Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மூகாம்பிகையின் பத்மாசனம்
 
பக்தி கதைகள்
மூகாம்பிகையின் பத்மாசனம்

சொர்க்கம் என்பது நாம் வாழும் போதே அனுபவிக்க வேண்டியது. நரகம் என்பதும் அப்படியே. அது நம் மனசுக்குள், உணர்வுக்குள், சொல்லுக்குள் இருக்கிறது.
இதை காதோடு சொன்னாள் அம்மை. அதுவும் எங்கே? அவளின் திருச்செவிகள் விழுந்த புனிதத் தலத்தில். அடர்த்தியான காடுகள் ஒரு பக்கம். நேத்ரவதி என்னும் சவுபர்ணிகா நதி ஒரு பக்கம். எப்போதும் உயிரை வருடும் தென்றலின் சுகந்தம் ஒரு பக்கம். அம்மையின் திருச்செவிகள் கிடக்கும் தலம் என்பதால் காற்று, நதி, மரம் எல்லாம் நம் காதுகளோடு பேசுகின்றன.
அவை எல்லாமே சொல்லும் சங்கதி பூலோக சொர்க்கம் என்பது இது தான். இங்கு வந்த பின்பு நரகம் என்பதை மறக்க வேண்டும் துறக்க வேண்டும்.
கொல்லுார் மூகாம்பிகை கோயில் செல்லும் வழியெங்கும் நிறைந்திருக்கும் பசுமை, அடர்வனம், மரக்கிளை, இலை, மரம், செடி, கொடி, பசுமை எல்லாம் சொர்க்கமே. கோயில் அருகிலுள்ள சவுபர்ணிகா நதி, நதியின் அலை, அலையின் நீர், நீரின் துளி, துளியின் ஈரம் எல்லாம் சொர்க்கம். கோயிலைச் சுற்றி காவலாகத் தெரியும் குடசாத்ரி மலை, மலையின் வடிவம், வடிவத்தின் படிமம் எல்லாம் சொர்க்கமே.
கொல்லுார் மூகாம்பிகை கோயிலின் முகப்பு அரண்மனை போல உள்ளது. மகாராணியின் அரண்மனை. சக்கரவர்த்தினியின் அரண்மனை. வாஸ்தவத்தில் நமது மனையின் அரண் – கொல்லுார் மூகாம்பிகை இல்லையா? அரண்மனைக்காரிதான் நமக்கு அரண்.
கம்ஹாசுரன் சாகாவரம் வேண்டுகிறான் சிவனிடம். வரம் கிடைத்துவிட்டால் அசுரனின் கொட்டம் அடங்காது என்பதால் அன்னை பராசக்தி அவனை பேச இயலாதவனாக்கி விடுகிறாள்.  ஊமையான அசுரன் மூகாசுரனை வதம் செய்தவளே அம்மை. அசுரவதத்தில் அம்மையின் திருச்செவி விழுந்த தலம் கொல்லுார்.
இங்கே ஆதியில் இருந்தது தங்க ரேகை மின்னும் ஜோதிலிங்கம். அந்த ஜோதி லிங்கமே அர்த்தநாரீஸ்வர தத்துவத்தின் மூலாதாரம். இடப்பக்கம் காளி, லட்சுமி, சரஸ்வதி என்னும் மூவரின் சங்கமம். வலப்பக்கம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் சங்கமம்.
நாம் அனைவரும் அந்த மூலத்தின் துளிகள்தான். ஒவ்வொரு துளியும் முழுமையானது. அதில் கால் துளி, அரைத்துளி, முக்கால் துளி என்பது இல்லை. நாமும் அவ்வாறே. நம் உயிர் முழுமை. ஒவ்வோர் உயிருக்குள்ளும் வீரம், செல்வம், கலை சங்கமமாகி இருக்கிறது.  ஒவ்வோர் உயிருக்குள்ளும் படைத்தல், காத்தல், அழித்தல் சங்கமமாகி இருக்கும். ஆணில் பெண்ணும், பெண்ணில் ஆணும் சங்கமமாகி இருக்கும். ஆண்மைக்குள் பெண்மையும், பெண்மைக்குள் ஆண்மையும் சங்கமமாகி இருக்கும் என்பதான வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் தலம் கொல்லுார்.
விளக்குத்துாண், கொடிக்கம்பம் இரண்டின் கம்பீரம் மனசுக்கு ஒரு உண்மையைச் சொல்லுகிறது. எண்ணம், சொல், செயல் எல்லாம் உயர்வானதாக, ஆயிரமாயிரம் திருவிளக்குகளின் வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். மனதில் குப்பை கூளம் சேராமல், வெறுப்பும் குரோதமும் சேராமல், அகங்காரமும், ஆங்காரமும் சேராமல் கொடிமரத்தின் நிமிர்வோடு இருக்க வேண்டும் என்னும் தத்துவம் காதில் விழுகிறது.  
மெல்ல நடந்து கருவறை சென்றதும் ஆதி தாயான அம்பிகை வீற்றிருந்தாள்.
‘‘வந்தாயா மகளே...வா..வா..’’
‘‘இந்தப் பத்மாசனம் எத்தனை ஆண்டுகளாய்? எத்தனை யுகமாய்? எத்தனை யுகாந்திரமாய் தாயே..’’
‘‘பத்மாசனம் நிரந்தரம் மகளே... உங்களின் மனசும் தாமரையாக மலர்ந்திருக்க வேண்டும். சேற்றில் மலர்ந்தாலும் செந்தாமரையின் பொலிவு குறையாது இல்லையா.. அதுபோல மனசு எப்போதும் மலர்ந்து, விரிந்தும், பிரகாசத்துடன் இருக்க வேண்டும். ஒருபோதும் கூம்பக் கூடாது. சேற்றின் கீழே அழுக்குகள், மூச்சடைக்கும் நாற்றம், பூச்சிகள் இருக்கும். அதுபோல பிரபஞ்சத்திலும் சேறு இருக்கிறது. அதைத் துாய்மை செய்வதை விட அவரவர் மனசைத் துாய்மையான  தாமரை தடாகமாக ஆக்குங்கள்...’’
அம்மையின் பாதச்சலங்கை கிண்கிணியென ஒலிப்பது மாதிரி வார்த்தைகள் ஒலித்தன.
‘‘எங்களால் முடியவில்லை தாயே... நாங்கள் சிறியவர்கள். எப்போதும் அழுக்கு, அவலம், அழுகையைச் சுமக்கிறோம். அசுரர்களாகத் தான் இருக்கிறோம் தாயே...’’
கதறல் கேட்டுச் சிரித்தாள் அம்மை. கொல்லுார் ஊரெங்கும், மலையெங்கும், காடெங்கும், நதியெங்கும் எதிரொலித்தது அம்மையின் சிரிப்பு.
‘‘நீங்கள் எல்லோரும் சுமக்கும் கோபத்தின் வயது இருபது வருடம். வருத்தத்தின் வயது முப்பது வருடம் பொறாமையின் வயது நாற்பது வருடம்.
வாழ்க்கையின் வயது நீளத்தை விடப் புழுக்கங்களின் வயது நீளமாக இருக்கிறது. சரிதானே மகளே..’’
‘‘உனக்குத் தெரியாத உணர்வுண்டா தாயே. நீ தானே எங்களை ஆட்டுவிக்கிறாய்...’’
அம்மையின் சங்கு, சக்கரத்தை,  அபயம் தரும் கைகளை, சாந்தமான பேரழகை, சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாக இருக்கும்  தெய்வீகத்தை, அர்த்த நாரீஸ்வரத் தத்துவத்தை, அவளின் சூட்சுமப் பேரொளியை கண் சிமிட்டாமல் பார்த்தேன்.
‘‘காளியாகிறாய். அழிக்கிறாய். சரஸ்வதியாகிறாய். தெளிவாக்குகிறாய். மகாலட்சுமியாகிறாய். செல்வமளிக்கிறாய். எப்படி முத்தொழிலின் நாயகியாகிறாய் தாயே?
‘‘காளியாகித் தீமையை அழிக்கிறேன். தீமை என்னும் கம்ஹாசுரன் மனசுக்குள் நரகமாக இருக்கிறான். அவனை சம்ஹாரம் செய்கிறேன். தீமையற்ற நிலையே நீங்கள் அடைய வேண்டிய ஞானம் என்னும் புரிதலை சரஸ்வதியாகத் தருகிறேன். இந்த ஞானமும், இந்த புரிதலும் தான் உயர்செல்வம். உயிர்செல்வம் என்பதை லட்சுமியாக அள்ளித் தருகிறேன். இதை என் குழந்தைகளுக்கு தர வேண்டும் என்பதே என் குறிக்கோள்’’
மென்மையின் ஆதி மென்மை அவள். உண்மையின் ஆதி உண்மை அவள். மூகாம்பிகைத் தாயின் வாக்கு என்னைப் புடம் போட்டது. அம்மையிடம் பொன் கொடு, பொருள் கொடு, செல்வம் கொடு, வண்டி வாகனம் கொடு, வீடு கொடு என்று வேண்டுவது அறியாமை அல்லவா?
சவுந்தர்ய லஹரியின் ஆதிவாக்கு மூகாம்பிகை. ஆதிசங்கரரின் ஆனந்தப் பரமானந்தம் மூகாம்பிகை. பொன் வண்ணத்தின் ஜொலிப்பு வண்ணம் மூகாம்பிகை. செவ்வாடையின் சிலிர்ப்பு எண்ணம் மூகாம்பிகை.
மனசில் சுமக்கும் கோபம், பொறாமை, சூழ்ச்சி என்னும் அரக்கர்களை வதம் செய் தாயே... களங்கம் போக்கி தெளிந்த மனதாக்கு. அதுவே பெருஞ்செல்வம். இந்த ஞானம் பெற்றால் அதுவே முக்தி. அதுவே நேத்ரவதி நதியின் குளுமை. அதுவே சக்யாத்ரி மலையின் வளமை. எனவே, அதை வழங்கு தாயே...’’ என வேண்டியபடி சரஸ்வதி மண்டபம் கடந்தேன்.
ஆதிசங்கரர் தவம் செய்த பீடம் சரஸ்வதி மண்டபம். சவுந்தர்ய லஹரியின் கருவறை சரஸ்வதி மண்டபம். இந்தத் திருத்தலம் சுற்றுச் சுவர்கள் வித்தியாசமான ஓவியங்களோடு அந்த காலத்திற்கு நம்மைப் பயணிக்க வைக்கின்றன. உற்ஸவங்களின்போது இசைக்கப்படும் கருவிகள் மிகப் பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. வயிறு குளிர அளிக்கப்படும் பிரசாதம் அருள் மணத்தோடு பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
கொல்லுார் மூகாம்பிகை அழகு, அக்கறை, பாசம், கரிசனம், நல்லெண்ணம் கொண்ட பாசத்தாய், நேசத்தாய். நம் மனம் பத்மாசனமாக மலரவும் அவளின் புன்னகையே காரணி. வாழ்வு மலரவும் அம்மையின் புன்னகையே பேரணி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar