Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கொள்ளை கொண்ட நோய்
 
பக்தி கதைகள்
கொள்ளை கொண்ட நோய்


பச்சைப்புடவைக்காரியைப் பார்த்து சில வாரங்கள் ஆகிவிட்டன.  அன்னையின் அன்பு முகத்தை அருகில் பார்த்துப் பழகியபின், அவளுடைய தாயன்பிற்கு ஒட்டுமொத்தமாகக் கொத்தடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்தபின் அவளைச் சிலையுருவில்கூடக் காண முடியாத கொடுமையைத் தாங்க முடியவில்லை.  ஊரெல்லாம் கொரோனா. மனம் முழுவதும் ஒரே கேள்விதான் என்னை வதைத்துக்கொண்டிருந்தது. ‘இந்தக் கொள்ளை நோய் ஏன் வந்தது?’

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஊரடங்கு மிக கடுமையாக இருந்தது. என் நெருங்கிய உறவினரிடமிருந்து அலைபேசி அழைப்பு. அவருடைய நெஞ்சு வலி மாத்திரை தீர்ந்துவிட்டதாம். உடனே வாங்கித்தர முடியுமா என்று கெஞ்சலாகக் கேட்டார். அதை உட்கொள்ளாவிட்டால் உயிருக்குக்கூட ஆபத்து வரலாம் என்றார்.
அரைமனதுடன் காரில் கிளம்பினேன். மருந்துக் கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. நகரின் மறுபுறத்தில் இருந்த ஒரு கார்ப்பரேட் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும்.
போகும் வழியில்  என் வண்டி நிறுத்தப்பட்டது.
“கீழே இறங்குய்யா. ஊரெல்லாம் அடங்கியிருக்கு. சார் மட்டும் ஜாலியா கார்ல ஊர் சுத்தறீங்களோ? கான்ஸ்டபிள் இந்த வண்டிய சீஸ் பண்ணுங்க.”
பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு என் நிலைமையை விளக்கினேன்.
“அத்தியாவசிய தேவைக்கு  வெளியில் போகலாம் அல்லவா? ஒரு மனிதரின் உயிரைக் காப்பது அத்தியாவசியத் தேவையில்லையா?”
“நீங்கள் மருந்து வாங்கத்தான் போகிறீர்கள் என்று எப்படி நம்புவது?”
“என்னுடன் வாருங்கள். நிரூபிக்கிறேன்.”
அந்தப் பெண் காவல் துறை அதிகாரி சட்டென்று வண்டியில் ஏறிவிட்டாள். பயத்துடன் வண்டியைக் கிளப்பினேன். சிறிது தூரம் செல்லும்வரை வண்டியில் மவுனம் நிலவியது.
“என்னப்பா பயந்துவிட்டாயா?”
என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவளை இனம் கண்டு கொண்டபின் கதறி அழுதேன்..
“உங்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டதா? ஏன் இத்தனை நாள் என்னைத் தவிக்க விட்டீர்கள்?”
அன்னை முறுவலித்தாள்.
“நான் வந்தால் கேள்வி கேட்கலாம் என்பது உன் எண்ணம். ஆனால் உண்மை என்னவென்றால் உன் மனதில் கேள்வி இருந்தால்தான்  நான் வருவேன். இதுவரை உன் மனதில் எந்தக் கேள்வியும் இல்லை. அதனால் நான் வரவில்லை.”
“இப்போது ஏன் வந்தீர்கள்?”
“மக்கள் ஏன் இந்தக் கொள்ளை நோயால் இவ்வளவு அல்லல்பட வேண்டும்? சிலருக்கு வாழ்க்கையின் ஜீவாதாரமே அஸ்தமித்துவிட்டது.  பலர் பலியாகிவிட்டார்கள். உன் மனதில் இருந்த வேதனையே ஒரு கேள்வியாக உன்னை வதைத்துக்கொண்டிருக்கிறது. அதைத் தீர்க்கத்தான்  வந்தேன்.”
சாலை வெறிச்சோடிப் போயிருந்தது. தெருவிளக்கு எரியவில்லை. காரை விட்டு இறங்கி மறுபக்கம் வந்து அன்னையை விழுந்து வணங்கி அவள் காலடியில் அமர்ந்துகொண்டேன். அவளுடைய அழகு முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“எத்தனையோ முறை சொல்லிவிட்டேன், மனதில் அன்பு குறைவதால்தான் துன்பமும் நோயும் வருகின்றன என்று! மக்களின் மனநிலை எப்படியாகிவிட்டது என்பதற்கு ஒரு மாதிரி காட்டுகிறேன். அங்கே பார்.”
அது ஒரு பெரிய நகரம். ஒரு எழுபது வயது செல்வந்தருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  அது நோயின் ஆரம்பகட்டம். வீட்டில் இருந்தபடியே சிகிச்சை செய்துகொள்கிறேன் என்று செல்வந்தர் மன்றாடினார். அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். செல்வந்தரின் குடும்பத்தாரும் அதிகாரிகளை எதிர்க்கவில்லை.
செல்வந்தரைப் பலவந்ததமாகத் தூக்கிச் சென்று ஒரு சிகிச்சை மையத்தில் அடைத்து வைத்தார்கள். செல்வந்தருக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. அவர் ஐநூறு கோடிக்குச் சொந்தக்காரர். வசதியாக வாழ்ந்தவர். சிகிச்சை மையத்தில் படுக்கை வசதியாக இல்லை. கழிப்பறை சுத்தமாக இல்லை. அதையெல்லாம்கூட செல்வந்தவர் பொறுத்துக்கொண்டார். அங்கே கொடுக்கப்பட்ட உணவு அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.  அந்த உணவில் சுவையில்லை. தரமில்லை. அளவும் போதவில்லை.
சிகிச்சை மையத்தில் இருந்த அதிகாரிகளிடம்தன் நிலையைச் சொல்லி அழுதார் செல்வந்தர். அவர்கள் மனமிரங்கினார்கள். செல்வந்தர் வீட்டிலிருந்து உணவு கொண்டு வரலாம் என்று அவருக்கு மட்டும்  விசேஷ அனுமதி அளித்தார்கள். செல்வந்தர் உற்சாகமாகத் தன் முதல் மகனை அலைபேசியில் அழைத்தார். அவன் அவருடைய அழைப்பை ஏற்கவில்லை. ஏதோ வேலையாக இருக்கிறான் என்று நினைத்து அவன் மனைவியை அழைத்தார். அவளும் இவருடைய அழைப்பை நிராகரித்தாள். செல்வந்தர் தன் இரண்டாவது மகனை அழைத்தார். அவனுடைய மனைவியை அழைத்தார். வேறு ஊரில் இருக்கும் தன் மகளை அழைத்தார். அவருடைய அழைப்பை யாரும் ஏற்கவில்லை. பின் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தின் மேலாளரை அழைத்து அவரை தன் வீட்டுக்குப் போய் உணவு வாங்கிவரச் சொன்னார்.  இதோ போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனவரிடமிருந்து அரை மணி நேரமாக எந்த செய்தியும் வரவில்லை.
செல்வந்தர் அவரை மீண்டும் அழைத்தபோது அவருடைய அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதற்கெல்லாம் காரணம் இருந்தது. செல்வந்தருக்கு கொரோனா நோய் வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருடைய வீட்டில் உள்ளவர்கள் அவர் காலம் முடிந்துவிட்டது என்று தீர்மானித்து பாகப்பிரிவினை பேசத் தொடங்கிவிட்டார்கள். ‘எனக்குப் பசிக்கிறது’ என்று பிச்சை எடுக்காத குறையாக அந்தச்  செல்வந்தர் எழுப்பிய அபயக்குரலைக் கேட்க யாருமே இல்லை.
செல்வந்தருக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எத்தனை கோடிகள் சம்பாதித்து என்ன பயன்? பிள்ளைகள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்து என்ன பயன்? ஒரு வேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாமல் போய்விட்டதே! செல்வந்தருக்கு வாழ வேண்டும் என்ற ஆசையே போய்விட்டது.
சிகிச்சை மையத்தில் கொடுக்கப்பட்ட உணவை யாருக்கும் தெரியாமல் வெளியில் கொட்டிவிட்டார். தனக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது என்ற உண்மையை அங்கிருந்தவர்களிடம் மறைத்துவிட்டார். இரண்டு நாட்கள் பட்டினி கிடந்தார். மூன்றாவது நாள் இறந்தே போனார்.
“மனிதர்களிடம் பொதுவாக அன்பு குறைந்துவிட்டது. அதனால்தான் இந்தத் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது.”
“நோய் வந்தபிறகுதானே நீங்கள் சொன்ன நிகழ்வு நடந்தது?”
“நோய் வரும் முன்பே அவருடைய மகன்களின் மனநிலை அப்படித்தான் இருந்தது. தந்தை எப்போது சாவார், சொத்து எப்போது கைக்கு வரும் என்று அவர்கள் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
“நான் மனிதர்களைப் படைத்தேன். அவர்கள் இன்பமாக வாழ பொருட்களைப் படைத்தேன். நேரான வாழ்க்கைக்குப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். மனிதர்களை நேசிக்க வேண்டும். நீங்களோ  தலைகீழாக வாழ்கிறீர்கள். பொருட்களை நேசிக்கிறீர்கள். அந்தப் பொருட்களைப் பெற மனிதர்களைப் பயன்படுத்துகிறீர்கள். பெற்ற தந்தைக்கு உணவு கொடுக்காமல் அவரைக் கொன்றுவிட்டு அவர் சம்பாதித்த பொருட்களை நேசிக்கும் பிள்ளைகள்தான் மனித இனத்தின்  மிகக் கொடிய நோய். அதோடு ஒப்பிட்டால் இப்போது வந்திருக்கும் கொள்ளை நோய் சாதாரண ஜலதோஷம் போன்றதுதான்.”
 “அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே என்று அபிராமி பட்டர் உங்களிடம் உருகுகிறார். அன்பு குறைந்தால் நோயாக வருவதும் நீங்கள்தான். அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாக வருவதும் நீங்கள்தான். நோயாக வந்தது போதும் தாயே! மருந்தாக வாருங்கள்.”
“அந்த அவதாரத்தையும் எடுத்துவிட்டேன். இந்த நெருக்கடியான நேரத்தில்  உயிரைப் பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் – இவர்கள் மூலம் நான் அன்பைப் புகட்டிக்கொண்டிருக்கிறேன். அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல், தந்துவிட்டுப் போகிறேன்.”
“உயிர்க் கொல்லும் நோய் வந்தாலும் உணவின்றித் தவித்தாலும்,  உறவும் நட்பும் உதறித் தள்ளினாலும், ஏன்,  நீங்களே என்னைக் கைவிட்டாலும் நான் என்றென்றும் உங்கள் கொத்தடிமை என்பதை மறவாத நெஞ்சத்தைக் கொடுங்கள், தாயே! அது போதும் எனக்கு.”
அன்னையின் சிரிப்பு அவனியெங்கும் எதிரொலித்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar