Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தானாயகனின் வீரம்
 
பக்தி கதைகள்
தானாயகனின் வீரம்

சிவந்த விழிகளுடன் மிலேச்ச அதிகாரியை பார்த்தான் தானாயகன்!
‘‘என்ன முறைக்கிறாய்.. யார் நீ? உறங்கும் வேளையில் இங்கென்ன சலசலப்பு...’’
– அதிகாரியின் கோபம் கொப்பளித்த கேள்விக்கு வைணவர் பதில் கூறலானார்.
‘‘நாங்கள் இன்றிரவு உறங்க மாட்டோம். உறங்காமல் விழித்திருந்து விரதம் இருப்பது காலகாலமாக எம் வழக்கம்..’’
‘‘காரணம்?’’
‘‘இன்று! எங்களுக்கு புனிதமான ஒருநாள். வைகுண்ட ஏகாதசி என்னும் தெய்வீகத் திருநாள்!’’
‘‘எப்பொழுதும் எதாவது ஒரு திருநாள்.. அதற்காக விழா... வேறு வேலையே இல்லையா உங்களுக்கு?’’
– அந்த அதிகாரியின் எள்ளல் பேச்சு தானாயகனுக்கு ஊசியால் குத்துவது போல் இருந்தது.
‘‘அதைக் கேட்க நீ யார்... இந்த இரவில் நீ மட்டும் உறங்காமல் ஊரைச் சுற்றுவாயா?’’  என்று கேட்கலானான்.
‘‘எங்களைப் பார்த்தால் தெரியவில்லையா? நாங்கள் டெல்லி பாதுஷாவின் பிரதிநிதிகள். இந்த காஞ்சியை வசப்படுத்த வந்திருக்கிறோம்..’’
‘‘நீங்கள் நான்கு பேர் காஞ்சியை வசப்படுத்தப் போகிறீர்களா...வேடிக்கை தான்!’’
‘‘நாங்கள் நான்கு பேரல்ல.. நாலாயிரம் பேர்! எங்கள் படை செஞ்சி வழியாக வந்து கொண்டிருக்கிறது.  நாளை அது வந்து விடும். எல்லா சிற்றரசர்களும் பாதுஷாவிற்கு கப்பம் கட்ட ஒப்புக் கொண்டு விட்டனர்.
இந்த காஞ்சியை விஜயநகரத்து அரசன் நாசிங்கராயன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிந்தே வந்திருக்கிறோம். நாளை இதுவும் டெல்லி சுல்தான் வசப்பட்டு அகண்ட எங்களின் சாம்ராஜ்யம் இந்த தெற்கிலும் உதயமாகிவிடும்!’’
‘‘அது கனவிலும் நடக்காது. இந்த தேசம் வெறும் பொன்னாலும் பொருளாலும் ஆனதோ அல்ல.. இது அருள் நிரம்பிய தேசம்... அதை மனதில் கொள்...’’
– தானாயகன் தொடை தட்டாத குறையாகப் பேசினான்.
‘‘என்ன ஒரு திமிர் உனக்கு.. உன் நாக்கை அறுத்து விட்டு மறுவேலை பார்க்கிறோம்’’ – என்று வாளை உருவிக் கொண்டு குதிரையில் இருந்து கீழே குதித்தான் ஒரு மிலேச்ச வீரன்.
தாயம் விளையாடிய வைணவர்கள் விக்கித்துப் போயினர்.
தானாயகனும் அசரவில்லை. தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கட்டாரியை வெளியே எடுத்து அதை கையில் லாவகமாய் பற்றிக் கொண்டான். அப்படியே தலைப்பாகையையும் அவிழ்த்தவன், அந்த நான்கு பேர் மீது பாயத் தயாரானான்.
அவர்கள் வாளை வீசும் முன், தன் கட்டாரியை தன் நாவை அறுக்க வந்தவனின் கழுத்தை நோக்கி வீசியதில் அது அவன் கழுத்தைத் தைத்ததோடு அவனையும் சுருண்டு விழச் செய்தது. அதற்குள் மற்றொரு கட்டாரியை முதுகுப்புறம் இருந்து எடுத்து இன்னொருவர் மேல் வீசவும் அவன் குதிரை இருந்தபடியே கீழே சரிந்து விழுந்தான். அதைக் கண்ட மற்ற இருவரும் தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடித்தனர். .
கீழே விழுந்த இருவரும் தட்டுத்தடுமாறி குதிரை மீதேறி தப்பிக்க பார்த்தனர்.
எல்லாம் சில நிமிட நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. தானாயகன் முகத்தில் ஒரு தனித்த கம்பீரப் புன்னகை. அதை வைணவரும் கவனித்தார்.
‘‘தாங்கள் தானாயகத் தளபதி தானே?’’ என்று சரியாகவும் கேட்டார்.
‘‘என்னை உங்களுக்கு தெரிந்திருக்கிறதே.. பலே..’’ என்று தானாயகனும் கூறினான்.
‘‘இது என் வேடம்?’’
‘‘காவலுக்கு காவல்.. நகர சோதனைக்கு சோதனை...! ராஜ்யாதிகாரிகள் வரையில் இந்த மாறுவேடம் ஒரு சாதாரண விஷயம் தானே?’’
‘‘எல்லாம் சரி... அந்த மிலேச்சர்களை இப்படிச் சீண்டி விட்டீர்களே... பெரும் படையோடு அவர்கள் வந்து கொண்டிருப்பதாக சொன்னதை கேட்டீர்கள் தானே?’’
‘‘ஏன் கேட்காமல்...? அதற்காக அவர்கள் பேசுவதைக் கேட்க முடியுமா? சரியான வக்கரிப்பு...’’
‘‘இது எப்போது முடிவுக்கு வரும்? செஞ்சி வழியாக வரும் போது நாயக்கர்கள் பலமிழந்து அடிமைகளாகி விட்டார்களா?’’
‘‘தஞ்சையில் ரகுநாத நாயக்கர் பலவீனமானவர் அல்ல. மதுரையில் பாண்டியர் கொல்லங் கொண்டாரும் இளைத்தவரல்ல. அங்கே இவர்கள் ஏற்கனவே அடித்து விரட்டப்பட்டவர்கள். அவ்வப்போது ஆழம் பார்க்க இப்படி சிலர் வந்து செல்கிறார்கள். மற்றபடி இவர்களுக்கு பயப்படுவது நம்மை பலவீனமாக்கி விடும். விஜயநகரப் பேரரசின் கருணையும், ஆதரவும் நமக்கிருக்கும் வரை இந்த காஞ்சியின் மீது எவனும் ஆதிக்கம் செலுத்த முடியாது. நானும் அதை அனுமதிக்க மாட்டேன்.’’
– தானாயகன் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசினான்.
‘‘உங்கள் வீரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று கண்ணாரக் கண்டு விட்டோம். இந்த ஏகாதசி இரவை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம்...’’
‘‘நானும் பறக்க மாட்டேன்!’’
‘‘அடிபட்டுச் சென்றவர்கள் சும்மா இருப்பார்களா?’’
‘‘நிச்சயம் என்னைக் கொல்ல திட்டமிடுவார்கள். ஏனென்றால் நானிருக்கும் வரை அவர்களால் இங்கே எதுவும் செய்ய முடியாது. எனக்கு சுற்று வட்டாரத்தில் இருக்கும் மிட்டா மிராசுகள் முதல் ஜமீன்தார் வரை அனைவரும் பக்கபலமாக உள்ளனர். அதிலும் உடையார் பாளையம் ஜமீன்தார் தன் வசமிருக்கும் காவல் படையினர் அவ்வளவு பேரையும் காஞ்சிக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் தெருத் தெருவாக சுற்றி வந்தபடி இருக்கின்றனர்..’’
‘‘எல்லாம் சரி.. மிலேச்ச படை ஆயிரமாயிரம் பேர்களுடன் வந்தால் எப்படி சமாளிப்பீர்கள்?’’
‘‘அப்படி அவர்கள் வந்தால் பெரும் ஏமாற்றத்தையே சந்திப்பார்கள்...’’
‘‘எப்படி சொல்கிறீர்கள்?’’
‘‘அவர்கள் முதல் இலக்கு ஆலயங்களே...! திருவரங்கப் பெருமானை அழிக்கவும், மதுரையில் மீனாட்சி தேவியின் சிலையை உடைக்கவும் சொக்கலிங்கத்தையே துாள் துாளாக்கவும் துணிந்தவர்கள் தானே அவர்கள். ஆனால் முடிவு என்னாயிற்று?
நாம் நம் உயிரைக் கொடுத்து அவைகளை எப்படிக் காப்பாற்றினோமோ அது போல் இங்கேயும் நடக்கும்..’’
‘‘இந்த இரவே அவன் நம்மை காத்தருள்வதற்காக உண்டான இரவு தான். மந்திரங்களில் காயத்ரியும் விரதங்களில் ஏகாதசியும் மகத்தானது என்பார்கள். அப்படிப்பட்ட இந்த ஏகாதசி இரவில் நாம் அவனைக் காப்பது பற்றி பேசுவதே வினோதமாக உள்ளது... இதைத்தான் கலியின் தன்மை என்றனரோ?’’
‘‘இது அவன் நிகழ்த்தும் நாடகம். நமக்கான சோதனை. இதில் நம் பக்தியால் நாம் அவனை வெற்றி கொள்வோம்.’’
– தானாயகன் பேசிவிட்டு புறப்படலானான். தாயம் விளையாடிய இரு வைணவர்களும் பெருமூச்சுடன் திரும்பிச் சென்று அமர்ந்தனர்.
அதுவரை பேசாமல் இருந்த வைணவர் இப்போது பேசலானார்.
‘‘ ராமானுஜரும், வேதாந்த தேசிகரும் இருந்தவரை நம் காஞ்சியை தங்கள் பக்திச் சிரத்தையாய் எப்படியோ காப்பாற்றி விட்டனர். இப்போது அது போல் ஒரு புண்ணிய புருஷர் இல்லாததால் நமக்கு திரும்ப சோதனை ஏற்பட்டுள்ளதோ?’’
‘‘அப்படியானால் நம் பக்தியால் ஒரு பயனுமில்லை என்பது உமது கருத்தா?’’
‘‘நம் சாமான்யர்கள் தானே....?’’
‘‘நம்மினும் சாமான்யமானது கஜேந்திரன் என்னும் யானை. அதன் அழைப்புக்கு எம்பெருமான் ஓடி வரவில்லையா?’’
‘‘இது என்ன கேள்வி... அப்படி ஓடிவருபவனாக இருந்திருந்தால் திருவரங்கப் பெருமாள் தன் திருச்சன்னதி விட்டு நாடெங்கும் சுற்றி வந்திருப்பானா?’’
‘‘அப்படி சுற்றி வந்ததால் அவன் அமர்ந்த இடமெல்லாம் இன்று தலமாகி விட்டதை மறந்து விட்டீரா?’’
‘‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’’
‘‘ஒரு தலத்தை இல்லாமல் செய்ய வந்ததற்கு தண்டனையாக பல தலங்கள் உண்டானதை எண்ணிப் பாருங்கள். வரலாறு அந்த இடங்களை வரும் நாளில் பக்தியோடு நினைவு கூர்ந்திடுமே?’’
‘‘உண்மைதான்... அப்படியானால் காஞ்சியிலும் எம்பெருமான் பொருட்டு அப்படி நிகழ்ந்திடுமா?’’
‘‘அதை அந்த வரதன் மட்டுமே அறிவான்...’’
– என்று வைணவர் கூறவும், அருகில் இருக்கும் அத்திகிரி ஆலயத்தின் ராக்கால பூஜைக்கான மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar