெண்டா எழுதி வச்சிரும்மா. நீயும் உன் குழந்தைகளும் ஆயிரம் வருஷத்திற்கு நல்லா இருக்கணும்மா. இந்தச் சொத்து வெறும்  இருநுாறு கோடி தான். ஆனா உன் மனசு இருக்கே...அது இருபதாயிரம் கோடி பெறும் தாயி. பச்சைப்புடவைக்காரி உன்னை என்னிக்கும் கைவிடமாட்டாம்மா.”
சிலையாக அமர்ந்திருந்த மூத்த தாரத்து பிள்ளைகளைப் பார்த்து உறுமினார் அந்த முதிய வழக்கறிஞர்.
“பாத்தீங்களாடா உங்க சின்னம்மா செஞ்ச காரியத்தை? அவளுக்கு சொத்துல சல்லி காசுகூடத் தரமாட்டோம்னு பிடிவாதம் பிடிச்சீங்க. அதுக்காக உங்க அப்பாவுக்கும், சின்னம்மாவுக்கும் நடுவுல இருந்த புனிதமான திருமண பந்தத்தைக் கொச்சைப்படுத்தக் கோர்ட்டுக்குப் போனீங்க. பிராதுல என்ன சொல்லியிருக்கீங்க தெரியுமா? கவுரி எங்கப்பாவோட பொண்டாட்டி கிடையாது. வெறும் வப்பாட்டிதான்னு சொல்லியிருக்கீங்க.
“அவ நெனச்சிருந்தா மொத்த சொத்தையும் எடுத்துக்கிட்டு உங்களத் தெருவுல நிக்க வச்சிருக்கலாம். ஆனா அவ அதைச் செய்யல. உங்களுக்கு வரப்போற சொத்து உங்கப்பா சொத்து இல்லைடா. உங்க சின்னம்மா போட்ட பிச்சை.  இனிமே நீங்க எங்கேயோ ஒரு மூலையில இருக்கற உங்க குலதெய்வத்தக் கும்பிடப் போகவேண்டாம்டா. இதோ இந்த மகாலட்சுமியக் கும்பிட்டாப் போதும். நல்லா இருப்பீங்க..”
“கவுரி கடைத்தேறிவிட்டாள். தன்னைக் காயப்படுத்தியவர்களிடமும் காட்டிய அன்பும் நியாய உணர்வும் பத்து பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய கர்மக்கணக்கை  நொடியில் தீர்த்துவிட்டது.”
அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.
“உன் கர்மக்கணக்கு இன்னும் மோசமாக இருக்கிறதேயப்பா! நீ இன்னும் நுாறு பிறவிகள் எடுத்து அல்லல்படவேண்டும் போலிருக்கிறதே! என்ன செய்யப் போகிறாய்?”
“நுாறு பிறவிகள் என்ன தாயே, ஆயிரம் பிறவிகள் அல்லல்பட்டுவிட்டுப் போகிறேன். எந்தப் பிறவியிலும் எந்த நிலையிலும் நீங்கள் என் மனதைவிட்டு அகலாமல் இருங்கள். நான் உங்கள் கொத்தடிமை என்ற நினைவு  மனதைவிட்டு அகலாமல் இருக்கும் வரத்தைக் கொடுங்கள்.”
“தந்தேன்.”
“கவுரியாவது நுாறு கோடி ரூபாய் சொத்தைக் கொடுத்துத்தான் கடைத்தேற முடிந்தது. என்னைப்  பாருங்கள் காலணாகூடச் செலவு செய்யாமல் கடைத்தேறிவிட்டேன்.”
“என்ன உளறுகிறாய்?”
“நீங்கள் எப்போதும் என்னுள் இருக்கும் வரத்தை நீங்களே கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் என்றால் என்ன அன்பு என்றால் என்ன? இரண்டும் ஒன்று தானே. என்னிடம் அன்பின் ஒளி எப்போதும் இருக்கும்போது கர்மக்கணக்கு என்ற இருள்  என்னை எப்படி அண்ட முடியும், தாயே?”
அன்னை சிரிக்கத் தொடங்கினாள். அவள் அன்பை நினைத்து நான் அழத் தொடங்கினேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar