Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை
 
பக்தி கதைகள்
பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை

‘‘மக்களுக்கு எப்பவும் ஏதாவது நல்லது செஞ்சிக்கிட்டேயிருக்கணுங்கறதுதான் என் கொள்கை. அதுக்காகவே  தர்ம ஸ்தாபனம் நடத்திக்கிட்டு வரேன். இந்த வருஷம் மட்டும் அம்பது லட்ச ரூபாய்க்கு தர்மம் செய்யணும்னு டார்கெட் வச்சிருக்கேன். அதுக்கு உங்க உதவி வேணும் சார். உண்மையாவே கஷ்டப்படறவங்களுக்கு, பிள்ளைங்களப் படிக்க வைக்க முடியாத ஏழைகளுக்கு, பணப்பிரச்னையால கல்யாணம் ஆகாத பெண்களுக்கு உதவி செய்யலாம்னு இருக்கேன். இந்த மாதிரி ஆளுங்கள நீங்கதான் சார் தேடிக் கண்டுபிடிச்சித் தரணும்.’’ – என்று என்னிடம் புலம்பினார் ஒரு தொழிலதிபர்.
உதவி தேவைப்படுபவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? விளம்பரம் கொடுக்கலாம். சமூக வலைதளங்களில் தகவல் பரப்பலாம். கூட்டம் அலைமோதும். வரும் விண்ணப்பங்களில் எது நிஜம், எது போலி என்று  சல்லடை வைத்துச் சலிக்க வேண்டும். அதற்கு நேரம் எங்கே இருக்கிறது?
இது தொடர்பாக சமூக சேவகரான ஒரு பிரபலத்தைக் காணச் சென்றேன். அவருடைய உதவியாளர்தான் என்னை வரவேற்றாள். அரை மணி நேரம் காக்க வைத்தாள்.
‘‘உதவி செய்யலாம், நன்கொடை கொடுக்கலாம்னு வந்தா இப்படியா காக்க வைப்பீங்க?’’  என்று குரலை உயர்த்தினேன். அப்போது அங்கே அவளைத் தவிர யாரும் இல்லை.
‘‘பக்குவம் வேண்டுமென்றால் காத்திருக்க வேண்டுமப்பா. அந்தத் தொழிலதிபரிடம் இருக்கும் ஆணவம் உன்னிடமும் இருக்கிறது. ஜாடிக்கேற்ற மூடிதான்.’’
என்னைத் தன் கொத்தடிமையாகக் கொண்டவளை இனம் கண்டு வணங்கினேன்.
 ‘‘அந்தத் தொழிலதிபரிடம் நிறையப் பணம் இருக்கிறது. அதைவிட அகங்காரம் இருக்கிறது.’’
‘‘அவர் நல்லவர், தாயே!’’
‘‘ஆனால் பணிவு இல்லையே.’’
‘‘எப்படி தர்மம் செய்யலாம் என்று எப்போதும் யோசித்துக்கொண்ண்டிருக்கிறாரே!’’
 ‘‘ உன் அறிவால் சிந்தித்து யாருக்கும் நன்மை செய்யமுடியாது. என்னால் அடுத்தவர்களுக்கு நன்மை விளைய வேண்டும் என்ற பணிவான எண்ணம் இருந்தால் போதும். உன் மூலமாக மற்றவர்களுக்கு நன்மை நடக்கும்படி பார்த்துக்கொள்வேன்.
‘‘நீ என் கையில் வில்லாக இருக்கிறாய். உன்னை வளைத்து, நாணேற்றி உன்னிடம் உள்ள செல்வம், திறமை போன்ற அம்புகளைத் தேவையுள்ள இடத்தில் செலுத்துபவள் நானே. நாணேற்ற வேண்டும் என்றால் வில் என் கையில் வளைந்து கொடுக்க வேண்டாமா? அதற்குப் பணிவு வேண்டாமா? அது அந்தத் தொழிலதிபரிடம் இல்லை. புரிகிறதா?’’
பாதி புரிந்தது.
‘‘விழிப்புணர்வுடன் இரு. உனக்கு ஒரு செயல்முறை விளக்கம் தருகிறேன்.’’
மறுநாள் காலை உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றேன். தினமும் ஒரு குறிப்பிட்ட பாதையில் குறிப்பிட்ட நேரத்தில்தான் செல்வேன். அன்று என்னவோ வேறு பாதையில் செல்ல வேண்டும் என்று தோன்றியது. வழியில் ஒரு முதியவளைப் பார்த்தேன். இவளை எங்கேயோ பார்த்திருக்கிறேனே! உற்றுப் பார்த்தபோது புரிந்தது. பல வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் வேலை பார்த்தவள் ஆயிற்றே! அவளது ஆடைகள் கசங்கியிருந்தன. வறுமையில் இருக்கிறாள் போலும்.
ஐநுாறு ரூபாயை அவளுக்குக் கொடுத்தேன். ஏறக்குறைய அழுதே விட்டாள்.
‘‘டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்திருக்காரு. காசில்லையேன்னு மீனாட்சியம்மாகிட்டக் கதறி அழுதுக்கிட்டிருந்தபோது நீங்களா வந்து கொடுத்தீங்களே!  நல்லா இருக்கணும்யா.’’
என் மனம் நிறைந்திருந்தது. சற்று துாரம் சென்றதும் ஒரு போலீஸ்காரி வழிமறித்தாள்.
‘‘என்ன மேடம் சைக்கிள்ல போனாலும் ஹெல்மெட் போடணுமா என்ன?’’ – நக்கலாகக் கேட்டேன்.
‘‘நான் கொடுத்த விளக்கம் புரிந்ததா?’’
பச்சைப்புடவைக்காரியை அடையாளம் கண்டு காலில் விழுந்தேன்.
‘‘நீ வழக்கமாகப் போகும் பாதையை மாற்றியது நான். நீ போகின்ற நேரத்தில் அந்தப் பெண்ணை வரவழைத்தது நான். அவளைப் பார்க்க வைத்தது நான். உன் மனதில் உதவ வேண்டும் என்ற எண்ணமாய் மலர்ந்தது நான்.
‘‘அந்தப் பெண் என்னுடைய பரம பக்தை. நேற்றுத்தான் மருந்து வாங்கக் காசில்லையே என்று அழுதாள். உன்னைச் சரியான நேரத்தில் அனுப்பிவைத்து அவளுக்கு உதவி செய்தேன். என் கையில் நீ வில்லாக வளைந்தாய். அதனால்தான் உன்னை நாணேற்றி உன் மூலம் அன்பு என்னும் அம்பை அவளிடம் செலுத்த முடிந்தது. உன் மனதில் இருக்கும் பணிவுதான் வளைந்து கொடுக்கும் தன்மை. அது அந்தத் தொழிலதிபரிடம் இல்லை
பெரிய மகான்களும் ஞானிகளும்  எப்போதும் முழுமையான பணிவு நிலையிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் அடுத்தவரின் துன்பத்தை உணர முடிகிறது. என் கையில் நன்றாக வளைகிறார்கள்.  அம்புகள் அதிக துாரம் போகின்றன. பலருக்கு நன்மை விளைகிறது. அங்கே தெரியும் காட்சியைப் பார்’’
அந்த மகானைத் தரிசிக்க பக்தர்கள் வரிசைகட்டி நின்றுகொண்டிருந்தார்கள். ஒரு நடுத்தர வயதுப் பெண் அந்த மகானின்முன் வந்தாள்.
‘‘மூத்த பொண்ணுக்குக் கல்யாண வயசு. வீட்டுல ஒரு குந்துமணித் தங்கம்கூட இல்ல. என்ன செய்யறதுன்னே தெரியல.’’
‘‘சித்த இப்படி ஒதுங்கி நில்லும்மா. மத்தவாளப் பாத்துட்டு உன்னைப் பாக்கறேன்.’’
அரைமணி நேரத்தில் இருபது பேர் வரைக்கும் பார்த்து, நலம் விசாரித்து, ஆசி கூறி விட்டார் அந்த மகான். அடுத்து வந்தவர் பெரிய செல்வந்தர் போலத் தோன்றினார்.
‘‘என் ஒரே பொண்ணோட கல்யாணம் நின்னு போயிருமோன்னு கவலைப்பட்டேன். சுவாமிதான் நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி வச்சீங்க. அவளுக்கு நல்லபடியாக் கல்யாணம் ஆயிருச்சி. இப்போ முழுகாம இருக்கா. கல்யாணம் முடிஞ்சவுடன மீனாட்சியம்மனுக்கு இருபது பவுன் கொடுக்கறதா வேண்டிக்கிட்டேன். நகையை காமிச்சிட்டுப் போலாம்னு.. ‘‘
மகானின் இதழ்களில் புன்னகை. சற்று தள்ளி நின்ற அந்தப் பெண்ணை அழைத்தார்.
‘‘ராமநாதா... மீனாட்சியம்மனுக்கு நகை கொடுக்கறதவிட இதோ நிக்கறாளே இவ பொண்ணுக்கு கொடு.  மீனாட்சி இன்னும் சந்தோஷப்படுவா. இவாகிட்ட நகையக்  கொடுக்கறதுல உனக்கு ஆட்சேபணை இல்லையே?’’
‘‘இல்ல, சாமி.’’
‘‘உன் பொண்ணு பேரு என்னம்மா?’’
‘‘மீனாட்சி...சுவாமி.’’
‘தாயே... பச்சைப்புடவைக்காரி’ என்று சொல்லியபடி நகைகளை பவ்யமாக வெள்ளித்தட்டில் வைத்து மகானிடம் நீட்டினார்.
தட்டைத் தொட்டு ஆசி வழங்கி அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் மகான்.
‘‘எல்லாம் உங்கள் மகிமை, தாயே!’’
‘‘இல்லை, அன்பின் மகிமை. அந்த மகானின் மனதில் அன்பு இருந்தது. அதைவிட அதிகமாகப் பணிவு இருந்தது.  என் அறிவைப் பயன்படுத்தி என் செல்வத்தை வைத்துக்கொண்டு எப்படி நல்லது செய்வது என்று அந்தத் தொழிலதிபரைப் போல் அகந்தையால் பதறவில்லை. ‘தாயே இந்தப் பெண்ணிற்கு ஒரு வழி காட்டுங்கள்’ என்று பணிந்து என் கையில் வில்லாக வளைந்தார். அதனால்தான் அந்தப் பெண் கொண்டு வந்த பிரச்னைக்கு அடுத்து வரப்போகும் செல்வந்தர் தீர்வு கொண்டுவருவார் என்று அவருக்குத் தெரிந்தது.  
‘‘அவர் இருக்கட்டும், உனக்கு ஏதாவது வரம் தரலாம் என்றிருக்கிறேன். அந்த மகானின் சக்தியை உனக்குத் தரட்டுமா?’’
‘‘வேண்டாம், தாயே. வேறு ஒரு வரம் வேண்டும்.’’
‘‘என்ன வரமப்பா?’’
‘‘நான் உங்கள் கை வில்லாக, உங்கள் கால் நகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்காக, உங்கள் கால் பட்டு நசுங்கிச் சாகும் புழுவாக, எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறேன். என் மூலமாக யாருக்கு வேண்டுமானாலும் நன்மை செய்யுங்கள். ஆனால் அது எனக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.’’
‘‘ஏன்?’’
‘‘கர்வம் வந்துவிடும். பணிவு போய்விடும். நான் வகித்துக்கொண்டிருக்கும் பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை என்ற பதவி போய்விடும். அந்தப் பதவி இல்லாமல் என்னால் வாழமுடியாது, தாயே!’’
அன்னை  கலகலவென்று சிரித்தபடி மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar