Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தர்மம் தழைக்குமா?
 
பக்தி கதைகள்
தர்மம் தழைக்குமா?

‘‘அநியாயமும் அக்கிரமமும் இப்படித் தலைவிரிச்சி ஆடலாமா?’’  
என் முன் அமர்ந்து புலம்பிய சாரதா தனியார்  நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக இருக்கிறாள்.  
‘‘எங்கம்மா அநியாயம் நடக்குது?’’
‘‘நான் வேல பாக்கற இடத்துலதான்யா. எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு என்னை விட அனுபவம் குறைஞ்ச, படிப்பு குறைஞ்ச ஒரு பொம்பளைக்குக் கெடைச்சிருக்கு.  அவளுக்குப் பாராட்டுக்கு மேல பாராட்டு. கூடவே ரொக்கப்பரிசு, வெகுமதி, வெளிநாட்டுப்பயணம் எல்லாம் கெடைச்சிருக்கு. அந்தக் கேடு கெட்ட சிறுக்கி மேலதிகாரிக்கு முந்தி விரிச்சிருக்காய்யா. அந்தாளச் சட்டையப் பிடிச்சிக் கேட்டதுக்கு என்ன சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. ஆபீஸ் பணத்தக் கையாடிட்டேன்னு போலீஸ்ல என்மேல புகார் கொடுத்திருக்காங்க. தர்மம் தழைக்கலைன்னா இந்தப் பிரபஞ்சமே அழிஞ்சி போயிருமேய்யா! உங்க பச்சைப்புடவைக்காரி ஏன்யா இதை வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கா?’’
அவளைச் சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் ஒருவழியாகி விட்டேன்.
ஒரு வாரம் கழித்து என் நண்பருடன் ஒரு ஓவியக்கண்காட்சிக்குச் சென்றேன். ஒரு பெண் வரைந்த ஓவியத்தை மிகவும் பாராட்டினார் நண்பர். அதை பார்த்ததும் சீறினேன்.
‘‘கலைக்கு வடிவம் கெடையாதுதான். அதுக்காக இப்படியா? ஒரு பெரிய அட்டையில நடுவுல ஒரு  மஞ்சக்கோடு மட்டும் இருக்கு – குழந்தை கிறுக்கின மாதிரி.’’
‘‘ஸ்.. ஸ்.. மெதுவா. படத்த வரைஞ்சவங்க பக்கத்துலேயே நிக்கறாங்க..’’
நிற்கட்டுமே! எனக்கென்ன பயமா? மஞ்சள் கோட்டைக் காட்டி மகத்தான ஓவியம் என்றால்…
ஓவியம் வரைந்தவள் அருகில் வந்து என் கையை இறுக்கமாகப் பற்றினாள். சண்டை வரப்போகிறது என்று பயந்து நண்பர் விலகிச் சென்றார்.
‘‘முழு ஓவியத்தையும் பார்க்காமல் முட்டாள்தனமாகப் பேசினால் எப்படி?’’
ஓவியத்தின் மேலிருந்த மெல்லிய காகிதத்தைப் பிய்த்து எடுத்தாள் அவள். உள்ளே அழகான ஒரு பெண்ணின் ஓவியம். அவள் அணிந்திருந்த மஞ்சள் ஆடையின் ஒரு சிறுபகுதிதான் முதலில் கோடாகத் தெரிந்தது.
‘‘அந்தப் பெண் சாரதாவும் இது போல் கோட்டைப் பார்த்து விட்டுத்தான் தர்மம் நியாயம் செத்து விட்டதாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறாள்.’’
பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
‘‘தர்மம் தழைக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் வாழ்க்கை என்ற ஓவியத்தையும் முழுமையாகப் பார்க்கவேண்டும். ஓரிரு மாதங்களில் அவள் வாழ்க்கையில் நிகழ்ந்தது ஒரு சின்ன மஞ்சள் கோடுதான்.‘‘
‘‘புரியவில்லை, தாயே!’’
‘‘அங்கே நடப்பதைப் பார். புரியும்.’’
அந்தச் சிறிய நகரில் இருந்த அம்மன் கோவிலில் சீரமைப்புப்பணி நடந்துகொண்டிருந்தது. அந்தக் கோவிலின் தர்மகர்த்தாவிற்கு அங்கே அம்மனின் வடிவங்களான மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சிக்கு சந்நிதிகளை உருவாக்கவேண்டும் என்று எண்ணம். தன் சொந்தச் செலவில் அதைச் செய்யப்போவதாக அறிவித்தார். தெரிந்தவர்களிடம் நன்கொடை திரட்டத் தொடங்கினார்.
அம்மன் சிலைகளை உருவாக்க சிறந்த ஸ்தபதி என்று பெயர்பெற்ற மணியன் என்ற சிற்பியைத் தேர்ந்தெடுத்தார் தர்மகர்த்தா.
“அம்மன் சிலைகள் அற்புதமா இருக்கணும். ஆகம முறைப்படி நல்லபடியா சந்நிதி அமைச்சித் தரணும். அந்த சந்நிதிலதான் என் மகளோட திருமணத்த நடத்தலாம்னு இருக்கேன்.”
“நல்லா பண்ணித் தரேங்கய்யா.”
“தேவையான பொருட்கள நீங்களே வாங்கிக்கங்க.  எவ்வளவு செலவாகும்?”
பல நிமிடங்கள் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு பவ்யமாகப் பேசினார் மணியன்.
“பதினஞ்சு லட்சத்துக்குள்ள முடிச்சிரலாங்கய்யா.”
“இருபதே தரேன். ஆனால் முதல்ல கொஞ்சம் கைக்காசப் போட்டுச் செய்யுங்க. வெளிநாடுகள்லருந்தெல்லாம் நன்கொடை வந்துக்கிட்டிருக்கு. சேந்ததும் மொத்தத் தொகையையும் கொடுத்துடறேன்.”
சிற்பி சம்மதித்தார். உற்சாகமாக வேலையைத் தொடங்கினார். அதுதான் அதிகமாகப் பணம் வரப் போகிறதே என்ற நினைப்பில் தன் ஒரே மகளின் திருமணத்தையும் பேசி முடித்தார். கோயில் திருப்பணி முடிந்ததும் தர்மகர்த்தாவின் தலைமையில் திருமணம்  நடத்த முடிவு செய்தார்.
திருப்பணி முடிந்து கோயில் குடமுழுக்கு நல்லபடியாக நடந்தது. வந்தவர்கள் எல்லாம் சிற்பி வடித்த அம்மன் சிலைகளின் அழகைக் கண்டு மயங்கி நின்றனர். எல்லாம் முடிந்ததும் தர்மகர்த்தாவை சந்தித்துப் பேசினார் சிற்பி.
‘‘நாளைக்கு ஊருக்குக் கிளம்பலாம்னு.. ..’’
‘‘தாராளமா.’’
‘‘பணத்தக் கொடுத்துட்டீங்கன்னா.. ..’’
‘‘எந்தப் பணத்த… ‘‘
‘‘சன்னதி, அம்மன் சிலை, 20 லட்சம்.. ‘‘
‘‘அதான் முதல்லயே கொடுத்திட்டேனே.’’
நெஞ்சைப் பிடித்துக்கொண்டார் சிற்பி. தர்ம்கர்த்தா சிற்பியிடம் பணம் கொடுத்ததை நேரில் பார்த்ததாகச் சொன்னார்கள் தர்மகர்த்தாவின் ஆட்கள்.
மனமுடைந்துபோய் தான் உருவாக்கிய சன்னதிகளுக்கு முன் வந்து நின்றார் சிற்பி. விஷயம் தெரிந்தவர்கள் தர்மகர்த்தாவின் மீது வழக்குப் போடச் சொன்னார்கள்.
‘‘வழக்கு நிக்காது. போனாப் போகுது. பச்சைப்புடவைக்காரிக்கு நான் திருப்பணி செஞ்சதா நெனச்சிக்கறேன்.’’
சிற்பியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. திருப்பணி உபயம் என்று தர்மகர்த்தாவின் பெயர் அந்தச் சன்னதிகளில் கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.
சிற்பியின் மகளின் திருமணம் நின்று போனது. தர்மகர்த்தாவின் மகளின் திருமணம் விமரிசையாக நடந்தது. சிற்பி உருவாக்கிய மீனாட்சியின் சன்னதியில்தான் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.
‘தர்மம் தோற்றுவிட்டதே! பச்சைப்புடவைக்காரியின் கண்முன் இந்த அநியாயம் நடக்கலாமா?’ என்று விஷயம் தெரிந்தவர்கள் பதறினர்.
காலம் தன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தது. தன்னிடம் சிற்பம் பயில வந்த மாணவனுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்தார் சிற்பி. சின்னச் சின்ன சிற்ப வேலைகளைப் பார்த்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்தார்.
பத்து ஆண்டுகள் கழித்து சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அந்த ஊர்க் கோயிலைப் பார்க்க வந்தார். மீனாட்சி- காமாட்சி – விசாலாட்சி சிலைகளைப் பார்த்து உருகினார்.  அதை உருவாக்கியவர் யாரென்று விசாரித்து தேடிக் கொண்டு போனார்.
‘‘ஐயா...எங்க ஊர்ல நுாறு கோடி ரூபாய் செலவுல ஒரு பெரிய மீனாட்சி கோயில் கட்டப் போறோம். நீங்கதான் தலைமைச் சிற்பியா இருந்து எல்லாத்தையும் நடத்தித் தரணும். இதுல அஞ்சு லட்ச ரூபாய் இருக்கு. இத முன்பணமா வச்சிக்கங்க. வர மாசம் வேலைய ஆரம்பிக்கலாம். நீங்க குடும்பத்தோட எங்க ஊர்லயே தங்கிக்கலாம்.’’
அதன்பின் கோடீஸ்வரர் பேசியது எதுவும் சிற்பியின் காதில் விழவில்லை. முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தபடி கண்ணீர் விட்டார்.
இரண்டு குழந்தைகளைப் பெற்ற தர்மகர்த்தாவின் மகள் நோயில் சிக்கினாள். அவளால் சரியாக நடக்க முடியவில்லை. நல்ல சிகப்பாக இருந்தவள் கறுத்துப் போகத் தொடங்கினாள். பணத்தை வாரியிறைத்து ராஜ வைத்தியம் பார்த்தார் தர்மகர்த்தா. நோய் குணமாகவில்லை. அவருடைய மகள் நன்றாகக் கறுத்துவிட்டாள்.
‘‘கோயில்ல இருக்கற கருங்கல் சிலை மாதிரியே ஆயிட்டாளே!’’ என்று யாரோ ஒருவர் அங்கலாய்த்தபோது தான் தர்மகர்த்தாவிற்கு உண்மை புரிந்தது. ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது.
‘‘முழு ஓவியம் எப்படியப்பா இருக்கிறது?’’
‘‘ஓவியத்தின் ஒவ்வொரு கோட்டிலும் தர்மம் மிளிர்கிறது தாயே! ஒவ்வொரு புள்ளியிலும் அதர்மத்தின் அழிவு தெரிகிறது தாயே! சாரதாவின் நிலை…’’
‘‘கவலைப்படாதே. அந்த  மேலதிகாரியும், அவனுடன் தொடர்புடைய பெண்ணும் ஒரு வழக்கில் சிக்குவர். அவர்கள் வேலை போய்விடும். சாரதா மேலதிகாரியாவாள். நிறைவாக வாழ்வாள். அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள்.’’
‘‘அந்தத் தர்மகர்த்தாவின் மகளுக்காக உங்களிடம் மடியேந்திப் பிச்சை கேட்கிறேன், தாயே! ஏதோ ஒரு பலவீனமான தருணத்தில் பணத்தாசையில் அப்படி செய்துவிட்டார். அவர் திருந்தி வாழ வாய்ப்பு தரக் கூடாதா?’’
‘‘அவன் தீயவன்.’’
‘‘தீமையை நோயாகப் பார்க்கவேண்டும் என்று நீங்கள் தானே எனக்குச் சொல்லிக் கொடுத்தீர்கள்?’’
‘‘கவலைப்படாதே! நான் அந்தக் குடும்பத்தையும் வாழ வைக்கிறேன். உனக்கு எதுவும் வேண்டாமா?’’
‘‘உங்கள் கொத்தடிமை என்ற உன்னதமான பதவி இருக்கும்போது வேறு என்ன வேண்டும் தாயே?’’
அழகாகச் சிரித்துவிட்டு அடுத்த கணமே மறைந்தாள் அகிலாண்டேஸ்வரி.
 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar