Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » முக்தி தரும் அத்திமரரூபம்
 
பக்தி கதைகள்
முக்தி தரும்  அத்திமரரூபம்


அனந்தசரஸ் என்கிற அந்த திருக்குளக் கரையை அடைந்த பட்டர் மிகவே அமைதியாகி குளத்து ஜலத்தையே உற்றுப் பார்க்கலானார். அவரைத் தொடர்ந்து சென்றவர்களும் அவரையே பார்க்கலாயினர். அதுவரை கோபுரம் மேல் பறந்தபடி இருந்த கருடன் இப்போது குளத்தின் மேல் பறந்தபடி இருந்தான்.
தானாயகனும் நல்லப்ப உடையாரும், அவர் மகன் ரங்கப்ப உடையானும் கூட அங்கே பட்டரின் செயலை காண வேண்டி, ஏவலாட்கள் குடைபிடித்திட குளக்கரைக்கு வந்து நின்றனர்!
பட்டர் மெல்ல குளத்தில் இறங்கி மண்டியிட்டு அமர்ந்து ஜலத்தை கையால் எடுத்து தன் சிரசின் மேல் தெளித்துக் கொள்ளலானார்! பின் ஜலத்தை எடுத்து சுற்றி நிற்கும் எல்லோர்மேலும் தெளிக்கலானார்! அதைக் கண்ட கோயில் ஸ்தானீகர்களில் ஒருவர் வினாவெழுப்ப தொடங்கினார்.
‘‘பட்டரே... இது என்ன விந்தை? சம்ப்ரோஷனம் நடந்தது அங்கே... தெளிக்க வேண்டிய அந்த மந்த்ர ஜலமும் தெளித்தாகிவிட்டது, அப்படியிருக்க இங்கே வந்து இந்த ஜலத்தை தாங்கள் தெளிக்க காரணம்?’’
பட்டரின் கேள்விக்கு ஒரு தெற்றுச் சிரிப்பு சிரித்த பட்டர் ‘‘நான் உறைந்து கிடக்கும் பூலோகத்துப் பாற்கடலாம் இந்த நீரும் மந்த்ரஜலம் தான் என்பதை நீங்கள் அறிய மாட்டீரா?’’ என்று எதிர்கேள்வி கேட்டார்.
‘‘அப்படியானால் தாங்கள்...?’’
‘‘என்னை இன்னமுமா நீங்கள் உணரவில்லை...?’’
என்று அவர் கேட்ட மறு நொடி குளத்தின் மிசை பறந்தபடி இருந்த கருடன் அவர் தோள் மேல் வந்து அமரலானான்.
‘‘எம்பெருமானே நீயா... பெரருளாளனே தேவராஜனே, வரதராஜா நீ எங்களுக்கு அருள திரும்ப வந்து விட்டாயா?’’ என்று பரவசமாய் கேட்ட படியே அப்படியே அந்த பட்டரின் காலில் விழுந்து வணங்கலானார் ஸ்தானீகர்!
அவரைத் தொடர்ந்து ஒட்டுமொத்த பேரும் அங்கங்கே அப்படியப்படியே மண்டியிட்டு வணங்கலாயினர். தானாயகனும், நல்லப்ப உடையாரும் அவர் மகன் ரங்கப்ப உடையானும் கூட தங்களின் அதிகார தோரணைகளை உதறியவர்களாய் மண்டியிட்டு அந்த பட்டரை வணங்கி அவர் பேச்சை கேட்கலாயினர்.
‘‘பக்த மித்ரர்களே...! இதுநாள் வரை ஹஸ்தவரதனாய் கிரிமிசை கோயில் கொண்டிருந்த நான் அத்தி வரதனாய் இந்த குளமிசை கோயில் கொண்டிருப்பதையும் அறிவீர்கள். பிரம்மன் பொருட்டு அக்னியில் தோன்றிய என் ஸ்துாலம் மேலே வரம் தரும் வரதனாய் விளங்கிட, அந்த அக்னியின் வெம்மை தணிய இக்குளத்தின் மிசை கிடந்திடும் என் அத்திமரரூபம் முக்தியை தரும் ஒன்றாய் இனி விளங்கிடும்.
இக்கலியில் வாழத் தேவை வரமெனில் மீளத்தேவை முக்தி! அதற்காக நாள்தோறும் எனை நாடி வருவோருக்கு வரங்களை தந்திடுவோம். முக்தியின் பொருட்டோ இக்குளத்தினின்றும் ஒரு மண்டல ஆண்டு பிராயத்திற்கொரு முறை வெளிப்பட்டு ஒரு மண்டல நாள் பிராயம் காட்சி தந்து தரிசிப்போர்க்கெல்லாம் முக்தியளிப்போம்.
இதை என் பிரமாணமாய்க் கொண்டு செயல்படுங்கள். ஊழிலும், பாழிலும் உளம் மாறாத எனை நினைத்து உருகிய ஜீவாத்மாக்களுக்கு என் நல்லருள் சித்திப்பதாக!’’
– என்று கூறிய பட்டர் அப்படியே மயங்கிக் கீழே விழலானார். கருடனும் விண்மிசை விசைந்து பறக்கலானான் தானாயகனுக்கும், ரங்கப்ப உடையாருக்கும் நல்லப்ப உடையாருக்கும் பட்டரின் அருள்மொழி தெளிவாக புரிந்து விட்டது.
‘‘இந்த சம்ப்ரோஷணம் எம்பெருமானுக்கு பூரண திருப்தியை அளித்துள்ளது. அதன் விளைவே இப்போது நாம் இங்கே கண்ட காட்சிகளும் செவிமடுத்த செய்திகளுமாகும்! 22 வருடங்கள் இல்லாது போனதற்கு ஈடுகட்டுவது போல நிலத்திலும் ஜலத்திலும் தான் கோயில் கொண்டிருப்பதை நமக்கு உணர்த்தி விட்டான். வரத்துக்கு நிலத்தையும், முக்திக்கு ஜலத்தையும் என்று தேர்வும் செய்து விட்டான்.
இனி வரத்துக்கு ஹஸ்த வரதன் என்கிற தேவராஜன் முக்திக்கோ நீருக்குள் கிடக்கும் அத்திவரதன்! இன்றிலிருந்து ஒரு மண்டல வருஷப் பிராயம் நீக்கி, பின் பிறக்கும் நன்னாளில் நீர்மிசைக் கிடப்பவனை வெளியே எடுத்து நிலமிசைக் கிடத்தி அவன் திருவாக்கின் படியே ஒரு மண்டல நாள் பிராயம் வழிபட்டு, அவனருள் பெற்று, பின் அவனை மீண்டும் ஜலவாசத்தில் ஆழ்த்துவது என்கிற ஒரு கருத்தை இப்போது நான் முன் வைக்கிறேன். இத்திருநாளில் திரண்டு வந்திருக்கும் சகலரும் இதை வழிமொழியக் கோருகிறேன்’’
என்று தானாயகன் கூறிட, கூட்டம் அதை மகிழ்வோடு ஏற்று ஆர்பரித்தது.
தானாயகன் கருத்தை வழிமொழிவது போல் விண்மிசை இருந்த மேகங்கள் மழையை உதிர்த்திட அதனுாடே மலர்களும் இருந்து அதைக் கண்டவர்கள் பரவசம் கொண்டனர். அதை தேவர்களின் செயலாக உணர்ந்தனர்.
எப்போதும் சோதனைகளே சாதனைகளாகின்றன. காஞ்சிக்கு நேரிட்ட சோதனை பக்திக்கு உரம் சேர்த்தது. எழுச்சியை உருவாக்கியது. ஒரு கோயிலே ஒன்றுக்கு இரண்டு என்றும் ஆகியது! அழிவு, பொழிவு என்று மாறியது.
இதன்பின் காஞ்சியம்பதி பலப்பல ஞானியர்களும், முனிகளும் வந்து வணங்கிச் செல்லும் பெரும் புண்ணிய ஸ்தலமாகியது. குறிப்பாக முக்தி அடைய என்ன வழி என்று சிந்திக்கின்றவர்களுக்கு அத்திவரதன் நானிருக்கிறேன் என்று கூறுபவனானான்.
அது எப்படி என்பதற்கு பெத்த பெருமாள் என்ற ஒரு பிச்சைக்காரனே சாட்சியானான்! இது ஒரு செவி வழிக்கதை. வரதன் ஆலயத்தை ஒட்டிய மண்டபத்தில் அமர்ந்து பிச்சையெடுத்து பிழைத்த இவன் உண்மையில் பெரும் செல்வந்தன். தீயபழக்க வக்கங்களாலும், விலைமாதர் தொடர்பாலும் சொத்துக்களை இழந்தவன் ஒரு கட்டத்தில் மனைவி, மக்களை இழந்தான். உறவினர்கள் ஓடி ஒளிந்தனர். அவனுக்கு சொந்தமான நிலத்தில் அவனது சிறுவயதில்  ஒரு வேப்பமரத்தை நட்டிருந்தான். அது பெரிதாக வளர்ந்திருந்தது. அதன் நிழலில் பொருட்கள் முதல் சகலத்தையும் இழந்த நிலையில் ஒரு நாள் வந்து படுத்தான். அப்போது அந்த மரத்துக்கும் நிலத்துக்கும் உரியவன் வந்து ‘‘இங்கு படுக்காதே எழுந்து போ’’ என்று சொன்னபோது சாட்டையால் அடிபட்டது போலாகியது பெத்த பெருமாளுக்கு...
தான் நட்டு வளர்த்த மரத்தின் நிழல் கூட தனக்கு பயன்தராத சூழ்நிலை குமுறி அழச் செய்தது. வாழத் தெரியாமல் தான் வாழ்ந்து விட்டதும் அவனுக்கு புரிந்தது.
உடம்பிலும் தெம்பில்லை – மனதிலும் தெம்பில்லை இப்படி ஒரு நிலையை அவன் கற்பனை  செய்ததில்லை. இந்த நொடியில் யாராக இருந்தாலும் தற்கொலை செய்யத்தான் நினைப்பர்.
பெத்த பெருமாளும் அப்படித்தான் நினைத்தான்.
தடுமாறியபடி ஏதாவது கிணறு கிடைக்கிறதா என தேடிக் கொண்டு நடக்கலானான்.
கிடைத்தது...! ஒரு நீர் நிரம்பிய வயல்காட்டு கிணறும் கிடைத்தது. பக்கத்திலேயே சாலை அமைந்திருந்தது. அதன் ஒரு பக்கமாய் போனால் காஞ்சி வரும் இன்னொருபுறம் போனால் செய்யாறு வரும். அந்த சாலைமேல் பல சமயங்களில் தனியொருவனாக குதிரை மீது ராஜா போல பயணித்திருக்கிறான்.
இப்போது அதெல்லாம் வெறும் நினைவு!
அதை மறக்கவும் முடியவில்லை. இந்த மனதின் தன்மையே புரியவில்லை. எதை நினைக்க கூடாதோ அதைத்தான் முதலில் நினைக்கிறது. எதை நினைக்க வேண்டுமோ அதை நினைக்க விடுவதும் இல்லை. அப்போது கூட அந்த கிணற்றருகே போய் பெத்த பெருமாள் நின்றபோது அவன் ராஜாபோல வாழ்ந்தது தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்தக் கிணறு கூட அவன் சொந்தக்காரர் ஒருவரின கிணறுதான்! இப்போது அதில் குதித்தே உயிரை விட தீர்மானித்து அதன் விளிம்பின் மீது நின்றபோது, ‘‘ஏய் யாரது?’’ என்கிற குரல் ஒலித்தது. ஒலித்தவர் அவன் உறவினர் தான்! அவரும் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொண்டார்.
‘‘ஏண்டா நீ சாக என் கிணறுதான் கிடைச்சதா போடா இங்க இருந்து...’’ என்று கத்தினார். பெத்த பெருமாளுக்கு உடம்பெல்லாம் கூசியது. கண்ணீர் கரகரவென வழிந்தது.
தடுமாறிக் கொண்டு தான் முன்பு குதிரையில் பறந்த அந்த சாலைக்கு வந்தான்! சற்று தொலைவில் ஒரு சிறு குன்று! அதைக் காணவும் அதன் மீதேறி கீழே குதித்து உயிரை விட முடிவு செய்தான்.
தடுமாறியபடி நடந்தான்! குன்றின் மீதேறத் தொடங்கினான். அப்போது குன்றின் அடிப்பகுதியில் ஒரு பாம்புப் புற்று அவன் கண்ணில் பட்டது. அதைக் காணவும் ஏன் அதனுள் கையை விடக்கூடாது? என்ற கேள்வி எழும்பியது. அதை நெருங்கியவன் நல்ல பெரிய புற்று வாயாக பார்த்து துணிவுடன் கையை விட்டான். ஆனால் எதுவும் ஆகவில்லை. கையை அசைக்கவும் புற்று பொல பொலவென்று உடைந்து போனது. உள்ளே பாம்பு இல்லை. அந்த நொடி அவன் மனதில் ஒரு பெருங்கோபம் ‘‘சாகலாம்னா அதுக்கு கூட வழியில்லையா... கடவுளே என்னை விட நீ கொடியவன்’’ என கத்தினான்.
பிறகு தெம்பை திரட்டிக் கொண்டு அந்த குன்றில் ஏறத் தொடங்கினான். பல இடங்களில் சறுக்கி விழ காயம் பட்டது. ரத்தம் சிந்தியது. வலி உயிரைத் திறுகியது. ஒரு வழியாக குதிப்பதற்கு தோதாக பெரிய பாறை மீது நின்று கொண்டான். மேலே ஆகாசம்... கீழே கிடு கிடு பள்ளம்! ‘அப்பாடா.. ஒருவழியாக சாகப் போகிறேன். இனி எந்த துன்பமுமில்லை; அவமானமுமில்லை’ என எண்ணிக் கொண்டே குதிக்க முயன்ற போது  காதில் ‘‘ஜெய்ஜெய்ராம் சீதாராம்... சீதாராம் ஜெய்ஜெய் ராம்...’ என்ற பக்தர்களின் குரல் கேட்டது. அவன் குதிரையில் பயணித்த சாலையில் பக்தர் கூட்டம் தான் ராம நாமம் ஜபித்தபடி வந்து கொண்டிருந்தது. அக்கூட்டம் நடுவில் ஒரு பல்லக்கு! அதில் ஒவர் தலை முதல் உடல் வரை மூடியபடி முகம் மட்டும் பளிச்சென தெரிய அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் அசாத்ய பிரகாசம் – நெற்றியில் கோபி சந்தனம். அவர் உதடுகளிலும் ராம் ராம் என்ற நாம ஜபம். அதற்கேற்ப விரல்களில் துளசி மாலை இருந்து அதன் கண்ணிகளை எண்ணியபடி நாமம் சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவர்கள் அவ்வளவு பேரையும் பார்த்தபடியே திரும்பிய பெத்த பெருமாள், உடல் தடுமாறி கீழே விழுந்து சரசரவென இறங்கி  குன்றின் அடிப்பகுதிக்கே வந்து சாலையில் விழுந்தான். மிகச் சரியாக ராம நாம கூட்டமும் அவன் கிடந்த இடத்திற்கு வந்துவிட, பல்லக்கில் இருந்த மகான் அவனை பார்த்தார். அவர் யாரோ அல்ல... சங்கீதஉலகின் பிதாமகரான தியாகய்யர் தான் அவர்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar