Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் கொடுத்த மருந்து
 
பக்தி கதைகள்
அவள் கொடுத்த மருந்து

அது முந்நுாறு பேர் அமர்ந்து வேலை பார்க்கும் அலுவலகமா இல்லை ஒரு நாட்டின் அதிபர் வசிக்கும் மாளிகையா எனத் தெரியவில்லை. தரையெல்லாம் பளிங்கு. பெரிய கண்ணாடிச் சாளரங்கள். தேக்கு மரத்தால் இழைத்து இழைத்துச் செய்யப்பட்ட மேஜை, நாற்காலிகள். கண்ணை உறுத்தாத விளக்குகள். நல்ல காற்றோட்டம்.
நண்பர் ராமலிங்கம் சாதித்து காட்டி விட்டார். ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் தொழிலதிபர் அவர். அவருடைய நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழாவிற்கு வந்திருந்தேன்.
‘‘உங்க நண்பரை நீங்கதான் சார் மெச்சிக்கணும்.’’
அங்கலாய்த்தவர் ராமலிங்கத்தின் நிறுவனத்தின் தலைமை நிதிஅதிகாரி . அவரும் என் நண்பர்தான்.
‘‘ஏன் சார் நல்ல நாளும் அதுவுமா இப்படிச் சொல்றீங்க?’’
‘‘அக்கவுண்ட்ஸ் பிரிவுல ஆறு பேர் வேலை பார்க்கறாங்க.  வழக்கமா அவங்களுக்கு மாசம் அஞ்சு கேன் தண்ணி செலவாகும். போன மாசம் ஆறு கேன் ஆயிருச்சாம். அதிகப்படியான தொகையை ஆறால வகுத்து அவங்க சம்பளத்துல பிடிக்கச் சொல்லிட்டாரு. பசங்க எல்லாம் கடுப்புல இருக்காங்க.’’
நான் மவுனமாக இருந்தேன்.
‘‘போன மாசம் ஒரு தொழிலாளி கீழ விழுந்துட்டான். ரத்தக் காயம். பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டுப் போகலாம்ன்னு  சொன்னேன். உங்கப்பனா காசு கொடுப்பான்னு சொல்லி பக்கத்தில உள்ள சின்ன ஆஸ்பத்திரிக்கு கூட்டுப் போனோம். அங்க சரியாப் பாக்காமப் பெரிய பிரச்னையாயிருச்சி சார். ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடக்குது சார். எழுபது கோடி லாபம் வருது. எம்.டி.,க்கு மூவாயிரம் கோடிக்குச் சொத்து இருக்கு. ஏன் சார் இந்தக் கஞ்சத்தனம் செய்யணும்?’’
அதற்குப் பின் எனக்கு அங்கே அதிக நேரம் இருக்கப் பிடிக்கவில்லை. சாக்குப் போக்கு சொல்லிச் சாப்பிடாமல் கிளம்பினேன். ராமலிங்கத்தை நினைக்கவே வெறுப்பாக இருந்தது. அவரைப் போன்ற கருமிகளுக்கு, வைத்துக்கொண்டு வஞ்சனை செய்பவர்களுக்குப்  பச்சைப்புடவைக்காரி  ஏன்  சரியான தண்டனை கொடுக்கவில்லை என மனம் வெதும்பியது.  
எதிர்பாராமல் கார் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்தது. கலங்கிப்போனேன். அதில் ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. தீமையும் ஒரு நோய்தான் என அன்னை படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறாளே!  அப்படியென்றால்  கருமித்தனமும் ஒரு நோய்தானே! ‘தாயே!  இந்த நோய்க்குச் சரியான  மருந்தை நீங்கள்தான் கொடுக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டேன்.
இரண்டு நாட்கள் கழித்து.. .  
நடைப்பயிற்சி போய்க் கொண்டிருந்தேன்.
‘‘இந்த விலாசம் எங்கே இருக்கிறது... சொல்லுங்களேன்.’’
கேட்ட பெண்ணிற்கு நாற்பது வயது இருக்கும். கண்டாங்கிச் சேலை கட்டியிருந்தாள்.
காகிதத்தில் ஒன்றுமில்லை.  பணம் பிடுங்க ஏதாவது ஏமாற்று வேலை நடக்கிறதா?
‘‘வெத்துக் காகிதத்தக் காமிச்சி விலாசம் கேக்கறீங்க?’’
‘‘பூஜ்ஜியத்துக்குள்ளேதானே என் ராஜ்யமே இருக்கிறது?’’
பச்சைப்புடவைக்காரியை அடையாளம் கண்டுகொண்டு விழுந்து வணங்கினேன்.
‘‘உன் நண்பன் இன்னும் சில பிறவிகள் அல்லல்படவேண்டும் என்பது கர்மக் கணக்கு. என்றாலும் தீமையையும் ஒரு நோயாகப் பார்க்கவேண்டும்  என்ற பேருண்மையை நீ புரிந்து கொண்டு செயல்பட்டதற்குப் பரிசாக அவனது நோயை இன்னும் சில நாட்களில் குணப்படுத்துகிறேன்.’’
அன்னை எப்படி நோயைக் குணப்படுத்தப் போகிறாள் எனத் தெரிந்துகொள்ள ஆசைதான். என்றாலும் கொத்தடிமையாக லட்சணமாக மவுனமாக இருந்தேன்.
‘‘இன்னும் மூன்று மாதம் கழித்து அவன் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்று சொல்கிறேன். அங்கே நடப்பதைப் பார்.’’
காட்சி விரிந்த போது ராமலிங்கம் ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் உணர்வில்லாமல் படுத்திருந்தார். ராமலிங்கத்தின் மகனும், ஒரு வயது முதிர்ந்த  மருத்துவரும்  அருகில் நின்றபடி பேசிகொண்டிருந்தனர்.
‘‘எனக்கு நம்பிக்கை இருக்கு, தம்பி. எக்மோ மிஷினையும். வெண்டிலேட்டரையும் வச்சிரலாம். என்ன பிரச்னைன்னு ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சி வைத்தியம் பாத்துரலாம். ரெண்டே வாரத்துல அவர நீங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிரலாம்.
‘‘அந்த மிஷின் வைக்க எவ்வளவு செலவாகும்?’’
‘‘எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு மூணு லட்ச ரூபாய் செலவாகும், தம்பி. அதிகபட்சம் அஞ்சு நாள்தான்.
‘‘வேண்டாம் டாக்டர். அவ்வளவு செலவு பண்ணி அந்தாளு பொழைக்க வேணாம். இவ்வளவு நாளா எங்கள எதையும் அனுபவிக்க முடியாமத் தடுத்துட்டாரு. இனிமேலாவது நாங்க சந்தோஷமா இருக்கோம். அவர அப்படியே விட்டிருங்க. கதை முடிஞ்சிருச்சின்னாத் தகவல் சொல்லி அனுப்புங்க. நாம பேசினது யாருக்கும் தெரிய வேண்டாம்.’’
ராமலிங்கத்தால்  கண்ணைத் திறக்க  முடியவில்லையே தவிர அவர் விழிப்புடன் தான் இருந்தார். பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அவர் கேட்டார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்ததை மருத்துவர் கவனிக்கவில்லை.
மகன் சென்றுவிட்டான் என உறுதி செய்துகொண்டு மயங்கிக்கிடந்த ராமலிங்கத்திடம் சத்தமாகப் பேசினார் மருத்துவர்.
‘‘பிள்ளைங்க அப்படித்தான் இருப்பாங்க.  நீங்க கவலைப்படாதீங்கய்யா. உங்க மகன் காசு தரலேன்னாலும் நான் என் சொந்தக்  காசுல எக்மோ, வெண்டிலேட்டர் மிஷின் வைக்கறேன். என் உயிரைக் கொடுத்தாவது பிழைக்க வைக்கறேன்.’’
ராமலிங்கம் மயக்க நிலையில் இருக்கிறார் என்று நினைத்து மருத்துவர் தொடர்ந்து பேசினார்.
‘‘நான் நல்லாப் படிச்சேன்யா. நல்ல மார்க் வாங்கினேன். மெடிக்கல் சீட் கெடைச்சது. ஆனா பீஸ் கட்டப் பணம் இல்ல. அப்போ உங்கப்பாதான் யாருக்கும் தெரியாம ரகசியமா எங்கப்பாகிட்டப் பணம் கொடுத்தாரு. நான் இன்னிக்கு நல்லா இருக்கேன்னா அதுக்குக் காரணம் உங்கப்பா போட்ட பிச்சைய்யா. நான் உங்களைச்  சாகவிட மாட்டேன்யா. என் சொத்தையெல்லாம் வித்தாவது உங்களுக்கு ராஜ வைத்தியம் பாக்கிறேன்யா.’’
மருத்துவர் நர்சுகளை கூப்பிட்டார். பத்தாவது நிமிடம் ராமலிங்கம் உயிர் காக்கும் இயந்திரங்களோடு இணைக்கப்பட்டார். அவருடைய நிலையைப் பற்றி ஆராய சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.  எல்லோரும் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர்.
பச்சைப்புடவைக்காரி எனக்குக் கொடுத்த சக்தியால் அவர் மனதின் ஆழத்தில் ஓடிய எண்ணங்களைக்கூட என்னால் அறிய முடிந்தது.
‘‘என் குழந்தைங்க நல்லா வாழட்டுமேன்னு மூர்க்கத்தனமாக பணம் சேர்த்தேன். யாருக்கும் கொடுக்காமல் கஞ்சனா இருந்தேன். என் மகனுக்காக நான் சம்பாதிச்ச கோடிகள் என்னைக் காப்பாத்தல. எங்கப்பா எப்பவோ செஞ்ச உதவிதான் என் உசிரக் காப்பாத்தியிருக்கு. அம்மா மீனாட்சி!  நான் பொழைச்சி வந்தா சத்தியமாக் கஞ்சனா வாழமாட்டேம்மா. என்கிட்ட இருக்கற பணத்தை வச்சி முடிந்தளவுக்கு நல்லது செய்வேன். அனைவரையும் வாழவைப்பேன்.  இது சத்தியம், தாயே!’’
‘‘நீங்கள் மகா மருத்துவச்சிதான் தாயே!’’
‘‘அது சரி, யாருக்கெல்லாமோ மருந்து வேண்டும் என்று கேட்கிறாய்? உனக்கு எதுவும் கேட்கவில்லையே? உன்னிடத்தில் நோய் எதுவும் இல்லை என்ற திமிரா?’’
‘‘யார் சொன்னது? என்னிடம் நிறைய நோய்கள் இருக்கின்றன.’’
‘‘என்னவென்று சொல். மருந்து கொடுத்துவிட்டுப் போகிறேன்.
‘‘முக்கியமாகப் பிறவி நோய். அதனால் ஆசை, காமம், கஞ்சத்தனம், வஞ்சம் போன்ற உபரி நோய்கள்....
‘‘அந்த நோய்கள் உடனே குணமாக மருந்து கொடுக்கட்டுமா?’’
‘‘மருந்தை உரிமையுடன் வாங்கிக்கொள்ள நான் உங்கள் நோயாளி இல்லை, தாயே. உங்கள் கொத்தடிமை. என் நோய் குணமாக வேண்டும் என நினைத்தால் மருந்து கொடுங்கள். நோயால் அவதிப்பட வேண்டும் என நினைத்தால் மருந்தைக் கண்ணில் காட்டாதீர்கள்.  மருந்து கொடுக்கிறீர்களோ இல்லையோ  நான் என்றென்றும் உங்கள் கொத்தடிமை என்ற நிலை மாறாமல் வாழ அருள் புரியுங்கள், தாயே!‘‘
கலகல என சிரித்தபடி மறைந்தாள் மருத்துவச்சியாக வந்த மகேஸ்வரி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar