Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மந்திர உபதேசம்
 
பக்தி கதைகள்
மந்திர உபதேசம்

கர்நாடக இசைக்கே இலக்கணம் வகுத்தது போல் கீர்த்தனைகளை இயற்றி அதனால் பக்தி நெறியை பரப்பி வந்த தியாகய்யர் தான் அந்த சாலைமேல் காஞ்சியம்பதி நோக்கி பயணித்தபடி இருந்தார். அப்படிப் பயணித்தவர் தான் பெத்தபெருமாள் உருண்டு விழுந்த சபதம் கேட்டு எட்டிப் பார்த்தார்.
உதட்டில் ராமநாமம்!
பார்வையோ பெத்த பெருமாள் மேல்...!
பெத்த பெருமாள் உண்மையில் கொடுத்து வைத்தவன்... ஒருவர் தன் வாழ்வில் பாவங்களை மட்டுமே செய்வதில்லை. புண்ணியங்களும் செய்வதுண்டல்லவா? அப்படி அவன் செய்த பாவங்கள் அவனை நிர்கதிக்கு ஆளாக்கிய போதிலும், அவன் செய்த புண்ணியம் தியாகய்யரின் தரிசனத்திற்கு அவனை ஆட்படுத்திவிட்டது. அதிலும் ராம நாம ஜெபத்தோடு கூடிய பார்வை...!
அந்த பார்வை அவனை எழச்செய்தது!
அவர் சைகை காட்டி பல்லக்கின் அருகே அழைத்தார். பெத்த பெருமாளும் மேனிமேல் சிராய்ப்புகளுடன் அவரை நெருங்கினான்! கண்களில் கண்ணீர்.
அவரும் பேசலானார்
‘‘யாரப்பா நீ?’’
‘‘பெரும் பாவி சாமி...’’
‘‘பாவியா.. அதிலும் பெரும்பாவியா?’’
‘‘ஆம்... கோடானுகோடி செல்வம், மனைவி, மக்கள், உற்றார் உறவினர் இவர்களை எல்லாம் இழந்தவனை என்னவென்று சொல்வது சுவாமி...?’’
‘‘பற்றற்றவர்களும் இவர்களை இழந்தவர்களே! நானும் கூட அப்படித்தான்... அப்படியானால் நான் பெரும்பாவியா?
‘‘சுவாமி என்னை உங்களோடு பொருத்திப் பேசுகிறீர்களே...! உங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனது?’’
‘‘ஒரே மனது தானப்பா... அது பெரிதாய் தெரிவதும் சிறிதாய் தெரிவதும் பார்க்கும் பார்வையை பொருத்தது! உனக்கு தான் பெரிய மனது – அதனால் தான் என் மனதும் உனக்கு பெரிதாய் தெரிகிறது.’’
‘‘சுவாமி.. என்ன ஒரு இதமான சொற்கள்! எனக்கு இதற்கெல்லாம் தகுதியே இல்லை. நான் வாழத் தெரியாதவனும் கூட. சாவதற்காக இந்த குன்றுமேல் ஏறினேன் – ஆனால் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். அந்த கடவுள் என்னை சாகக்கூட விட மாட்டேன் என்கிறான்..’’
– பெத்த பெருமாள் கண்ணீர் வடிக்கலானான்.
‘‘படைத்தவனுக்கு தெரியாதா எப்போது அழைத்துக் கொள்ள வேண்டும் என்று... எதற்காக இந்த கொடிய செயல்?’’
‘‘வாழத்தெரியவில்லை என்றேனே சுவாமி... தெரியாதது மட்டுமல்ல... வாழ முடியவுமில்லை! எல்லோரும் பகையாகி விட்டனரே...?’’
‘‘பொய் சொல்கிறாய் நீ...’’
‘‘பொய்யா.. நானா...? சத்தியமாக இல்லை’’
‘‘பின் என்ன... உனக்கு நட்பாக உன் எதிரிலேயே நானிருக்க எல்லோரும் பகையாகி விட்டனர் என்றால் அது பொய்தானே?’’
‘‘சுவாமி... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’
‘‘கவலைப்படாதே... எங்களோடு வா! எப்படி வாழ வேண்டும் என்பது தானாக தெரிந்து விடும். முக்திக்கு வழி காட்டும் அத்தி வரதன் குளத்திலிருந்தும் வெளிப்பட இருக்கிறான். ஒரு மண்டல ஆண்டு காலம் ஜலவாசத்தில் இருந்தவன் அதே ஒரு மண்டல காலம் நில வாசத்தில் இருக்கப்போவதே என்னையும், உன்னையும் போன்றவர்களுக்கு முக்தியளிக்கத்தான்...
வா... அரிய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்! உன் பாவங்கள் தீரட்டும்... நல்வழி பிறக்கட்டும்...’’
– தியாகய்யர் பெத்த பெருமாளுக்குச் சொன்ன செய்தி பெத்த பெருமாளை சிலிர்க்கச் செய்தது!
‘‘சுவாமி... இதோ இப்போதே அந்த கிணற்றில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, உங்களின் கடைச் சீடர்களில் ஒருவனாக வந்து சேருகிறேன்’’  – என்று சொன்னபடியே வயல் வரப்பில் இறங்கி ஓடியவன், தற்கொலைக்காக குதிக்க நினைத்த கிணற்றில்  இறங்கி மூழ்கி எழுந்தவனாக, ஆடைகளையும் பிழிந்து உடுத்திக் கொண்டு ஓடி வந்தான். பல்லக்கின் முன் சாலை என்றும் பாராமல் வணங்கி விழுந்து எழுந்து நின்றான்.
தன் வசமிருந்த மந்திர அட்சதைகளை அவன் தலை மீது துாவிய  தியாகய்யர் அவனை அருகில் அழைத்து ‘‘காதை அருகில் கொண்டு வா..’’ என்றார். அப்படியே செய்தான். அக்காதுக்குள் ‘‘ராம் ராம்.. ஜெயராம்’’ என்றார்.
‘‘சுவாமி...’’
‘‘உனக்கு மந்த்ரோபதேசமாகி விட்டது. நான் சொன்ன நாமத்தை கெட்டியாக பிடித்துக் கொள். இடையறாது சொல்! நீ முன் எடுத்த பிறப்பில் செய்த பாவங்களெல்லாமும் கூட, தீயினில் துாசாகும். உனக்கு நல்வழி பிறக்கும்’’
‘‘சுவாமி... நடப்பதெல்லாம் கனவு போல் இருக்கிறது. உண்மையில் நான் பாவியில்லை – புண்ணியன், பெரும் புண்ணியன்!’’
‘‘ராம நாமம் சொல்லத் தெரிந்த ஒவ்வொருவருமே புண்ணியர் தானப்பா. வாழ்க நீ!’’ – என்று சிரசில் கை வைத்து வாழ்த்தினார்.
எல்லாமே ஒரு அரை மணிநேர கால அளவுக்குள் நடந்து முடிந்து விட்டது. அவன் கிணற்றில் விழுந்திருந்தால் பிணமாகியிருப்பான். ஒரு மகானின் கண்களில் விழுந்ததால் குணமானவனானான்!
தியாகய்யரின் யாத்திரை தொடர்ந்தது. தியாகய்யரும் தன் ராமநாமஜபத்தை தொடரலானார்.
21 வருடங்களாக தொடர்ந்து ஜபித்து வரும் நாமம் அது! ஒரு நாளைக்கு ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் என்று ஒரு கணக்கு அதன் பின்னால் உள்ளது. உறங்கும் நேரம், உண்ணும் நேரம், உசாவும் (பேசும்) நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் ‘ராம்ராம்’ என்றே அவர் மனம் ஜபித்திடும்.
96 கோடி முறை ராமநாமத்தை ஜபிக்கச் சொல்லி, காஞ்சி ராம கிருஷ்ண யதீந்திரர் என்பவர் இட்ட கட்டளை இன்னும் சில மணி நேரங்களில் ஈடேறப் போகிறது. ஆம் 21 வருட காலம் முடியப் போகிறது! அதுவும் கச்சிதமாக காஞ்சி வரதன் கோயிலின் அனந்தசரஸ் திருக்குளத்தின் மிசை!
‘க்ரஹ பலமேமி ராம...?
அனுக்ரஹ பலமே பலமு..!’
 என்று எம்பெருமானின் கருணையும் கடாட்சமுமே பெரிது என்று பாடியவர் தன் 96 கோடி என்ற அளவை அத்திவரதனை கண்டபடியே நிறைவு செய்யப்போவது என்பது ஒரு திட்டமிட்ட செயலா – இல்லை இதுவும் அவன் கருணையா என்றால் கருணையே என்பதே தியாகய்யரின் கருத்து.
அந்த கருத்தோடு அவர் கச்சிவரதனின் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலானார். எங்கும் ஒரே கோலாகலம்! அங்கே தென்பட்ட அனைவருமே முக்தர்கள்! முக்தர்களுக்கே அவனைத் தரிசிக்கும் பேறும் கிட்டிடும் என்பது தானே உண்மை. தியாகய்யரை அறிந்தவர்கள் அவர் கால்களில் விழுந்து வணங்கலாயினர். அவர்களுக்கெல்லாம் இரட்டைப் பேறு! ஒன்று அத்திவரத தரிசனம் – அடுத்து மகானின் தரிசனப்பேறு...
தியாகய்யர் பூரித்துப் போனார்!
மேலே பேரருளாளனாக காட்சி தந்தவனை கண்குளிர தரிசித்தவர் குளக்கரையில் அத்திவரதனை மனம் குளிர தரிசிக்கலானார். அவரோடும் அவர் சீடர்களோடும் எல்லா இடங்களுக்கும் பெத்த பெருமாளும் சென்றான். அத்திவரதரின் தரிசனம் அவன் உள்ளத்தில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திரனின் மேற்பார்வையில் விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட திருமேனி...! காலங்கள் கடந்தும் தன்னிலை மாறாது நன்னிலையோடு காட்சி தந்த அதிசயத்தை எண்ணி அவன் மனம் வியந்தது. அப்போது அங்கேயே தியாகய்யர் சில கிருதிகளை மனமுருக பாடலானார்.
காலத்தால் அவை ‘காஞ்சி கிருதி’ என்று பெயர் கொள்ளப்போவது அவருக்கு தெரியாது.
அன்று தியாகய்யர் காஞ்சியிலேயே தங்கி ஏகாம்பரேஸ்வரரையும், காமாட்சியையும் தரிசனம் செய்தவராக நெகிழ்ந்து போனார்.
அனந்தசரஸ் குளத்தை ஒட்டியே தங்கியிருந்தவர் விடிகாலை எல்லோரும் எழும் முன்பே எழுந்து விட்டார். அவரை அப்போது யாரோ அழைப்பது போல உணர்ந்தவர் தன்னிச்சையாக நடந்து குளக்கரையை அடைந்தபோது அங்கே ஒருவர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார்.
‘இந்தநாள் ஒரு பொன்னாள்...
 வாழ்வின் துயரங்கள் ஒழிந்தநாள்..’ என்கிற பொருளில் பாடியவர் குரல் தியாகய்யரை மயக்கியது. அப்போது குளக்கரையில் எவருமில்லை. விண்ணிலோ வாரி இறைத்தது போல நட்சத்திர கூட்டம்.
தியாகய்யர் அவரை நெருங்கி நின்று அவர் பாடலில் தன்னை கரைக்கலானார். அவர் பாடிமுடிக்கும் வரை அவர் கவனத்தில் படக்கூட விரும்பவில்லை. அது அவர் பாடும் போக்கை பாதிக்க கூடும் என்று கருதினார். ஆனால் அவரோ தியாகய்யரை பார்த்து விட்டார். நெருங்கி வந்து புன்னகைத்தார். அது அசாதாரண புன்னகை. அவர் மீதும் அற்புதவாசம். தியாகய்யர் தன்னையும் மறந்து அவரை கைகூப்பி வணங்கினார். அப்படியே ‘‘அற்புதமான சாரீரம் – அருமையான கருத்துக்கள், என் உள்ளம் உருகிவிட்டது’’ என்றார்.
‘‘உன்னால் என் உள்ளமும் உருகப் போய்தான் நானும் உன்னைக் காண வந்தேன்’’ என்றார் அவர்.
‘‘தாங்கள்?’’
‘‘என்னைத் தெரியவில்லையா?’’
‘‘ஸ்துாலம் தெரிகிறது. சூட்சமம் தெரியவில்லையே...?’’
‘‘நன்றாக உற்றுப்பார் தெரியும். 96 கோடிமுறை ஜெபித்த ராம நாமம் உன் ஆன்ம அழுக்கை எல்லாம் கழுவித் துடைத்து விட்டது. இந்த அனந்தசரசின் நீராடலும், அத்திவரதன் தரிசனமும் உன் மோட்ச சித்திக்கு உத்தரவாதம் அளித்து விட்டன. உன் பாடல்கள்கூட சாகாவரம் பெற்று சஞ்சாரம் கண்டபடியே இருக்கப்போகிறது. உனக்கு நான் இவ்வேளை ஒரு பரிசும் தர விரும்புகிறேன்’’ – என்று தியாகய்யரை அதிர்வுக்கு மேல் அதிர்வுக்கு ஆளாக்கியவர் தன் வசமிருந்த ஒரு ஏட்டுக்கட்டை எடுத்து நீட்டினார். அதன் மேல் ‘ஸ்வராகர்ணம்’ என்கிற எழுத்துகள்! அது ஒரு சங்கீத கிரந்தம்.. தேவ நன்னுால்! வாங்கிப் பார்த்த தியாகய்யர் திரும்ப நிமிர்ந்து அவரைப் பார்த்தபோது அவரது சூட்சம ரூபமும் தெரியலாயிற்று...!
அவர்....?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar