Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தாய்மையே கவசமான பத்மாவதி தாயார்
 
பக்தி கதைகள்
தாய்மையே கவசமான பத்மாவதி தாயார்

அம்மா என்ற பின்பு வேறென்ன சொல்ல? தாயார் என்ற பின்பு வேறென்ன சொல்ல? தேவி என்பதும், சக்தி என்பதும், அம்மன் என்பதும் ஒரு பொருட்பன்மொழி ஆகி விடுகிறதே....
அலர்மேலு மங்கம்மா என்கிறோம். மங்கம்மாள் தாயார் என்கிறோம். அலமேலு மங்கை என்கிறோம். உலகம் முழுக்க, பிரபஞ்சம் முழுக்க, பேரண்டம் முழுக்க, உயிர் இனம் வசிக்கும் புவி முழுக்க, ஓருயிர் முதல் ஆருயிரான எல்லாமே தாயின் வழித்தோன்றல்தான். கருவறையும் தாய்பாலும் எல்லாப் பிறப்புக்கும் எப்போதும் பொதுவானது. உயர்வு தாழ்வு அற்றது.
அலமேலு மங்கம்மா தாயாரும் அப்படித்தான் விகசித்தாள். தாமரை மேல் இருந்து பிறந்த மங்கை என்று மொழிக்கு அர்த்தம் சொல்லலாம். ஆனால் மங்கம்மா தாயார் என்ற ஒரு பொருட் பன்மொழிதான் நெகிழ்ச்சிக்குரியதாகிறது. மங்கை, அம்மா, தாயார் என்று ஒற்றை அவதாரத்தை, ஒற்றைத் தத்துவத்தை, ஒற்றை விஸ்வரூபத்தை மும்மடங்கு பொலியச் செய்வதான திருப்பெயர் அது. ஒரே அர்த்தம். மூன்று வார்த்தைகள் புராணங்கள் சொல்லும் கதைகள் பல. செவி வழிக் கதைகள் சொல்லும் கற்பனைகள் பல. ஆனால் – பத்மாவதி தாயார் என்னும் தத்துவம் சொல்வதென்ன? பத்மாவதி தாயார் என்னும் படிமம் சொல்வதென்ன? பத்மாசனமிட்டு அமர்ந்த நிலையில் கொவ்வை வாய்க்குமிழ் சிரிப்போடும், கையில் ஏந்தியிருக்கும் தாமரைப் பூவுமாக அம்மை சொல்லும் ரகசியம் என்ன?
இதையெல்லாம் நின்று நிதானித்து உள்ளுணர நேரமும், வாய்ப்பும் இல்லாத சூழலாக இன்றைய கோயில் தரிசனங்கள் அமைகின்றன. கடவுளோடு பேச, உருக, நெகிழ ஒற்றை வினாடிகூடக் கிட்டாத சூழல் கூட்டம் நெருக்க, நகரு, நகரு, நகரு என்கிற குரல் விரட்டுகிறது. காவலரின் கை நம் கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளுகிறது. முக்கியஸ்தர்களுக்கு மட்டும் மாலை, பொன்னாடை என்பதான மரியாதைகள் என்பதான நடைமுறைச் சூழலில் மனசு வெதும்புவதைத் தவிர்க்க முடியவில்லை.
‘ஏன் தாயே இந்த மாதிரியான ஏற்றத் தாழ்வுகள்? எல்லாக் குழந்தைகளும் சமம்தானே அம்மாக்களுக்கு? ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பதான சமமின்மை சரியா தாயே...?’
இந்தக் கேள்வியோடு நான் திருச்சானுார் அடைந்தேன். வழக்கமான பரபரப்போடு, மக்களின் பரிதவிப்போடு அந்தத் திருத்தலத்தின் காற்று பனிக்குட நீரின் வாசனையோடு உருக்கியது. துாரத்தில் கம்பீரமான கோபுரம் வெண்மை, சாம்பல் நிறக்கலவையான வண்ணத்தில், நுாற்றுக் கணக்கான சிற்பங்களோடு நெகிழ வைத்தது. கோயிலுக்குள் நுழையும் முன்பே மனசு நெகிழ்த்தும் கோபுரத்தின் வெண்மை என்ன சொல்கிறது?
இருபுறமும் பூக்கள் விற்கும் கடைகள். அலங்கார மாலைகள் விற்கும் கடைகள், தெய்வத் திருஉருவப் படங்கள், ஆலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகள் என்றான வரிசைகளைக் கடந்து, அலைபாயும் மனசை ஒருமுகப்படுத்தித் திருக்கோயிலில் நுழைவதே ஒரு வரம்தான்.
சாமந்தி, ரோஜா, மல்லிகை, தாமரை, துளசி மாலைகள் என்பதான மலர்களின் வாசமே காற்றாகி மனசை இளக வைக்கிறது. பல வண்ணங்களில் சிவப்பு, செஞ்சாந்து, கருஞ்சிவப்பு நிறங்களில் குங்குமக் குவிப்புகள். மஞ்சள், பச்சை, வெண்மை, ஆரஞ்சு வண்ணப்பூக்கள், மாலைகள் என்பதாகக் கோயிலின் வாசல்களில் எங்கேயும் காணப்படும் காட்சிகள்.
முழுக்க வெண்மையும், சாம்பலுமான கோபுரம் அண்ணாந்து பார்க்கும்போது மவுன சேதி ஒன்று புலப்படுகிறது. மேலே ஆகாசம் நீலநிறம். அதைத் தொடுவது போன்ற உயரத்தோடு வெள்ளை கோபுரம். கோயிலினுள்ளே அலமேலு மங்காதாயார். வாழ்க்கை எல்லையற்றது வானம் போல. வானத்தின் நிறம் நீலம். நீலம் ஞானத்தின் நிறம். மேன்மையின் நிறம். மென்மையின் நிறம். ஞானம் என்பதன் ஆழமான படிமங்களை ஆராய்வது உயர்நிலை. பாமரர்களும், பண்டிதர்களும் எல்லோரும் உணரக்கூடிய எளிய ஞானம் எது தெரியுமா? தினமும் வானத்தைப் பார்த்து எல்லையற்ற வாழ்வை உணரக்கூடிய வாய்ப்பு இந்தப் பிறப்பு மூலம் நமக்கு வாய்த்திருக்கிறது. எனவே பிறப்புக்கும், பிறவிக்கும், பிறவியைத் தந்தோருக்கும், பிறவியோடு உடன்பிறந்தோருக்கும் உண்மையாக இருத்தலே வாழ்க்கை என்பதான எளிய ஞானம் எல்லோருக்கும் ஏற்றதுதானே...
கோபுரத்தின் வெண்மையாக மனசை களங்கமற்றதாக,  நேர்மையாக, கருமை அற்றதாக மாற்றிக் கொள்ளுதலே வாழ்வின் மேன்மை என்ற உண்மை நமக்குக் கிடைக்கிறது. இந்தத் தெளிவோடு மனம் முழுக்கப் பரபரப்பு பொங்க, பத்மாவதி தாயாரைத் தரிசிக்கும் துடிதுடிப்பு பொங்க கண்களை அகல விரித்து அம்மை எங்கே? அம்மை எங்கே? என்று தேடுகிறது உயிரும், உள்ளமும், உணர்வும்.
சுகபுரி என்றும் அழைக்கப்படும் திருச்சானுார் தாயார் கோயில் என்னும் திருப்பெயர் உணர்த்தும் இன்னொரு ஞானம் என்ன தெரியுமா? தாய்மைக் கனிவும், அன்பின் பிரவாகமும் மட்டுமே உலகை உய்விக்கும் ஒரு பெரும் சக்தி. ஏழை, பணக்காரன், விளிம்பு நிலை மக்கள். உயர்பதவி மக்கள், எளியவர்கள், அதிகாரத்தினர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் இந்த பூமியில் சுயம்புவாகப் பிறக்க முடியாது. அம்மா, தாய் என்னும் பேருண்மையின் கருவறை இன்றி யாருமே பிறக்க முடியாது. நம்மைக் கருவில் சுமக்க, நமக்காகத் தாய்ப்பால் சுரக்க அந்தத் தாய் ஒப்புதல் தர வேண்டும். இந்த நிகழ்வுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.
அப்படித் தன்னை, தன் உடலை, தன் உயிரை, தன் வாழ்வை ஒப்புக் கொடுக்கும் தாய் என்னும் சக்தியை விட வேறெந்த சக்தியுமே உன்னதமன்று. இந்த ஞானம்தான் அலர்மேலு மங்கைத் தாயாரம்மா நமக்கு அருள்கிறாள். மனதளவில் எல்லாரும் அன்பை, கருணையை, கனிவை, தாய்மையை, தயவை சுரக்க வேண்டும். சுமக்க வேண்டும்.  இது மட்டுமே வாழ்வின் அடையாளமாக,  வாழ்வதின் அர்த்தமாக முடியும். இது எளிய ஞானம் தானே? இதைத் தான் நமக்குச் சூட்சுமமாகப் புலப்படுத்துகிறாள் அன்னை.
எல்லாத் திருக்கோயிலிலும் இருப்பது போலவே திருச்சானுார் தலத்திலும் கொடிமரம் இருக்கிறது. பிரம்மாண்டமான தேர் இருக்கிறது. கண்டா மண்டபம் என்ற மணி மண்டபம் இருக்கிறது. வண்ணக்கோலங்கள், பூஜைகள், மணியோசை எல்லாமே இருக்கிறது. எல்லாமே திருச்சானுார் தாயாருக்காகவே இருக்கிறது காலம் காலமாக இருக்கிறது.
புஷ்கரணியின் நீரலைகள், காற்றின் அலைகள்,. பூக்களின் வாசனை அலைகள் குளிர்ச்சியாக இருப்பது அம்மையின் தாய்மையால்.
அலர்மேலு மங்கை – ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் மீது கிடந்த தாயார் என்று மொழிக்கு அர்த்தம் சொல்லலாம். ஆனால் – எழுத்தோடும் வார்த்தையோடும் முடிந்துவிடுமா மொழி? அதன் அர்த்தம் படிமங்களின் அடுக்கு அல்லவா? ஆயிரம் தாமரை இதழ்கள் இருப்பது குளத்திலா? நம் மனக்குளத்தில் அல்லவா? நமது மனம் சேறும், சகதியும், ஞாபகங்களும், பழைய அழுக்குகளும் சேர்ந்த குட்டையாக இருக்கலாம். அதில் நல்ல குணங்களைத் தாமரை இதழ்களாக அடுக்க வேண்டும். நல்ல எண்ணங்களைத் தாமரை இதழ்களாக அடுக்க வேண்டும். அன்பை, அருளை, மன்னிப்பை, கருணையை, காருண்யத்தை சலனமான உலகில், சலனமான நீரில், நிச்சலனமான உறுதிப்பாட்டை அடுக்க வேண்டும்.
இவற்றை ஒன்றன் மீதாக ஒன்றாக அடுக்கினால் அந்த உள்ளம் பத்மாவதி தாயார் தங்கி அருள் புரிய ஏற்றதாகும். தகுதியாகும் பத்மத்தில் வதிக்கும் தாயார் என்ற படிமம் சொல்லுவதும் இதைத்தான்.
இப்படி பலவும் நினைத்தபடி அம்மை தரிசனம் காண முண்டியடித்தது மனம். கருவறைக்குள் அம்மை இருந்தாள். அம்மைக்குள் கருவறையிலும் அம்மையே இருந்தாள். ஆபரணங்களால் பட்டுப் பீதாம்பரத்தால், பூமாலைகளால் அலங்காரம் என்பது நாம் செய்வது. அம்மை தன்னை அலங்கரித்திருந்தாள். கால ஓட்டத்தால் குறைபடாத நிறைவான புன்னகை, கால ஓட்டத்தால் வற்றாத நிறைவான தாய்மை இவற்றால் தனக்குத் தானே அலங்காரம் செய்திருந்தாள்.
பூக்கள் வாடலாம். ஆபரணங்கள் ஜொலிப்பு மாறலாம். பட்டுப் பீதாம்பரங்கள் புதுமை மாறலாம். புன்னகையும் தாய்மையும் தினம் தினம்  பொலிவோடு இருப்பதால்தான் பிரபஞ்சம் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது.
அம்மை கருவறையில் சிரித்தாள். சிலிர்த்தேன். அம்மை கருவறையில் ஜொலித்தாள். சிலிர்த்தேன். திருத்தமான பேரழகி தாயார். கறுப்பு மின்னல். தாய்மைக் கன்னல். இரு கைகளில் தாமரையும், இரு கைகளில் ‘நான் இருக்கிறேன் உனக்காக’ என்ற அபய முத்திரையைக்  காணக்காண நொடிகள் யுகங்களாக நீளாதா? என ஏக்கம் வியாபிக்கிறது.
தனக்கான கம்பீரத்தைத் தக்க வைத்திருக்கும் பெருமாட்டி தாயார். பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் முன், தன்னைத் தரிசித்தல் நலம் என்று தன் ஆளுமையை நிலைநிறுத்தும் தன்மை அலாதியானது. தன் தெய்வீகத்தை, தன் இருப்பின் காரணியை உத்தரவாதமாகச் சொல்லும் இந்தத் தனித்தன்மையின் அடையாளம் அலர்மேலு மங்கை.
அருள் தரும் ஆளுமைக்கும் தன் மூலமாகச் தகவல் சென்று சேருதல் தன்மையானது. தகைமையானது என்கிற வாழ்வியல் தத்துவம் இது. அப்பாவிடம் சொல்ல வேண்டியதை அம்மாவிடம் தானே முதலில் சொல்லுவோம்.
அவதாரம் எடுத்த கடவுளாலும் கூட எடுக்க முடியாத ஒற்றை அவதாரம் அம்மா. தாயார். எந்தச் செல்வந்தனாலும் தீர்க்க முடியாத கடன் கருவறைக் கடன், தாய்ப்பால் கடன். எந்த அம்மாவும் வசூலிக்க நினைக்காத கடனும் அதுவே.
பத்மாவதி தாயாரின் மனசுக்கு முன்னால் பிரபஞ்சம் சிறிது. வானம் சிறிது. கடல் சிறது. அம்மா என்பது ஆகுபெயர். கருவாகு பெயர். உருவாகு பெயர். உறவாகு பெயர். உயிராகு பெயர். வாழ்வாகு பெயர். உயர்வாகு பெயர். பண்பாகு பெயர். அன்பாகு பெயர். இறையாகு பெயர்.
அம்மை சிரித்தாள்.
கேட்டாள் மவுனமாக,
‘‘உனக்கு என்ன சொல்ல மகளே?’’
‘‘பரிதவிப்பும், மூச்சடைப்பும் தரும் உன் விளையாட்டைத் தாங்கும் சக்தி வற்றிப் போனது தாயே... இதற்கு மேலும் உறிஞ்சி எடுக்க என்னில் ஏதுமில்லை தாயே...’’
கண்ணீர் வழிந்தது இயல்பாக
‘‘கருவறை நீளமும் அகலமும் இரண்டு மூன்று விரற்கடைதான். அதில் இருந்தே இத்தனை உயிர்களும் ஜனிக்கின்றன. அளவிலா இருக்கிறது தாங்கும் வலிமை? கருவறை வலிமை கருவறைக்குத் தெரியாது. நான் அறிவேன் அதன் வலிமையை.. கவலைப்படாதே மகளே... விஸ்வரூபம் எடுக்கும் காலம் வந்துவிட்டது’’
அம்மாவின் அசரீரியில் நெகிழ்ந்தேன்.
‘‘என்னைக் காக்கும் ஆயுதமாக நீ வேண்டும் தாயே...’’
‘‘தாமரை அன்றிவேறு ஆயுதம் இல்லை என்னிடம் அன்பே என் ஆயுதம். கனிவே என் கவசம்... அன்பை வெல்லம் ஆயுதம், தாய்மையை போல வேறில்லை’’ பத்மாவதி தாயாரின் பனிக்குட வாசனையில் கரைந்தேன்.
– தொடரும்
..................


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar