Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் செய்த அநியாயம்
 
பக்தி கதைகள்
அவள் செய்த அநியாயம்


‘‘இந்த அநியாயத்தைக் கேட்க ஆளேயில்லையா?’’
புலம்பிக்கொண்டே என் அறையில் நுழைந்த பெண்ணிற்கு முப்பது வயது இருக்கும்.
‘‘அநியாயம் செஞ்சது யாரும்மா?’’
‘‘உங்க பச்சைப்புடவைக்காரி தான்.’’
என் அதிர்ச்சியையும், கண்ணீரையும் மறைக்க நான் பட்ட பாடு பச்சைப்புடவைக்காரிக்கு மட்டுமே தெரியும்.
‘‘ஐயா நான் கோடீஸ்வரர் வீட்டு மருமகள். எங்களுக்கு பத்து வீடு இருக்கு. ஏழு ஜவுளிக்கடை இருக்கு. எங்க வீட்டுக்காரரோடக் கூடப் பிறந்தவங்க மூணு பேரு. ரெண்டு மாசத்துக்கு முன்னால எங்க மாமனார் செத்துட்டாரு. என் வீட்டுக்காரரோட அண்ணனுங்க  ஒண்ணு சேர்ந்துகிட்டு எங்கள வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க. எங்க பங்கு சொத்தையும் பிடுங்கிட்டாங்கய்யா.’’
‘‘நல்ல வக்கீலப் பார்த்து கேஸ் போட வேண்டியதுதானே?’’
‘‘பத்து லட்ச ரூபாய் செலவாகும்னு சொல்றாங்க. அதுபோக ரெண்டு வருஷத்துக்கு முன்னால் என் புருஷன ஏமாத்தி  கையெழுத்து வாங்கிட்டாங்க. கேஸ் நிக்காதுன்னு வக்கீல் சொல்றாரு.  எங்களுக்கு ஒரே பையன். ஆறு வயசாகுது. நல்லாப் படிக்கறான். அவனுடைய வருங்காலமே இருண்டு போயிருச்சிங்கய்யா. இந்த அதிர்ச்சில எங்க வீட்டுக்காரருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சி. உங்ககிட்ட ஒரே ஒரு உதவி வேணுங்கய்யா.’’
‘‘சொல்லுங்க.’’
‘‘எங்க வாழ்க்கைய அலங்கோலமாக்க அந்தப் பரமேஸ்வரிக்கு எப்படிங்கய்யா மனசு வந்துச்சி? அத மட்டும் கேட்டுச் சொல்லுங்கய்யா. அவ மனசுல ஈவு இரக்கமே இல்லையா?’’
எழுந்து நின்று பட்டென்று கைகூப்பினேன்.
‘‘இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லம்மா. போய்ட்டு வாங்க. ஏதாவது தெரிஞ்சா சொல்றேன்.’’
‘‘என் தாயைப் பழிக்கிறாள். இவள் விஷயத்தை சத்தியமாக நான் பச்சைப்புடவைக்காரியிடம் கேட்க மாட்டேன். அவளாகச் சொன்னால் பார்க்கலாம்’ என்று தீர்மானித்தபடி அலுவலகத்தைப் பூட்டிகொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.
டம் என்று சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தினேன். வண்டியைச் சுற்றி ஒரு சிறிய கூட்டம் கூடிவிட்டது. யாரோ ஒரு பெண்ணை இடித்துவிட்டேன் போலிருக்கிறது. கீழே இருந்தவர்கள் கூச்சல் போட்டார்கள்.
வண்டியைவிட்டு இறங்கினேன்.
‘‘இந்தப் பொண்ண வண்டில ஏத்துங்க.  இந்தப் பொண்ணோட வந்தவங்க யாராவது...’’
‘‘நான் இருக்கேன். இவளோட அக்கா. நான் சொல்ற ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும்’’
‘‘போகலாம். நீங்களும் ஏறுங்கம்மா.’’
பின் இருக்கையில் அடிபட்ட பெண் படுத்திருந்தாள். முன் இருக்கையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த அவள் சகோதரி எனக்கு வழிகாட்டினாள்.
‘‘ஏம்மா ஆஸ்பத்திரிக்கு வழிகாட்டச் சொன்னா ஊருக்கு வெளிய கொண்டு வந்து விட்டுட்டீங்க?’’
‘‘ஆஸ்பத்திரிக்கா? எதுக்கு?’’
‘‘உங்க தங்கச்சிக்கு வைத்தியம் பார்க்க வேண்டாமா?’’
‘‘என் தங்கச்சியா யாரு?’’
பின் இருக்கையைப் பார்த்தேன் காலியாக இருந்தது.
‘‘வைத்தியம் பார்க்கவேண்டியது உனக்குத்தான். நீ என்னிடம் கேட்கவேண்டாம் என நினைத்த கேள்வியைக் கேட்டுவிடு.’’
என் தெய்வத்தை இனம் கண்டுகொண்டு வணங்கினேன்.
‘‘அந்தப் பெண் என்ன பாவம் செய்தாள் தாயே?  இந்த இளம் வயதில் ஏன் இவ்வளவு கொடிய தண்டனை?’’
‘‘பாவம் செய்தால்தான் துன்பப்படவேண்டுமா?’’
பாவம் செய்யாதவர்களும் துன்பம் அனுபவிக்க வேண்டுமென்றால்… எனக்குக் குலை நடுங்கியது.
‘‘அங்கே நடப்பதைப் பார்.’’
பெரிய நகரம் ஒன்று தோன்றியது. கட்டுமஸ்தான இளைஞன் ஒருவன்  பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தான்.
‘‘இதோ இதைத் துாக்கு’’ என்று அங்கே இருந்த இன்னொரு மனிதன் ஆணையிட்டான். அந்த இளைஞன் அதைத் துாக்க மிகவும் சிரமப்பட்டான். முடியவில்லை.
‘‘கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டுத் துாக்குறேனே!’’
‘‘முடியாது. இதை இப்போதே நீ துாக்கித்தான் ஆக வேண்டும்.’’
இளைஞன் முக்கினான். முனகினான். வியர்வை ஆறாக பெருகியது.  
‘‘ம்.’’ என்று உறுமினான் ஆணையிட்டவன்.
எப்படியோ முக்கி அந்தப் பாரத்தைத் துாக்கிவிட்டான்.
‘‘இப்போது இதைத் துாக்கு’’ இன்னும் பெரிய பாரத்தைக் காட்டினான் ஆணையிட்டவன்.
‘‘இத வேணும்னா நாளைக்கு.. .’’
‘‘இன்னிக்கு இதத் துாக்கிட்டுத்தான் நீ வீட்டுக்குப் போற.’’
அதைத் துாக்க இளைஞன் உண்மையிலேயே மிக கஷ்டப்பட்டான். அவன் முகத்தில் இருந்த நரம்புகள் எல்லாம் புடைப்பது தெரிந்தது.
சே! இந்தக் காலத்தில் ஏன் இப்படி ஒரு கொடுமை நடக்க வேண்டும்.
‘‘தாயே இவன் செய்த பாவம் என்னவென்று சொல்லுங்கள். ஆளைப் பார்த்தால் பெரிய இடத்துப் பையனாகத் தெரிகிறான். இவனைப் போய் இப்படி வேலை வாங்குகிறார்களே!’’
‘‘இவன் வேலை செய்யவில்லை. பளுதுாக்கும் பயிற்சி எடுக்கிறான். இவன் தேசிய அளவில் பரிசு பெற்ற பளுதுாக்கும் வீரன். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கப் போகிறான். கூட இருப்பவன் இவனுடைய பயிற்சியாளன். பளு துாக்குபவன் பெரிய கோடீஸ்வரவீட்டுப் பிள்ளை. வீட்டில் ஒரு சின்னக் கரண்டியைக்கூடத் துாக்கமாட்டான். அவ்வளவு செல்லம். போட்டிகளில் வெற்றிபெற இந்தத் துன்பத்தை இவனாகவே விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறான்.’’
நான் திருதிருவென்று விழித்தேன்.
‘‘துன்பப்படுகிறவர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என நினைக்காதே.  தள்ளி நின்று பார்க்கும்போது பயிற்சியும் துன்பம் போலத்தான் தெரியும். அந்தப் பெண்ணிற்கு இப்போது நடந்து கொண்டிருப்பது ஒரு பெரிய பளுதுாக்கும் பயிற்சி.’’
‘‘அப்படியா?’’
‘‘அவளும் அவள் கணவரும் மிகவும் நல்லவர்கள். முற்பிறவிகளில் பல நல்ல செயல்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே மகன் நாடே போற்றும் தலைவனாகப் போகிறான். முதலில் சில தேர்வுகளில் வெற்றிப் பெற்று மாவட்ட ஆட்சித் தலைவராவான். பின் வளர்ந்து அரசுத் துறையில் மிக உயர்ந்த பதவியில் இருப்பான். ஒரு கட்டத்தில் இந்த நாட்டையே ஆளப்போகிறான். ஒரு செல்வந்தன் வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்தால் அவனால் அந்த நிலைக்கு உயர முடியாது. அதனால் தற்காலிகமாக அவர்கள் செல்வத்தை இழக்க வைத்து அவனுக்கு வறுமை என்ற அருமையான பயிற்சிக்களம் ஒன்றை அமைத்துத் தந்திருக்கிறேன். அவளுடைய மகனுக்கு இருபது வயதாகும் போது அவர்கள் சொத்து இரண்டு மடங்காகக் திரும்பக் கிடைத்து விடும்.’’
‘‘உங்களை இரக்கமில்லாதவள் என்று பழித்தாளே! அவள் நாக்கைப் பிடுங்கும் வகையில் நான்கு கேள்விகள் கேட்டால்தான் எனக்கு திருப்தியாக இருக்கும்.’’
‘‘உன் மகள் விபரம் புரியாமல் பேசினால் அவளை அப்படி கேட்பாயோ?’’
‘‘அது வந்து...’’
‘‘உன் மகளுக்கு ஒரு நியாயம், என் மகளுக்கு ஒரு நியாயமா?’’
தலைகுனிந்தேன்.
‘‘தாயே! நீங்கள் சொன்னதையெல்லாம் அவளிடம்..’’
‘‘சொல்ல வேண்டாம். நம்பிக்கையிழக்காமல் வாழச்சொல். நான் அவளை எந்தக் காலத்திலும் கைவிடமாட்டேன் என்று எடுத்துச் சொல்.’’
தலையாட்டினேன்.
‘‘அது சரி, நீ ஒன்றும் செய்யாமல் பொழுதைப் போக்குகிறாயே, உனக்கு ஒரு பெரிய பதவியைக் கொடுக்கப் போகிறேன். அதற்கான பயிற்சிகள் தொடங்கப் போகின்றன.’’
‘‘தாயே ஏற்கனவே நான் பெரிய பதவியில் தான் இருக்கிறேன். அதைவிட உயர்ந்த பதவியை உங்களால் எனக்குக் கொடுக்க முடியாது.’’
‘‘அப்படி என்னப்பா பெரிய பதவி?’’
‘‘கையில் கிளி தாங்கிய ஒரு கோலக்கிளிக்குக் காலமெல்லாம் கொத்தடிமையாக இருக்கும் பதவி.’’
‘‘அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு துன்பங்களிலிருந்து தப்பிக்கலாம் எனத் திட்டமிடுகிறாயா?
‘‘இல்லை, தாயே! உங்கள் கொத்தடிமை என்றால் நீங்கள் கொடுக்கும் துன்பங்களைத் தாங்கிக்கொள்பவன் என்றுதானே அர்த்தம்?’’
‘‘நான் என் அடியவர்களுக்குத் துன்பம் கொடுப்பேன் என நீயுமா  நினைக்கிறாய்?’’
ஏதோ சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஒரு விம்மல்தான் வெடித்தது. அன்னை சிரித்தபடி மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar