Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிங்கப்பூர் வீரமாகாளி அம்மன்
 
பக்தி கதைகள்
சிங்கப்பூர் வீரமாகாளி அம்மன்

ஓராயிரம் கேள்விகள் மனதிற்குள் முட்டி மோதின. வார்த்தையின்றி அரூபமாக அலையும் உணர்வுகளை அம்மையிடம் அன்றி வேறு யாரிடம் கேட்க முடியும்?
பெண்கள் கேள்வி கேட்டால், நிமிர்ந்து நின்றால், தெளிவின் ஆளுமையாக நகர்ந்தால் அவர்களைக் கீழே தள்ளி நசுக்கப்பார்க்கும் சமூகம் உன்னை மட்டும் பராசக்தி எனக் கொண்டாடுகிறதே...இது நியாயமா தாயே? இதுதான் பலரின் குமுறலாக இருக்கிறது அம்மையும் அன்று கோயிலில் வழக்கம் போல விஸ்வரூபியாக இருந்தாள். கருணை மின்னலாக இருந்தாள். தீமையை அழிக்கும் நெருப்பாக இருந்தாள். தாய்ப்பால் கரிசனத்துடன் இருந்தாள்.
கண்கொட்டாமல் பார்த்தேன். ‘‘உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உன்னைத்தேடி வந்து விடும் பாக்கியத்தை தந்திருக்கிறாய் தாயே! பசுவைத் தேடும் கன்று போல தேடி வந்திருக்கிறேன்’’  பூரிப்பும், புளகாங்கிதமுமாக அவளே என்னுள் நிறைந்திருந்தாள்.
‘‘நீ எத்தனை பேரழகி தாயே...’’
‘‘எல்லா உயிருக்குள்ளும் இந்தப் பேரழகு பொதிந்திருக்கிறது மகளே’’
‘‘ஆனால் உன்னிடம் இருக்கும் தெய்வீகம். சாதாரணர்களான எங்களிடம் இல்லையே’’
‘‘நீங்கள் தொலைத்து விட்டால் நானா பொறுப்பு? நீங்கள் கையகப்படுத்தாவிட்டால் நானா பொறுப்பு?’’
இப்படி கேட்ட அம்மை சிங்கப்பூர் சிரங்கூன் சாலையிலுள்ள வீரமாகாளியம்மன் திருக்கோயில் அருள்புரிகிறாள். காவி, வெள்ளை சுற்றுச்சுவர், ஆயிரமாயிரம் வண்ணங்கள் குழைத்து நிமிர்ந்து நிற்கும் கோபுரம், கம்பீரமான கொடிமரம், உயிர்ப்போடு நம்மை ஊடுருவிப் பார்க்கும் திருமேனிகள், பட்டுப் பீதாம்பரம், பூமாலைகள், கையில் வீணையுடன் சரஸ்வதி, அய்யனார், கருப்பண்ணசாமி, நடராஜர், விநாயகர், முருகன், அறுபத்து மூவர், வீரமாகாளி...ஆஹா...ஆஹா.. நான் எங்கே இருக்கிறேன்? வெளி நாட்டிலா? தமிழகத்திலா? அதுவும் சென்னையிலா? என்ற சந்தோஷக் குழப்பம் எனக்குள்.
தமிழ் மணம் கமழும் லிட்டில் இந்தியாவில் வாழும் புலம் பெயர்ந்தவர்களின் முகம் அவள். முகவரி அவள். அகம் அவள். அக வரி அவள். வீரமாகாளிதான் சிங்கப்பூர் மக்களின் சுவாசம். சிங்கப்பூர் மக்களின் நேசம். தமிழர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் வழிபடுவதைக் காண முடிகிறது. மல்லிகை, மலர் மாலைகள், துளசி மாலைகள், கற்பூரம், ஊதுபத்தி, திருநீறு, குங்குமம், சந்தனம்.. எல்லாம் செழித்திருக்கிறது வீரமாகாளியிடம்.
அந்தத் துாய்மை, அந்த வாசனை, அந்தப் பொலிவு, அந்த ஒழுங்கு, அந்த ஆனந்தம் நம்மூர் கோயில்களில் இல்லை என்பது உண்மை. பதினாறு திருக்கரம், பதினாறு ஆயுதங்கள், பட்டாடை, எலுமிச்சை மாலை பூமாலைகள் என திருக்கோலத்தில் இருந்தாள் வீரமாகாளி. வெள்ளிக்கிழமை பொங்கல் கொண்டாட்டம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. பலவேறு எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை, வேதனை சுமந்த முகங்களோடு மக்கள் சுற்றி வந்தனர்.  
‘இது இல்லை. அது இல்லை. இது சரியில்லை. அது சரியில்லை என்ற கதறுகிறோமே... உனக்குக் கேட்க அலுக்கவில்லையா தாயே?’
‘குழந்தையின் குரல் எந்தத் தாய்க்கும் அலுக்காது மகளே...’
‘நாடு விட்டு நாடு வந்து சிங்கப்பூரில் உனது சாம்ராஜ்யம் பேரழகு தாயே... உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும், உன் மக்களுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்க நீயும் அங்கே குடியேறுகிறாய் என்பது மகிழ்ச்சி தாயே...’
‘‘அது சரி மகளே.. தாய் எப்போதும் பெருந்தன்மையாகத்தான் இருப்பாள். தாயால் சிறுமையான சிந்தனையோடு இருக்க முடியாது...’’
வார்த்தைகள் தரும் அர்த்தம் கால்வாசி. இடைவெளிகள் தரும் அர்த்தம் முக்கால் வாசி... எனவே அம்மை சொல்லாத விவேகம் எனக்கு புரிந்தது.  
கோயிலை வலம் வந்தேன். நம்மூரில் இருப்பது போல ராஜகோபுரம், பிரகாரம் என்றில்லாமல், உள்ளங்கை அகலத்தில் தன் தலத்தை அமைத்திருந்தாள் அம்மை. உள்ளங்கையில் உலகைத் தாங்கும் வீரமாகாளிக்கு உள்ளங்கை அகல் விளக்கு மாதிரி அணுக்கமான திருத்தமான திருத்தலம். பல தலைமுறைக்கு முன்பு தமிழகத்திலிருந்து வாழ்வு தேடி சிங்கப்பூர் குடி பெயர்ந்தவர்களின் கனவாக இந்த வீரமாகாளியம்மன் திருக்கோயில் உருவானது என்று எல்லோரும் பெருமையாகச் சொன்னார்கள்.  
கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு என உலகின் எல்லாப் பகுதியிலும் வேர் விடுவது நமக்கான பெருமை. ஆனால் அதை அமைக்க அனுமதி கொடுப்பது அந்தந்த நாட்டின் பெருந்தன்மை அல்லவா? அந்நாட்டு மக்களின் பரந்த மனப்பான்மை அல்லவா?
அம்மை தான் சூட்சுமமாகக் கேட்டாள்.
அமைதியாக ஒவ்வொரு சன்னதியாக தரிசித்தேன்.
‘தெய்வீகம் என்று சொன்னாயே...கோயிலுக்குச் சென்று கும்பிடுவது தெய்வீகம் என நினைக்கிறீர்கள். கோயிலுக்கே வர வேண்டாம். பரவாயில்லை. என்னை வணங்கவும் வேண்டாம். பரவாயில்லை. ஆனால் பெருந்தன்மையுடன் இருங்கள். எல்லா உயிரும் இன்பமெய்துக என்று என் மகன் பாரதி சொன்னது தான் வேதம் மகளே...’
 வீரமாகாளி அம்மன் சொன்னதை மனதில் ஏந்திக் கொண்டேன். ‘மற்றவர்கள் நமக்கு நல்லதே செய்ய வேண்டும். நாம் மட்டும் சிறுபுல் அளவு கூட நல்லது நினைக்க மாட்டோம் என்பது அரக்கர் குணம் அல்லவா... இப்படியான  பிரார்த்தனை வேதனை அளிக்கிறது மகளே..’  அம்மையின் கையிலுள்ள ஆயுதங்கள் ஒவ்வொன்றும் விஸ்வரூபம் எடுத்தன.
‘‘என் ஆயுதங்கள் சொல்லும் ரகசியம் புரியாமல் வணங்கிச் செல்வது மூடத்தனம். ஒவ்வொரு முறை கோயிலுக்கு வந்து திரும்பிச் செல்லும் போதும் புல்லின் முனை அளவாவது மனம் விசாலமாக வேண்டும்.  ’’
ஓதும் மந்திர முழக்கத்தை தாண்டி மனதிற்குள் எதிரொலித்தது அம்மையின் மவுனக் குரல்தான். ‘‘வாழ்வின் ஒவ்வொரு விடியலும் நேற்றைய இருட்டைப் போக்குவது மாதிரி – உங்கள் மன இருட்டையும் போக்க வேண்டும் மகளே... நேற்றை விட இன்று, இன்றை விட நாளை சிறந்த மனசு உங்களுக்குள் நிலை பெற்று விட்டால் போதும். எல்லாருமே பேரழகு ஆகி விடலாம்’
  நாடு விட்டு நாடு சென்றும், தன் குழந்தைகளின் மனம் அழகு பெறுவதே தனக்கான வழிபாடு, தனக்கான பண்பாடு, தனக்கான நிறைவு என்பது நிஜம் தானே? எல்லா இடங்களிலும், எல்லா அம்மையும் இதைத்தானே குழந்தைகளிடம் எதிர்பார்க்கிறாள்? வீரமாகாளி அம்மனும் அதையே கேட்கிறாள்.
 ‘ஒவ்வொரு நாளும் வயது அதிகமாகிறதே.. வயது என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்ல. மனம் அழகாக வேண்டும் அன்பு உயர வேண்டும். பண்பு உயர வேண்டும். இப்படி உள்ளே உயிர் அழகாவதே எனக்கான அர்ச்சனை. எனக்கான நிறைவு...’ மாகாளி பேசிக்கொண்டே இருந்தாள்.
‘சரி...  இங்கு வந்த நான் உன் காலடியில் பெற்ற ஞானமாக எதைச் சொல்ல வேண்டும் தாயே..’’
பக்தர்கள் கூட்டம் பார்த்துச் சிரித்தாள் வீரமாகாளி அம்மன்.
 ‘‘எந்த இடத்திலும் நான் சொல்லும் சத்தியம் ஒன்றுதான். என்னை வணங்குவதால் புளகாங்கிதம் அடைய மாட்டேன். சகமனிதர்கள், பெண்களை கண்ணீர் வடிக்க வைத்து விட்டு எனக்கு வழிபாடு நடத்துவது வீண். எல்லாப் பெண்ணும் என் வடிவம் தான். எந்தப் பெண்ணுக்கு யார் தீமை செய்தாலும் அது எனக்குச் செய்ததுதான். அப்படியான அரக்கர்களை அடக்கத்தான் உலகம் எங்கும் அவதரிக்கிறேன். இத்தனை ஆயதங்களோடு’’
வெளிநாடோ, உள்நாடோ, சக்தி எங்கும் சத்தியம் தான். நித்தியம் தான். புதுப்பிறவியானேன். புதுப்பிறவியாக்கினாள் வீரமாகாளி அம்மன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar