Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒரு கோப்பை டீயும், கடவுளும்!
 
பக்தி கதைகள்
ஒரு கோப்பை டீயும், கடவுளும்!

அது இமயமலைப்பகுதி. வாகனங்கள் செல்ல இயலாத குன்று பகுதிக்கு, பதினைந்து ராணுவ வீரர்கள் மலை ஏறிச்சென்று கொண்டிருக்கின்றனர், மேஜர் ஒருவர் தலைமையில். நடந்து செல்ல சிறிய வழித்தடம் மட்டும் இருக்கிறது. பல கி.மீ., நடந்து வீரர்கள் ரொம்பவே களைத்து போயினர். போதாக்குறைக்கு கடும் குளிர் வேறு. எல்லோருக்கும் மனதில் ஒரு ஆசை. இப்போது ஒரு டீ குடித்தால் எப்படி இருக்கும். களைப்பு எல்லாம் போகுமே என்று மனம் ஆசைப்பட்டது.
அவர்கள் கொஞ்சம் உணவு, தண்ணீர் மட்டும் தான் கூடவே எடுத்து வந்தனர். அவையும் வரும் வழியில் காலி. எனவே மேஜரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். மலைப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் எங்காவது டீக்கடை தென்படும் என்பது மேஜருக்கு தெரியும்.
‘கொஞ்சம் பொறுங்கள்; போகிற வழியில் எதாவது ஒரு கடையை காண்பிக்கிறேன்’ என்றார் மேஜர்.
நடந்தார்கள்...ஏறினார்கள்..இறங்கினார்கள். கடைகள் ஏதும் சிக்கவில்லை.
அந்தி சாயும் நேரம் நெருங்க, கொஞ்ச துாரத்தில் ஒரு பழுதடைந்த சிறிய கட்டடம் தென்பட்டது. ஆம்...மேஜர் நினைத்தது போல அது டீக்கடை தான். ஆனால் அந்த வீரர்களின் துரதிர்ஷடம் டீக்கடை முன்பு பூட்டு தொங்கியது. வீரர்கள் முகத்தில் ஏமாற்றம். எனினும் தொடர்ந்து நடக்க ஆயத்தமாகினர். அப்போது தான், சில மணி நேரங்களுக்கு முன்பு வரை டீக்கடையில் ஆட்கள் வந்து போயிருக்கிறார்கள் என்பதை அங்குள்ள தடயங்களை பார்த்து புரிந்து கொண்டார் மேஜர்.
 எனவே மேஜருக்கு திடீர் என்று ஒரு எண்ணம் தோன்றியது. ‘டீ தானே வேண்டும்’– வீரர்களை பார்த்து கேட்டார். ஒன்றும் புரியாமல் விழித்தனர் வீரர்கள். டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே போனார் மேஜர்.
 ‘ராணுவ வீரர்கள், நாம் இப்படி செய்யலாமா’ என்பது போல் வீரர்கள் வியப்புடன் பார்த்தனர். ‘ஆபத்திற்கு பாவம் இல்லை’ என்பது போல் இருந்தது மேஜரின் பதில் பார்வை.
 டீக்கடைக்குள் சர்க்கரை, பால், டீத்துாள் எல்லாம் இருந்தது. மேஜரின் கைவண்ணத்தில் டீ தயார். எல்லோரும் ஆர்வத்துடன் திருப்தியாக குடித்தனர். அனைவரது முகத்திலும் மலர்ச்சி. என்றாலும் மேஜருக்கு ஒரு குற்ற உணர்வு. ‘திருடர்களை போல பூட்டை நாம் உடைக்கலாமா. அங்குள்ள பொருட்களை பயன்படுத்தலாமா’ என்று மனம் சஞ்சலப்பட்டது. தனது பர்சில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயை எடுத்தார். சர்க்கரை வைத்திருந்த பாட்டிலின் அடியில் ரூபாயை வைத்து விட்டு வீரர்களுடன் மலையேறினார். மலைக்குன்றில் இரண்டு மாதங்கள் தங்கி ‘கேம்ப்’ முடித்து கிளம்பினர்.
வரும் வழியில் மீண்டும் அந்த டீக்கடை. இந்த முறை கடை திறந்திருந்தது. அங்கேயே டீ குடிக்க நுழைந்தனர். முதியவரான அந்த டீக்கடைக்காரர் ஏழ்மை நிலையில் இருந்தார். வீரர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். அவரது பிரச்னைகளை சொன்ன முதியவர்,‘எல்லாவற்றிற்கும் உதவ கடவுள் இருக்கிறார்’ என்றார். அவரது பேச்சில் கடவுள் மீது அவருக்கிருந்த நம்பிக்கை தெரிந்தது.
 வீரர் ஒருவர் முதியவரை சீண்டினார்.
‘கடவுள் இருக்கிறார் என்றால் உங்களுக்கு ஏன் இந்த கஷ்டம்’

‘அப்படி சொல்லாதீங்க; கடவுள் இருக்கிறார்; நம்புங்கள்’ என்ற முதியவர் தொடர்ந்தார்.
‘கடவுள் இருக்கிறார் என்பதை நான் நேரிடையாக புரிந்து கொண்டேன். இரண்டு மாதத்திற்கு முன்பு, என் கடைக்கு தீவிரவாதிகள் வந்தனர். என் மகனிடம் சில விபரங்கள் கேட்ட போது அவன் கூறவில்லை என்பதற்காக அடித்து உதைத்து விட்டு கிளம்பி போய் விட்டனர். நான் கடையை பூட்டி விட்டு, மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். என்னிடம் இருந்தது 20 ரூபாய் தான். அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை செய்ய வேண்டுமே; யாரிடமாவது கடன் வாங்கலாமே என நினைத்து கடையை திறக்க மாலையில் வந்தேன். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. நல்லவேளையாக உள்ளே பொருட்கள் ஒன்றும் திருட்டு போகவில்லை. கொஞ்சம் பாலைத்தான் காணோம். வருத்தத்தோடு பார்த்தால் சர்க்கரை பாட்டிலுக்கு கீழே ஐந்தாயிரம் ரூபாய் இருந்தது. என் கடைக்கு நிச்சயம் கடவுள் வந்திருக்கிறார்; எனக்கு உதவுவதற்காகவே. அந்த தொகை மருத்துவமனையில் மகனின் உயிரை காப்பாற்றியது’
என்று நெகிழ்ந்தார்.
 இப்போது 15 வீரர்களின் விழிகளும் ஒருவரையே வியந்து பார்த்தன. அது மேஜர். அவர் கண்களாலேயே கட்டளையிட்டார்,‘மவுனமாக இருங்கள்; நடந்ததை சொல்ல வேண்டாம்’என்று.
 முதியவர் அருகில் சென்ற மேஜர், டீக்கான பணத்தை கொடுத்தார். அவரை கட்டிப்பிடித்து சொன்னார்...‘நிச்சயம் கடவுள் உண்டு. உதவ வருவார். நானும் நம்புகிறேன். உங்கள் டீ அருமை’.
அங்கிருந்து அவர்கள் கிளம்பினர்.
 இந்த சம்பவத்தில் இருந்து நாம் உணர்வது இது தான். நாம் நல்லவர்களாக இருந்தால், அன்பு, கருணை, பாசத்தின் பாதையில் பயணித்தால், நம்மால் சிலருக்கேனும் உதவ முடியும் கடவுளின் தொண்டனாக. தற்போது கடவுளின் தொண்டர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்; ஏனென்றால் உதவி தேவைப்படுபவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar