Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நல்லப்ப உடையார்
 
பக்தி கதைகள்
நல்லப்ப உடையார்


மணி ஓசை அந்த வைணவரை கைகூப்பி பிரார்த்திக்கச் செய்தது.
‘‘பெருமாளே! பிறவி எனும் பெருங்கடலையே எப்படி நீந்திக் கடப்பது என்று தெரியாதவர்கள் நாங்கள். உன் திருவடிகளை சரணடைந்தால் அதன் பின் பார்த்துக் கொள்வாய் என உன்னை சரணடைந்து கிடக்கிறோம்...
ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் இந்த காஞ்சியிலேயே நீ இருப்பாயா என்கிற ஒரு கேள்வியும் சந்தேகமும் எங்களுக்கு வந்துவிட்டது.
நீ துாணிலும் இருக்கிறாய், துரும்பிலும் இருக்கிறாய்... அது பழுத்த ஞானியற்கு! நாங்களோ பிஞ்சுகள்... எங்கள் வரை துாணிலும் துரும்பிலும் உன்னை காண இயலாக் குருடர்கள் நாங்கள்... அப்படிப்பட்ட எங்களுக்கு உன ஸ்துாலமே எல்லாம். அந்த ஸ்துாலம் எதனாலும் பாழ்பட்டு விடக்கூடாது. எங்களால் உன்னை எந்த அளவு பாதுகாக்க முடியும் என தெரியவில்லை. நீ தான் எங்களுக்குள் புகுந்து எங்களுக்காக உன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.’’
அந்த வைணவர் மனதுக்குள் கரைந்து உருகினார்!
மறுநாள்! கோயில் ஸ்தானீகரான யதிராஜபட்டர் தெருவில் நடந்தபடி இருந்தார். பொழுது விடியும் போதே ஒரு பதட்டம் ஊரில் தெரிந்தது. கோயிலுக்குச் சென்றபோது உடையார் பாளைய நல்லப்ப உடையாரின் காவல் வீரர்கள் கோயிலைச் சுற்றி வட்டம் கட்டி நின்றிருந்தனர்.
அரியலுாருக்கு அருகில் இருக்கிறது உடையார் பாளையம்! இதன் ஜமீன்தார்தான் ‘காலாக்கி தோழ உடையார்’ என்னும் நல்லப்ப உடையார்! இவர் தன் உடையார் பாளையத்தையே இன்னொரு காஞ்சி என்பவர்!
உடையார் பாளையத்தை தொட்டு வேடிக்கை பழமொழிகள் சில உண்டு. அதில் ஒன்று ‘‘உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் உடையார் பாளையத்தில் உடும்பு பிடிக்கப் போனான்’’ என்பதாகும்.
உடையார் பாளையம் வீரத்துக்கு பேர்பெற்ற பூமி. விஸ்தீரணமான அரண்மனை – அரைபனை உயர மதில் சுவர், மதிலை வீதிகள் என்று சேர, சோழ, பாண்டியர்களின் வாழ்வை நினைவு படுத்தும் கம்பீரம் கொண்ட ஊர்.
உடையாருக்கு சைவம், வைணவம் இரண்டும் இருகண்கள்! இதனால் ஒருபுறம் சிவன் கோயில், இன்னொருபுறம் பெருமாளுக்கான கோயில். இக்கோயிலில் பிரசன்ன வெங்கடேசனாக எம்பெருமான் சேவை சாதிக்கிறான்.
ஜமீன்தாராக இருந்த போதிலும் சக்கரவர்த்தி போன்ற நடப்பும், போக்கும் கொண்டிருந்தார் நல்லப்ப உடையார். கச்சி நல்லப்ப உடையார் என்ற காலாக்கி தோழ உடையார் என்று தான் கட்டியங்காரன் கட்டியம் கூறுவான்.
கட்டியங்காரன் கூறினால் ஆயிற்றா? பட்டப் பெயருக்கேற்ற தினவு உண்டா என்றால் அதைப்பற்றி கும்பினியாரிடம் தான் கேட்க வேண்டும். கடல் வழியாக வந்திருக்கும் அந்த கிழக்கிந்திய கம்பெனியாருக்கு நல்லப்ப உடையார் மீது பிரத்யேக மதிப்பு. நிறைய ஆயுத பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
இவர் உடையார் பாளையம் புதுப்பணம் என சொந்தமாக நாணயத்தை அச்சிட்டு வெளியிட்டவர். வெளியிட்ட நாணயத்திற்கு இணையாக தங்கம் வைத்திருந்ததால் நாணயத்தை கிழக்கிந்திய கம்பெனி ஏற்றது.
அந்த நாணயத்திற்கு காஞ்சிபுரத்திலும் பெரும் மதிப்பு! அச்சடித்த நாணயத்திற்கு மட்டுமல்ல, அவரின் நாணயத்திற்கும் காஞ்சியில் பெரும் மதிப்பு!
அப்படிப்பட்ட நல்லப்ப உடையார் தான் தன் பரிவாரங்களுடன் கோயிலுக்கு வந்திருந்தார். ஏகாதசி இரவு விரதம் இருந்து கண்விழித்து துவாதசியில் புரியும் தரிசனம். மிக விசேஷமானது... அந்த தரிசனத்திற்காக வந்திருந்தார்.
நல்லப்ப உடையாரோடு, அவரின் பிரதான காவலன் மல்லநாடன், மல்லநாடனின் 24 பேர் கொண்ட புரவிப்படை, அத்துடன் நான்கு புரவிகள் பூட்டிய மனைரதம் அதில் நல்லப்ப உடையாரின் தர்மபத்தினி, அவரின் மகன் ரங்கப்ப உடையான் என்னும் ‘காலாக்கி தோழ ரங்கப்ப உடையான்’ என ஒரு கூட்டமே இருந்தது.
இருபத்தி நான்கு புரவி வீரர்களும் வரிசையில் அணிவகுத்து நின்றிருந்தனர். அவ்வளவும் அஷ்ட மங்கலப் புரவிகள்! பிடரி மயிருக்குள் ஒரு மலைப்பாம்பு ஒளியலாம் அப்படி ஒரு அடர்த்தி!
புரவிகளின் கால் கணுக்களுக்கெல்லாம் தோல் கவசம் போடப்பட்டிருந்தது. மல்லநாடனின் வெள்ளைப் புரவியின் நெற்றி மீது மட்டும் வெள்ளி மஸ்தகம் பூட்டப்பட்டு தனியே கம்பீரமாக தெரிந்தது.
மல்லநாடன் உடையாரோடு சன்னதிக்குள் இருந்தான். இந்த காட்சிகளை கண்டபடியே உள் நுழைந்தபடி இருந்தார் கோயில் ஸ்தானீகர் யதிராஜ பட்டர்!
அனந்தசரஸில் இறங்கி குனிந்து தீர்த்தம் தொட்டு தலையில் புரோட்சணம் செய்து கொண்டு, பின் கால்களையும் அலம்பிக் கொண்டு மேலேறிய போது தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார் நல்லப்ப உடையார். உடன் அவரது தர்மபத்தினியான தனவதிநாச்சியும், புத்திரனான ரங்கப்ப உடையானும்...!
ரங்கப்ப உடையான் பார்க்க லட்சணமாக நெற்றியில் திருமண் காப்பு பளிச்சிட சுருண்ட தலைமுடியுடன் காட்சியளித்தான். இடையில் கச்சம் உடுத்தி, மார்புக்கு பட்டு வஸ்திரம் போர்த்தியவனாக கழுத்தில் முத்து வடமாலை சகிதம் மிக தேஜசுடன் தெரிந்த அவன், யதிராஜபட்டர் வரையில் கிருஷ்ண சகோதரனான பலராமர் போல காட்சியளித்தான்!
யதிராஜநட்டர் பூரித்து போய் கைகுவித்து வணங்கினார்.  
‘‘ஸ்வாகதம்..ஸ்வாகதம்...! காலாக்கி தோழ உடையார் கம்பீரத்துக்கு ஸ்வாகதம். கச்சி விஜயத்துக்கொரு ஸ்வாகதம்...’’
நல்லப்ப உடையாரும் பேசத் தொடங்கினார்.
‘‘நலம் தானே பட்டரே...?’’
‘‘சம்பிரதாயமாக சொல்வதானால் நலமே.. சத்தியமாக சொல்வதானால் அதை எப்படிச் சொல்வதென தெரியவில்லை..’’
‘‘புரிகிறது... யாம் இப்போது ஏகாதசி தரிசனத்துக்காக மட்டும் வரவில்லை. இத்திருக்கச்சியின் இடம் நீக்கவும் உத்தேசத்தே வந்துள்ளோம்...’’
‘‘மகிழ்ச்சி.. ஆனால் எல்லாமே கைமீறிப் போனது போல் தெரிகிறதே..’’
‘‘பரீத்ஷாவின் படை நெருங்கி விட்டதை தானே சொல்கிறீர்கள்..?’’
‘‘ஆம்.. வாழவும் விடமாட்டேன் சாகவும் விடமாட்டேன் என்கிறார்கள்...’’
‘‘புரிகிறது... அவர்களுக்கு நாம் அழிந்து விடக் கூடாது. அவர்கள் வழிக்கு மாற வேண்டும் என விரும்புகின்றனர்.  இதை அவர்கள் அத்தனை பேரும் விரும்புவதாக சொல்ல முடியாது. சிலர்தான் அப்படி..’’
‘‘சிலரோ பலரோ... உயிருக்கு பயந்து மாறியவர்கள் பலருண்டு. அவர்களுக்கு பதவிகளை அளித்து தக்கவைத்துக் கொள்கின்றனர். அதை பார்த்து சிலர் சலனப்படுகின்றனர்..’’
‘‘அனைத்தையும் யாம் அறிவோம். அப்படி மாறுபவர்கள் கோழைகள்! அந்த கோழைகள் எப்படியோ போகட்டும். உறுதியானவர்கள் நிலைத்தால் போதும். உம்மைப் போலவே தான் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஸ்தானீகர் வருந்தினார். அன்னை காமாட்சியின் சன்னதியிலிருந்தும் வருத்தம் வெளிப்பட்டது.  
சுருக்கமாக கூறினால் காஞ்சி நகரை இருள் சூழப்பார்க்கிறது.’’
‘‘ எங்கள் காவலர் தானாயகர் தன்னால் முடிந்தளவு காவல் புரிகிறார். கழிந்த இரவில் கூட சில மிலேச்சர்கள் அவரால் துரத்தப்பட்டதாக கேள்வி...’’
‘‘யாமும் அறிந்தோம்.. தானாயகரை இங்கு வரும் முன் சந்தித்தேன். வருகின்ற படை குறித்தும் தகவல்கள் கிடைத்தன. அவர்கள் குறியே காஞ்சிக் கோயில்கள்மீது தான். எனவே  அதிக கவனம், வீரம் பி்னதும் இங்கேதான். அப்பாதுவகையில் நானொரு கருத்தைச் சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா?’’
‘‘இது என்ன கேள்வி... தாராளமாக கூறுங்கள்..’’
‘‘சிக்கல் தீரும் வரை இந்த பேரருளாளன் என்னுடைய பாளையத்தில் கோயில் கொள்ளக்கூடாது?’’ – நல்லப்ப உடையாரின் கேள்வி ஸ்தானீகரான யதிராஜபட்டரை ஸ்தம்பிக்கச் செய்தது!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar