Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஊசி முனையும், ஒற்றைக்கால் தவமும்
 
பக்தி கதைகள்
ஊசி முனையும், ஒற்றைக்கால் தவமும்

நெருப்பின் மீது நின்று தவம் செய்யும் அம்மையை வணங்கி அவள் அருளைப் பெற முண்டியடிக்கும் கூட்டம் எப்போதும் உண்டு அங்கே. ஒருகாலத்தில் அவள் கொலுவிருக்கும் அந்த இடம் பச்சைப் பசேலென வயல்களோடும் இருந்திருக்கும். பறவைகள், இயற்கையான காற்றும் இருந்திருக்கும். பொருத்தமான பெயராகவும் இருந்திருக்கும்.
ஒற்றைப் படையில் இருந்தால் மாமரம் என்போம். நுாற்றுக்கணக்கில் இருந்தால் மாந்தோப்பு என்போம். எண்ணி முடிக்க முடியாத அளவுக்கு இருந்தால் மாங்காடு என்போம்.
குளுமையான காற்று, முக்கனிகளில் தலைமைக் கனி மாங்கனியின் வாசனை நிறைந்த வாயுபூமி. அப்படியான மாங்கனிகள் செழிப்பாகக் காய்த்துக் குலுங்கும் அளவுக்கு வளமான பூமி என்றிருந்திருக்கும். இப்போது மாங்காடு காமாட்சி அம்மன்  இருக்கிறாள். அருளோடு இருக்கிறாள். இயற்கை வளத்தோடு இருக்கிறாளா? என்னை அப்படி பூமியில் இருக்க வைத்திருக்கிறீர்களா? என்று அம்மை கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்?
‘ஆறுவாரம் வரச் சொல்கிறாயே எதற்குத் தாயே?’
அவளின் கருவறை வாசனை என் உயிரை நனைத்தது. அவளின் கருணை வாசனை அவளோடு பிணைத்தது. அம்மையின் நின்ற கோலம் மனதில் நிறைந்தது. கருவறைக்கு வெளியே அம்மையின் ஆதிகோலம் தத்ரூபமாக இருக்கிறது. நீண்டு நெடியதாக எரியும் நெருப்பு. காலாதீத நெருப்பு. பஞ்ச பாதகங்களைப் பொசுக்கும் நெருப்பு. தணலின் நெடியே நம் பிறவித் துாசுகளைக் கருக்கி விடும். தணலைக் கண் பார்க்கும் நொடியே நம் பிறவித் துன்பத்தை போக்கி விடும்.
அந்தப் பஞ்சாக்னி நடுவே எந்தப் பனிமலையும் பொசுங்கிச் சாம்பலாகும். ஆனால் அம்மை நிற்கிறாள் ஒற்றைக்கால் தவக்கோலத்தில். உலகத்தின் அதிசயமாக எதை எதையோ கொண்டாடுகிறோம். ஆனால் பஞ்சாக்னியின் நடுவே ஒற்றைக்காலில் தவம் புரியும் அம்மை தான் அதிசயத்திலும் பேரதிசயம்.
இந்த திருக்கோலத்தை வடிவமைத்த சிற்பக்கலைஞன் – அம்மையின் உருவிலேயே கரைந்து போன பாக்கியம் எத்தனை அற்புதம்? அம்மையின் நிரந்தரத்தைக் கலைஞன் வடிவமைக்க, கலைஞனின் நிரந்தரத்தை அம்மை வடிவமைக்கிறாள் என்பதே தவக்கோலம் மூலமாக அம்மை சொல்லும் தத்துவம்.
‘எல்லாப் பெண்களும் இதைத் தானே செய்கிறார்கள் தாயே? நின்ற திருக்கோலம், நெருப்பில் நின்ற திருக்கோலம், கொழுந்து விட்டெரியும் தீக்கொழுந்துக்கு நடுவே ஒற்றைக்கால் தவம் இதெல்லாம் பெண்களுக்கு வழக்கமானதுதானே தாயே..’
‘அது புரிகிறது மகளே... நீங்களே உங்களைப் புரிந்து கொள்ளத்தான் ஆறுவாரத்தேடல். வேறேதுமில்லை’
பொன்னாய்ச் சிரி்த்தாள் அம்மை. பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். அம்மை வடிவங்களாகவே பெண்கள் நம்பிக்கையைச் சுமந்திருந்தார்கள். அவர்களின் முகம் கனிந்திருந்தது. பார்வையில் கருணை நிரம்பியிருந்தது. வார்த்தையில் நெகிழ்ச்சி இருந்தது.  சிலர் முதல் வாரப் புது நம்பிக்கையும், ஒரு சிலர் ஆறாம் வார நம்பிக்கை நிறைவுமாக இருந்தார்கள். அவர்களுக்குள் ஒரு மாயாஜாலம் நிகழ்ந்திருந்தது. பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையைச் சுற்றிலும்  பற்றி எரியும் பார்வை நெருப்பு, அவநம்பிக்கை நெருப்பு, நனவாக்க முடியாத கனவு நெருப்பு, உறவுகள் கொட்டும் வார்த்தை நெருப்பு, முறித்துப் போடப்படும் விடியல் நெருப்பு என்பதான நுாற்றுக்கணக்கான பஞ்சாக்னியோடு தான் வாழ்கிறார்கள்.
அத்தனை நெருப்பையும் கடந்து தன் புன்னகையை, நம்பிக்கையைக் கைவிடாத ஒற்றைக்கால் தவம் புரியும் நடமாடும் அம்மைகள்தான் பெண்கள்.
அம்மையின் தவம் என்பது நெருப்புப் பொசுக்குதலை வெளியே சொல்லாத மவுனத்தவம். அம்மையின் தவம் என்பது அவளின் இலக்கணம் மீறினால் கிடைக்கும் ஆலகாலத்தழல் உயிரை எரிப்பதையும் ஜீரணிக்கும் மவுனத்தவம். நெருப்பு சூழ, ஒற்றைக் காலில் நின்று, தன் நோக்கத்தை, இலக்கை, இழக்கை, விளக்கை தானே அருளிக் கொள்ளும் மவுனத்தவம்.

அப்படியான தவத்தைத் தான் இந்த பெண்களும் செய்திருப்பார்கள். அதைச் செய்ய வைத்து ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் மாங்காடு அம்மன்களை உணர வைக்கவே அம்மை ஒற்றைக்கால் தவம் புரிகிறாள்.
ஆறுவார காலம் என்று அம்மையைக் கொண்டாடுவது, குளிர்விப்பது, கும்பிடுவது என்ற புறத்தத்துவமா – அந்த பராசக்தி சொல்லுவது? நீர்த்துப்போன இந்த நியதியா அம்மை சொல்லும் ஞானமாக இருக்கும்? ஒரு மருந்தோ, ஒரு பழக்கமோ, ஒரு சிந்தனையோ, ஒரு திட்டமோ எதுவாக இருந்தாலும் – ஆறு வாரம், நாற்பத்திரெண்டு நாட்கள் –  முழுக்க  சிந்தனையில் ஆழ்ந்து போகிறோம். அப்போது ஆளும் பலம், சக்தி, நம்பிக்கை, ஆற்றல் நமக்குள் பிரம்மாண்டமான விஸ்வரூபம் எடுக்கிறது. எதிர்ப்பு, சூழ்ச்சி வந்தாலும், தோல்வி வந்தாலும் சமாளித்து விடும் தெளிவு பிறக்கிறது. இந்த சூட்சுமமமே நம் மனசுக்குத் தரும் தற்காப்புக் கவசம்.
அதிலும் எலுமிச்சம்பழத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து, மறுபடியும் அவள் பாதத்தில் சமர்ப்பிப்பது என்பது என்ன? எலுமிச்சம்பழம் மூலமாக மாங்காடு அம்மனின் திருமேனி சுகந்தமும், சுகானுபவமும் நம்மோடு இருப்பதாக உணர்கிறோம்.
தொப்புள் கொடியாக, அம்மையின் ஆற்றல் நிரம்பிய நம்பிக்கை கருவறையாக சிறிய எலுமிச்சம்பழம் தோன்றுகிறது. கருவறையின் வடிவுடனே...
உள்ளங்கையில் எலுமிச்சையை பிடிக்கும்போது நெருப்பில் வாடாமல் உயிர் ஆடாமல், வேறுதிசை தேடாமல், வேதனையில் ஓடாமல், அரக்கத்தை நாடாமல் விடியல் நம்பிக்கையைச் சுமக்கும். மாங்காடு அம்மனின் பாதத்தைத் தீண்டிப் பிடிப்பதாகவே உணர்வலை எழும். ஆறுவார காலம் தரிசனம் முடித்த பின் தரும் பால், நம்பிக்கையின் ஊற்று. நன்மைகளின் ஊற்று.  கலப்படமே இல்லாத காமதேனு பசுவின் உயிர்த்திரவம். அவநம்பிக்கை, சந்தேகம், வருத்தம் ஏதுமின்றி நல்ல எண்ணம் மட்டுமே கலந்து அமுதம் இருப்பதாக உணர்வலை எழும்.
சிவனின் கண்ணை விளையாட்டாக அம்மை பொத்துவதும் தத்துவத்தின் சாரம்தான். சிவனே என்று சும்மா இருந்தாலும், நம்மை இருள், வருத்தம், வேதனை பீடிக்கும். அப்போது ஆயிரம் சூரியன் கண்முன்னே உதித்தாலும் உணரமுடியாத அஞ்ஞானம். மனவெறுமை, பாலைவனத் தகிப்பு நம்மைச் சூழும் என்பது நம் வாழ்வின் அனுபவங்கள்தானே?
அந்தச் சமயங்களில் கண்ணீர் சிந்தாமல் என்ன செய்வது? புலம்ப வேண்டாம். ஐந்து குண்டங்களாக நம்மைச் சுற்றியும் அக்கினி எரியட்டும். அதற்கு நடுவே நம்பிக்கை என்னும் சின்னஞ்சிறு ஊசி முனையில் ஏறி நிற்போம். மனசை ஒருமுகப்படுத்தி வலி நெருப்பை, வேதனை நெருப்பைத் தாண்டி உயர்வதற்காக ஒற்றைக் காலில் நிற்போம். அதன் மூலம், வலி, வேதனை, அவமானம், தோல்வி, சூழ்ச்சி என்னும் ஐந்து நெருப்புக் குண்டங்களைக் கடப்போம்.
அப்படித்தான் பெரும்பாலும் பெண்கள் ஊசிமுனையில் ஒற்றைக் காலில் தவமிருக்கிறார்கள். அந்தத் துணிவுதான் மாங்காடு காமாட்சி அம்மனை மனசுக்கு நெருக்கமானவளாக உணர வைக்கிறது. ‘‘நீயும் எங்களைப் போலவே துன்பம் உணர்ந்தாயே தாயே... நீயும் எங்களைப் போலவே நெருப்பில் நிற்கும் வலி உணர்ந்தாயே தாயே.. உன்னில் எங்களை உணர்கிறோம்..’’ என்பதே பெண்களின் மவுனப் பிரார்த்தனை.
பிரகாரத்தில் மகிழ்ச்சி பொங்கப் பெண்கள் பால் தந்தார்கள். ‘‘வேண்டுதல் நிறைவேத்திட்டா மாங்காடு அம்மன்.. ஆறே வாரம்... எல்லாப் பிரச்னையும் தீர்த்துட்டா...’’ மனம் குளிரச் சொன்னார்கள் பெண்கள்.
மறுபடியும் கருவறைக்குள் சென்று தரிசித்தேன். செக்கச் செவேலென சேலை தகதகக்க, கையில் கிளியும், கரும்புமாகச் சிரித்தாள் மாங்காடு காமாட்சி. உயிர்த்துளை தகிப்பும், கருவறைக் குளிர்ச்சியும், வாழ்வியல் நெருப்பும், நம்பிக்கைக் குளிர்ச்சியும், ஊசிமுனை வலியும், ஒற்றைக்கால் தவ வலிவும் மாங்காடு காமாட்சியாகச் சிரிக்கும் அவள் மாயாஜாலக்காரி.
மாமரத்தின் இனிப்பும், மாமேருவின் ஜொலிப்புமான தாய்மைக் கோலக்காரி...


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar