Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கர்ப்பிணியும் கர்மக்கணக்கும்
 
பக்தி கதைகள்
கர்ப்பிணியும் கர்மக்கணக்கும்


‘‘நேத்துத் தானே சார், பச்சைப்புடவைக்காரியோட கருணையப் பத்தி  பேசிக்கிட்டிருந்தோம்? நீங்க அவ அன்பைப் பத்திச் சொன்னதைக் கேட்டு நான் கண்ணீர் விட்டு அழுதேனே சார்? அந்தக் கண்ணீர் காயறதுக்குள்ள இப்படி ஒரு கொடுமை நடக்கணுமா சார்? ஒரே நாளைக்குல்ல பச்சைப்புடவைக்காரி ஏன் சார் பயங்கரவாதியா மாறணும்?’’
புலம்பியவர் என் நெடுநாளைய நண்பர் பூபாலன்.
‘‘என் ஒரே பொண்ணு கர்ப்பமா இருக்கான்னு உங்களுக்குத் தெரியும்ல? இன்னும் பத்து நாள்ல குழந்தை பிறந்துரும்னு சொல்லியிருக்காங்க. திடீர்னு உடம்பு ஒரு மாதிரியா இருந்துச்சின்னு இன்னிக்குக் காலையில பக்கத்துல இருக்கற டாக்டர்கிட்டக் காமிச்சோம். கொரோனாதான்னு சொல்லிட்டாரு. பல்ஸ் ஆக்சிமீட்டர்ல 80தான் காமிக்குதாம். கொஞ்சம் சீரியஸ்னு சொல்றாரு.’’
‘‘இப்போ எங்க இருக்கீங்க?’’
‘‘பிரசவத்துக்கு ஒரு ஆஸ்பத்திரில பேசி வச்சிருந்தோம். அங்கதான் போய்க் காட்டினோம். கொரோனா இருந்தா... அவங்க ஆஸ்பத்திரில பாக்க மாட்டாங்களாம். கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்லிட்டாங்க. தொற்று உறுதியாயிட்டா அங்கதான் பிரசவம் பாக்கணுமாம். அதுவும் சிசேரியன்தான் செய்வாங்களாம்.  அதனால கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு என் மகளைக் கூட்டிக்கிட்டுப் போறோம், சார்.’’
‘‘பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கங்க, சார்.’’
‘‘அந்தக் கொடுமைக்காரிகிட்டயா? எதுக்கு? இருக்கறதும் போகவா? நீங்களுமாச்சு உங்க பச்சைப்புடவைக்காரியுமாச்சு. இனி அவ பேச்சையே எடுக்காதீங்க.’’
அலுவலகத்தில் எனக்காகக் காத்திருந்த வாடிக்கையாளர்களிடம் என் உடல் நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். சற்றுத் தள்ளியிருந்த ஒரு திறந்த வெளி பூங்காவிற்கு அருகில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். மர நிழலில் தரையில் அமர்ந்தவுடன் என் கண்கள் பொங்கின.
‘‘தாயே என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு வயதாகி விட்டது. ஒரு கர்ப்பிணிக்குத் தொற்று என்றால்…  உள்ளேயிருக்கும் குழந்தைக்கு என்னாகுமோ...விளைவுகளை யோசிக்கக்கூட எனக்குத் தெம்பில்லை, தாயே! ஏன் இப்படி உங்கள் அன்பைப் பூட்டி வைத்துக்கொண்டு எங்களை வதைக்கிறீர்கள்?’’
கையில் கம்புடன் பூங்காவின் ஊழியை அந்த வழியே வந்தாள்.
‘‘எந்திரிங்க. பூங்காவப் பூட்டப் போறோம். நேரம் முடிஞ்சிருச்சி.’’
‘‘என்னம்மா இது அநியாயம்? இந்தப் பூங்காவுக்கு ஏது கதவு, எப்படிப் பூட்டுவீங்க? இதுக்கு ஏது நேரம் காலம் எல்லாம்?  எப்பவும் திறந்துதானே இருக்கும்?’’
‘‘என் அன்பும் அப்படித்தான். அதற்கு நேரம், காலம் கிடையாது. மூடி வைக்கும் கதவுகளும் கிடையாது.’’
யாரென்று தெரிந்ததும் அவள் கால்களில் விழுந்து வணங்கினேன்.
‘‘நண்பரின் மகள்.. கர்ப்பம்.. தொற்று நோய்…’’
‘‘அடுத்தவரின் கர்மக்கணக்கு உனக்கு எதுக்கு?’’
அழுகையுடன் தலையைக் குனிந்து கொண்டேன்.
‘‘இருந்தாலும் நண்பரின் மகளைக் காப்பாற்ற உன் உயிரைத் தர முன் வந்தாயல்லவா? அந்த அன்பிற்காக உன் மூலமாகவே உன் நண்பனின் கர்மக்கணக்கை அவனுக்கு விளக்குகிறேன். நாளை காலை நண்பனின் வீட்டிற்குப் போ. அங்கே உன்னைப் பேச வைக்கிறேன்.’’
மறுநாள் காலையில் நண்பரின் வீட்டுக்குப் போனேன். வெளியாட்கள் நிறைய இருந்தார்கள். பயமாக இருந்தது.
நண்பர் என்னைப் பார்த்துக் கதறினார்.
‘‘கொரோனா டெஸ்ட் எடுத்தாங்க. இல்லைன்னு வந்துருச்சி. அதனால கவர்மெண்ட் ஆஸ்பத்திரிலயும் சேர்க்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஸ்கேனுக்குக் கொடுத்திருக்கு. ரிசல்ட்டுக்காகக் காத்துக்கிட்டு இருக்கோம்.’’
நண்பரின் கையைப் பிடித்தபடி மவுனமாக நின்றுகொண்டிருந்தேன். படுவேகமாக ஒரு இருசக்கர வாகனம் வந்து எங்கள் அருகில் நின்றது.
‘‘கையக் கொடுங்க, மாமா. ப்ரியாவுக்கு ஒண்ணும் இல்ல. ஸ்கேன்ல கொரோனா இல்லைன்னு சொல்லிட்டாங்க.  ஆக்சிஜன் 80ன்னு வந்துச்சேன்னு சொன்னேன். அது உண்மையாயிருந்தா அந்தப் பொண்ணால நடக்கவே முடியாதுன்னு சொல்றாங்க. அந்த டாக்டர் ஏதோ ஓட்டை பல்ஸ் ஆக்சிமீட்டர்ல பாத்திருக்காரு. நான் புதுசு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன். அதுல பார்ப்போம்.’’
பார்த்தபோது ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு 98 என்று காட்டியது. இது இயல்பு நிலைதான். நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். நண்பரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
திடீரென்று என்னைப் பார்த்துக் கத்தினார்.
‘‘யோவ் இந்த 24 மணி நேரமும் வீட்டுல யாரும் சரியாச் சாப்பிடல, துாங்கல. எந்தப் பாவமும் செய்யாத எங்களுக்கு மட்டும் ஏன்யா இப்படி நடக்கணும்?’’
அவரை அவருடைய மகள் அழைத்ததால் உள்ளே போனார். உள்ளேயிருந்து ஒரு பெண் கையில் கோல மாவுடன் என் அருகில் வந்தாள். சட்டென்று என் தலையில் கைவைத்து அழுத்தினாள்.
‘‘உன் நண்பன் வெளியே வந்தவுடன் பேசத் தொடங்கு. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.’’
சில நிமிடங்களில் நண்பர் என்னிடம் வந்தார்.
 ‘‘எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்னு கேட்டீங்கள்ல மிஸ்டர் பூபாலன்? நான் சொல்றேன் – உங்களுக்கு மட்டும்தான் இப்படி நடக்கும். உங்களுக்காகத்தான் அந்தப் பச்சைப்புடவைக்காரி இத நடத்திக் காட்டியிருக்கா.’’
‘‘சார், நீங்க என்ன. சொல்றீங்க’’
‘‘குறுக்க பேசாம நான் சொல்றதக் கேளுங்க. உங்க வீட்டுல உள்ளவங்க கர்மக் கணக்கு எசகு பிசகா இருக்கு. நீங்க 24 மாசம் தாங்கமுடியாத கஷ்டத்த அனுபவிக்கணுங்கறது கணக்கு. ஆனா நீங்க செஞ்ச நல்ல காரியங்கள், ஆபத்துல இருக்கறவங்களுக்கு, நீங்க செஞ்ச பெரிய பெரிய உதவிகள், போன வருஷம் ஒரு ஏழைப்பையனோட படிப்புச் செலவை ஏத்துக்கிட்டீங்களே. ..  இதையெல்லாம் பாத்துப் பச்சைப்புடவைக்காரி கர்மக் கணக்கைப் பார்க்கிற தேவதைகிட்ட சொல்லி உங்க கணக்கை மாத்தியிருக்கா. 24 மாசங்கறத 24 மணி நேரமாக் குறைச்சிட்டா. பாதிப்பு, வேதனை எல்லாம் மனசளவுலதான். உங்க மக ஆரம்பத்துலருந்து நல்லாத்தான் இருக்கா. ஒரு டாக்டரோட பழுதடைஞ்ச கருவியில பார்க்கவச்சி உங்க மகளுக்கு நோய் இருக்குன்னு சொல்ல வச்சி, உங்கள அலைய வச்சி, தவிக்க வச்சி..ஆனா எல்லாம் ஒரே நாள்ல நல்லபடியா முடிஞ்சிருச்சி. இனிமே எந்தக் கவலையும் இல்ல.  அடுத்த வெள்ளிக்கிழமை உங்க மகளுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறக்கும். சுகப்பிரசவம். உங்க பேத்தி பெரிய ஆளா வருவா. எல்லாரும் நல்லா இருப்பீங்க.’’
‘‘கோபத்துல சொன்னாலும் நீ சொன்னது சரிதான்யா. பச்சைப்புடவைக்காரி பயங்கரவாதிதான். நம்மக் கொடுமைப்படுத்தற வினைகளுக்கு அவ பயங்கரவாதிதான்.  தன் அடியவர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கற எதையுமே யோசிக்காம அழிக்கற கொடுமைக்காரிதான். என்னய்யா சொல்ற?’’
நண்பர் எதுவும் பேசவில்லை. என் கைகளை அழுந்தப் பற்றியபடி கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்.
சில நிமிடங்கள் கழித்துக் கிளம்பினேன்.  சற்றுத் தள்ளி நிறுத்தியிருந்த காரில் ஏறப்போகும்போது அங்கே கோலமாவுப் பெண் நின்றிருந்தாள். விழுந்து வணங்கினேன்.
‘‘வெளுத்து வாங்கி விட்டாயே! உன் நண்பனுக்கு எல்லாம் கொடுத்துவிட்டேன். உனக்கு என்ன வேண்டும் என்று சொல், தருகிறேன். அடுத்தவர் படும் துன்பத்தைத் தீர்க்கும் சக்தியைத் தரட்டுமா? இல்லை, துன்பமில்லாப் பெருவாழ்வு தரட்டுமா?’’
‘‘எசகு பிசகாக எதையாவது கொடுத்து என் பதவிக்கு உலை வைத்து விடாதீர்கள், தாயே!’’
‘‘அப்படி என்னப்பா பெரிய பதவி?’’
‘‘கையில் கிளி தாங்கிய ஒரு கோலக்கிளிக்குக் காலமெல்லாம் கொத்தடிமையாக இருக்கும் பெரிய பதவியை வகித்துக்கொண்டிருக்கிறேன்.  துன்பத்தைத் தீர்க்கும் சக்தி எனக்குத் திமிரைக் கொடுத்து விடும். துன்பமில்லாத வாழ்வு என் அடிமைத்தனத்தை மறக்கச் செய்துவிடும். இந்த இரண்டில் எது நடந்தாலும் என் பதவி பறிபோய்விடும்.’’
‘‘என்னதான் வேண்டும் உனக்கு?’’
‘‘கற்ற கல்வி கைவிட்டாலும், பெற்ற செல்வம் போய்விட்டாலும் உற்ற நண்பரும் உறவும் என்னை உதறித் தள்ளிவிட்டாலும் உங்கள் கொத்தடிமை என்ற இந்த அரிய பதவி என்னைவிட்டுப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள், தாயே! அது போதும் எனக்கு.’’
கலகலவென்று சிரித்துவிட்டு மறைந்தாள் கனகாம்பிகை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar