Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பிரபஞ்சத்துக்கான தாய்ப்பால்
 
பக்தி கதைகள்
பிரபஞ்சத்துக்கான தாய்ப்பால்


மண்ணிலே வேலி போடலாம்
வானத்திலே வேலி போடலாமா? போடலாம்.
மண்ணிலும் வானம் தானே நிரம்பியிருக்கிறது. மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா?
‘‘உடலைக் கட்டு உயிரைக் கட்டலாம்
உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்
உள்ளத்தைக் கட்டு சக்தியைக் கட்டலாம்’’
என்னும் பாரதியாரின் சித்தாந்தம் தான் ரிஷிகேஷ் பயணம் முழுக்க மனதிற்குள் வியாபித்திருந்தது. நம் தேசத்தின் ஒவ்வொரு மாநிலமும் ஒருமுறையேனும் பயணித்துப் பரவசப்பட வேண்டிய பெருமை வாய்ந்தது. ஒரு வாழ்நாளுக்குள் இந்தியா முழுமையும் ஆற அமர தரிசிப்பது என்பது பெரும் வரம்.
ரிஷிகேஷ் பயணமும் அங்கு மலையைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுால் அளவிலான கரடுமுரடான அபாயமான வளைவுப் பாதைகளும் மனசுக்குள் பயத்தை விதைக்கலாம். ஆனால் எந்த வளைவில் திரும்பினாலும் மலைப்பாதையின் மறுபக்கத்தில் கூடவே சுழித்துச் சுழித்துப் பொங்கிப் பிரவகித்து  இரைச்சலோடு ஓடிவரும் கங்கையின் ஓசையும், குளுமையும் மனசுக்குள் பேரானந்தத்தை விதைக்கும்.
ஒருவிதமான சாம்பல் நிறக் கற்களோடு உருண்டோடும் கங்கையின் சிரிப்பு கேட்டது.
 ‘‘ஏன் சிரிக்கிறாய்?’’ எனக் கேட்டேன்.
கங்கையின் நதிமூலம் தெரியாது. ரிஷிமூலம் தெரியாது. எங்கேயிருக்கிறது அவள் பிரவாகத்தின் ஊற்றுக்கண் என்பதும் தெரியாது. எத்தனை யுகங்களுக்கு அவள் சத்திய சாட்சியாக இருந்தாள்? இருக்கிறாள்? இருப்பாள்? அதுவும் தெரியாது. ஆனாலும் அவளின் நீளம், அகலம், ஆழம், பிரவாகம் எல்லாமே நம் இரு கண் அளவுதான் என நினைக்கும் அறியாமை நமக்குள் தலையோடு காலாக ஊடுருவியிருக்கிறது.
இதையெல்லாம் மவுனமாகக் நினைத்துக் கொண்டே கங்கையைக் கண்ணுக்குள் நிரப்பிக் கொண்டேன். கங்கை நீர்த் திவலைகள் ஒவ்வொன்றும் கங்கை தேவியானது போலத் தோன்றியது.
அவளே நீர்த்தாய். நீர்அம்மை. நீர்தேவி. அவளுடைய ஒவ்வொரு திவலையும் ஒரு கங்கை தேவியானால் அந்த கங்கை தேவிக்குள் எத்தனை எத்தனை ஆயிரம் கோடித் திவலைகள். அந்த ஒவ்வொரு திவலைக்குள்ளும் ஓராயிரம் கங்கை. இப்படிச் சுழித்துச் சுழித்து யுகம் யுகமாக ஓடும் சத்தியம்., நீர்ச்சத்தியம் கங்கைதேவி.
மறுபடியும் கேட்டது கங்கையின் சிரிப்பொலி.
வளைந்து, நெளிந்து, அபாயகரமான வளைவுகள் வழியாகப் பேருந்து பயணிக்க, கூடவே பயணித்தாள் கங்கைத்தாய். ‘ஏன் சிரிக்கிறாய் தாயே’ என்ற என் அறியாமைக் கேள்விக்கு. அவளுடைய மவுனமே பதிலாக வந்தது.
 திரிவேணி சங்கமம் நோக்கிய பயணம்தான் அது. நகர்ப்புறத்தின் தினசரி வாழ்க்கை, புகைச்சல், ஏக்கம், பொறாமை, வெறுப்பு, வன்மம் என மண்டிக் கிடக்கும் மனசில் – நிர்மலமான தெளிவும், பவித்ரமான புத்துணர்ச்சியும் ததும்பிய பயணம் அது. வம்பு, தும்பு, வாய்ச்சவுடால், கோபம், தாபம் எல்லாம் எங்கே காணாமல் போயிற்று? அந்த மலைப்பகுதி, அதன் பனிக்குடக் குளுமை, அந்தக் காற்றின் சுகந்தம் எல்லாமே நம்மை வேறொரு பிறவியாக்குகிறது. பழைய மனசு, பழைய நாம், பழைய வெறுப்பு, பழைய கோபம், பழைய ஆற்றாமை எல்லாம் மறைந்து இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்பதான மாயச்சூழல் நம்மைப் பிணைக்கிறது. அதுவரைக்கும் வாழ்ந்ததாக நினைத்தது வெறும் மாயச் சுழல் என்பதும் தெளிவாகிறது.
‘‘எல்லா நதியிலும் இருப்பது நீர்தான். எல்லா உயிரிலும் இருப்பதும் உயிர் நீர்தான்’’ கங்கையின் நிர்மால்ய ஓட்டம் காதுகளில் மந்திரமாகக் கேட்டது. தத்துவமாகக் கேட்டது. ஞான உபதேசமாகக் கேட்டது.
திரிவேணி சங்கமத்தில் கங்கைத் தாயை,  சிமிட்டாமல் கண்களில் நிரப்பிக் கொண்டேன்.
பேருந்தை விட்டு இறங்கி காலாற நடந்தால்....குறுகலான தெருக்கள், மலைப்பாங்கான பாதைகள், கையகலச் சிறிய கடைகள், குங்குமத்தைக் கோடாக நீட்பு இழுத்த நெற்றியோடு அன்பான மக்கள் என்று காற்றிலும், ஊரிலும் புதுவாசனை கமழ்ந்தது.
திரிவேணி சங்கமத்தின் ஜில்லென்ற குளிர்ச்சியோடு சுவாசம் சுகானுபவமானது. அம்மையின் பனிக்குட நீரில் பத்துமாதம் நீந்திக் கிடந்த கருவறை சொர்க்கம் இப்போது நினைவிருக்காது. அந்தச் சொர்க்கப் பொழுதை மறுபடியும் உணர விரும்பினால் திரிவேணி சங்கமத்திற்கு வரவேண்டும்.
மறுபடியும் கங்கைத்தாயின் சிரிப்பு கேட்டது. ‘‘ஏன்? என்ன? எதற்கு? என்று சொல்லாமல் சிரிக்கிறாயே தாயே... இது  நியாயமா?’’ என்றேன்.  
இந்த முறை கங்கையோடு யமுனை, மறைவாக சரஸ்வதி என மூன்று சக்திகளும் சேர்ந்து சிரிப்பதாக தோன்றியது. அடர்த்தியாக, ஆழமாக, குளிர்ச்சியாக, தெளிச்சியாக, இனிமையாக, அமுதமாக சங்கமித்த மூன்று சக்திகள்.
சக்திகள் திருத்தலங்களில் மட்டுமா? நீர்த்தலங்களிலும் நிலை கொண்டுதானே இருப்பார்கள்? திரிவேணி சங்கமத்தின் அதிர்வலைகளில் ஆழமாக இன்னும் ஆழமாக மூழ்கும் போது ஜென்ம ஜென்மமாக அழுக்காகி, அழுகி, இறுகி துருப்பிடித்துக் கிடக்கும் நம் ஞாபக அடுக்குகள் திறக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக நீர்ச்சக்திகளின் குளிர்ச்சியில் மூழ்கும்போது யுகாந்திர முன்பிறவிச் சங்கிலிக் கண்ணிகள் ஒவ்வொன்றாகப் புலப்படுகின்றன.
வாயார திரிவேணி தீர்த்தம் அருந்திய போது,  ‘‘தாய்ப்பால் மாதிரி இருக்கிறதா?’’ கேட்டாள் கங்கைத்தாய்.
 ‘‘ஆமாம் தாயே’’
 ‘‘எண்பது ஆண்டுகள் தானே இந்த வாழ்க்கை. அதற்கு மூலாதாரம் ஓராண்டு அருந்திய தாய்ப்பால். நதிகள், ஆறுகள், குளங்கள், கிணறுகள் எல்லாம் பிரபஞ்சத்துக்கான நிரந்தரத் தாய்ப்பால் தானே? அதை விஷமாக்கி விட்டு பாவம் தொலைக்க எங்களிடம் வந்து மூழ்குவது நியாயமா?’’
திவலைகள் ஒவ்வொன்றும் ஏளனமாய்ச் சிரிக்க....திரிவேணிப் பனிநீரில் உறைந்து போனேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar