Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சொர்க்கம் என்பது யாதெனின்…
 
பக்தி கதைகள்
சொர்க்கம் என்பது யாதெனின்…

‘‘உங்கள அப்பான்னு கூப்பிடலாமா?’’
என் முன்னால் அமர்ந்திருந்த நண்பரின் மகள் மைதிலியைப் பார்த்த பார்வையையே கேள்விக்குறியாக்கினேன்.
‘‘உங்ககிட்டக் கொஞ்சம் நெருடலான, அந்தரங்கமான விஷயங்களைப் பத்திப் பேசப் போறேன். குடும்பத்துக்கு வெளிய இருக்கறவர்கிட்ட அதெல்லாம் பேசினாத் தப்பாயிரும். அதனால உங்கள என் அப்பாவா ஏத்துக்கிட்டுப் பேசறேன்.’’
‘‘இந்த வயசுல எனக்கு இப்படி அழகான, அறிவான மகளைக் கொடுத்த பச்சைபுடவைக்காரிக்கு நன்றி. மனசுல இருக்கறத தாராளமாப் பேசலாம்மா.’’
‘‘அப்பா, எனக்கு 38 வயசு. வீட்டுக்காரருக்கு 40. ரெண்டு பொண் குழந்தைங்க. அவரு ஓட்டல் நடத்திக்கிட்டிருக்காரு. நல்ல சம்பாத்தியம். காரு, வீடுன்னு வசதியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.’’
மைதிலியின் கணவன் குமார் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு சாமியாரிடம் புலம்பியிருக்கிறான்.
‘‘எனக்கு வாழ்க்கையில நிறையப் பொறுப்புகள் இருக்கு. மனைவி, குழந்தை, குடும்பம்னு ஒரு பக்கம். ஊருல இருக்கற வயசான அம்மா, அப்பா இன்னொரு பக்கம். ஓட்டல் நிர்வாகம் வேற இருக்கு நான் கால நீட்டிக்கிட்டு ஹாயா வாழணும் சாமி. அதுக்கு நீங்கதான் வழிகாட்டணும்.’’
‘‘பூவுலக வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். எந்தப் பிரச்னையும் இல்லாமல் சோம பானத்தை அருந்திக் கொண்டு தேவ கன்னிகைகளுடன் சுகித்திருக்க வேண்டுமென்றால் நீ சொர்க்கத்துக்குத் தான் செல்லவேண்டும். இந்தப் பிறவி முடிந்தவுடன் நீ சொர்க்கம் செல்ல நான் வழிகாட்டுகிறேன்.’’
அன்றே அந்த சாமியாரிடம் சீடனாகச் சேர்ந்தான் குமார். அவர் சொன்னபடியெல்லாம் செய்தான்.  தினமும் காலையில் நான்கு மணிக்குக் கண் விழிப்பான். குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு இரண்டு மணி நேரம் பூஜை செய்வான். பின் சிறிது காலை உணவு. மீண்டும் பூஜை. பதினொரு மணிக்கு ஓட்டலுக்குச் சென்றால் இரவு எட்டு மணிக்குத்தான் திரும்புவான்.
மீண்டும் இரண்டு மணி நேரம் பூஜை. ஒரு மணி நேரம் தியானம். சிறிதளவு இரவு உணவு. பின் தரையில் தலையணை, படுக்கை எதுவும் இல்லாமல் உறக்கம். ‘டிவி’ கிடையாது. காபி, டீ கிடையாது. வெளியில் போவது கிடையாது. எந்தப் பொழுதுபோக்கும் கிடையாது.
‘‘இதைத்தவிர அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை என்று வந்துவிட்டால் விசேஷமான வழிபாடு நடக்கும்.’’
‘குடி, புகை, பெண் சகவாசம் என்றில்லாமல் ஆன்மிகப் பாதையில் செல்வது நல்லதுதானே!’
‘‘ஒரு அப்பாகிட்டக்கூட சொல்லமுடியாதத உங்ககிட்ட சொல்றேம்ப்பா. அவர் எனக்குப் புருஷனா நடந்துக்கறதில்ல. குழந்தைங்களக் கவனிக்கறதுல்ல. செலவுக்கு வேணுங்கற பணத்தைக் கொடுத்துடறாரு. பணம் மட்டும் போதுமாப்பா? பரிவா நாலு வார்த்தை பேச வேண்டாமா? அப்பாவா, புருஷனா நடக்க வேண்டாமா?’’
இதே ரீதியில் புலம்பி விட்டுச் சென்றாள் மைதிலி.
அன்று மாலை மைதிலியின் பிரச்னையை அசைபோட்டபடி கோயிலுக்கு நடந்து கொண்டிருந்தேன். பாலத்தின் மீது  சென்றபோது ஒரு பைத்தியக்காரி என் கையை அழுத்தமாகப் பிடித்தாள். நான் பயத்தில் கத்தினேன்.
‘‘என்னைப் பார்த்து ஏனப்பா அலறுகிறாய்?’’
பைத்தியக்காரி வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
‘‘எப்போதும் அழகான பெண் வடிவில் தோன்றினால் நீ அழகில்லாதவர்களிடம் அன்பு காட்ட மறந்து விடுவாய் என்பதற்காகத்தான் இந்த வேஷம்.’’
‘‘புரிகிறது, தாயே. ஆனால் உங்களை இப்படிப் பார்த்தால் எனக்கு வலிக்கிறது.’’
‘‘அதை விடு. நீ பெறாத மகளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை அவள் கணவனைப் பார்க்கப் போ. அங்கே..’’
‘‘என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளாக நீங்கள் மலர்வீர்கள். சரியா?’’
‘‘தவறு. வெடிக்கப் போகிறேன். இந்த மடையர்களுக்கெல்லாம் நயமாகச் சொன்னால் புரியாது. ஆவேசமாகக் கத்த வேண்டும்.’’
அவள் மறைந்துவிட்டாள்.
மைதிலியிடம் வெள்ளிக்கிழமை அவள் வீட்டுக்கு வருவதாகச் சொன்னேன்.
‘‘சாயங்காலம் பெரிய பூஜை வச்சிருக்காருப்பா. அதுல கலந்துக்கங்க.’’
மைதிலியின் வீடு வசதியாக இருந்தது. பூஜை விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. நடுவில் வைக்கப்பட்டிருந்த மீனாட்சியின் படத்தைப் பார்த்துக் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்தேன். பூஜை முடிந்து தீபாராதனை செய்தான் மைதிலியின் கணவன் குமார். தீபம் பச்சைப்புடவைக்காரியின் படத்திற்கு காட்டப்பட்டபோது எனக்குள் எரிமலை வெடித்தது.  
‘‘நிறுத்துடா. யாருக்கு பூஜை செஞ்சிக்கிட்டிருக்க?’’
எனக்குள் அம்மன் இறங்கிவிட்டதாக நினைத்துகொண்டு குமார் பயத்துடன் பேசினான். என் முன்னால் தீபத்தைக் காட்டினான்.
‘‘உங்களுக்குத்தான் ஆத்தா.’’
‘‘எதுக்குடா?’’
‘‘நான் அடுத்த பிறவியில சொர்க்கத்துல வாழணும். பிரச்னை எதுவும் இல்லாம நிரந்தரமா சுகமா வாழணும்.’’
‘‘முட்டாளே! நீ இப்பவே சொர்க்கத்தில்தானடா இருக்க. நல்ல ஆரோக்கியம், கைவசம் நல்ல தொழில், செல்வச் செழிப்பு, அழகான, பண்பான மனைவி, மணிமணியாகக் குழந்தைகள், பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை – இதைவிட சொர்க்கத்தில் வேறு என்னடா பெரிதாக இருக்க முடியும்?
‘‘எத்தனையோ பிறவிகளில் நீ செய்த நல்வினைப்பயனின் காரணமாகத்தான் இந்த சொர்க்க வாழ்க்கை உனக்கு வாய்த்திருக்கிறது. உன் மனைவி, குழந்தைகளிடம் அன்பு காட்டு. அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய். முடிந்தவரை சக மனிதர்களுக்கு உதவி செய். இந்த வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்தால் அடுத்த பிறவியிலும் இது போன்ற சொர்க்கவாசம் கிடைக்கும்.
‘‘அதைவிட்டு விட்டு எனக்குப் பூஜை செய்கிறேன் தியானம் செய்கிறேன் என்று உன் கடமைகளைச் செய்யாமல் உன் மனைவி, குழந்தைகளை உதாசீனப்படுத்தினால் அடுத்த பிறவியில் நரகத்தில் வீழ்வாய். புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணை, உதவாக்கரை பிள்ளைகள், இளமையில் வறுமை, முதுமையில் தீராத நோய் என நரக வேதனையை அனுபவிப்பாய்.’’
அதுவரை ஓரளவு சுய நினைவுடன்தான் இருந்தேன். அதன்பின் தலை சுற்றவே என்ன நடந்தது எனத் தெரியாது.
விழிப்பு வந்த போது ஒரு பெரிய அறையில் படுத்திருந்தேன்.
ஒருபுறம் மைதிலியும் மறுபுறம் அவள் கணவனும் என்னைக் கவலையுடன் பார்த்தபடி நின்றிருந்தனர். எழ முயற்சித்தேன், முடியவில்லை. குமார் என்னைக் கைத்தாங்கலாக எழுப்பி நிற்கவைத்தான். கணவனும், மனைவியும் என் காலில் விழுந்தனர்.
‘‘என்ன மன்னிச்சிருங்க சார். நான் போகறது தப்பான பாதைன்னு உங்க மூலமா சொல்லிட்டா அந்தப் பராசக்தி. இனிமேலும் பூஜை, வழிபாடு எல்லாம் இருக்கும். ஆனா அளவோட இருக்கும். என் மனைவி மனம் கோணாத மாதிரி நடப்பேன் சார். இது சத்தியம்.’’
அவர்களிடம் விடைபெற்றேன்.
நிறுத்தியிருந்த காருக்கு அருகில் ஒரு பெண் நின்றிருந்தாள்.
‘‘போற வழியில என்ன இறக்கிவிட முடியுமா?’’
தலையாட்டினேன். முன் இருக்கையில் சுவாதீனமாக அமர்ந்தாள்.
‘‘மகனுடைய வண்டியில் உட்காரத் தாய்க்கு உரிமையில்லையா என்ன?’’
அவளை வணங்கினேன்.
‘‘அசத்தி விட்டாயே’’
‘‘தாயே, அசத்தியதும் ஆட்டி வைத்ததும் ஆவேசம் வர வைத்ததும் நீங்கள்தான்.’’
‘‘உண்மையிலேயே சொர்க்கம் இருக்கிறது. அங்கு காலம் அப்படியே உறைந்து போயிருக்கும். எப்போதும் நீ இளமையாகவே இருப்பாய். சோம பானம், தேவ கன்னிகைகள் எல்லாம் இருப்பார்கள். உன் காலம் முடிந்தபின்  உன்னை அங்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன்.’’
‘‘தாராளமாக அனுப்புங்கள், தாயே!  ஆனால் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.’’
‘‘பராசக்திக்கே பாடம் நடத்துகிறாயா?’’
‘‘என்ன செய்வது, என் நிலைமை அப்படி’’
.’’சரி, சொல்.’’
 ‘‘நான் சொர்க்கத்தில் இருக்கும் போது உங்கள் அன்பை நினைத்துக் கண்ணீர் சிந்த முடியாவிட்டால் என்னைப் பொருத்தமட்டில் அது நரகம்தான்.
‘‘நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருக்கும்போது, யம, கிங்கரர்கள் என்னை ஈட்டிகளால் குத்திக் குதறும் போது  உங்கள் பாதங்களை நினைத்தபடி கண்ணீர் சிந்த முடியுமென்றால் எனக்கு நரகம் கூட சொர்க்கம்தான்.’’
அன்னை கலகலவென்று சிரித்தபடி மறைந்தாள்;


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar