Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தில்லைக்காளி
 
பக்தி கதைகள்
தில்லைக்காளி

மாற்றம் ஒன்றே மாறாதது. பருவநிலை, மண்வளம் மாறும். கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறும். விதையும் செடியாக,  கொடியாக, மரமாக மாறும். பூ காயாகவும் மாறும். பருத்தி துணியாக மாறும். பூக்கள் மாலையாகும். களிமண் தெய்வச் சிலையாக மாறும். திருமணம் குடும்பமாக மாறும். வார்த்தை கவிதையாக மாறும். அலைகள் கடலாக மாறும். நீர்த்துளிகள் நதியாக மாறும்.
இல்லாததை உருவாக்கவும் மாற்றம் தேவை. இருப்பதை உருமாற்றவும் மாற்றம் தேவை. வாழ்விலும் எல்லாம் மாறும். வாழ்க்கை நிரந்தரம். மாற்றம் நிரந்தரம். இந்த இரண்டும் இணையும் போது மாற்றம் நிரந்தரம். அந்த மாற்றத்தின் கண்ணி எங்கே இருக்கிறது? அந்த மாற்றத்தின் மூலாதாரம் எங்கே இருக்கிறது? ஏழுகடல் தாண்டி, ஏழு மலைதாண்டி, கீச்கீச்கீச்சென்று கத்தும் கிளியின் கழுத்திலா பொதிந்திருக்கிறது?
ஆமாம் சிறுவயதில்  ஆச்சியும், தாத்தாவும், அம்மாவும், அப்பாவும் சொன்ன மாயாஜாலக் கதை நிஜம்தான் என காதில் சொன்னாள் சக்தி. காதோடு சொன்னாள் அம்மை. காதுக்குள் சொன்னாள் ஓங்காரி. அவள் தன் பெயரைத் தில்லைக்காளி என்றும் எல்லைக்காளி என்றும் சொன்னாள். ‘ என்னைத் தேடி வருவாய் என்று தெரியும்’ என்றும் சொன்னாள். ‘என் ஊர் மருமகள் வருவாய் என்று காத்திருக்கிறேன் மகளே..’ என்றும் சொன்னாள்.
‘தாயே நீ இருப்பது எல்லையிலா அல்லது தில்லையிலா?’  என் அறியாமையின் கேள்வி கேட்டுச் சிரித்தாள் அம்மை.
‘நான் இருப்பது முல்லையில்... என் குழந்தைகளின் அன்பெனும் முல்லை காடுதான் என் பூமி. என்றுமே குறைவிலாத மனிதம் என்னும் மேடுதான் என் பூமி. என்றைக்குமே தீராத தாய்மை, தந்தைமை, குழந்தைமை, கருணை, பரிவு, நன்றி, பெருந்தன்மை என்னும் ஏழுகடல்தான் என் பூமி. என்றுமே நிலையற்ற ஆணவம், ஆக்ரோஷம், ஆத்திரம், வெறுப்பு, சூழ்ச்சி, வஞ்சம், துரோகம் என்னும் ஏழுமலைகளைத் தாண்டி என்னிடம் வரும் குழந்தைகளுக்காக நான் இங்கே காத்திருக்கிறேன். அங்கே காத்திருக்கிறேன். எங்கேயும் காத்திருக்கிறேன்’
தில்லைக்காளியோடு மனசுக்குள் உறவாடிக் கொண்டே பிரகாரத்தில் நடந்தேன். அன்னையின் தெய்வீக மணமும், அருள் மனமும் உடன் வருவதை உணர முடிந்தது.
வானத்தில் பவுர்ணமியாக அன்றைக்கும் சிரித்தாள் தில்லைக்காளி. மகளிர் கூட்டம் அதிகம். எல்லோரும் கூப்பிய கரமும், அம்மா வீட்டுக்குப் போகும் நெகிழ்ச்சி ததும்பும் முகமுமாக இருந்தார்கள். ஒரு முழம் பூவாவது வாங்கிக் கொண்டு வந்து அம்மையின் காலடியில் சமர்ப்பித்தால் போதும் என்பதான பரிதவிப்போடு வரும் எளிய பெண்கள் அங்கிருந்தனர்.
குங்குமக்காப்புடன் செக்கச் செவேல் என்றிருந்த அம்மையைத் துாக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள மனம் பரபரபத்தது. அம்மையை மடியிலிருத்தி ஒரு வாய்ச்சோறு ஊட்டி விட மாட்டோமா என எண்ணியது மனம். அவளுக்கு நாம் குழந்தையா? நமக்கு அவள் குழந்தையா? என்ற திகைப்போடு ஓரமாய் நின்று கண்கொட்டாமல் பார்த்தேன்.
செக்கச் செவேலென்று குங்கும மலையாக, குங்கும மழையாக இருந்தாள். அவளின் இரு விழிகளும் நம்மை. நம் மனசை,  எலும்பை, தசையை,  நரம்பை,  உயிரை,  சுவாசத்தை, பூர்வ ஜென்மத்தை, உயிர் மூலத்தை, மூலாதாரத்தைக் கத்தியாக ஊடுருவுவதை உணர முடிந்தது. அதன் மூலம் முக்தியாக ஊடுருவுவதையும் உணர முடிந்தது.  
‘வாழ்க்கை எதற்காக தாயே? சுவாசிக்கிற பொழுதெல்லாம் சிக்கல்கள். சூழ்ச்சிகளின் சிக்கல்கள். துரோகத்தின் சிக்கல்கள்.  எல்லாப் பொழுதும் சிக்கல் பொழுதானால் வாழ்க்கை எதற்காக தாயே... வெள்ளம் தலைக்கு மேல் போகும் போது உன்னிடம் வேண்டுதவதற்கும் தெம்பில்லை. வலி, வேதனை எல்லை மீறியதில் மனசு மரத்துப் போயிருக்கிறது தாயே..’ இப்படித்தான் இருவருக்கும் இடையே பேச்சு மவுனமாக நடந்து கொண்டிருந்தது.
கிணிகிணியென்று மணி அடித்துக் காட்டப்பட்ட தீபாராதனையில் அம்மையின் தெய்வீகச் சிரிப்புக்குள் கரைந்து போனேன். எந்த உணர்வும் இல்லை. எல்லா உணர்வும் மரத்துப்போன எல்லை. அவளிடம் ஒன்றும் வேண்டத் தோன்றவில்லை. கூப்பிய கரமும், கரகரவென வழியும் கண்ணீருமாகச் சிமிட்டாத கண்களோடு கிடந்தேன்.  
எல்லோருமே கண்ணில் துளிர்க்கும் நீரோடுதான் இருந்தார்கள். அவரவர் சுமந்து வந்த வருத்தமும் வேதனையும் கண்ணீரில் கரைந்தோடுவதாகத் தோன்றியது.
‘இத்தனை கல்நெஞ்சக்காரியா நீ? வேதனை, சோதனை எல்லாம் தருகிறாய். கூடவே வண்டி வண்டியாகப் போதனை தருகிறாய். நாங்கள் சாதாரண மானுடர்கள் தாயே.... அனலாக இருக்கிறாய். நெருப்பாக இருக்கிறாய். புனலாக மாறுதாயே... சிலிர்ப்பாக மாறுதாயே...’
எல்லாப் பெண்ணின் குரலாக  பேசினேன். மறுபடியும் பிரகாரம் சுற்றினேன். என்னோடு அம்மையும் நடந்து வருவதான குங்கும வாசனை சுற்றிச் சுற்றி வந்தது. ‘என் குழந்தைகள் எல்லோருக்குள்ளும் தேவர்களும், அரக்கர்களும் இருக்கிறார்கள் மகளே... உங்களின் குணாதிசயம் தான் அது. அரக்க மனசு மேலோங்கும் போது நீ்ங்களே ஊர்த்துவ தாண்டவம் புரியலாம். ருத்ர தாண்டவம் புரியலாம். எதிரிகளை துரோகிகளை துவம்சம் செய்யும் ஆகிருதி எல்லாப் பெண்ணுக்குள்ளும் இருக்கிறது மகளே.. நான்தான் அந்த சக்தி. நான் தான் அந்த ஆகிருதி. ஆண்மையும் பெண்மையும் இரண்டறக் கலந்து விஸ்வரூபம் எடுங்கள். கோபம், ஆத்திரம், ஆங்காரம் தீர்ந்த பின்பு மறந்து விட்ட, மரத்து விட்ட மனசோடு என்னிடம் வாருங்கள். நன்மையும் தீமையும் மென்மையும் வண்மையும், கண்ணீரும், பன்னீரும் சேர்ந்தது போல்தான் வாழ்க்கை இருக்கும் என்பதே அர்த்த நாரீஸ்வரத் தத்துவம் மகளே... உங்களையே நீங்கள் உணருங்கள் நீங்களே காளி. நீங்களே சக்தி நீங்களே நான். நானே நீங்கள் என உணருங்கள். கண்ணில் உங்களையும், உங்களில் என்னையும் தேடுங்கள். அம்மை என்னை அணைத்துச் சொல்லிக் கருவறைக்குள் நிறைந்து கொண்டாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar