Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பட்டீஸ்வரம் துர்க்கை
 
பக்தி கதைகள்
பட்டீஸ்வரம் துர்க்கை

‘விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக் குருவியைப் போலே..’
‘சரி...அப்புறம் சொல் மகளே...’
‘இப்போது என் மனசு இதைத்தான் நாடுகிறது தாயே... இந்த மன நிலையைத்தான் வேண்டுகிறது. இந்தச் சிறகடிப்பைத்தான் விரும்பி வேட்கை கொள்கிறது தாயே...’
‘சரி.. அப்புறம் சொல் மகளே...’’
‘விஸ்ராந்தியாக...அலையும் கருமேகமாக... அந்தக் காற்றாக...  நதிநீரின் ஊற்றாக... கட்டுகளற்ற மனநிலை வேண்டும் போலிருக்கிறது’
‘சரி.. அப்புறம் சொல் மகளே...’
‘உன்னைப்போல எப்போதும் புன்னகை... எப்போதும் மென்னகை, எப்போதும் ஆசுவாசம் இப்படி இருக்கவும் மனசு ஆலாய்ப் பறக்கிறது தாயே..’
‘சரி.. அப்புறம் சொல் மகளே...’
‘ஒரு பருவம் இருக்கிறது தாயே.. உறவுகளுக்காக உழைக்க, பிழைக்க, தழைக்க, நிலைக்க விரும்பும் மனசு ஒரு பருவம், அப்புறம் ஒரு பருவம் ஓரக்கடல் போல அலை பாயாமல், நடுக்கடல் போல அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகிற பருவம்.’
‘சரி அப்புறம் சொல் மகளே..’
திகைப்புடன் நிறுத்தினேன் மவுன உரையாடலை. என்ன பேசினேன்?
ஏன் இப்படியெல்லாம் பேசினேன்? சட்டென வார்த்தைகளைத் துார வைத்து, அமைதியானேன். அம்மையைப் பார்த்தேன். அவளின் கடல் கண்களைப் பார்த்தேன். அவளின் கண் கடல்களைப் பார்த்தேன். அவளின் மின்னல் புன்னகையைப் பார்த்தேன். அவளின் புன்னகை மின்னல்களைப் பார்த்தேன். அவளைப் பார்த்தேன். அவளையே பார்த்தேன்.
திரும்பும் திசையெல்லாம் பச்சைப் பசேலென நெல்வயல்கள். பார்க்கும் திசையெல்லாம்  குளங்கள். ஊர் முழுக்கவே வெள்ளந்தி வாசனையும் கிராமத்து யோசனையும் நிரம்பி வழிகின்ற எளிய மக்கள். அவர்களின் எளிய நம்பிக்கைகள். வழிபாட்டு முறைகள், எங்கெங்கும் நிறைந்திருக்கும் மண் சாலைகளும், கிராமத்திற்கே உரிய அடையாளங்கள் என்றெல்லாம் ததும்பி நிற்கும் கும்பகோணம் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனிடம்தான் பேசினேன் என்னையும் அறியாமல். உளவியல் நிபுணரிடம் அந்தரங்கம் பகிர்வதும், பகர்வதுமான இயல்பு போல பட்டீஸ்வரம் துர்க்கையிடம்தான் விட்டு விடுதலையாக வேண்டும் என பேசியிருக்கிறேன்.
துர்க்கை அம்மையைத் தாண்டி ஒரு உளவியல் நிபுணர், உளவியல் ஆலோகர், உளவியல் மருத்துவர், உளவியல் வழிகாட்டி  இருக்க முடியுமா என்ன? நாம் அம்மையை பார்த்தாலும் சரி. அம்மை நம்மைப் பார்த்தாலும் சரி. நீருக்குள் ஒளியும், வெளிச்சமும்  தடையின்றி ஊடுருவுவதைப் போல, மனம் என்னும் குளத்திற்குள் அம்மையின் திருப்பார்வை ஊடுருவிச் செல்கிறது. துாய்மைப்படுத்துகிறது. எனக்கு நேர்ந்ததும் அதுதான். இது எப்படி சாத்தியம்? பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனின் ஞானவாபிக் குளத்து நீரைப் பன்னீராக உணர்ந்து நனைந்தால் தெளிவு சாத்தியம்.
ஒரே கூரையின் கீழ், ஒரே கோபுரத்தின் கீழ், ஒரே ஆலயத்துள் இருந்தாலும், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் தனித்து அருள்பாலிக்கிறாள். தனக்கென வெளி, தனக்கென பீடம், தனக்கென ஆளுமை கொண்டிருக்கும் துர்க்கை அம்மனைப் போலவே தனிப்பெரும் ஆளுமையாகப் பெண்கள் இருக்க வேண்டும் என்பது தான் அம்மை சொல்லும் சேதி.  
எல்லாப் பற்றில் இருந்தும் விலகி,  தனிமைத் தவம் செய்ய துர்க்கை அம்மன் தேர்ந்தெடுத்த தலம்தான் பட்டீஸ்வரம். விட்டு விலகி, சிட்டுக் குருவியாகத் தனிமைப் பறவையாக துர்க்கை விளங்கிய புண்ணியத் தலம்தான் பட்டீஸ்வரம். அந்தத் தாய்ப் பசுவுக்குத் துணையாக நின்றது காமதேனுவின் மகள் பட்டி.
பட்டீஸ்வரம் துர்க்கையின் ஆஜானுபாகுவான கோலம் வேறெங்கும் காணக் கிடைக்காதது. அன்பில் தோய்ந்து, பக்தியில் ஆழ்ந்து அழைத்தால் அடுத்த நொடி அருகில் ஓடோடி வந்து விடுவதான பாவனையும், காட்சியும்தான் பட்டீஸ்வரம் துர்க்கையின் மாட்சி. அம்மையின் முகசாந்தம், நம் மனசை நிறைக்கும் காந்தம். அம்மையின் முகப்பொலிவு, நம் வாழ்வை நிறைக்கும் தெளிவு.
‘மனசு அலைபாய்கிறது தாயே’
‘எதற்கு மகளே?’
‘நீ செய்த தனிமைத்தவம் போல வாழ்வை அமைத்துக் கொள்ள, பற்றுகளை விட்டு விட, ஆசைகளை விட்டு விட, அபிலாைஷகளை வேரறுக்க..’
‘சரி அதற்குப்பின் என்ன செய்வதாக உத்தேசம்?’
அலங்க மலங்க விழித்தேன்.
‘தனிமை பெரிதல்ல. தவமும் பெரிதல்ல. அது ஒரு காலகட்டத்தின் மனோநிலைதான்.. எல்லா உயிர்க்கும் இன்னொரு உயிரின் அன்பு தேவை. பரிவு தேவை. ஆசாபாசம் தேவை..’
ஆச்சர்யமாகப் பார்த்தேன் அம்மையை..
‘தனிமைத் தவம் செய்த பின்பும், உங்களின் குரலுக்காகவே காத்திருக்கிறேன்... உங்கள் ஒவ்வொரு அழைப்பும் என்னை உருக்குகிறது. உங்கள் ஒவ்வொரு கைகூப்பும் என்னை உருக்குகிறது..’
தீபத்தின் ஒளியில் ஓங்கி உலகளந்த நாயகியாய் ஜொலித்தாள் பட்டீஸ்வரம் துர்க்கை. துக்கங்களை, துயரங்களை, வேதனைகளை, வருத்தங்களை வேரறுக்கும் பெருந்தேவி அம்மை.
‘கொடுப்பதிலேயே நிறைவு கொள்ளும் வகைமைதான் உயிர்களின் உன்னதம் மகளே.. பயிர்கள் தானியம் கொடுக்கும். மரங்கள் நிழல் கொடுக்கும். செடிகள் பூக்கள் கொடுக்கும். கொடிகள் பழங்கள் கொடுக்கும். காமதேனு உயிர்ப்பால் கொடுக்கும். அன்பைக் கொடுக்கும் வகைமையால் தான் பிரபஞ்சம் ஜீவிக்கிறது. எனவே தனிமைத்தவம் என்பது வேரறுக்க அல்ல. எல்லாச் சக்தியையும் எனக்குள் கூட்டுவிக்கும் களம். எல்லாவற்றையும் அறுத்தெறிய அல்ல. எல்லாவற்றையும் எனக்குள் பொருத்தறிய... இந்த மனோநிலை கைவரவே தனிமைத் தவம் மகளே...
‘வேரறுத்தல் உனக்குச் சாத்தியமே.. எதை வேரறுத்தல் தெரியுமா? வெறுப்பை, சலிப்பை, கசப்பை வேரறுத்தலே தவம். காமதேனு தாய்மையின் ரூபம். ஒவ்வொரு பெண்ணும் காமதேனுதான். உயிர்ப்பால் தருகிற காமதேனு. உயிர்ப்பால் தந்து அந்த உயிர்ப்பால் பூமியைக் காக்கின்ற காமதேனு. புரிந்து கொள் மகளே..’
ஞானப்பால் ஞானசம்பந்தக் குழந்தைக்கு மட்டுமா? எனக்கும் ஞானப்பால் தந்தாள் அம்மை.
‘அதனால்தான் உயிர்களின் கருவறையும், உயிர்களின் உணவறையும் பெண்களின் கருப்பையாகவும், முலைப்பையாகவும் அவர்களிடம் பொதிந்து படைக்கப்பட்டுள்ளது.
உறுப்புகளைப் பிரித்தெடுக்கலாம். உணர்வுகளைப் பிரித்தெடுக்கவே முடியாது.. தாய்மை உணர்வுகள் பெண்களின் உயிராக, உணர்வாக, சிந்தனையாக, சீர்மையாக, பொருண்மையாக இருப்பதைப் புரிந்து கொள். விட்டு விடுதலை ஆனாலும், பெண் சிட்டுக் குருவிக்குள் தாய்மை நிறைந்திருக்கும். அந்த தெய்வீகத்திலிருந்து விட்டு விடுதலை ஆதல் என்பது எந்த உயிர்க்கும் கிடையாது. எனக்கும் கிடையாது..’
அருள் வாக்கு சொன்னாள் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மை. அவளின் காலடியில் கிடத்தி இல்லாமல் ஆக்கியது மகிஷாசுரன் என்னும் அரக்கனை அல்ல. எனது அறியாமை என்னும் அரக்கனை என்று உணர்ந்து அவளுக்குள் கரைந்தேன்.
பிரகாரம் சுற்றி வந்தேன். விதவிதமான பெண்கள். விதவிதமான பிரார்த்தனைகள். விதவிதமான வேண்டுதல்கள். ஞானவாபியின் காற்று அலை பாய்ந்த மனசுக்குள் பன்னீரைப் பொழிந்தது போலிருந்தது.
‘அம்மைக்கு அர்ச்சனை பண்ண வந்தேன்.. பிரார்த்தனையை நிறைவேத்திக் காட்டிட்டாளே..’
யாரோ ஓர் அம்மா சொன்னாள்.
‘ரெட்டைப் பொண்ணுங்க சாமியார் ஆசிரமத்துக்குப் போறதாச் சொல்லிவிட்டிருந்தாங்க. அம்மைகிட்ட வேண்டினேன். ஒருத்தி நர்சரி ஸ்கூல் ஆரம்பிச்சிட்டா.. இன்னொருத்தி விவசாயம் பண்ண ஆரம்பிச்சிட்டா...
எல்லாம் துர்க்கை அம்மன் அருள்தான்..’
துறவு என்பது முற்ற வேரறுத்தல் இல்லை. உயிரையும், பயிரையும் செழித்து வளரவைப்பது தானே உயிர்க்கூட்டம்... இதைத்தானே சொன்னாள் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்....


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar