Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » செல்வக்கடல் மகாலட்சுமி
 
பக்தி கதைகள்
செல்வக்கடல் மகாலட்சுமி

‘‘தாயே இரு கேள்விகள்’’
‘‘நீ எப்போதும் கேள்விகளால் ஆனவள்தானே மகளே...’’
‘‘மகளின் சூல் தாய் அறியாததா?’’
‘‘கேள்வியும் நீயே...பதிலும் நீயே தாயே...’’
‘‘ஆஹா...சொல் விளையாட்டை என்னிடமே பேசிக் காட்டுகிறாயா மகளே?’’
‘‘சொல்லைக் கொடுத்ததும் நீ... சொல்லை எடுத்ததும் நீ. சொல்லாகவே நிற்பதும் நீ. சொல்லைக் கடந்து நிற்பவளும் நீ... சரிதானே தாயே?’’
பதில் சொல்லாமல் புன்னகைத்தாள் அம்மை. ஓர் அம்மை இல்லை. மூன்று அம்மை தரிசனம் ஓரிடத்தில். எங்கே கிடைக்கும் இந்த நிம்மதி வேறிடத்தில்?
அது உலகத்தின் ஒட்டு மொத்தப் பரபரப்பும், வேகமும், உழைப்பும், பிழைப்பும் கொட்டிக் கிடக்கும் பிரதேசம். வெற்றியும், தோல்வியும், களிப்பும், கண்ணீரும் அருகருகே முட்டிக் கிடக்கும் பிரதேசம். செல்வச் செழிப்பின் உச்சமும், வறுமைச் சுழிப்பின் உச்சமும் அருகருகே நடக்கும் பிரதேசம். துறவும், உறவும், பிரிவும், செறிவும் பின்னிப் பிணைந்து கிடக்கும் பிரதேசம்.
அதுதான் மும்பையின் மகாலட்சுமி திருத்தலப் பிரதேசம். அவளின் சன்னிதானம் செல்லும் வழி நெடுக செந்தாமரைப் பூவும், சாமந்திப் பூவும் கொட்டிக் கிடக்கும் கடைகள். வண்ண வண்ண சரிகை வஸ்திரங்கள் கொட்டிக் கிடக்கும் கடைகள்.  கூட்டம் கூட்டமாகப் புறாக்கள் படபடவென்று சிறகடித்தபடித் தானியங்களைத் கொத்தித் தின்னும் பேரழகே தாய்மைத் தரிசனமாகத் தெரியும்.
‘‘தங்களுக்கு வியாபாரம் நடக்கும்... தங்கள் வாழ்வும் வறுமையைக் கடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் கடைக்காரர்கள், பூ வியாபாரிகள் கண்களின் வெளிச்சமே அம்மை சன்னிதானத்தின் விளக்குகளாகத் தெரியும்.
வாழ்க்கைச் சக்கரம் எனச் சொல்லுவது போன்று வட்ட வடிவ மூக்குத்தி, உறவுகளும், பிரிவுகளுமே நம்மை வாழ்வோடு பிணைக்கும் வளையங்கள் எனச் சொல்லுவது போன்று வளையல்கள், முத்து முத்தாகக் கழுத்தை நிறைக்கும் ஆரங்கள், தங்கத்தின் பரிபூரணத்தில் ஜொலிக்கும் திருமுகங்கள் இப்படியாக மகாகாளி. மகாலட்சுமி, மகாசரஸ்வதி மூவரின் சன்னிதானம்.
எந்தக் களங்கமும் இல்லாததாக நம் மனசு அமைய வேண்டும் என்று சொல்லாமல் சொல்லுவதாக வெள்ளைப் பளிங்குத் தரை. மும்பை மகாலட்சுமி திருக்கோயில் தான் மும்பையின் உயிர்நாடி. மும்பையின் முகம். மும்பையின் முதுகெலும்பு. மும்பையின் அடையாளம். மும்பையின் சகலமும் மகாலட்சுமிதான்.
தாராவி மக்களுக்கும் அவள்தான் படியளக்கிறாள். உலகின் உச்ச செல்வந்தர்களுக்கும் அவள்தான் படியளக்கிறாள். செல்வந்தர் குடும்பம் ஒன்று வைர மாலையை மகாலட்சுமிக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் வைபவம் அன்றைக்கு. நுாற்றுக்கணக்கான வைரங்கள் ஜொலித்ததை விடவும், அம்மையின் கருணைக் கண்களின் ஜொலிப்பு அதிகமாக இருந்தது.
ஓரமாக ஒதுங்கி நின்று கண் கொட்டாமல் பார்த்தேன். பரபரப்பில் சிக்கிக் கொள்ளாமல்,  எப்போதும் போல மவுனமாக அம்மையைப் பார்த்தேன். சுற்றிலும் இருந்த சப்தங்கள், பரபரப்புகள், அவசரங்கள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் எல்லாவற்றிலுமிருந்து விலகி நின்று அம்மையின் முகத்தைப் பார்த்தேன்.
‘‘உன்னில் கிடக்கவா? உன்னைக் கடக்கவா தாயே..’’
‘‘காலகாலமாக இதே தான் கேள்வி, இதேதான் பதில் மகளே...’’
‘‘உனக்கு எது மகிழ்ச்சி தாயே?’’
என் அறியாமை கேள்வியானது.
‘‘நான், எனது என்பதற்குள் குறுகிக் கிடப்பவளா நான்? இந்தக் கமண்டலமும் நான்தான்.  ஆழமாகப் பிரவகிக்கும் சமுத்திரமும் நான்தான். உள்ளங்கை நீரும் என் துளி. சமுத்திர ஆழமும் என்துளி.. எனவே மகிழ்ச்சியிலும் இருப்பேன். மகிழ்ச்சியைக் கடந்தும் இருப்பேன் மகளே...’’
‘‘உன் பின்னால் இருக்கும் அரபிக் கடலின் மூன்று ஊற்றுநீர் உப்புக் கரிக்காமல் இனிக்கிறதே எப்படி தாயே?’’
‘‘பெண்களும் அப்படித்தானே மகளே. வாழ்க்கைக் கடல் உப்புக் கரிக்கிறது. ஆனால் அந்த வருத்தத்தில் மூழ்காத மாதிரி, அவர்கள் சின்ன சின்ன நெகிழ்வில், மகிழ்வில் இனிப்பைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லவா? நீங்கள் தான் நான்.. நான் தான் நீங்கள் மகளே. அதுதான் உப்புக் கடல் நீரும், இனிப்பு ஊற்று நீரும் சொல்லுவது..’’
கூட்டம் முண்டியடித்தது. யாரோ அரசியல் தலைவர் பரிவாரத்தோடு வந்தார். சினிமா குடும்பம் ஒன்று வந்தது. பார்த்தாலே கோடீஸ்வரர்கள் என்று சொல்லத் தக்க பலர் வந்தனர். மிக எளியவர்களும் வந்து கொண்டே இருந்தார்கள்.
மகாகாளியும், மகாலட்சுமியும், மகாசரஸ்வதியும் அதே புன்னகையும், அதே பொலிவுமாக ஒரே விதமான கருணைப் பொழிவோடு காட்சியளித்தனர். தீபாராதனை, மாலை, பிரசாதம், வஸ்திரம் எனச் சம்பிரதாயங்கள் கொட்டி முழங்கின.
‘‘இந்தச் சன்னதிதானமே உன் கேள்விக்கான பதிலாக மாறியது புரிகிறதா மகளே?’’
அம்மையின் கருணை விழிகள் என்னை ஊடுருவிய சிலிர்ப்பில் வேறொரு பரவச நிலையில் கிடந்தேன் நான்.
‘‘என்ன சொல்கிறாய் தாயே?’’
‘‘இவர்கள் என்னில் கிடப்பவர்கள். நீ என்னில் கிடந்தவள். இப்போது என்னைக் கடந்தவள்...’’
‘‘இன்னமும் புரியவில்லை தாயே..’’
‘‘சடங்கு, சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம், வழிபாடு எல்லாமே ஒரு துவக்கம்தான். அதைப் பற்றிக் கொண்டு நடக்கலாம் நடை வண்டி மாதிரி. அதற்குப் பின் நடைவண்டி இல்லாமல் நடக்க வேண்டும். ஆனால் நடை வண்டியே சாஸ்வதம் என நினைப்பவர்களும் என் குழந்தைகள் தான். நடைவண்டிப் பருவம் தாண்டி, என்னைக் கடந்து, என் தத்துவத்தில் கிடந்து மலர்பவர்களும் என் குழந்தைகள்தான். தாய் ஒரே மாதிரி அன்பு மட்டுமே செய்வாள். குழந்தைகள்தான் வளர வேண்டும் மகளே.. நடை வண்டியிலிருந்து சுயநடைக்கு..’’
நீண்ட உரையாடல் கண்கள் வழியாகவே நடந்தது.  
அம்மை சொல்வது புதுவேதம். அவளிடம் கிடப்பது எதற்காக? கடப்பதற்காக. அவளையும் கடப்பது எதற்காக? அவளிடம் கிடப்பதற்காக..
‘‘கடல் பார்த்து வருகிறேன் தாயே’’ என மெதுவாக நகர்ந்தேன். அரபிக்கடல் பனிக்குட நீரைச் சமுத்திரமாகச் சுமக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு மகாலட்சுமிதான். வாழ்வென்னும் சமுத்திரம் அவளை மூழ்கடித்தாலும் ஜெகஜ்ஜோதியாகத் தன் ஆளுமை உணர்ந்து வெளிப்பட வேண்டும். மூழ்கிப் போதல் கூடாது என்பது தானே மகாலட்சுமி தத்துவம்?
பிரகாரத்தில் மெதுவாக நடந்தேன். கிடப்பதும், கடப்பதும் சுலபமானதா? அம்மை சொல்லுவதன் ஆழம் என்ன? மனசு அலை பாய்ந்தது. மகாலட்சுமி கோயில் – பெண்மையின் மூன்று குணங்களைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லுகிறதா?  சாத்வீகம், ராட்சசம், தாமஸம் என்னும் முக்குணங்களும் நிரம்பியவர்களாக பெண்கள் இருத்தல் வேண்டும். மென்மை மட்டுமே பெண்மை அல்ல. ராட்சஷமும் பெண்மையே... தாமஸமும் பெண்மையே. ஒரு குணத்திலிருந்து இன்னொரு குணத்துக்குள் வளர்ந்து, முதிர்ந்து நிறைந்து செல்ல வேண்டும் என்பது தானே – மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி சொல்வது?
சுயம்புவாக முளைத்தல், சுயம்புவாகக் கிளைத்தல், சுயம்புவாக நிலைத்தல் – ஆஹா.. ஆஹா...  இது தானே மகாலட்சுமி திருக்கோயிலின் மூன்று தேவிகள் சொல்லுவது? ஒன்றில் கிடந்து, ஒன்றைக் கடந்து விஸ்வரூபத்தில் நிலை பெற வேண்டும் என்பதை எல்லாப் பெண்களும் வாழ்வில் இயல்பாகவும், இயல்பில் வாழ்வாகவும் செய்கிறார்கள்.
இதுதானே இந்த முப்பெரும் தேவியர் உணர்த்தும் தத்துவம்? சடங்கு என்பது துவக்கம். படிமம், தத்துவம் என்பதே நடை வண்டியின் அடுத்த நிலை...
அரபிக்கடல் அம்மையின் வார்த்தைகளுக்கு ஈரவிளக்கம் தந்தது. மீண்டும் மகாலட்சுமியிடம் நெருங்கினேன்.
‘‘என்ன மகளே? அடுத்த கேள்வி என்ன?’’
‘‘ஒன்றுமில்லை தாயே.. புரிந்து விட்டது. புரிய வைத்தாய் நீயே...’’
கைகூப்பி வணங்கினேன். கண்ணீர் உருக்கம் எனக்குள். செல்வத்தின் அருட்கடல் என்று மும்பை மகாலட்சுமியைக் கொண்டாடுகிறோம். அவள் ஞானச் செல்வத்தின் அருட்கடல். இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்க்கை என்ற பொக்கிஷம் நமக்குத் கிடைத்திருக்கிறதே.. அதை அருளிய பேரியற்கை அம்மை. வாழ்க்கை என்னும் செல்வம். சுவாசம் என்னும் செல்வம். உயிர்த்தல் என்னும் செல்வம். இதைக் கொண்டு அவளில் கிடப்போம். அவளைக் கடப்போம். கிடப்பதும் அவள் அருளாலே. கடப்பதும் அவள் அருளாலே...


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar