Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உடையாரின் கனவு
 
பக்தி கதைகள்
உடையாரின் கனவு


பட்டர் பிரான் ஸ்தம்பிப்போடு பார்த்தார்.
உடையாரும் அசராமல் பார்த்தார்.
அருகில் இருந்த தனவதி நாச்சியார் ‘‘நான் சொல்ல நினைத்தேன் –  நீங்கள் சொல்லி விட்டீர்கள்’’ என்றாள்.
‘‘என்ன பட்டரே...ஸ்தம்பித்து விட்டீர்?’’
‘‘ஸ்தம்பிப்பதா... உயிரே போனது போல் இருக்கிறது...’’
‘‘உண்மைதான்.. நம் எல்லோரது உயிருமே கூட அந்த வரதன் தானே? அவன் மிலேச்சரால் சிதைந்து போனால் நம் உயிரெல்லாம் நிஜமாகவே போய்விடுமே?’’
‘‘அப்படியானால் மிலேச்சர்கள் உள்புகுந்து அழித்து விடுவார்கள் என்பது தான் உங்கள் முடிவா?’’
‘‘என்னால் என் பாளையத்துக்கு மட்டும்தான் உறுதி தரமுடியும். எத்தனைபேர் வந்தாலும் என்னிடம் உள்ள துப்பாக்கிகளால் வருபவர்கள் நெஞ்சைப் பிளந்து விடுவேன். ஆனால் இந்த காஞ்சியம்பதி அப்படியல்லவே?’’
‘‘உண்மை... பெரும் உண்மை! இவ்வளவு நாட்கள் நாம் தப்பிப் பிழைத்திருப்பதே ஆச்சரியம் தான்!’’
‘‘அதனால் தான் சொன்னேன். பேரருளாளனை நான் இன்றே கொண்டு சென்று விடவா?’’
‘‘இதற்கு நான் மட்டும் எப்படி பதில் கூற முடியும்? ஆலய ஸ்தானீகர், காப்பாளர், தலையாரி, தளபதி தானாயகர் என எல்லோரையும் அல்லவா கேட்க வேண்டும்?’’
‘‘இந்த பட்டியலில் வரதனை மட்டும் விட்டால் எப்படி?’’
‘‘வரதனா... யார் அது?’’
‘‘பட்டரே.. நீங்கள் இப்படி கேட்பது?’’
‘‘ஒ.. புரிகிறது...புரிகிறது... நீங்கள் எம்பெருமானைச் சொல்கிறீர்கள்... அவனைக் கொண்டு செல்ல நிச்சயமாக அவன் சம்மதம் நமக்கு தேவை தான்...’’
‘‘அதை எப்படிக் கேட்பது?’’
பட்டரும், உடையாரும் இப்படிப் பேசியது கோயிலைச் சார்ந்த சில வைணவ அடியார்களுக்கு பிடிக்கவில்லை என்பது அவர்கள் முகம் போன போக்கில் தெரிந்தது. அவர்களால் பேரருளாளன் இல்லாத கோயிலை கற்பனை கூட செய்ய முடியவில்லை.
‘‘தயவு செய்து இந்த எண்ணத்தை இத்தோடு விட்டு விடுங்கள். எம்பெருமான் என்ன சிறு குழந்தையா? துாக்கிச் செல்ல...? இது அவன் வரம் தரும் விருப்பத்திற்காகவே கோயில் கொண்ட தலம். இத்தலத்தை விட்டு அவனைப் பிரிப்பதா?’’  என அவர்களில் ஒருவர் பொங்கினார்.
‘‘உங்கள் உணர்ச்சி புரிகிறது. ஆனால் இப்போது இதை விட்டால் வேறு வழியில்லை. திருவரங்கம்  நமக்கு முன்னுதாரணம். பிள்ளைலோகாச்சாரியார் என்னும் பரமபக்தர் தன் உயிரை துச்சமாக கருதி எம்பெருமானை அங்கிருந்து கொண்டு சென்று, அதன்பின் அறுபது ஆண்டுகள் கழிந்த நிலையில் அங்கே எம்பெருமான் திரும்பி வந்த வரலாறு உமக்கு தெரியாதா?’’
‘‘தெரியும்.. ஆயினும் எங்கள் வரதனைப் பிரிய மனம் மறுக்கிறது. அதன் பிறகு நாங்கள் எங்கு செல்வோம்? என்ன செய்வோம்?’’
‘‘மானசீக வழிபாட்டினைப் புரிந்திடுங்கள். வேறு வழியில்லை. மிலேச்சன் வசமிருந்து இந்த தேசம் விடுதலையை விரைந்து பெற்றிடும். அதன்பின் இப்போது அவனை சேவிக்க இயலாமல் போனதற்கும் சேர்த்து வைத்து வணங்குவோம்..’’
‘‘பிரம்ம யக்ஞத்தில் தோன்றிய உற்சவ மூர்த்தத்தை நீங்கள் கொண்டு சென்றிடுவீர்கள்...மூலவனாகிய தேவாதி ராஜனை என்ன செய்வது? அதிலும் அத்திமரத்தால் ஆன பேரருளாளன் அவன்...! மயனாலும், விஸ்வகர்மாவாலும் செதுக்கப்பட்டவன். இந்த குளத்தின் பேழைக்குள் பலகாலம் கிடந்தவன், திருச்சன்னதி பட்டர் ஒருவரின் கனவில் தோன்றி என்னை குளத்தில் இருந்து விடுவித்து சன்னதிக்குள் வைக்கப் பணித்தவன்.. இப்போது திருச்சன்னதிக்குள் கோயில் கொண்டிருப்பவன்!’’
‘‘அற்பமான மானுடருக்காக நாம் இப்படி எல்லாம் பேசுவது துளியும் சரியில்லை. புல் பூண்டில் இருந்து புவனம் பதினான்கையும் படைத்து, அப்படிப் படைத்தவைகளுக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் வசிக்க இடமும், ஒளிக்கு நெருப்பும், சுவாசிக்க காற்றும் என சகலத்தையும் தந்தவனுக்கு தன்னை காத்துக் கொள்ள தெரியாதா?
நம்மையே காப்பவன் அவனல்லவா?’’
‘‘யார் இல்லை என்றது? ஒன்றை மறந்து விட்டு பேசுகிறீர்கள்... அவன் நிர்குணன். சுதமன், மத்திமன், உத்தமன் என மூன்று குணங்களால் ஆன நமக்கே வணக்கம், வழிபாடு என்ற வழிமுறைகள். அதற்கே ஆலயங்களும் ஆகமங்களும்...
அவன் குணமற்றவன் ஆதலால் அவனுக்கு எதிரிகளுமில்லை; அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் தேவையும் அவனுக்கில்லை...’’
‘‘இது என்ன பதில்.. தெய்வத்தை ஒருவர் பழிப்பதும், இழிப்பதும், சிதைப்பதும் பாவமில்லையா? பாவிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் இல்லையா?’’
‘‘நாம் எதை பாவம் என்கிறோமோ அதையே புண்ணியம் என்று கருதியல்லவா மிலேச்சர்கள் செயல்படுகின்றனர். நாம் நம்புவதை அவர்கள் நம்ப தயாரில்லை. அவர்கள் நம்புவதை நாம் நம்ப தயாரில்லை. இது நம் நம்பிக்கைக்கான யுத்தம். இறுதியில் எவர் வலியவரோ அவரே வெல்வர்! படை பலத்தால் அவன் வலியவன். பக்தி பலத்தால் நாம் அந்த வலிமையை வெற்றி கொள்ளவே இப்போது இப்படி எல்லாம் திட்டமிடுகிறோம்.’’
 இப்படி குளக்கரையில் பேசிய பேச்சு எல்லோருடனும் கூடிக் கலந்து பேசப்பட்டு விரைவாக முடிவுக்கு வந்தது. நல்லப்ப உடையாரிடம் காஞ்சிப் பேரருளாளன் ஒப்படைக்கப்பட்டு அன்றே அவன் உடையார் பாளையம் நோக்கி பயணிக்கலானான்.
அவன் மட்டுமா? காமாட்சியின் உற்சவ மூர்த்தம் முதல், ஏகம்பனின் மூர்த்தங்கள் வரை மிலேச்ச இலக்கில் உள்ள மூர்த்தங்கள் அன்றிரவே காஞ்சியை விட்டு உடையார் பாளையம் நோக்கிச் சென்ற நிலையில், மூலவராக அருள் பாலித்த அத்திமரத்தால் ஆன அத்திவரதனும் குளத்தில் கிடத்தப்பட்டான்! நான் இருக்கிறேன்;  இல்லாமலும் இருக்கிறேன் என்னும் நாராயண தத்துவப்படி சிலாரூபமாக இருந்து அருள்பாலித்தவன் இல்லாது அருள் பாலிக்கலானான்.
புறத்தில் பூசைகளும் அபிேஷக ஆராதனைகளும் கண்டவனர் பக்தர்கள் அகத்தில் அதைக் காணலானான்.
கோயிலைக் கொள்ளை கொள்ளும் நோக்கில் வந்த மிலேச்சப்படை அல்ப சொல்ப பொருட்களோடு பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது.
உடையார் பாளையத்திற்கு விக்ரக நிமித்தம் செல்ல மிலேச்ச படை விரும்பவில்லை. தங்களுக்கு பயந்து ஓடி ஒளிந்ததையே அப்படை பெருமையாகக் கருதியது.
அதேசமயம் உடையார் பாளையத்தில் எம்பெருமான் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டான். அங்குள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமான் கோயிலின் ஒருபுறத்தில் மண்டபத்தில் எழுந்தருளி உடையார் பாளையத்தையே ஒரு காஞ்சி என்று ஆக்கினான். 22 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒருநாள் நல்லப்ப உடையார் கனவிலும் எம்பெருமான் தோன்றினான். இருவருக்குமிடையே  உரையாடல் நிகழ்ந்தது.
‘‘உடையானே...! என்னையும் உன்னிடத்தே கொண்டு உடையோன் என்றும் ஆகிவிட்டாய் மகிழ்ச்சி தானே?’’
‘‘ஆஹா.. எம்பெருமானே இது என்ன கேள்வி. நான் பெரும்பாக்கியவான். முன்னம் உன் மூர்த்தம் கண்டேன். இப்போதோ உன்னை நேரிலேயே காண்கிறேன். நான் முக்தன். நான் முக்தன்..’’
‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’’
‘‘நீ என் ஜமீனை விட்டு பிரியக்கூடாது..’’
‘‘அது மட்டும் இயலாது. நான் காஞ்சிக்கு திரும்பியாக வேண்டும்.’’
‘‘அப்படியென்ன அம்மண் மீது மட்டும் அத்தனை காதல்?’’
‘‘காதலில்லை.. கடமை!’’
‘‘கடமையா?’’
‘‘ஆம்.. வரம் தரும் வரதராஜனாய் என்னை நாடி வருவோர்க்கு அருளவேண்டிய கடமை..’’
‘‘அதை இங்கிருந்தும் செய்யலாமே...?’’
‘‘பிரசன்ன வெங்கடேசனாய் செய்தபடி தானே இருக்கிறேன். ஆனால் அங்கோ எனக்காக பெரும்பக்தர் கூட்டம் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறது. கோடி நாம ஜபமும் புரிகிறது.. அந்த பிரார்த்தனைகள் என்னை இழுக்கின்றன. ’’
‘‘இதற்கு நீ இங்கே வந்திருக்கவே வேண்டாம்’’
‘‘நான் எங்கே வந்தேன்... நீயல்லவா என் உடையார் பாளையமும் ஒரு காஞ்சிதான் என்று என்னை எடுத்து வந்தாய்..?’’
‘‘அதற்கு எனக்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன. அதில் நான் திருவரங்கத்தை முன்னுதாரணமாய் கொண்டேன்.’’
‘‘அப்படியானால் அழகிய மணவாளன் அரங்கம் திரும்பியது போல் நானும் திரும்புவதல்லவா சரியான ஒன்றாகும்?’’
‘‘சரியும் தவறும் இந்த மாய உலகில் பிறந்து விட்ட எங்களுக்கு தானே பொருந்தும்.. உனக்குமா அது தேவைப்படுகிறது?’’
‘‘நீ என்ன வாதப்போர் நிகழ்ந்த முடிவு செய்து விட்டாயா?’’
‘‘எம்பெருமானே... நான் அப்படி நினைத்தால் அது கூட உன் நினைப்புதானே? உன் அருளன்றி எது தான் அசைந்திடும்?’’
இப்படி நிகழ்ந்த அந்த வாதப்பிரதிவாதக் கனவு கலைந்த போது நல்ல அதிகாலை! கண்விழித்த மறுகணமே பேரருளாளனை காஞ்சிக்கே திரும்ப  சேர்த்திட உடையார் தீர்மானித்து விட்டார்.
காஞ்சியம்பதியிலும் ஒரு அமைதிச் சூழல் திரும்பி விட்டிருந்தது. மிலேச்சனால் வந்த துன்பம் அங்குள்ளோரை உறுதிமிக்கவர்களாக மாற்றி விட்டிருந்தது. மானச வழிபாட்டிலும் தங்கள் இல்லங்களையே வரதன் உறையும் கோயிலாக  மாற்றிக் கொண்டுவிட்டிருந்தனர்.
அழியும் செல்வம் என்றால் கொள்ளை போயிருக்கும்.
அழியாத அருட்செல்வமான ஸ்ரீவைஷ்ணவம் அப்படி கொள்ளை போவில்லை. மாறாக அது ஆல விருட்சம்போல் வளர்ந்து தழைத்து விட்டிருந்தது!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar