Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிறுவினையும் பெரு விளைவும்
 
பக்தி கதைகள்
சிறுவினையும் பெரு விளைவும்


‘‘பெரிய அநியாயம் நடந்து போச்சு சார். நீங்கதான் உங்க பச்சைப்புடவைக்காரிகிட்ட சொல்லி என்னைக் காப்பாத்தணும்.’’
அலுவலகத்தை மூடும் நேரத்தில் அந்த தம்பதியர் என்னைக் காண வந்திருந்தனர். கணவர் புலம்ப ஆரம்பித்தார்.
‘‘குருவி சேக்கற மாதிரி காசு சேத்து பேங்குக்கு நடையா நடந்து லோன் வாங்கி சென்னையில இடம் வாங்கினேன் சார்.  கட்டி முடிக்கற நேரம். கிரக பிரவேசத்துக்குக்கூட நாள் குறிச்சாச்சு. வீட்டுக்கடன் தவணையக் கட்டறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா எப்படியாவது சமாளிக்கலாம்னு இருந்தேன் சார். இந்த சமயத்துல போய். ’’
‘‘என்னாச்சு?’’
‘‘மொத்த கட்டிடமும் இடிஞ்சி விழுந்திருச்சி. இடிபாட்டுல சிக்கி இருபது பேர் செத்துட்டாங்க. இனிமே அந்த இடத்துல கட்டடம் கட்ட அனுமதிக்க மாட்டேன்னு அரசாங்கம் சொல்லிருச்சி சார்.’’
‘‘ கட்டிக் கொடுத்தவர்கிட்ட கேட்க வேண்டியதுதானே?’’
‘‘அந்தாளு விதிமுறைகளை சகட்டுமேனிக்கு மீறிட்டாராம். அதனாலதான் கட்டடம் இடிஞ்சி விழுந்துருச்சாம். அவரை ஜெயில்ல தள்ளிட்டாங்க சார்.’’
‘‘அப்புறம்?’’
 ‘‘பேங்க்லருந்து கடனை எப்போ திருப்பிக் கட்டப் போறீங்கன்னு நோட்டீஸ் அனுப்பிச்சாங்க. வீடேயில்லாம நான் எங்கிருந்து சார் தவணையைக் கட்டுறது? மனசறிஞ்சி யாருக்கும் கெடுதல் செஞ்சதில்லை சார். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? பச்சைப்புடவைக்காரி மனசுல கருணை இல்லையா?’’
அவரது மனைவி எதையோ சொல்ல நினைப்பது போலிருந்தது.
‘‘இங்க பாருங்கம்மா உங்க வீட்டுக்காரர் அநியாயமா பச்சைப்புடவைக்காரி மீது பழி போடறாரு. நீங்க அவமேல சத்தியமாச் சொல்லுங்க அவரு எந்தத் தப்பும் செய்யலையா?’’
‘‘பெரிசா ஒண்ணும் செய்யலீங்கய்யா.’’
‘‘அப்படின்னா சின்னதா...’’
கணவர் தன்னைச் சும்மா இருக்கும்படி ஜாடை செய்தும் பொருட்படுத்தாமல் அந்த பெண் பேசினாள்.
‘‘சின்னச் சின்னதா திருடுவாருங்க. இவரு கவர்மெண்ட் ஆபீஸ்ல வேல பாக்கறாரு. பெரிசா லஞ்சம் வாங்க மாட்டாரு. அங்க வரவங்ககிட்ட அஞ்சு பத்துன்னு அப்பப்போ வாங்குவாரு. ஆபீஸ்ல எல்லாருக்கும் வேணுங்கற சாமான வாங்கித் தருவாரு. அதுல கொஞ்சம் கமிஷன் அடிப்பாரு. ஆபீசுக்குத் தேவையான சில்லறை சாமான் வாங்கற பொறுப்பு இவர்கிட்ட இருக்கு. பில் தொகையக் கூடப் போட்டு கமிஷன் அடிப்பாரு. எங்க மருத்துவச் செலவு அதிகமா ஆனதாக் கணக்கு காமிச்சிக் காசடிப்பாரு.’’
கணவருக்கு ரோஷம் வந்து விட்டது.
‘‘ஆமா சார். காசடிச்சேன் உண்மைதான். ஆனா அதையெல்லாமா உங்க பச்சைப்புடவைக்காரி கணக்கு வச்சிக்கிட்டு வசூல் பண்ணுவா? சின்ன வயசுல உங்கம்மா சாமான் வாங்க அனுப்பிச்சா அதுல அஞ்சு பைசா பத்து பைசா நீங்க அடிச்சதில்லையோ? அதில கடலை மிட்டாய் வாங்கித் தின்னதில்லையா ‘‘நீ அன்னிக்கு என்கிட்டருந்து திருடினதுக்கு உனக்கு வாந்தி பேதி வரும்’’னு உங்கம்மா இப்போ திட்டுவாங்களா? பச்சைப்புடவைக்காரி நமக்கு தாய் இல்லையா... அவகிட்ட அந்த மாதிரி சின்னத்தனமெல்லாம் இருக்குமா?’’
 ‘‘என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. புரிந்தால் நானே உங்களிடம் பேசுறேன்.’’
அந்தத் தம்பதியரை அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  
அன்று ஒரு கார்ப்பரேட் நிறுவனத் தலைவருடன் தொழில் முறை சந்திப்பு இருந்தது. அந்த நிறுவனத்திற்கு பல இடங்களில் நட்சத்திர ஓட்டல்கள், கார் விற்பனையகங்கள் இருந்தன. ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் பெரிய குழுமம் அது.
அவர்கள் பெரிய அளவில் தொடங்கப் போகும் ஒரு நட்சத்திர ஓட்டல் தொடர்பான வரி விவகாரங்களை விவாதிக்க என்னை அழைத்திருந்தனர்.  நிறுவனத் தலைவருடனும் தலைமை நிதி அதிகாரியுடனும்  ஒரு மணி நேரம் விவாதம் நடந்தது. நடுவில் அந்த நிறுவன ஊழியை காபி கொண்டு வந்து கொடுத்தாள். கீழே விழுந்த பொருளை எடுப்பது போல குனிந்து என் காதருகில் ‘‘கவனமாக இரு. இன்று உன் மனதில் இருக்கும் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்’’ என்றாள்.
அன்னையை இனம் கண்டு வணங்குவதற்குள் வெளியேறிவிட்டாள். விவாதம் முடிந்தது. தலைவரும், நிதி அதிகாரியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அறைக்கதவு தட்டப்பட்டது.
‘‘யெஸ்’’  கம்பீரமாகக் குரல் கொடுத்தார் தலைவர். உள்ளே நுழைந்தவர்  நிறுவனத்தின் கணக்குப் பிரிவில் பணிபுரிபவர். எனக்குத் தெரிந்தவர்.
‘‘சார்கிட்ட.. ..’’
‘‘சரி சரி’’ என்றார் தலைவர். அந்த ஊழியர் என்னிடம் வந்தார்.
‘‘போனமாதம் நீங்க திருவனந்தபுரத்துல நம்ம ஓட்டல்ல தங்கின பில் தொகை கொஞ்சம் பாக்கி இருக்கு!’’
கையில் இருந்த கிரெடிட் கார்டை எடுத்துக் கொடுத்தேன். கையில் இருந்த மெஷினில் தேய்த்து காகிதத் துண்டைக் கொடுத்தார். எவ்வளவு என்று பார்த்தேன். வெறும் 760 ரூபாய். இதற்காகவா இந்த மனிதர் இங்கு வந்தார்? ஒவ்வொரு ஆண்டும் எனக்கு இவர்கள் லட்சக்கணக்கில் பணம் தருகிறார்கள். பாக்கி தொகையை ஞாபகம் வைத்துக்கொண்டு வசூல் செய்து விட்டார்களே!
நிறுத்தியிருந்த காருக்கு அருகில் ஊழியை தோற்றத்தில் பச்சைப்புடவைக்காரி நின்றிருந்தாள். அவள் கால்களில் விழுந்து வணங்கினேன்.
‘‘வீடு இடிந்துவிட்டது என புலம்பினானே அவன் சின்னச் சின்னத் திருட்டுத்தனங்கள் செய்து கொண்டிருந்தான். ‘அதையெல்லாமா மனதில் வைத்துக்கொண்டு பச்சைப்புடவைக்காரி என்னை பழி வாங்குவாள்?’ என்று புலம்பினான் அல்லவா?’’
‘‘ஆமாம்.’’
‘‘இப்போது உனக்கு என்னாயிற்று பார்த்தாயா? தலைவர்  நுாறு கோடி ரூபாய் வரி விவகாரங்களை பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஊழியர் ஒருவர் பாக்கி தொகையை உன்னிடம் வசூல் செய்வதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். இருந்தாலும் தடுக்கவில்லை. ஏனென்றால் அது அவர் ஏற்படுத்தியிருக்கும் விதி. சிறிய தொகைதானே என்று விட்டுவிட்டால் அதுவே வளர்ந்து பெரிய தொகையாகி நிறுவனத்தை மூழ்கடித்துவிடும். கர்மக் கணக்கும் அப்படித்தான். சிறிதோ...பெரிதோ...செய்தவன் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
அவன் கணக்கில் சிறிது சிறிதாகப் பெருந்தொகை சேர்ந்துவிட்டது. அந்த கணக்கைப் பார்த்துக்கொண்டிருந்த தேவதை தன் வேலையைச் செய்து விட்டாள். எனக்குத் தெரிந்தும் நான் குறுக்கிடவில்லை. இப்போதே சின்னதாகத் திருடுபவன் நாளை வீட்டுக்கடன் தவணை கட்ட முடியாவிட்டால் இன்னும் பெரிதாகத் திருட ஆரம்பிப்பான். அவன் மனதில் இருக்கும் திருட்டு எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டேன்.’’
‘‘அவனுக்கு என்னாகும் தாயே?’’
‘‘ஒன்றும் ஆகாது. வங்கி அவன் மீது வழக்கு போடாது. கடனைத் தள்ளுபடியாகி விடும். வீட்டுக்காக முதலீடு செய்த பணத்தில் முக்கால் வாசி திரும்பக் கிடைக்கும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து வீடு வாங்குவான். பல ஆண்டுகள் அதில் மகிழ்ச்சியாக வாழ்வான். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் என்று சொல்.’’
‘‘அடுத்தவரைக் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படக் கூடாது. சிறு தவறு கூட செய்யக்கூடாது. அப்படி ஒரு வாழ்க்கையை வரமாகத் தாருங்கள்.’’
‘‘ வாழ்நாள் முழுவதும் பயிற்சி செய்து பெற வேண்டியதை வரமாகப் பெற முடியாது. வேறு ஏதாவது கேள்.’’
‘‘நான் உங்களுக்குச் செய்யும் அடிமைத்தனம் முழுமையாக இருக்க வேண்டும்.’’
 ‘‘தந்தேன்.’’
‘‘தாயே! என் அடிமைத்தனம் பரிபூரணமாக இருந்தால் முழுக்க முழுக்க என் மனம், மொழி, மெய் உங்கள் கட்டுப்பாட்டில் தானே இருக்கும்? அப்போது தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்?’’
அன்னை கலகலவென சிரித்தபடி மறைந்தாள். வீட்டை இழந்த மனிதரிடம் என்ன பேச வேண்டும் என்று யோசித்தபடி காரைக் கிளப்பினேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar