Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காப்பாள் சமயபுரத்தாள்
 
பக்தி கதைகள்
காப்பாள் சமயபுரத்தாள்


‘‘பெண் குருதியின் வாசமும், வண்ணமும் என்னவாக இருக்கும் தாயே?’’
‘‘பெண் நித்தமும் இறங்கும் நெருப்புக்குழி எதுவாக இருக்கும் தாயே?’’
‘‘பெண் தன் காலில் போட்டு மிதிக்கும் ஐந்து அரக்கர்கள் யாராக இருக்கும் தாயே?’’
‘‘பெண் கழுத்தில் அணிந்திருக்கும் தலைமாலை எப்படி இருக்கும் தாயே?’’
‘‘பெண் தலையைச் சுற்றியிருக்கும் சர்ப்பக் குடைநாகங்கள் எவ்வாறு இருக்கும் தாயே?’’
ஒவ்வொரு வேப்பிலையிலும் காட்சி தரும் அவளைப் பார்த்தேன் கண் கொட்டாமல்.
என் அறியாமையின் வெளிப்பாடாகக் கேட்டேன் கேள்விகளை.
அது வெக்கை பூமி. கால் வைத்து  நடக்க முடியாத மாதிரி நெருப்புக் கோளமாக இருக்கும் பூமி. அதை சமயபுரம் என்றும் சொல்லலாம். அனல்புரம் என்றும் சொல்லலாம்.
 சமயபுரம் மாரியம்மன். பேரழகுக்கெல்லாம் ஆதித்தாய். பெரும் ஆற்றலுக்கெல்லாம் நீதித்தாய். செக்கச் செவேல் என்ற திருமுகம். செஞ்சூரியனாக ஜொலிக்கும் பட்டாடை. எலுமிச்சை மாலை. கூடவே அரக்கர்களை வென்று தலைகளைச் சேர்த்துக் கட்டிய தலைமாலை. எட்டுக் கைகளிலும் ஆயுதங்கள். மகுடம் சூட்டியது போன்ற தாய்மைப் புன்னகையோடு இருக்கும் அம்மையின் தரிசனத்தின் போது, மனம் ததும்பி நிலை கொள்ளாமல் தவிக்கும்.
கோயில் செல்லும் சாலையில் இருபுறங்களிலும் கூட்டம் அலைமோதும். பூஜைப்பொருள் கடைகள், அலை பாயும் மக்கள், அனல் அடிக்கும் வெக்கை எல்லாம் தாண்டி அம்மையின் சன்னிதானம் சேர்ந்தால் ஆயிரம் பனிமலைக் குளிர்ச்சி மனசில் நிரம்பும்.
தலமரம் வேப்பமரத்தின் கீழே நின்று நீளமாக மூச்சிழுத்து அந்த வேம்பு வாசனையை சுவாசப் பைக்குள் நிறைக்கும் போது அம்மையே கையால் நீவி விடுவது போலிருக்கும். அத்தனை உயிர்களின் ஆதி உயிர்மூலம், ஆதிக்கருவறை, ஆதித் தாய்மடி, ஆதித்தாய்ப்பால் நாயகி,  சமயபுரம் மாரியம்மன். மாரியாக மழையாக இருப்பவள் என்கிறோமே... எந்த மழை? நீர்மழை, கருணை மழை, அருள் மழை, ஆற்றல் மழை, பாச மழை, நீட்சி மழை, தாய்மை மழை, காருண்ய மழை எல்லா மழைக்குமான ஊற்றுக்கண் மாரியம்மன்.
திருக்கோயிலின் காற்றில் வேம்பு, பானகம், பூக்கள், எலுமிச்சை, அம்மையின் திருவருள் வாசனை நிறைந்திருக்கும்.  
நின்று நிதானமாக செயல்பட நேரமில்லாமல் கோயிலுக்கு வருபவர்கள் இயந்திரகதியில் பிரகாரம் சுற்றினார்கள். அவரவர் கோரிக்கை, நம்பிக்கை, பிரார்த்தனை என்கிற அவசரத்தில் அம்மையோடு அவர்கள் பேச மறந்து விட்டது தெரிந்தது.  
‘‘சுயம் உணர்தல் தான் உன் கேள்விக்கான ஒரே பதில் மகளே...’’
வேப்பமர உச்சியிலிருந்து கேட்டது அம்மையின் குரல்.
‘அந்தப் புரிதலை ஏற்படுத்தி உன் மக்களுக்குத் தெளிவு கொடு தாயே..’’
‘‘சத்திய சாட்சியாக நான் இங்கே இருப்பதிலிருந்தே அந்தத் தெளிவை சுவீகரிக்க வேண்டும். நிதானமே அதற்கான முதல்படி மகளே..’’
உதிர்ந்து விழுந்த வேப்ப இலைகள் அம்மையின் சொற்களாக தோன்றின. சொல்லெல்லாம் வேம்பின் வாசம். வேம்பெல்லாம் சொல்லின் வாசம்.
‘கற்பூரம் மாதிரி பத்திக்கணும். ஒவ்வொன்றையும் நுாறு தடவையா சொல்றது?’’
யாரோ அம்மா மகளைக் கடிந்து பேசியது கேட்டது.
‘நானே அல்லல்பட்டுக் கெடக்கேன்..நெதமும் தலை நிமிந்து வாழறதே தீக்குளிக்கிற மாதிரி இருக்கு. நீ வேற பிரச்னையை இன்னும் ஜாஸ்தியாக்காதே’’ மகளின் கண்ணில் நீர் வழிந்தாலும் அம்மாக்காரியின் வலி நிறைந்த வார்த்தை உண்மையை உணர்த்தியது.
‘‘உனக்காகத் தானே ஓடாத் தேயறேன். மானம் மருவாதியா நாம தலை நிமிர்ந்து வாழலேன்னா ஊரு சனங்க பேசியே ஒருவழி பண்ணிருவாங்க. ஓடிப்போன உங்கப்பன் கட்டின தாலியோடத் தான இத்தனை வருஷமா நானும் வாழ்ந்திட்டு இருக்கேன். கழுத்தில வெத்துத்தாலி பாரமா தானிருக்கு என்ன பண்ண?’’
பிரகாரம் சுற்றி வந்தபடியே வருத்தமான வாழ்க்கையையும் சுற்றி வந்தாள் அந்த அம்மா.  
‘‘எந்த ஆசையும் என் மனசில கெடையாது. ஆம்பளை, காசு, நகை, சொத்துன்னு எல்லா ஆசையையும் கால்ல போட்டு மிதிச்சுட்டு நெருப்பா நிக்கறேன். பார்க்கலியா நீ?’’
வேப்பிலையை வாயில் இட்டு மென்று முழுங்கினாள்... கசப்பை உணராத ஜொலிப்பு அவளின் ஆக்ரோஷ முகத்தில்.
‘இந்த வேப்பிலைக்கசப்பு விஷம் மாதிரி இருக்கும். ஆனா என் உடம்பு முழுசும் வேப்பிலைக் கசப்புதான் ரத்தமா ஓடுது. நானு மத்தவங்களுக்குக் கசப்பாத்தான் இருக்கேன். நெருப்பாத்தான் இருக்கேன். அரக்கியாத்தான் இருக்கேன். பாம்பாத்தான் இருக்கேன். அதனாலத்தான் மாரியாத்தா மாதிரி நிமிர்ந்து இருக்கேன்.. ஒருத்தரும் ஒரு சொல்லு என்னைச் சொல்லிட முடியாது.. நீயும் அப்படித்தான் இருக்கணும் மகளே... இல்லேன்னா எல்லாரும் உன்னைக் கீழே தள்ளி மிதிச்சு மேல ஏறிப் போயிடுவாங்க... மயங்கிடாத... இனிப்புக்கு மயங்கினா வாழ்க்கை கசப்பு ஆயிடும்.. இந்த வேம்பு மாதிரி இரு. வாழ்க்கை இனிப்பு ஆயிடும்...’
பருவ வயது ஆசைகளில் சிக்கி தடுமாறும் மகளின் கையைப் பிடித்துக் கரிசனமாகப் பேசியது யாரோ... இந்த அம்மாவா? சமயபுரம் மாரியம்மனா?
ஓடோடிப் போனேன் அம்மையின் சன்னதிக்கு. மாரியம்மன் நம் மண்ணின் தாய். அவளிடம் மண் வாசனை, வேம்பு வாசனை,  வேப்பெண்ணெய், விபூதி, குங்குமம் வாசனை வீசும்.
‘‘தாயே’’
சன்னதியின் ஓரமாக நின்று அம்மையைப் பார்த்தேன். எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் மாரியம்மனின் கருணை மழையாக நெஞ்சுக்குள் பெய்தது. நெருப்பு என்று தெரிந்தே வாழ்க்கை என்னும் அக்கினிக் குண்டத்துக்குள் இறங்குகிறோம். உறவுகள் தரும் கொப்புளங்கள். உணர்வுகள் தரும் கொப்புளங்கள். உரசல்கள் தரும் கொப்புளங்கள். உராய்வுகள் தரும் கொப்புளங்கள் எல்லாமே அனுபவிக்க நேரும் என்று தெரிந்தே வாழ்வில் ஈடுபடுகிறோம். தீராக் கொப்புளத்துக்கு மாறாத மருந்து மாரியம்மாதான். அவள்தான் நாம். நாம்தான் அவள் என்னும் உணர்வு தான் சுயம் உணர்தல்.
‘‘சுயம் உணர்ந்தாயா மகளே..’’
‘‘அம்மாவும், மகளுமாக வந்து உணர வைத்தவள் நீ தானே தாயே..’’
‘‘ தன்னம்பிக்கை கவசம். துணிவு கவசம். குண்டத்து நெருப்பாக நிமிர்ந்தே எரிதல் கவசம். இச்சை துறத்தல் பெரும் கவசம். இதையே இச்சா சக்தி. கிரியா சக்தி. ஞான சக்தி என்கிறேன் மகளே.. மனம், அறிவு, உடல் மூன்றின் கூட்டு நெருப்பு வாழ்க்கையாகிறது மகளே...’’
அம்மை அருள் வாக்கில் மவுனத்தில் கரைந்தேன். அம்மை காலடியில் உறைந்தேன். மனம் தாண்டி நிறைந்தேன்.
‘‘அந்த சர்ப்பக் குடையின் நாகம் எதை உணர்த்துகிறாய் தாயே?’’
‘‘ஒவ்வோர் உயிரும் சுமக்கும் அரூப நாகங்கள் அவை. குறிப்பாகப் பெண்களின் உச்சியில் படமெடுத்தாடும் பஞ்ச பாம்புகள். மனம், உடம்பு, ஞானம், தெளிவு, துணிவு தான் ஐந்து நாகங்கள்.’’
அம்மை இன்றைக்கு ஞான சொரூபிணியாக அருள் வாக்கு சொன்னாள்.
‘வேப்பிலைத் தோரணமாக வீரத்தை மனசுக்குள் கொடியேற்றவே வாழ்க்கை என்னும் வரத்தை அளித்தேன். தேய்ந்து ஓய்ந்து போவதற்கல்ல மகளே..’’
‘‘முத்து மாரி பொழிகிறாய் தாயே... ஞானம், தெளிவு, துணிச்சல், வீரியம் என முத்துக் குளிக்க வைத்தாய் நீயே..’’
கைகூப்பி வணங்கினேன்.
கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் சன்னதிக்கு வெளியே நடந்தேன். பானகம் கொடுத்த பெண் சொன்னாள்.
‘‘மாரியாத்தா கண்ணு தொறந்து பார்த்துட்டா... எம் மகள் வக்கீலுக்குப் படிக்க ஸீட்டு கெடைச்சிட்டு..’’
வெல்லம், வேம்பு வாசனை கலந்த பானகம் கொடுத்தாள் பரவசத்தோடு.
 தன் சுவாசம், விடியல், வாழ்க்கை, கனவு, இலக்கு, நோக்கு எல்லாவற்றையும் அழிப்பதல்ல சுயம் உணர்தல். தனக்குள் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஞானச் சுடரை ஏற்ற தன்னை ஒப்புக்கொடுத்தல் தான் சமயபுரம் மாரியம்மன் சொல்லாமல் சொல்லும் தாய் உபதேசம்.
மகள்களுக்கு இந்த உபதேசம் நிச்சயம் புரியும். தாய் அறியாத மகள் இல்லை. மகள் அறியாத தாய் இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar