Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நிகழ்காலம் போல் நிஜமானவள்
 
பக்தி கதைகள்
நிகழ்காலம் போல் நிஜமானவள்

அவள் எனக்கு விளையாட்டுத் தோழி. பாவாடைச் சட்டைப் பருவத்து நெருக்கம். விவரம் தெரியாத சிறுமிப் பருவத்திலிருந்தும், விவரம் தெரிந்ததாக நாடகமாடும் இந்தப் பருவம் வரைக்கும் கூட, எனக்கான உயிர்ச்சக்தி அவள்தான். எனக்கான ரகசியக் கண்ணீர்.  அவசியப் பன்னீர்,  பற்றுக்கோடு, கனவுக்காடு,  நம்பிக்கை மேடு, திருவடி, தொப்புள் கொடிச் சொந்தம் எல்லாமே அவள்தான். சக்திதான். அம்மைதான்.
இப்படித்தான் மகாகவி பாரதியாரும் உணர்ந்திருக்கிறார். இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி, எண்ணமே சக்தி, தொழிலே சக்தி, முக்தி நிலையின் முடிவே சக்தி என அணுக்கமாக உணர்கிறார் பாரதியார்.
அப்படித் தன்னை எனக்கு உணர்த்திய, அப்படி அவளை நான் உணர்ந்த ஒரு பீடம் திருநெல்வேலி முப்பிடாதி அம்மன் திருக்கோயில். சிறு வயதில் நான் நடை பயின்றது, விளையாடிக் களித்தது, காலை, மதியம், இரவு உணவாகப் பிரசாதத்தையே உண்டது எல்லாம் முப்பிடாதி அம்மனின் காலடியில்தான்.
சிறுமியாக இருக்கும் போது வேறென்ன புரியும்? அவளின் சக்தி புரியுமா? சித்தி புரியுமா? முக்தி புரியுமா? இந்தப் பிரபஞ்சமே முப்பிடாதி அம்மனின் விளையாட்டுப் பொம்மை. அவள் படைத்து, வாழ்வித்து, செழிக்கச் செய்யும் உயிரினம்தான் நாம் எல்லாம். இந்தத் தத்துவம் புரியாத குழந்தை பருவத்தில் சிறிய கோயிலாக இருந்தது.  அப்போது சிறிய கோபுரத்தோடு காவல் கோட்டையாக இருந்தது முப்பிடாதி அம்மன் திருக்கோயில். அவளைப் பார்ப்பேன் குறுகுறுவென்று. பாவாடைச் சட்டைச் சிறுமியின் பார்வை அது. அம்மையின் மகிமை புரியாமல், ‘‘நீ மட்டும் எப்படி இத்தனை அழகாக இருக்கிறாய்?’’ என்று பார்ப்பது. அவளின் தீபாராதனையை கண்விரித்துப் பார்ப்பது, அவளுக்கு பக்தர்கள் தரும் பட்டுப் பாவாடைகள், சேலைகள், அதன் பளீர் வர்ணம் பார்த்து மயங்குவது, அலங்கரிக்கப்படும் பூமாலைகள் பார்த்து வியப்பது என்பதான சிறுமிப் பருவம் அது. என்னை – அப்புறம் வாழ்க்கைப் பயணம் நீண்ட துாரம் நகர்த்திச் சென்றது. மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தரிசிக்கச் சென்ற போது...
பெண் வளர்த்தியோ? பீர்க்கங்காய் வளர்த்தியோ? என்பதாக முப்பிடாதி அம்மனும் வளர்ந்திருந்தாள்.  கோயிலும் வளர்ந்திருந்தது. வழியெங்கும் சாலைகள், கடைகள், மக்கள் கூட்டம் அபரிமிதமானதாக இருந்தது.
பதைபதைக்கும் மனசு, பரபரக்கும் ஞாபக அடுக்குகள், இப்படியான கலவையாக இருந்தேன். நீண்ட இடைவெளியில் அம்மாவைக் காணாத மகளின் உணர்வோடு இருந்தேன். சிறுமியாக ஓடி விளையாடிய திருக்கோயில் இப்போது விஸ்வரூபம் எடுத்திருந்தது. சாலையிலிருந்து பத்து படிகள் ஏறித்தான் கோயிலுக்குள் நுழைய முடிந்தது.  மண் தரையாக இல்லாமல், சிவப்புச் செங்கல் பாவிய தளம், நிழல்கூரை, கனிவு சொட்டும் புன்னகையும், கருணை முட்டும் பார்வையுமாக முப்பிடாதி அம்மை.
சிலிர்த்தேன். விதிர் விதிர்த்தேன். புல்லரித்தேன். உயிர் துடித்தேன். அப்போது அழகியாக தெரிந்தவள் முப்பிடாதி. இப்போது பேரழகியாகத் தெரிந்தாள். தாய்மையும், கருணையும், கனிவும், குற்றாலப் பேரருவியின் பொங்குமாங்கடலாகப் பிரவகிக்க, முப்பிடாதி. முப்பிடாதி. முப்பிடாதி.
ஆஹா...ஆஹா...வாழ்வின் எந்த நிகழ்வின் போதும் உணர முடியாத முழுமையை உணர்ந்தேன். புளகாங்கிதம் அடைந்தேன். புது ஜீவனாக உணர்ந்தேன். காலாற நடந்தேன். முப்பிடாதியின் மூலாதார வாசனையில் கிடந்தேன். அவள் முன் வந்து நின்றேன்.
 ‘‘நலமா தாயே?’’
‘‘அடடா.. இப்போதாவது என்னை நினைக்கத் தோன்றியதே...’’
‘‘மறந்தால் தானே தாயே நினைப்பதற்கு?’’
‘‘அட.. நான் தந்த மொழி விளையாட்டை என்னிடமே விளையாடுகிறாயா?’’ சிரித்தாள் முப்பிடாதி.
‘‘உன் மகளாயிற்றே.. நீ தந்தது மணம் கமழும் கற்பூரத் தமிழாயிற்றே...’’
அவளின் காலடியில் அமர்ந்தேன்.
 ‘‘மூன்றாகப் பிரியும், பெருகும் எல்லாம் முப்பிடாதி.. மூன்று காலங்கள் எல்லாம் முப்பிடாதி... மூன்று அரக்கர்களை, மூன்று அரக்கத்தன்மையை மனசில் இருந்து அழிப்பவள் முப்பிடாதி.. சரிதானே தாயே?’’ கேட்டேன்.
‘‘நீயே பதில் சொல் மகளே...’’ என அம்மை புன்னகைத்தாள்.
‘‘ஆமாம் தாயே... நேற்றும், இன்றும், நாளையும், விண்ணும், மண்ணும், இடையிலுள்ள வெளியும், உறக்கம், விழிப்பும், இடையிலுள்ள இயக்கமும் நீ.’’ மனசோடு பேசிக் கொண்டே இருந்தேன்.
அம்மையை தரிசிக்க வந்தவர்கள் கண்களில் கலக்கமும், ஏக்கமும் நிறைந்திருந்தன. ஒவ்வொருவர் முகத்திலும் எதிர்பார்ப்பு. ஒரு பிரார்த்தனை. ஒரு கவலை. ஒரு கலக்கம்.
 ‘‘எப்போதுமே நிறைவின்மைதான் வாழ்க்கையா அம்மையே? எப்போதுமே எதிர்பார்ப்பு, ஏக்கம், நிராசை, ஏமாற்றம் என்பதே வாழ்க்கையா அம்மையே?’ எனக்குள் ஆயிரம் கேள்விகள். கேள்வியும் முப்பிடாதி. பதிலும் முப்பிடாதி. எனவே எப்படியும் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கோயிலைச் சுற்றி வந்தேன்.
சிறுமியாக விளையாட்டுத்தனமாகச் சுற்றிய அதே திருத்தலம். இப்போது வேறொரு உணர்வோடு எனக்குள் வியாபித்தது. படைத்தல், காத்தல், அழித்தல் முத்தொழிலும் அவளே. உடல், மனம், புத்தி மூன்று நிலையும் அவளே. மந்திரமும், தந்திரமும், எந்திரமும் அவளே. சூலம் தாங்கி இருந்தாலும் கோபம் இல்லாமல் செளந்தர்ய லஹரியாக, சாந்த சொரூபிணியாக இருப்பவள் அவளே. முப்புரம் சிரித்தவள். மும்மலம் நீக்கியவள். மூன்று அசுரர்களை அழித்தவள் முப்பிடாதி. என் மனசு ததும்பியது. குழந்தை பருவத்தின் சிறுபிள்ளைத் தனம் வேறு. இப்போதுள்ள தத்துவார்த்த தேடல் வேறு. அதே முப்பிடாதிதான். இப்போது அவளின் அர்த்தம் வேறு.
‘‘’முப்பிடாதி வளர்ந்து விட்டாள்னு சொன்னாயே மகளே...வளர்ந்தது நீயா? நானா?’’ என காதில் கேட்டது அம்மையின் கேள்வி. ஆரம்பித்துவிட்டாள் அம்மை தன் திருவிளையாடலை என்பது புரிந்தது. அவள் நிரந்தரம். தேய்தலும் வளர்தலும் நமக்குள் தான் என்பது புரிந்தது.
‘முன்ன மாதிரி இல்ல நம்ம அண்ணாச்சி. தங்கமா மாறிட்டாரு..’ என்று ஒரு குரல்.
‘சரி விட்டுத்தள்ளு. அவகுணம்தான் உனக்குத் தெரியுமே... காசு பணமா முக்கியம்? கடைசி வரைக்கும் கை கால் சுகத்தோட இருந்தாப் போதும். அதுக்குதான் முப்பிடாதி வேணும்...’ இப்படி ஒரு குரல்.
‘புரிகிறதா மகளே... துருப்பிடிக்கும் இரும்பு போலத் துருப்பிடிக்கும் ஆசைகளால் மனசை நிரப்பாதே... காமமும், குற்றமும் இல்லாத வெள்ளிக்கோட்டை. மனசு முக்கியம். மாசு மருவற்ற  தங்கக் கோட்டையான சிந்தனைகள் முக்கியம். அதை விடுத்து ஆணவம், பேராசையை மனதில் நிரப்பினால் அந்த அரக்கர்களை அழித்து இல்லை என்றாக்குவேன்...’
அவள் ஞானோபதேசம் செய்யச் செய்ய, எனக்குள் வெளிச்சம் பாய்ந்தது.
நிஜம்தானே? முப்பிடாதி ‘‘இல்லை’’ என்றாக்குபவள். எதை இல்லை என்றாக்குகிறாள்? தேய்வு, தளர்வு, வலி, வேதனை, இருள், பேராசை, வெறுப்பு, வீறாப்பு, பொல்லாப்பு, கிடைக்கவில்லை என்னும் கவலை ஏதும் இனி இல்லை.  நமக்கானதை மட்டும், நியாயமானதை மட்டும் கிடைக்கச் செய்வாள்.
‘புரிகிறது தாயே... நீ மட்டுமே நிஜம். இந்த நொடி மட்டுமே நிஜம். நிகழ்காலம் மட்டுமே நிஜம் என்பது மாதிரி முப்பிடாதி நீ மட்டுமே நிஜம். கடந்ததும் பொய், வருவதும் பொய். நீ மட்டுமே நிஜம்...’ கை கூப்பி வணங்கினேன். இன்னமும் பத்து, நுாறு, ஆயிரம் அடி உயரம் கொண்டவளாக விஸ்வரூபம் எடுத்தாள் முப்பிடாதி.
..............
திருநெல்வேலி முப்பிடாதி அம்மன் திருக்கோயில்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar