Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » முதியவராய் வந்த முதல்வர்
 
பக்தி கதைகள்
முதியவராய் வந்த முதல்வர்

கணவரை இழந்த சோகத்தில் கலங்கி நின்றாள் ரதிதேவி. அவசரப்பட்டு மன்மதனை அனுப்பி விட்டோமே எனத் தேவர்களும் வருந்தினர்.
சாஸ்திரம் வலியுறுத்தும் வாழ்க்கை நெறிமுறையை இரு சொற்களில் அடக்கலாம். ஒன்று நம்பிக்கை, மற்றொன்று பொறுமை
ஆம்! இந்த இரண்டு மட்டும் போதும்! எத்தகைய ஆபத்து வந்தாலும் கடவுள் அருளால் மீள முடியும். தேவர்கள் இப்பண்புகளை இழந்ததால் தான் மன்மதன் முடிவு இப்படியாகி விட்டது.  
‘அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழுங்குழவி அதுவே போன்றிருந்தனே!’
தேவர்கள் அனைவரும் ஒருசேர புறப்பட்டு கைலாயம் வந்தனர். சிவபெருமானை விழுந்து வணங்கினர்.
‘‘நஞ்சு அருந்தியும் நதியினைச் சூடியும் நடுநெற்றித்
துஞ்சும் வெங்கனல் பரித்தும் வெவ்வலியரைத் தொலைத்திட்டும்
அஞ்சல் என்று முற்காத்தனை! இன்று எமக்கு அருளாயேல்
தஞ்சம் யாருளர் தாதையே அல்லாது தனயர்க்கே’’
‘‘பெற்றோரே புறக்கணித்தால் பிள்ளைகள் நாங்கள் என்ன செய்வோம்? ஆலகால விஷத்தைக் கழுத்தில் அடக்கி எங்களைக் காத்தவரே! பொங்கிய கங்கையைத் தலையில் சூடிய புண்ணியரே! நெற்றிக்கண் நெருப்பால் பகைவர்களை சாம்பல் ஆக்கியவரே!
துன்பம் தீர துணை நிற்க வேணடும். கருணைக்கடலே! அசுரர்களை அழித்து விண்ணுலகை காப்பதற்காக தாங்கள் பார்வதியை மணந்து ஒரு பாலகனைத் தோற்றுவிக்க வேண்டும்’’ என்றனர் தேவர்கள்
மோன நிலையைக் கலைத்து புன்முறுவல் பூத்தார் சிவபெருமான்.
‘வருந்தாதீர்கள்! விரைவில் பார்வதி திருமணம் நிகழும்!’ என வாக்களித்தார்.
இது தான் தருணம் என எண்ணி  ரதிதேவியும் சிவனின் காலடிகளில் விழுந்தாள்.
அன்பு கூர்ந்து என் நாயகருக்கு வாழ்வு தாருங்கள் என மன்றாடினாள்.
‘தேவர்களே! கயிலையில் நடக்கப்போகும் என் திருமணத்தில் ரதி, மன்மதன் தம்பதியர் பங்கேற்பர்’’ என்றார் சிவபெருமான். அதைக் கேட்ட தேவர்கள் மகிழ்ந்தனர்.
இந்நிலையில் சலனம் ஏதுமின்றி நமசிவாய மந்திரம் ஜபித்தபடி இமயமலையில் தவத்தில் ஈடுபட்டிருந்தாள் பார்வதி. அவளுக்குப் பாதுகாப்பாக தோழியரான ஜயை, விஜயை உடனிருந்தனர். அங்கு அடியவர் வேடத்தில் வயதான ஒருவர் அங்கு வந்தார். தோழியர் அவரை வரவேற்றனர்.
தவம் புரிபவர் யாராக இருந்தாலும் லட்சியத்தில் உறுதியாக இருக்கிறார்களா என சோதித்து ஆட்கொள்வதுதானே சிவனின் திருவிளையாடல்! இதற்கு பார்வதியும் விதிவிலக்கல்ல என்பதை உலகம் உணர வேண்டும் என முதியவர் வேடத்தில் சிவபெருமானே தவச்சாலைக்கு வந்தார். திருநீற்றின் மணம் கமழ்ந்தது. சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரம் ஒலித்தது.
படைக்கலமாக உன்நாமத்து எழுத்து ஐந்தும்
 என் நாவிற் கொண்டேன்!
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும்
 உனக்கு ஆட் செய்கின்றேன்!
துடைக்கினும் போகேன்! தொழுது வணங்கித்
 துாநீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய்! அணி தில்லைச்
 சிற்றலம்பத்து அரனே!
பார்வதியைப் பார்த்தார் முதியவர். ‘‘சிறுமியே! இளம் வயதில் ஆடிப்பாடி விளையாடாமல் அங்கத்தை வருத்திக் கொண்டும், அழகை குலைத்துக் கொண்டும் யாரைக் குறித்து தவமிருக்கிறாய்?’
நாயகன் பெயரை நாவால் சொல்ல பயந்த பார்வதி ‘பதில் சொல்’ என தோழிக்குச் சைகை காட்டினாள்.
‘பெரியவரே! பரமேஸ்வரரைக் குறித்தே தவம்’ என்றாள் விஜயை.
பரிகாசமாகச் சிரி்த்தார் முதியவர்.
பிரம்மனும், திருமாலும் தேடியும் காணமுடியாத சிவனைக் குறித்தா சிறுவயதில் இந்த தவம். சிறுமியே! காலத்தை வீணடிக்காதே! ஆக வேண்டியதைப் பார்! நீறணிந்த பரமேஸ்வரனின் நிழலைக் கூட உன்னால் நெருங்க முடியாது’’ என்றார்.
‘சிவனின் அடியையும், முடியையும் கண்டு வருவோம்’ என அகந்தையுடன் தேடியதால் தான் அவர்களுக்கு அருள் கிடைக்கவில்லை. பக்தியுடன் வேண்டினால் அவர் இறங்கி வருவார்’ என்பது கூடவா வயதான உங்களுக்குத் தெரியவில்லை. எனக்கு சிவபெருமான் தரிசனம் இப்போது கிடைக்கவில்லை என்றால் என் தவமும், தியானமும் மேலும் உறுதியாகும். இனிமேல் நீரும் குடிக்காமல் நெருப்பு நடுவே ஒற்றைக் காலில் நின்று தவம் புரிவேன்’’ என்றாள் பார்வதி.  
‘‘பெண்ணே! உன் தவம் பலித்தால் கேட்க விரும்பும் வரம் என்ன?’’
‘‘அவரோடு இணையும் அற்புத வாழ்க்கைதான் மகேஸ்வரர் என் மணாளானாக வேண்டும்’ என நாணத்துடன் தெரிவித்தாள் பார்வதி.
‘சிறுமியே! சிவனையா நாயகனாக அடைய விரும்புகிறாய். அவர் அணிவது தோடு! ஏறுவது மாடு! கையிலோ ஓடு! வசிப்பதோ காடு. அன்னை தந்தை யார் எனத் தெரியாது. மலையரசரின் மகளாகிய நீ அவரை ஏன் மணக்க வேண்டும்?’’
முதியவரின் வார்த்தைகள் ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்றுவது போலிருந்தது பார்வதிக்கு.  
‘சிவ சிவ’ என காதுகளைப் பொத்திக் கொண்டாள்.  
‘திருநீறும், ருத்ராட்சமும் அணிந்து சிவனடியார் போலத் தோன்றும் முதியவரே! முதலில் இங்கிருந்து செல்லுங்கள்’ எனச் சீறினாள்.
முதியவரோ,‘‘ உன் மேல் நான் விரும்புகிறேன். என்னைக் கல்யாணம் செய்து கொள்’ என்றார்.
பதை பதைத்தாள் பார்வதி.  எப்படியாவது முதியவரை விரட்ட வேண்டும் என தோழியரும் எண்ணினர்.
அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்
 ஆனந்த பூர்த்தியாகி
   அருளொடு நிறைந்தது எது?
தன்னருள் வெளிக்குளே அகிலாண்டகோடி எல்லாம்
  தங்கும் படிக்கு இச்சை வைத்து
    உயிர்க்கு உயிராய் தழைத்தது எது?
பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணனை அங்கிருந்து அகற்ற முடியுமா என்ன? திடீரென முதியவரை காண வில்லை. ஆனால் யாருக்கும் கிடைக்காத அருள்வடிவம் பார்வதி முன்தோன்றியது.
ஆம்!
சிவகணங்கள் வாழ்த்த காளை வாகனத்தில் சிவன் காட்சியளித்தார்.  
‘‘திரிபுரமும் மதன்உடலும் நீறு கண்டவன்
தருண மழ விடையன் நடராஜன் எங்கணும்
திகழ் அருணகிரி சொரூபன் ஆதிஅந்தம் அங்கு அறியாத
சிவயநம, நமசிவய காரணன்
சுரந்து அமுதமதை அருளி எமையாளும் எந்தை’’
பரவசத்தில் ஆழ்ந்தாள் பார்வதி.
மகளின் எண்ணம் ஈடேறியதைக் கண்டு இமவானும், மேனையும் மகிழ்ந்தனர்.
தோழியரான ஜயை, விஜயை மூலம் இந்தச் செய்தி உலகெங்கும் பரவியது.
பார்வதியை சிவன் திருமணம் செய்யப் போகிறார். இமயமும், கயிலையும் கைகோர்க்கப் போகிறது என மண்ணகமும், விண்ணகமும் மகிழ்ச்சியில் திளைத்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar