Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உபாசகனும் உமா மகேஸ்வரியும்
 
பக்தி கதைகள்
உபாசகனும் உமா மகேஸ்வரியும்

என் அறைக்குள் பாய்ந்து வந்த அந்தப் பெண்ணிற்கு முப்பது வயதிருக்கும். அழகாக இருந்தாள். அவளுடைய ஆடைகள் கசங்கியிருந்தன. கண்கள் கலங்கியிருந்தன.
“பச்சைப்புடவைக்காரி செய்யற அநியாயத்திற்கு ஒரு அளவேயில்லாமப் போயிருச்சிய்யா. என்னுடைய மானத்துக்கும் உயிருக்குமே ஆபத்து வந்திருச்சிங்கய்யா. நீங்கதான்…”
அவளை அமர வைத்து என் அருகில் இருந்த குளிர்ந்த நீரை அவள் பக்கம் நகர்த்தினேன். ஒரே மடக்கில் தண்ணீரைக் குடித்துவிட்டு விம்மலுக்கிடையில் அவள் பேசியதன் சாரம் இதுதான்.
அவள் பெயர் உமா. படிப்பு – இலக்கியத்தில் முதுகலை. பச்சைப்புடவைக்காரியின் தீவிர பக்தை.
அவளுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருக்கிறதாம். அதனால் திருமணம் தட்டிப்போய்க்கொண்டேயிருக்கிறது.
அவளது பெற்றோர் அவளை ஒரு துறவியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர் பெரிய சக்தி உபாசகராம். வெறுங்கையில் குங்குமத்தை வரவழைத்துக்கொடுத்ததும் உமாவின் பெற்றோர் அசந்துவிட்டனர்.   
“என்னம்மா கல்யாணம் செஞ்சிக்கணுமா?” அவரது பார்வையும், சிரிப்பும் உமாவிற்கு அருவருப்பாக இருந்தது.
“அதெல்லாம் எங்காத்தா மீனாட்சி பாத்துப் பண்ணிவைப்பா.” என்று கொஞ்சம் திமிராக பதில் சொல்லியிருக்கிறாள் உமா.
“அப்படியா? உன் மீனாட்சியே எனக்குக் கட்டுப்பட்டவதான் தெரியுமா?”
“அவள் அண்ட சராசரங்களுக்குச் சொந்தக்காரி. நீங்களும் நானும் இன்றிருந்து நாளை மடியப்போகும் மனிதப் புழுக்கள்.”
“பார்க்கிறாயா? உன் மீனாட்சியை என் கைக்குள் வரவழைக்கிறேன்.”
இரண்டு கைகளையும் உமாவிடம் நன்றாக விரித்துக் காட்டிவிட்டு கண்களை மூடி ஏதோ மந்திரங்களை ஜபித்தார். வலது கையை மூடினார். பின் உமாவின் முகத்திற்கு அருகில் கொண்டுவந்து திறந்தார். உள்ளே ஒரு அழகான மீனாட்சியின் விக்ரகம் இருந்தது.
“இந்த விக்ரகத்திற்குத் தினமும் பாலால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். உங்கள் மகளின் திருமணம் எப்படியும் ஒரு மாதத்தில் நிச்சயமாகிவிடும். ஒருவேளை அப்படியும் நடக்கவில்லையென்றால் அவளை ஆன்மிக வாழ்க்கையில் விட்டுவிடுங்கள். என் சிஷ்யையாக இருந்து பெரிய அளவில் புகழ் பெறுவாள்.”
“அந்தாளு பார்வையே சரியில்லங்க. அந்த ஆசாமி கையில அம்மாவோட சிலை வரலாமா? எனக்குக் கல்யாணமே ஆகாட்டியும் பரவாயில்லய்யா. அவன்கிட்ட போனா என் மானமே போயிரும்யா. நீங்கதான்யா என்னக் காப்பாத்தணும்.”
பல நிமிடங்கள் இதே ரீதியில் புலம்பிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
மாலை சொக்கநாதர் கோயிலுக்கு நடைப்பயணமாகக் கிளம்பினேன். கோயில் மூடியிருந்தது. கம்பிக் கதவின் வழியாக பச்சைப்புடவைக்காரியின் திருவுருவம் தெரிந்தது. ஒரு தீயவனின் கைகளில் ஏன் அன்னை சிலையுருவாக வரவேண்டும்? உமாவிற்கு வந்ததுபோல் எனக்குக் கோபம் வரவில்லை. அழுகைதான் வந்தது.
“யாரு சாமி பூக்கடை வாசல்ல செருப்பை போட்டுட்டுப் போனது?”
குரல் கேட்டுத் திரும்பினேன்.
“நான் செருப்பை போட்டபோது இங்க பூக்கடை இல்லையே,”
“அரைநொடிப் பொழுதில் பூவுலகத்தையே உருவாக்கும் என்னால் ஒரு பூக்கடையை உருவாக்கமுடியாதா என்ன?”
அவள் கால்களில் விழுந்தேன்.
“பூமியைப் படைக்கும் வல்லமை படைத்த நீங்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடலாமா? தவறான வழியில் செல்லும் அந்த உபாசகன் கைகளில் நீங்கள் சிலை உருவாக வரலாமா? அந்தப் பெண்ணின் நம்பிக்கையே சீர்குலைந்துவிடும் போலிருக்கிறதே!”
“இது என்னப்பா கூத்து? உன் பகைவனின் கையில் உன் புகைப்படம் இருந்தால் நீ அவனுடன் நண்பனாகிவிட்டாய் என்று அர்த்தமா என்ன?”
“என்ன நடக்கிறது, தாயே? ஒன்றுமே புரியவில்லை.”
“இந்தப் பெண்ணின் கருமக்கணக்கில் சில குளறுபடிகள் இருக்கின்றன. இன்னும் சில நாட்கள் இவளுக்கு மன உளைச்சல் இருக்கும். அதன் பின் எல்லாம் சரியாகிவிடும். இவளைக் கையில் வைத்துத் தாங்கும் நல்ல கணவன் கிடைப்பான்.  பெரிய வாழ்க்கை வாழப் போகிறாள்.”
“அந்த உபாசகன்.. “
“ஆரம்பத்தில் அவன் என்னுடைய பக்தனாகத்தான் இருந்தான்.  சக்தி உபாசனை செய்து பல அபூர்வ சக்திகளைப் பெற்றான். முதலில் அதை நல்ல விஷயத்திற்காகத்தான் பயன்படுத்தினான். ஒரு கட்டத்தில் அவனுக்கு அகங்காரம் வந்துவிட்டது. மனதில் பெண்ணாசை புகுந்தது.  இந்தப் பெண்ணை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கிறான். அவன் ஏற்கனவே செய்த உபாசனைக்குரிய பலனை இப்போது அனுபவிக்கிறான். அவனிடம் உள்ள தீமைகள் திரண்டு பழுக்கவேண்டும் என்பதற்காகக் காத்திருக்கிறேன். தீமைக்கட்டி பழுத்ததும் அதை அறுத்துவிடுவேன். அவன் கிடக்கிறான் விடு. இந்தப் பெண்ணிற்கு நெருக்கமானவர்கள் யாராவது அவளுக்காக பிரார்த்தனை செய்துகொள்ளட்டும். அதற்கு ஏற்பாடு செய். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.”
அன்னை மறைந்துவிட்டாள்.
உமாவின் பெற்றோரை அழைத்து விஷயத்தைச் சொல்லலாமா என்று யோசித்தேன். வேண்டாம். அவர்கள் அந்த உபாசகனின் பிடியில் இருந்தால்...விஷயம் வில்லங்கமாகிவிடும்.  
உமாவிற்காக நானே பிரார்த்தனை செய்தால்? அவளை என் மகளாகப் பாவித்து ‘தாயே என் மகளுக்கு வாழ்க்கை கொடுங்கள்’ என வேண்டிக்கொண்டால்.. ..
அடுத்த மூன்று நாட்கள் இரவு உணவைத் தவிர்த்து, அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பாடியபடி வீட்டிலிருந்து கோயிலுக்கு நடந்து சென்று உமாவிற்காகப் பிரார்த்தனை செய்தேன்.
நான்காம் நாள். காலை. அலைபேசி ஒலித்தது. உமா.
“சார் பச்சைப்புடவைக்காரி தான் யாருன்னு காமிச்சிட்டா சார். அந்த ஆளு கொடுத்த மீனாட்சி விக்ரகம் திடீர்னு மறைஞ்சிருச்சி. எங்கப்பாகிட்ட உங்க நம்பரக் கொடுத்திருக்கேன். கூப்பிட்டார்ன்னா கொஞ்சம் நல்ல புத்தி சொல்லுங்க “
அன்று மாலை உமாவின் தந்தையிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னார்.
“நாள் தவறாம பால் ஊத்தி பூஜை செஞ்சிக்கிட்டிருந்தோம் சார். திடீர்னு அந்த விக்ரகம் மறைஞ்சிருச்சி. ஏதாவது பரிகாரம்”
“அந்த விக்ரகத்த யார் கொடுத்தாரோ அவர்கிட்டயே பரிகாரம் கேளுங்க. என்கிட்ட கேட்டா?”
இரண்டு நாட்கள் கழித்து உமாவின் தந்தை மீண்டும் போனில் அழைத்தார்.
“அந்த விக்ரகத்த எனக்குக் கொடுத்த சாமியாரக் காணல சார். எங்க போயிருக்காரு, எப்ப வருவாருன்னு யாருக்குமே தெரியல சார். என்ன செய்யலாம் சார்?”
“இனிமேலாவது செப்படி வித்தைக்காரங்களத் தேடியலையாம மகமாயி கால்ல விழுந்து கதறுங்க. எங்காத்தா பச்சைப்புடவைக்காரி என்னிக்கும் உங்களக் கைவிடமாட்டா. உங்க மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை காத்துக்கிட்டிருக்கு”
அன்று வேலைகளெல்லாம் முடித்துவிட்டுக் கிளம்பலாம் என நினைத்தபோது என் உதவியாளர் உள்ளே வந்தார்.
“இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன் போடணுமாம். காலேஜ் புரொபசராம்”
அவன் சொல்லி முடிப்பதற்குள் அந்தப் பெண்மணி உள்ளே நுழைந்துவிட்டாள்.
உதவியாளர் சென்றுவிட்டார்.
“நாளைக்கு வாருங்களேன்.. “
“எனக்கே வாய்தா கொடுக்கிறாயா?”
அன்னையை அடையாளம் கண்டு விழுந்து வணங்கினேன்.
“அந்தப் பெண்ணிற்காக நீயே விரதமிருந்து என் கோயிலுக்கு நடந்து வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. முறையாக சக்தி உபாசனை செய்தால் வரும் பலன்களை உனக்குக் கொடுக்கிறேன். நீ சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். நீர் மேல் நடக்கலாம். காற்றில் மிதக்கலாம்.”
“இது என்ன கொடுமை, தாயே! நீங்களே என்னைச் சோதிக்கலாமா? தாயே நான் உங்களை உபாசிப்பவன் இல்லை. உங்கள் பக்தனும் இல்லை. உங்கள் கொத்தடிமை. நீங்கள் கொடுக்கும் சக்திகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற அறிவுகூட இல்லாத கொத்தடிமை. யாருக்காவது என் மூலம் நல்லது செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால் என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். என் மூலம் நல்லது நடக்கிறது என எனக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். “
“இந்தச் சக்திகள் எல்லாம்...”
“இந்த பராசக்தி எனக்கே எனக்கென்று இருக்கும்போது வேறு எந்தச் சக்தியும் தேவையில்லை, தாயே!’’
அன்னை சிரித்தபடி மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar