Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நடை சாத்தும் நேரம்
 
பக்தி கதைகள்
நடை சாத்தும் நேரம்


மீனாட்சி கோயிலில்  பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்து பச்சைப்புடவைக்காரியின் அன்பை நினைத்தபடி மௌனமாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தேன். மனதில் இனம் புரியாத வெறுமை. ‘இதுதான் கடைசி சந்திப்பு, இனிமேல் உன்னைப் பார்க்க வர மாட்டேன்’ என பச்சைப்புடவைக்காரி சொல்லிவிடுவாளோ?
சற்று தள்ளி அமர்ந்திருந்த ஒரு குடும்பத்தைத் தவிர அங்கே வேறு யாருமில்லை. தாய், தந்தை, இரண்டு மகன்கள் என அளவான குடும்பம் அது. என்னையும் அறியாமல் அவர்களை வெறித்துப்பார்த்தபடி இருந்தேன். குடும்பத் தலைவி என்னை நோக்கிக் கோபமாக வந்தாள். நடுங்கிவிட்டேன்.
“எங்களையே ஏன் முறைத்து பார்க்கிறாய்?” –  என மிரட்டினாள்.
அவளைப் பார்த்து  கைகூப்பினேன்.
“என்ன பயந்து விட்டாயா?”
“தாயே! நீங்களா?” – காலில் விழுந்து வணங்கினேன்.
“ஆமாம். நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.”
“உங்கள் பிரிவைத் தாங்கும் சக்தி இல்லையம்மா!”
“அதையும் நானே தருகிறேன்.  உனக்கு என்ன வேண்டுமோ கேள். அடுத்து எப்போது பார்க்கப் போகிறோமோ தெரியாது.”
“மகா மருத்துவச்சியான நீங்கள் என் பிறவி நோய்க்கு மருந்து தர மறுக்கிறீர்களே?”
“ஒரு மடக்கில் முழுங்கக்கூடிய மருந்து இல்லை அது. படிப்படியாகத்தான் பக்குவம் பெற முடியும். அங்கே தெரியும் காட்சியைப் பார்.”
அது ஒரு சிறிய கிராமம். அங்கே  அந்தணர் ஒருவர் அன்றலர்ந்த அரளிப்பூக்களால் துர்க்கையம்மனுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தார்.
“நாற்பது வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.”
“தாயே! இன்னுமா இவருக்கு நீங்கள் அருள்பாலிக்கவில்லை?”
“அவருக்கு  முக்தி அளிக்கப் போகிறேன். இவருக்கு வரும் சோதனையைப் பார்.”
அந்த அந்தணரின் வீட்டிற்குச் சற்றுத் தள்ளி ஒரு குடியானவன் வசித்துவந்தான். அவன்தான் தினமும் அரளிப்பூ  பறித்துக்கொண்டு வருவான். வழக்கமாகக் கேட்கும் கேள்வியை அன்றும் கேட்டான்.
“சாமி! தெனமும் பூஜை செய்யறீங்களே, ஏதாவது பலன் தெரியுதா?”
 மனம் ஒருமித்து பூஜை செய்து வந்ததால் அந்தணரிடம் அபூர்வ சக்திகள் இருந்தன. குடியானவனுக்குப் பின்னால் மரணதேவன் நிற்பதை அவர் பார்த்துவிட்டார். இன்னும் சில நொடிகளில் குடியானவன் இறக்கப் போகிறான். இளம் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் -  இவன் இறந்துவிட்டால் குடும்பம் நடுத்தெருவிற்கு வருமே. தன் சக்தியால் குடியானவனை மயங்கி விழச் செய்தார் அந்தணர்.
பின் மரணதேவனிடம் பேசினார்.
“ஏன் இங்கு வந்தாய்?”
“இவன் வாழ்க்கை மூன்று நிமிடங்களில் முடியப்போகிறது. அதோ அங்கே இருக்கும் பாம்பு கொத்தியதும் இவன் இறப்பான்.”
“அவன் விதியை மாற்ற ஏதாவது வழியிருக்கிறதா?”
“துர்கா தேவிக்கு நாற்பது ஆண்டுகள் அரளிப்பூவால்  பூஜை செய்த பலனை இவனுக்குக் கொடுத்துவிட்டு இவனுக்குப் பதில் நீங்கள் சாகச் சம்மதித்தால் இவனை விட்டுவிடுவேன். பூஜையின் பலனால் உங்களுக்கு இந்திரபதவி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதை உங்களிடம் மறைக்க நான் விரும்பவில்லை.”
அந்தணருக்கு சொந்தம் என்று யாரும் இல்லை. மனைவி இறந்து பல ஆண்டாகி விட்டது. குழந்தைகள் இல்லை. அவருக்கு இந்திரபதவியின் மீது நாட்டமும் இல்லை.
“ஏற்றுக்கொள்கிறேன். இரண்டு நிபந்தனைகளுடன். அவனுக்காக என் உயிரைக் கொடுத்தேன் என எந்தக் காலத்திலும் தெரியக்கூடாது.”
“ஏன்?”
“அவன் மனதில் ஒரு கடன்பட்ட உணர்வு இருக்கும். அது அவனது ஆன்மிக வளர்ச்சிக்கு நல்லதில்லை.”
“அடுத்து?”
“என் அன்னை துர்காதேவியை நினைத்தபடி இங்கே அமர்ந்திருக்கிறேன். அந்த பாம்பு வந்து கொத்தட்டும்.”
“அப்படியே ஆகட்டும்.”
 “தாயே இதுநாள் வரை அரளிப்பூக்களை உங்களுக்குச் சமர்ப்பித்தேன். இன்று என் உயிரையே மலராகச் சமர்ப்பிக்கிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள்.”
பச்சைப்புடவைக்காரி தொடர்ந்து பேசினாள்.
“அவன் செய்த பூஜை அவனுக்கு இந்திரபதவியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் பூஜையின் பலனை சகமனிதனுக்கு விட்டுக்கொடுத்தான் பார், அது அவனுக்குத் தெய்வநிலையைக் கொடுத்துவிட்டது. அவன் என்னுடன் ஒன்றிவிட்டான். அதற்காக நீ ஏனப்பா அழுகிறாய்?”
“அப்படி ஒரு தூய அன்பு வந்தபிறகுதான் உங்களுடன் ஒன்ற முடியும் என்றால்... பயமாக இருக்கிறது, தாயே! இன்னும் எத்தனை ஆயிரம் பிறவிகள் எடுக்க வேண்டுமோ?”
அன்னை தன் கையை என் தலையில் வைத்து மெல்லிய குரலில் பேசினாள்.
“பூமி என்னும் மரத்தில் வந்து அமர்ந்த பறவையாக உன்னை நினைக்கிறாய். எப்போது காலம் முடியும் நான் இருக்கும் சக்தி லோகத்துக்குப் பறந்து வரலாம் என துடிக்கிறாய்’’
நான் தலைகுனிந்தேன்.
“நீ இப்போது இருப்பதும் சக்திலோகம்தான். இருப்பதெல்லாம் நான்தானே. நான் கடல் என்றால் நீ அலை. அலையும் கடல்தானே! உன் மனதில் அன்பு முழுமை பெறும்வரை நீ மீண்டும் மீண்டும் அலையாகப் பிறந்து கரையை மோதிக்கொண்டிருப்பாய். பல பிறவிகள் எடுப்பாய். இன்ப துன்பங்கள் அனுபவிப்பாய். கடலுக்குள் வருவாய். மீண்டும் அலையாக எழுந்து கரையை நோக்கி ஓடுவாய். மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு, மீண்டும் தாயின் வயிற்றில் இருப்பு என ஆதி சங்கரர் சொன்னது இதைத்தான்.
“ஒரு நாள் அந்தணனைப் போல் சக மனிதர்கள்மேல் மட்டற்ற அன்பு வரும். அப்போது கடலின் ஆழத்திற்குள் சென்று அங்கேயே தங்குவாய். அதன்பின் கரைக்குத் திரும்ப மாட்டாய். நடுக்கடலில் அலைகள் இருக்காது. அங்கே ஆழமும் அமைதியும்தான் இருக்கும். அதுதான் என்னுடன் ஒன்றிவிடும் நிலை. அந்த நிலை இயல்பாக வரும்வரை உலகில் அன்பை பற்றிப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இரு.”
“அடுத்து நீங்கள் எப்போது வருவீர்கள் தாயே?”
“பத்து பிறவிகளில் நீ கற்கவேண்டிய பாடங்களை உனக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டேன். அதனால்.. ”
“பத்து பிறவிகளுக்கு என்னைப் பார்க்க வரமாட்டேன் என்று சொல்கிறீர்களா? ஏன் இப்படி ஈவு இரக்கமில்லாமல் பேசுகிறீர்கள்?”
“நான் தொடர்ந்து உன்னைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தால் முக்தி நிலை தாமதமாகும். என்னை உருவமாகப் பார்த்தது போதும். என்னை உருவமற்ற வெளியாக, முழுமையான அன்பாக, அன்பின் சாரமாகப் பார்க்கக் கற்றுக்கொள். அப்போதுதான் நீ என்னுடன் ஒன்ற முடியும்.”
“உங்களைப் பார்க்கமுடியாது என்றால் எனக்கு முக்தி நிலையும் வேண்டாம். முருங்கைக்காயும் வேண்டாம். நான் மீண்டும் மீண்டும் கரையை வந்து மோதும் அலையாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன். எனக்குப் பிறவி நோய் நிரந்தரமாக இருக்கட்டும்.  உங்கள் கொத்தடிமையாக இருக்கும் பேற்றினை மட்டும் கொடுங்கள் போதும்.”
“நீ என் கொத்தடிமைதானே!”
“அதில் என்ன சந்தேகம் தாயே? நீங்கள் நரகத்தில் என்னை வேக வைத்தாலும் அதையும் உங்கள் பிரசாதமாக ஏற்கும் கொத்தடிமை நான்.”
“அப்படியென்றால் அடுத்த பத்து பிறவிகளுக்கு உன்னைப் பார்க்கமாட்டேன் என்று சொன்னால் அதை எதிர்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்.”
வாகீஸ்வரியிடம் பேசி ஜெயிக்க முடியுமா?  வேரறுந்த மரமாக அவள் கால்களில் விழுந்து கதறினேன். சத்தம் கேட்டு அவளது கணவரும் மகன்களும் வந்தனர்.  நிமிர்ந்து பார்த்தவன் அனைவரின் கால்களிலும் விழுந்தேன். அன்னையின் முகத்தில் ஆனந்தச் சிரிப்பு.
“கவலைப்படாமல் போ. நான் சொன்ன விஷயங்களை அசை போட்டுக்கொண்டிரு. விரைவில் சந்திப்போம்.”
அழக்கூடத் தெம்பில்லாமல் அந்தத் தெய்வக் குடும்பத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தேன்.
“சார் நடை சாத்தப்போறோம். கெளம்புங்க.”  கோயில் ஊழியரின் குரல் தொலைவில் கேட்டது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar